
இலங்கைத்தமிழர்களின் வாழ்வில் அனைவராலும் போற்றப்பட்ட தன்னலமற்ற அரசியல்வாதி என்ற பெருமை அவரையே சேரும். தந்தை செல்வா என எல்லோராலும் அழைக்கப்பட்ட சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் 1898 மார்ச் மாதம் 31 ஆம் திகதி மலேசிய மண்ணில் பிறந்தார். பின்னர் தமிழீழதாயகத்தில் தனது உயர்தரக்கல்வியை நிறைவு செய்து, அவரது 19 வது வயதில் விஞ்ஞான பட்டதாரி ஆனார்.
பின்னர் சட்டத்துறையில் இருந்த ஈடுபாடு காரணமாக சட்டத்துறை கற்று 1927 இல் சட்டத்தரணியானார். இவர் ஒரு கிறிஸ்தவனாக இருந்தபோதும் தனது திருமணத்தின்போது தமிழர்களின் கலாசார உடையான வேட்டி சால்வையே அணிந்திருந்தார். அடிப்படையிலே தமிழ்த்தேசிய உணர்வுமிக்கவராக இவரது செயற்பாடுகள் ஒவ்வொன்றும் அமைந்திருந்ததை அவரது வரலாறுகள் மூலம் அறிய முடிகிறது.
இவ்வாறு ஒருதடவை, வெஸ்லி கல்லூரியில் கல்வி கற்பிக்க செல்லும்போதும், இவர் வேட்டி சால்வை அணிந்து சென்றதால், அது தொடர்பாக கல்லூரி அதிபர் அதிருப்திப்பட்டபோது, தனது தொழிலையே இராஜினமா செய்தார்.
1949 டிசம்பர்மாதம் 18 ஆம் திகதி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரானார். காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றியீட்டிய அவர் பதவிகளுக்காக அரசியலில் காலம் கடத்த விரும்பியிருக்கவில்லை. 1956 ஆம் ஆண்டு சிறிலங்கா அரசால் சிங்கள மட்டும் சட்டம் கொண்டுவரப்பட் டது. இதன்காரணமாக, தமிழர்களாக இருந்தாலும் அலுவலக கடமை எவற்றையும் சிங்களத்தில் செய்யவேண்டிய நிர்ப்பந்தம் உருவானது. அதனை எதிர்த்து, காந்தி காட்டிய பாதையில், சத்தியாக்கிரக போராட்டம் காலிமுகத்திடலில் தந்தை செல்வாவின் தலைமைலையில் இடம்பெற்றது.
தொடர்ச்சியான அமைதியான இத்தகைய போராட்டங்களால் எஸ்டபிள்யூஆர்டி பண்டாராநாயக்கா - செல்வா ஒப்பந்தம் கைச்சாத்தானது. இதனை ஏற்றுக்கொள்ளாத சிங்களமக்களில் ஒரு பகுதியினர் ஜேஆர் ஜெயவர்த்தனா தலைமையில் ஊர்வலம் நடத்தினர். இதன் தொடர்ச்சியாக அவ் ஒப்பந்தமும் நடைமுறைப்படுத்தாமல் கிழித்தெறியப்பட்டது.
பின்னர் ஆட்சிக்கு வந்த டட்லிசேனநாயக்காவுடனும் டட்லிசேனநாயக்கா - செல்வா உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது. அவ் ஒப்பந்தமும் பின்னாளில் நிறைவேற்றப்படாமலே கிடப்பில் போடப்பட்டது.
தமிழீழ மக்களுக்கு சமஸ்டி அடிப்படையில் ஒரு தீர்வை பெற்றுக் கொள்ளவேண்டும் என்பதற்காக, இறுதிவரை உழைத்த அந்த பெரியவர் அமைதியான பேச்சுவார்த்தைகள் மூலம், அது நிறைவேறப் போவதில்லை என்பதை அப்போதே உணர்ந்திருந்தார்.
அவரது பின்னைய பாராளுமன்ற உரையின்போது "நாங்கள் அமைதியாக எங்களுடைய உரிமைகளை கேட்கும்போது அதனை ஏற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள். ஆனால் அடுத்த சந்ததியும் இவ்வாறு உங்களுடன் பேசிக் கொண்டிருக்க மாட்டாது என்பதையும் அவர்கள் அதற்குரிய முறையிலேயே உங்களை எதிர்கொள்வார்கள் என்பதையும் கூறிக்கொள்ளவிரும்புகிறேன்" என குறிப்பிட்டிருந்தார்.
Quelle - http://thamilsangamam.blogspot.com/2005/04/blog-post_22.html