கண்டுபிடித்தவர்களின் கதை
_ உதயபிரபா _
அச்சத்தை உருவாக்கிய 'அச்சு' மனிதர்!
1814. நவம்பர் மாதம் 29_ம் தேதி. காலையில் 'தி டைம்ஸ்' பத்திரிகையை வாங்கி பார்த்த லண்டன் வாசிகள் ஏதோ வித்தியாசமாக இருப்பதை உணர்ந்தார்கள். பிரித்துப் பார்த்த போது அதில் இருந்த செய்தியன்று அச்சுத்தொழிலில் ஏற்பட்டிருக்கும் புதிய புரட்சியைப் பற்றிச் சொன்னது. "இதுவரை கையால்தான் எழுத்துக்களைக் கோர்த்து, அச்சுக்களை பேப்பரில் பதித்து அச்சிட்டு வந்தோம். இப்போது கிடைத்திருக்கும் புதிய இயந்திரம் மனிதர்கள் வேலையை தானே படுவேகத்தில் செய்கிறது. ஒரு மணி நேரத்தில் 1100 காப்பிகள் அடித்துத்தள்ளிவிடுகிறது. அப்படிப்பட்ட இயந்திரத்தை உலகிலேயே நாங்கள் தான் முதல் முதலில் பயன்படுத்தியுள்ளோம்" _என்றது அந்த செய்தி.
இந்த இயந்திரத்தை அரும்பாடுபட்டு கண்டுபிடித்தவர் பெயர் கோனிக். உலகில் கண்டுபிடிப்பாளர்கள் அனைவரும் அனுபவிக்க வேண்டிய சிரமங்கள் அனைத்தையும் அனுபவித்து நொந்து நூலானவர். ஐரோப்பாவில் பிறந்த கோனிக்கின் குடும்பம் வறுமையின் பிடியிலிருந்தது. அவரது அப்பாவால் கோனிக்கை பள்ளிப்படிப்பையே ஒழுங்காக படிக்கவைக்க முடியவில்லை. 13_வயதிலேயே தன் சாப்பாட்டுக்கு தானே உழைக்க வேண்டிய கட்டாயம் கோனிக்குக்கு வந்துவிட்டது. சிறுவனாக இருந்தபோதே அவர் ஒரு அச்சகத்தில் உதவியாளராக சேர்ந்தார். இதுதான் அவர் செய்த உருப்படியான காரியம்.
இந்த சிறுவன் மணிக்கணக்கில் ஆமை வேகத்தில் நடக்கும் அச்சக வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தான். அச்சிடும் முறையை கண்டுபிடித்த கூட்டன்பர்க் காலத்திலிருந்து சுமார் 400 ஆண்டுகளாக அதே முறையைத்தான் கையாண்டு வந்தார்கள். எந்த முன்னேற்றமும் இல்லை.
கோனிக் மனதில் அப்போது உருவாகி பெரும் புரட்சியை ஏற்படுத்தியிருந்த நீராவி இயந்திரங்கள் அலை மோதின. இவற்றைப் பயன்படுத்தி அச்சிடும் முறையை வேகமாக்கலாமே என்று தோன்றியது. இந்த ஐடியா 'பளிச்'சிட்ட பிறகு கோனிக்கால் தூங்க முடியவில்லை. ஆனால் அதை செயல்படுத்தத்தான் எந்த வசதியுமில்லை. அப்படியரு இயந்திரத்தைக் கட்ட பணம் வேண்டுமே?
கோனிக் யார் யாரிடமோ போய் உதவி செய்யுமாறு கோரினார். அந்த இளைஞனைப் பார்த்து யாருக்கும் நம்பிக்கை வரவில்லை போலிருக்கிறது. விரட்டி விரட்டி அடித்தார்கள். அத்துடன் அங்கே காப்புரிமை வாங்குவதற்கும் அரும்பாடு பெற வேண்டும். ஒரு கண்டு பிடிப்புக்கு ஜெர்மனி முழுவதும் காப்புரிமை வாங்குவதென்றால் எக்கச்சக்கமாக செலவு செய்ய வேண்டும். வேலை செய்தால் தான் சாப்பாடு என்றிருக்கும் கோனிக் அதெற்கெல்லாம் எங்கே போவார்?
அதனால் திடீரென்று ஒரு நாள் கண்கள் நிறைய கனவோடும், தன் ஐடியா ஒன்றை மட்டுமே சொத்தாகக் கொண்டும் இங்கிலாந்துக்குக் கப்பலேறி விட்டார். அந்த நாட்டில் காப்புரிமைச் சட்டங்கள் உறுதியானவையாக இருந்ததும் ஒரு காரணம்.
வந்த இடத்தில் கையில் காசு இல்லாததால் ஒரு அச்சகத்தில் வேலைக்குச் சேர்ந்துகொண்டார். பென்ஸ்லி என்ற 'விவர.மான' ஆள் ஒருவர் இவரது ஐடியாவை செயல்படுத்திப் பார்க்க ஆர்வம் கொண்டார். மெஷினைக் கட்டுவதற்கு மெக்கானிக் வேண்டுமே? ஜெர்மனியிலிருந்து கோனிக்கைப் போல கையில் பைசா கூட இல்லாமல் வந்திருந்த பேயர் என்பவர் கிடைத்தார். இவர்கள் இருவரும் சேர்ந்து இயந்திரத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார்கள்.
கோனிக் இயந்திரத்தை பேப்பரில் டிசைன் செய்ய அதற்கு இயந்திரவடிவத்தை பேயர் கொடுத்தார். முதல் நவீன அச்சிடும் இயந்திரம் உருவானது. 20க்கு 32 இஞ்ச் சைஸ் உள்ள நாலுபக்கம் அடங்கிய தாளில் இந்த மெஷின் ஒரு மணி நேரத்துக்கு 1,100 காப்பிகள் பிரிண்ட் செய்து கொடுத்தது. அதாவது இது அப்போது கையால் செய்யப்பட்ட வேலையின் வேகத்தைவிட நான்கு மடங்கு அதிகம்! மெஷின் மிக அற்புதமாக வேலை செய்தது. ஆனால் இதை யாருக்காவது விற்கவேண்டுமே... இவர்களுக்கு உதவியாக இருந்த பென்ஸ்லி நேராகப் போய் லண்டனின் பெரிய பத்திரிகையான 'தி டைம்ஸின்' உரிமையாளர் ஜான் வால்டரை சந்தித்தார்.
ஆரம்பத்தில் அப்படியரு மெஷின் இருக்குமா என்று தயங்கிய வால்டர் நேரில் வந்து பார்த்துவிட்டு அசந்து போனார். வாவ்... என்ன வேகம்!
"எனக்கு நான்கு மெஷின்கள் செய்து கொடுங்கள்!" என்று அந்த இடத்திலேயே காண்ட்ராக்டில் கையெழுத்துப் போட்டு கொடுத்துவிட்டு திரும்பினார் வால்டர்.
இதைச் செய்துமுடித்து வால்டருக்கு டெலிவரி கொடுக்க இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த இயந்திரங்களைப் பற்றி அதற்குள் தெரிந்து கொண்டிருந்த டைம்ஸின் அச்சக ஊழியர்கள் போராட்டத்தில் குதித்து இந்த மெஷின்களை அச்சகத்தில் நுழையும் வழியை மறித்தார்கள். அதைக் கொண்டுவரவே முடியவில்லை. வால்டர் ஓர் ஐடியா செய்தார். ஒரு ரகசியமான இடத்தில் அந்த மெஷின்களை நிறுவினார்.
ஒரு நாள் காலையில் பேப்பரை அச்சடிப்பதற்காக காத்திருந்த தன் அச்சக ஊழியர்களுக்கு "சற்று நேரம் காத்திருங்கள். ஒரு முக்கியமான செய்திக்காக காத்திருக்கிறோம்!" என்று தகவல் அனுப்பினார். அதை நம்பி அவர்கள் காத்திருக்க, இங்கே ரகசியமாய் இயந்திரங்கள் இயங்க ஆரம்பித்தன. அச்சிடப்பட்ட 'டைம்ஸ்' காப்பிகளை எடுத்துக் கொண்டுபோய் அந்த ஊழியர்களை சந்தித்தார் வால்டர். அவர்களிடம் அவற்றை நீட்ட... அதைப் பார்த்து அதிர்ந்து போனார்கள் அச்சக ஊழியர்கள்.
"நீங்கள் எல்லோரும் வேறு எங்காவது வேலை தேடிக் கொள்ளுங்கள். அதுவரை நான் உங்களுக்குச் சம்பளம் கொடுக்கிறேன்!" என்று உறுதி மொழி கொடுத்து அச்சக ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டார் வால்டர். கசப்போடு வீட்டுக்குப் போனார்கள் அவர்கள்.
இந்த இயந்திரம் தான் அச்சு உலகில் பெரும் புரட்சியை உருவாக்கி உலகெங்கும் உள்ள பத்திரிகைகள் இதே தொழில்நுட்பத்தை தழுவ வைத்தது. பிரதிகளின் எண்ணிக்கை கூடி, பத்திரிகை விலையும் குறைந்தது. சரி... நமது கண்டுபிடிப்பாளர் கோனிக்கும், பேயரும் என்ன ஆனார் என்று பார்க்க வேண்டாமா?
இவர்களுக்கு கிடைத்த பணத்தில் பெரும்பங்கு பென்ஸிலிக்குப் போய்விட்டது. அதுபோக மீதிப்பணம் கடன்களுக்கே சரியாகிவிட்டது. இருந்தாலும் நம்பிக்கையுடன் பிறகு ஜெர்மனிக்கே திரும்பிய இவர்கள் அங்கே ஒரு பள்ளியை தொழிற்சாலை ஆக்கி, இந்த இயந்திரங்களை உருவாக்கும் வேலையை ஆரம்பித்தார்கள். ஆனால் தரமான மெக்கானிக்குகள் கிடைக்கவில்லை. அதனால் புதிய ஆட்களை வேலைக்கு எடுத்து பயிற்சி அளித்தார்கள். இதற்குப் பல ஆண்டுகள் பிடித்தன. கடைசியில் 1822_ம் ஆண்டிலிருந்து இயந்திரங்கள் உருவாகி சப்ளை ஆரம்பித்தது. உலகெங்கும் தன் இயந்திரங்கள் பயன்பட ஆரம்பிக்கப்பட்டிருப்பதை பார்த்து விட்டு தன் அறுபதாம் வயதில் இறந்தார் கோனிக்.
கோனிக் ஆரம்பித்த தொழிற்சாலை ஜெர்மனியில் இன்னமும் இருக்கிறது!
quelle - Kumutham-march2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment