Sunday, September 17, 2006

வடமராட்சியின் இசை, நாடக கூத்து

வடமராட்சியின் இசை, நாடக கூத்து பற்றிய சில சுருக்கக் குறிப்புகள்
-தாவீது கிறிஸ்ரோ-

`ஈச்சம் பத்தையுக்கை கூத்துப்பாத்த மாதிரி' என ஒரு பழமொழி யாழ்ப்பாணத்தில் வழங்கி வருகிறது. குறிப்பாக, யாழ்நகரைச் சுற்றியுள்ள, நகர்ப்புறங்களைத் தவிர்த்து, கிராமப்புறங்களில் இக் கூற்று பெரும்பாலும் பாவிக்கப்படுவதுண்டு. கூத்துகள் எனப்படுபவை வடமோடி, தென்மோடி, மன்னார்பாங்கு, காத்தான் கூத்து என பல்வகைத்தனவாக இருந்தாலும் குறிப்பாக, நகர்ப்புறம் சார்ந்தே தென்மோடி, வடமோடி கூத்துகள் அண்ணாவிமார்களால் அரங்கேற்றப்பட்டன. பூந்தான் யோசப் முதல் அண்ணாவி டானியல்வரை குருநகர், பாஷையூர், நாவாந்துறைவரை ஏராளம் அண்ணாவிமார்கள் பல்வேறு கூத்துகளை பழக்கி மேடையேற்றி உள்ளனர். கத்தோலிக்க கூத்துகளில் செபஸ்தியார், ஞானசௌந்தரி, அனற்ரோலி சரிதம் என்பன முக்கியமானவை. அரிச்சந்திரா, நல்லதங்காள், பூதத்தம்பி, கண்டி அரசன் என்பன பிறிதொரு வகைக்குள் அடங்கும். கத்தோலிக்க அண்ணாவிமார்களே இத்தகைய பிறமதக் கூத்துகளைப் பழக்கியுள்ளமை ஒரு முக்கிய செய்தியாகும்.

யாழ்ப்பாணத்தின் வடமராட்சி, தென்மராட்சிப் பகுதிகளில் வடமோடி, தென்மோடிக் கூத்துகளை விட காத்தான் கூத்துகளே அடிக்கடி நிகழ்த்தப்பட்டு வந்துள்ளன. அதிலும் விசேடமாக, வடமராட்சிப் பகுதியில் காத்தான் கூத்து பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் பல அண்ணாவிமார்களால் பல்வேறு இடங்களில் பழக்கப்பட்டு, நிகழ்த்தப்பட்டு வந்திருக்கின்றன.

வடமராட்சியில் நெல்லண்டைப் பத்திரகாளி அம்மன் கோவில் ஒரு விதத்தில் பிரசித்தமானது. `இத்திமரத்தாள்' என அழைக்கப்படும் இந்த அம்மனுக்கு நேர்த்தி வைக்கும் பக்தர்கள் கூத்து அல்லது இசை,நாடகம் ஒன்றை மேடையிடுவதாகவே நேர்த்தி வைப்பார்கள். கூத்து அல்லது இசை நாடகம் மேடையேற்றப்படும் தினத்தில் சம்பந்தப்பட்டவர்களது பிரசன்னமில்லாமலே அவை மேடையேறும். நெல்லண்டையில் பங்குனி,சித்திரை, வைகாசி மாதங்களில் பல நாட்கள் கூத்துகளும் நாடகங்களும் தொடர்ச்சியாக நடைபெறும். சிவாலிங்கத்தின் சீன்,ஜெயா லைற்று மிசின் என்பன நெல்லண்டையில் நிரந்தரமாக இம் மாதங்களில் தங்கி விடுவதும் உண்டு.

வடமராட்சிக்கு இன்னொருவிதத்தில் பெருமைப்படக்கூடிய விதத்தில் கிருஷ்ணாழ்வாரின் பங்களிப்பு முக்கியமானது.இசை நாடகத்துறையில் இவரது பங்களிப்பு பற்றி பலர் விதந்து பாராட்டியுள்ளனர். காங்கேசன்துறையைச் சேர்ந்த வி.வி.வைரமுத்துவின் புகுந்த ஊர் வடமராட்சியைச் சேர்ந்த அல்வாய் என்றமையால் வடமராட்சியில் வைரமுத்துவின் நாடகங்கள் நிறைய மேடையேற்றப்பட்டது மட்டுமல்ல, அவரது நாடகங்களில் வடமராட்சியைச் சேர்ந்த நற்குணம், பபூன் செல்லையா, சின்னத்துரை போன்றவர்கள் முக்கிய பாத்திரங்களில் நடித்தமையும் ஒரு சிறப்பான நிலையாகும்.

வைரமுத்துவின் நாடகங்கள் மேடையேறுகின்ற காலங்களில் வி.என். செல்வராசா சகோதரர்களின் இசை நாடகங்களும் மேடையேற்றப்பட்டாலும் வைரமுத்துவின் `மயான காண்டம்' நாடகம் மட்டும் பெரும் வரவேற்பைப் பெற்றமை பற்றி நாம் சிந்திக்க வேண்டும். அரிச்சந்திரன் என்றால் வைரமுத்து - சத்தியகீர்த்தியென்றால் நற்குணம் - காலகண்டஐயரென்றால் சின்னத்துரை என ஒரு அடையாளம் நடிகர்கள் மேல் ரசிகர்களால் சுமத்தப்பட்டது. இதேபோல், சந்திரமதி - இரத்தினம், எமன் - மார்க்கண்டு (சத்தியவான் சாவித்திரி) என அடையாளங்கள் அக்கால நடிகர்களுக்கு சூட்டப்பட்டிருந்தன.

வடமராட்சியில் காத்தான் கூத்து உழைப்பாளர்களினால் மட்டும் மேடையிடப்பட்டமையை அவதானிக்க வேண்டியுள்ளது. மாதனையைச் சேர்ந்த கம்மாளரும், கற்கோவளம் பொலிகண்டியைச் சேர்ந்த மீனவரும் வடமராட்சி சீவல் தொழிலாளர்களும் காத்தான் கூத்துகளை தொடர்ச்சியாக ஆடி வந்துள்ளனர். காத்தான் கூத்தில் பல பின் நவீனத்துவ கூறுகளை நாம் அவதானிக்க முடியும். மரபு வழியாக கட்டமைத்து வைத்திருக்கும் சிவன், பார்வதி, விஷ்ணுவை நையாண்டல் செய்யும் பல பாடல்கள் காத்தான் கூத்தில் அமைந்துள்ளன. தொட்டியத்து சின்னான், டாப்பர் மாமா போன்ற பாத்திரங்கள் வாயிலாக இவை அம்பலப்படுத்தப்படுகின்றன. பாடல்கள் இடையிட்ட வசனங்கள் கூட பேச்சு வழக்கில் அமைந்துள்ளமையை அவதானிக்க முடியும்.

ஸ்ரீவள்ளி - நல்லதங்காள், பூதத்தம்பி, சாரங்கதாரா என பல இசை நாடகங்கள் அக் காலத்தில் மேடையேறின. பூதத்தம்பி, கருங்குயில் குன்றத்துக் கொலையென்றும், காத்தவராயன் ஆரியமாலா என்றும் மேடையேற்றப்பட்டன. அதேபோல், அரிச்சந்திரா, மயானத்தில் மன்னன் என்றும் மேடையேற்றப்பட்டது. விடியவிடிய சம்பூர்ண அரிச்சந்திரா என்றும் சுருக்கமாக மயான காண்டம் என்றும் மேடையேற்றப்பட்டன.

மேடையில் ஒரே நாடகத்தில் பல நாடகங்களின் காட்சிகளை இணைத்து அளிக்கை செய்யப்பட்டதும் உண்டு. வடமராட்சியில் அண்ணாச்சாமி வாத்தியாரின் நாடகங்கள் பிரசித்தி பெற்றிருந்தன. அண்ணாச்சாமியிடம் ஓவியத்திறமையும் இருந்தமையால் அவரது சீன்களும் அவரது நாடகங்களும் பயன்பட்டன. மின்சாரம், ஒலிபெருக்கி இல்லாமல் பெற்றோல் மாக்ஸ் வெளிச்சத்தில் இந் நாடகங்கள் கிராமப்புறங்களில் மேடையேற்றப்பட்டன. தங்களுக்குத் தாங்களே ஒப்பனை செய்வதிலும் இந் நடிகர்கள் திறமை பெற்றிருந்தனர்.

ஸ்ரீவள்ளி நாடகம் ஒன்றில் பார்வையாளர்கள் மத்தியில் இருந்த கைக்குழந்தை ஒன்றைப் பெற்று மேடையில் வள்ளியாக நடிகர்கள் பாவனை செய்தார்கள். அந்த ஆண் குழந்தை வயது வந்து பெரியவனாக மாறிய பின்னும் வள்ளியென அழைக்கப்படும் விபரீதமும் வடமராட்சியில் நிகழ்ந்துள்ளது.

ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த நடிகர்களை பாராட்டுவதற்காக அவர்கள் பாத்திரமாக ஒப்பனை செய்து மேடையில் தோன்றியவுடன் மாலை அணிவித்து பொன் முடிச்சுக் கொடுக்கும் `அகோனா' எனும் கௌரவ நிகழ்ச்சிகள் அக் காலத்தில் அடிக்கடி மேடைகளில் நிகழ்ந்துள்ளன. இன்று கூத்துகளோ, நாடகங்களோ மேடையேற்றப்படாமையால் இப்படியான நிகழ்வுகளும் அருகிப் போய் விட்டன.

1960 களில் `புழுதிக் கூத்து' எனும் ஒருவகைக் கூத்து வடமராட்சியில் நிகழ்த்தப்பட்டமை பற்றி வயதானவர்கள் சிலர் மூலம் அறியக் கிடைத்தது. 60 களின் ஆரம்பத்தில் `மாயக்கை' எனும் கிராமத்தில் இவ் வகையான `குசலவன்' எனும் கூத்தைப் பார்க்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. நிலத்தில் நான்கு கம்புகள் கட்டி ஒரு வெள்ளை வேட்டியின் மறைப்பில் அண்ணாவியாரோடும் மத்தளக்காரரோடும் நாடக பாத்திரங்கள் தோன்றி பாடி ஆடும் ஒருவகை கூத்தாக அது விளங்கியது. இதற்கு `புழுதிக்கூத்து' எனும் பெயர் பொருத்தமானது தான். ஆயினும் இதன் உண்மைப் பெயரென்ன? என்பதை நாடக விற்பன்னர்கள் தான் விளக்கமாக எழுத வேண்டும். பாத்திரங்களின் உடைகள், ஆட்ட முறைகள் எல்லாமே ஒரு வித்தியாசமான முறையில் இருந்தமையையும் கரப்பு கட்டிய உடைகளுடன் அவர்கள் தோன்றியமையும் இங்கு விசேடமாகக் குறிப்பிட வேண்டும்.

வடமராட்சியின் கத்தோலிக்கக் கிராமங்களில் கோவில் திருநாள் இறுதி நாட்களில் கத்தோலிக்கக் கூத்துகள் மேடையேற்றப்படுவது வழமை. சக்கோட்டை புனித சவேரியார் ஆலயம் - தும்பளை லூர்து அன்னை தேவாலயம் போன்றவற்றில் செபஸ்தியார், பூதத்தம்பி போன்ற கூத்துகள் ஆடப்பட்டன. இக்கூத்துகள் ஆடப்பட்டவை என்பதை விட பாடப்பட்டன என்பதுவே பொருத்தமாகும். மன்னார்பாங்கில் அமைந்ததாகக் கூறப்படும் இக்கூத்துகளில் பக்கப் பாட்டுக் காரர்களின் குரலே ஓங்கி ஒலிப்பதும் `பசாம்' எனப்படும் யேசுவின் பாடுகளை வாசிக்கும் இராகத்தில் கூடுதலாக இக்கூத்துப் பாடல்கள் பாடப்படுவதும் ஒரு வித்தியாசமான விடயம். காத்தான் கூத்துகளில் வரும் சிந்துநடையை ஒத்தாக இம்மன்னார்ப்பாங்குக் கூத்துப் பாத்திரங்கள் மேடையில் நடந்தும் பாடியும் நடிப்பது முக்கியமானதாகும். ஆயினும், இவ்வகை நாடகங்களின் அளிக்கைககள் மிகக் குறைவு. காத்தான் கூத்தின் ஆதிக்கமே வடமராட்சியில் மிகக் கோலோச்சியமையை நாம் அவதானிக்க வேண்டும். 1967 ஆம் ஆண்டு மாவிட்டபுரம் ஆலயப்பிரவேச காலத்தில் உருவாகிய அம்பலத்தாடிகளின் `கந்தன் கருணை' ,காத்தான் கூத்துப் பாணியில் அமைந்தமை ஒன்றும் தற்செயலான விடயமல்ல. வடமராட்சி மக்களுக்கு மிகவும் வாலாயமான ஒரு பாணியை அம்பலத்தாடிகள் தேர்ந்தமையும் அண்ணாவியார் கணபதிப்பிள்ளையின் ஆளுமையும் இதற்கொரு காரணம். மக்கள் இலக்கியம், மக்களுக்கான இலக்கியம் பற்றிப் பேசும் அல்லது எழுதும் படைப்பாளிகள் மக்களின் மொழியை மக்களுக்குப் புரியும் விதத்தில் கொடுப்பதன் மூலம் அவர்களை ஈர்க்க முடியும் என்பதற்கு கந்தன் கருணை ஒரு முக்கிய உதாரணம். கந்தன் கருணை வடமராட்சியில் மட்டுமல்ல, திருகோணமலை, கொழும்பு மற்றும் வடபுலத்தின் பல பகுதிகளிலும் மேடையேற்றப்பட்டு வரவேற்கப்பட்டமையும் ஈண்டு குறிப்பிடல் வேணடும். பின்னர் கந்தன் கருணை தாசிசீயஸ், சுந்தரலிங்கம் போன்றவர்களால் வேறொரு விதத்தில் மேடையேற்றப்பட்ட போதும் அம்பலத்தாடிகளின் கந்தன் கருணை பெற்ற வரவேற்பையும் பலனையும் பெற முடியவில்லை.

ஒரு விதத்தில் நாடக - கூத்து ரசிகன் என்ற வகையில் சில தகவல்களை இக்கட்டுரையில் நான் கோடிட்டுக் காட்டியுள்ளேன். வடமராட்சியின் கலைப் பாரம்பரியம் பற்றி ஆராயும் ஆராய்ச்சி மாணவர்கள், நாடக வித்தகர்கள், நாடகமும் அரங்கியலும் கற்றவர்கள் இவை பற்றி விரிவாக ஆராய வேண்டும், எழுத வேண்டும் என்பதுவே எனது விருப்பம். எழுதுங்கள் எமது கலைப் பாரம்பரியத்தை இதன் மூலமாக நாமறிவதனூடாக உலகமும் அறியவரட்டும்.

Quelle: ஞாயிறு தினக்குரல் Sunday, September 10, 2006

Saturday, September 09, 2006

ஆப்பிரிக்காவில் சாதிமுறை

- ப்ரவாஹன்

இந்தியச் சமூகத்தில் ஒரு புதிராகவே இருந்துவருகின்ற சாதி அமைப்பின் தோற்றம் தொடர்பான அனைத்து ஆய்வுகளும் ஆரியர்களுடன் தொடர்புபடுத்தியே பார்க்கப்படுகின்றன. இன்னும் ஆரியர்கள் புகுத்திய வர்ணங்களின் கலப்பில்தான் நூற்றுக்கணக்கான சாதிகள் தோன்றியதாகக் கருதப்படுகிறது. இதற்குக் கி.பி. 2ஆம் நூற்றாண்டு வாக்கில் இயற்றப்பட்ட, தற்போது நடப்பில் உள்ள, மனுதர்ம சாஸ்திரம் அடிப்படை எனக் கூறப்படுகிறது. ஆரியர்கள் இந்தோ-ஐரோப்பிய மொழிகளைப் பேசிய வெள்ளை நிறம்கொண்ட இனக் குழுவினர் என்பது மானுடவியல் மற்றும் மொழியியல் அறிஞர்களின் கருத்தாகும். இந்தோ- ஐரோப்பிய மொழிக் குழு எனக் கூறும்போதே இந்தியத் தொடர்பற்ற பிற ஐரோப்பிய மொழிக் குழுவினரிடம் சாதி அமைப்பு காணப்படவில்லை என்பதையும் உய்த்துணர்ந்துகொள்கிறோம். சாதி அமைப்பு இந்தியச் சமூகத்திற்கு - குறிப்பாக இந்து மதத்திற்கு - உரியது என்ற கருத்துடன் இந்து மதத்தின் சாரமே சாதிதான் என்றும் சாதி இன்றி இந்து மதம் இல்லை என்றும் கருதப்படுகிறது. இந்து மதத்தின் வழிபாட்டு நெறிமுறைகளையும் சமூகச் சட்டங்களையும் சாஸ்திரங்கள் வகுத்து நடைமுறைப்படுத்துகின்ற அதிகாரத்தைத் தம்மிடத்தில் வைத்துள்ள பார்ப்பனச் சாதி, இந்து மதத்தின் தலைமைச் சாதியாக இருப்பதால் இந்து மதமே பிராமண மதம் என்றும் அழைக்கப்படுகிறது. வர்ணாஸ்ரம அமைப்பு, வர்ணம் அல்லது நிறம் சார்ந்தது என்பது அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. இந்தக் கருத்தின் அடிப் படையில் பார்த்தாலும் பார்ப்பனரின் நிறம் வெள்ளை என்பதுடன் அதுவே உயர்ந்த குணமாகிய சத்வ குணத்தின் நிறமும் எனவும் இந்து மத நூல்களில் கூறப்பட்டுள்ளது. இதுவும் இந்து மதத்தைப் பிராமணிய மதம் எனக் குறிப்பிடுவதற்கான தர்க்கவியல் அடிப்படையை நிறுவுகிறது.

வர்ணாஸ்ரம அமைப்பின் அடிமட்டத்தில் உள்ள சூத்திரர் மற்றும் இதற்குள் அடங்காத பஞ்சமர்களின் நிறம் கருப்பு என்பதும் இந்து மதத்தின் ஆதார நூல்களில் கூறப்பட்டுள்ளது. எனவே வந்தேறிகளாகிய இந்தோ -ஐரோப்பிய வெள்ளை நிற இனக் குழுவினர் கருப்பினப் பூர்வகுடிகளை (திராவிடர் என்றோ பகுஜன் என்றோ அந்தந்தப் பிரதேசங்களின் சிறப்புக் கூறுகளின்படி அழைத்துக்கொள்வது அரசியல் ரீதியில் சரியானதாகக் கருதப்படுகிறது) நயவஞ்சகமாக அடிமைப்படுத்தித் தமது சாதிய மேலாண்மையை நிலைப்படுத்திக்கொண்டனர் என்றொரு வரலாற்றுச் சித்திரம் இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவிலும் வரலாற்று அறிஞர்கள், மானுடவியல் அறிஞர்கள், சமூகவியல் அறிஞர்கள் ஆகியோராலும் பரவலாக ஏற்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட கருத்தின் பலவீனங்களை ஆய்வாளர்கள் இதுவரையில் விமர்சனத்துக்கு உட்படுத்தவில்லை. எடுத்துக்காட்டாக, பிராமணர், க்ஷத்ரியர், வைசியர், சூத்திரர் என்ற வர்ணங்களின் பெயர்களுக்கான வேர்ச் சொற்கள் இந்தோ- ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை அல்ல.

ஆப்ரஹாம் அல்லது இப்ராஹிம் என்ற தொன் மூதாதையரின் பெயர்கள் செமிட்டிக் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஹீப்ரூ மொழிக்குரியவை. ஆப்ரஹாம் என்பதை அல் ப்ரஹ்மா என்று பிரிக்கலாம். அல் எனும் சொல் ஆங்கிலத்தில் உள்ள tலீமீ என்ற முன்னொட்டு ஆகும். எனவே 'பிராமண' என்ற சொல்லுக்கும் இதற்கும் உள்ள தொடர்பு வெளிப்படையானது. எவ்வாறெனில் பப்பா (தீணீஜீஜீணீ), வாப்பா (ஸ்ணீஜீஜீணீ), பாபு (தீணீஜீu) போன்ற சொற்கள் தந்தையைக் குறிக்கும். இவையெல்லாம் ப்ரஹ்மா, பம்மா (தீணீனீனீணீ) என்ற சொல்லுடன் தொடர்புடையவை. 'க்ஷத்ரிய' என்ற சொல் 'கத்தி' என்ற சொல்லுடன் தொடர்புடைது. க்ஷத்ரியவாடா என்ற பகுதி குஜராத்தில் கத்தியவார் எனப்படுகிறது. க்ஷத்ரியர்கள், நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் 'கத்தியர்' எனக் குறிப்பிடப்படுகின்றனர். துருக்கி நாட்டில் வழங்கிவந்த பண்டைய ஹிட்டைட் மொழியில் கத்தி என்பது பொது ஆயுதப் பெயராகும். 'க்ஷத்ர' என்பதும் சம்ஸ்கிருதத்தில் ஆயுதத்தைக் குறிக்கும். 'க்ஷத்ரிய' என்னும் இச்சொல் 'கத்தி' என்ற சொல்லின் சமஸ்கிருதமயப்பட்ட வடிவாக இருக்க வேண்டும். எனவே க்ஷத்ரிய என்னும் சொல்லும் இந்தோ-ஐரோப்பிய மொழிச் சொல்லிலிருந்து தோன்றியதல்ல.

அடுத்ததாக, வைசியர் என்ற சொல் 'விஸ்', 'விஸ்வம்' என்ற வேர்ச் சொற்களுடன் தொடர்புடையதாகும். வைசியர் என்ற சொல்லுக்கு உலகப் பொது மக்கள் என்று பொருள். அதாவது அடிமைகளல்லாத சுதந்திர உலகக் குடிமக்கள் வைசியர் எனப்பட்டனர். இச்சொல் வியன் (விரிந்த), வையம் (பரந்த உலகு) என்னும் தமிழ்ச் சொற்களுடன் தொடர்புடையது. எனவே வைசியர் என்ற சொல் திராவிட மொழியைச் சார்ந்த வேர்ச் சொல்லிலிருந்து தோன்றியிருக்கலாம். இறுதியாக, சூத்திர (அ) தஸ்யு என்ற சொல்லுக்கு தசா (அடிமை) என்று பொருள். இச்சொல் 'தாஹா' என்ற வடிவில் ஆப்கான் பகுதியில் வழங்குகிறது. இதன் பொருள் மனிதன் என்பதாகும். ஆரியர்களால் முதன்முதலில் அடிமைப்படுத்தப்பட்டவர்கள் இந்தத் தாஹா இனக் குழுவினராக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இங்கு நாம் சொல்ல விழைகின்ற கருத்து என்னவெனில் வர்ணங்களுக்கு உரிய பெயர்கள் நான்குமே இந்தோ-ஐரோப்பிய மொழி வேர்ச் சொல்லிலிருந்து தோன்றியவை அல்ல என்பதுதான். அப்படியானால் வர்ணாஸ்ரம அமைப்பு என்பதும் குறிப்பாக தலைமை வர்ணப் பிரிவினராகிய பிராமணர் என்ற சாதிப் பிரிவும் இந்தோ-ஐரோப்பிய மொழிக் குழுக்களின் வாழ்க்கை முறையிலிருந்து தோன்றியிருக்க வாய்ப்புண்டா என்பதுதான் கேள்வி. மேலும் ஆரியர்களுக்கு உரியதான ரிக் வேதம் காட்டுகிற சமூக அமைப்பு அதிகபட்சமாக இனக் குழுச் சமூக அமைப்புடன் வீரயுக மட்டத்திற்குதான் வளர்ச்சியடைந்திருந்தது எனும்போது அவர்களிடம் வேலைப் பிரிவினை என்பதெல்லாம் அமைந்திருப்பது சாத்தியமா?

இச்சிக்கல் ஒருபுறமிருக்க, நான்காம் வர்ணமாக சூத்திர வர்ணத்தைச் சேர்ந்தவர்கள் என்று இந்து மத நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள கருப்பு நிற இனக் குழுக்களிலும் கடுங்கருப்பு நிற இனக் குழுவினராகிய ஆப்பிரிக்க மக்களிடையே நிலவிவருகின்ற சில சமூக அமைப்புக் கூறுகளையும் வரையறைகளையும் ஆராயும்போது இந்த ஆய்வுச் சிக்கலுக்குப் புதிய பரிமாணமேகிடைக்கிறது. இந்தியச் சாதி அமைப்புக் குறித்து ஆராய்கின்ற அறிஞர்கள் இந்த நிதர்சனமான நிலவரம் குறித்த அறியாமையில் இருப்பது நமக்கு வியப்பாகவே உள்ளது.

ஆப்பிரிக்காவில் சாதிகள்

மனிதச் சமூகம் முதன்முதலில் தோன்றிய ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள பல இனக் குழுக்களில் (ethnic groups) சாதி முறை இன்றைக்கும் ஏதோவொரு வடிவில் நிலவிக்கொண்டிருக்கிறது. பிறப்பின் அடிப்படையில் அமைந்த தொழிற்தேர்ச்சி பெற்ற தனக்குள்ளேயே மணவுறவைக் கொண்டுள்ள குழுவே 'சாதி' என்று வரையறுக்கப்படுகிறது. இத்துடன் கூடுதலாக இத்தகைய குழுக்கள் பல்வேறு சமூகத் தடைகளுக்கும் பாரபட்சங்களுக்கும் ஆட்படுவது வழமையாக உள்ளது. இத்தகைய சாதிச் சமூகம் தொடக்கக் கட்ட சமுதாயங்களில் காணப்படுகிற வேலைப் பிரிவினை சார்ந்தது என்று கார்ல் மார்க்ஸ் குறிப்பிடுகிறார். இது ஓரளவுக்குப் பொருத்தமே எனினும் முழுமையானதல்ல. இதில் பொருளாதார அம்சம் மட்டுமே வலியுறுத்தப்படுகிறது. சாதி ஒரு சமூக அமைப்பு என்பதில் எவரும் கருத்து வேறுபடுவதில்லை. ஒவ்வொரு சமூகமும் தனக்கேயுரிய சமூக அமைப்பைக் குறிப்பிட்ட சமூகப் பொருளாதார நிலைமைகளுக்குத் தக்கப்படி உருவமைத்துக்கொள்கிறது. அந்நிலைமைகள் மாறும்போது புதிய நிலைமைகளுக்குத் தக்க புதிய அமைப்பை ஏற்படுத்திக்கொள்கிறது. ஆனால் சாதி, பிறப்பு சார்ந்து இருப்பதால் சமூகப் பொருளாதார நிலைமைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுவிட்ட பின்னரும் அவ்வாறே நீடிக்கிறது. ஆப்பிரிக்கக் கிழக்கு எல்லையான எத்தியோப்பியாவில் தொடங்கி சூடான், மாலி, மருஷியானா, கேம்பியா, கினி, பிஸா, ஐவரி கோஸ்ட், நைஜர், பர்க்கினாஃபாஸோ, கேமரூன், கானா, லைபீரியா, சியரா லியோன், அல்ஜீரியா, நைஜீரியா, சாட் என மேற்கெல்லையான செனகல் வரையிலும் மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் படிநிலைச் சாதியமைப்பு நிலவிக் கொண்டிருக்கிறது. இந்தச் சாதிக் குழுக்கள் எதிர்கொள்ளும் பல வகை ஒதுக்குதல்களும் ஒடுக்குமுறைகளும் பல நேரங்களில் இந்தியாவில் நிகழ்பவற்றைவிடக் கடுமையானவை. இதற்கு அந்தச் சமூகங்கள் வளர்ச்சி பெறாமல் பழைய நிலைமைகளிலேயே நீடித்துக்கொண்டிருப்பதே காரணம்.

ஆப்பிரிக்க நாடுகளில் காணப்படும் சாதி முறைகளை மூன்றாக வகைப்படுத்தலாம். செனகல் நாட்டின் ஓலோஃப் (Wolof) சமூகம், எத்தியோப்பிய கேமோ (Gamo) சமூகம் மற்றும் மேற்கு-மத்திய ஆப்பிரிக்காவின் மண்டே (Mande) மொழி பேசுகிற மக்கள் சமூகம் ஆகியவற்றில் உள்ள சாதி முறையை ஒரு வகையாகவும், நைஜீரிய ஓசு (Osu), சோமாலிய சாப் (Sab) சாதி முறைகளை மற்றொன்றாகவும், ருவாண்டா மற்றும் உகாண்டா நாடுகளின் வகையை மூன்றாவதாகவும் கூறலாம். இவற்றிற்கு இடையில் உள்ள பொதுமைகள் இவை ஒரே அமைப்பு முறையின் மாறுபட்ட திரிந்த வடிவங்களாக இருக்க வேண்டும் எனக் காட்டுகின்றன. இவற்றில் முதல் வகை இந்தியச் சாதி முறையைப் பெரிதும் ஒத்திருக்கிறது. அதாவது ஒரே இனக் குழுவுக்குள்ளேயே இந்தியச் சாதி அமைப்பில் காணப்படும் பிறப்பு, படிநிலை, தொழில், அகமண முறை (தங்கள் சாதிக் குழுவுக்குள்ளேயே மணம் செய்துகொள்வது), தீட்டு, பிரிவினை, சமூக நிகழ்வுகளில் புறக்கணிப்பு, தனிக் குடியிருப்புகள், தனி இடுகாடுகள், இடுகாடு இட மறுப்பு போன்ற அனைத்துக் கூறுகளையும் கொண்ட முதலாம் வகை.

இரண்டாவது, நைஜீரிய ஓசு முறை. சமூகத்தின் மற்ற அனைவரும் ஒரு பிரிவாகவும் ஓசுக்கள் எனப்படும் தீண்டத்தகாதோராகக் கருதப்படும் சாதி ஒன்றுமாகவும் இருக்கிறது. இந்த ஓசு சாதியினர் அதே இனத்தைச் சேர்ந்தவர்களாகவும் சில நேரங்களில் வேறு இனக் குழுவிலிருந்து ஏதோ வகையில் ஓசுக்களுடன் தொடர்பு வைத்திருந்தவர்களுமாவர். சோமாலியாவில் மிட்கள் (Medgan), டுமல் (Tumal), யிபிர் (Yibir) என்னும் சாதிகள் தாழ்ந்த சாதிகளாக உள்ளன. சோமாலிய அரச குலங்களுக்கும் இவர்களுக்கும் இடையில் புரவலர் - சார்ந்திருப்பவர் என்ற உறவுநிலை உள்ளது. மூன்றாவது வகை ருவாண்டா நாட்டில் உள்ள இனக் குழுச் சாதி முறையாகும். இதில் ஹுடு (Hutu), டுட்ஸி (Tutsi) என்ற இருவேறு இனக் குழுக்கள் இரண்டு சாதியினராகவும் இவ்விரு சாதிகளின் கலப்பில் பிறந்தவர்கள் ட்வா (Twa) என்ற மூன்றாவது பிரிவாகவும் உள்ளனர். மிகக் குறைந்த எண்ணிக்கையில் உள்ள ட்வா பிரிவினர் தீட்டு எனக் கருதப்படுகின்ற பல்வேறு தொழில்களில் ஈடுபடுகின்றனர். ஆளுவோராக உள்ள டுட்ஸிக்களும் விவசாயிகளாகவும் வணிகர்களாகவும் உள்ள ஹுடுக்களும் ட்வா பிரிவினரைப் பாரபட்சமாக நடத்துகின்றனர்.

செனகல்

செனகல் நாட்டில் உள்ள இனக் குழுக்களை மூன்று குடும்பங்களாகப் பிரிக்கின்றனர். டெக்ரூர் (Tekrur) குடும்பத்தில் ஓலோஃப் (36%), டூக்ளூர் (Tukloor - 9%), செரீர் (Sereer - 17%), ஃபல்பே (Fulbe - 17%), லெபு (Lebu) மற்றும் லாபே (Lawbe) இனக் குழுக்களும், மண்டே (Mande) குடும்பத்தில் மண்டிங்கோ (Mandingo - 6%), மாலிங்கே (Malinke - 4%), பமானா (Bamana) மற்றும் சரகோல் (Sarakole) இனக் குழுக்களும், பாலியோ செனிகேம்பியன் (Paleo - senegambian) குடும்பத்தில் ஜோலா (Jola - 9%), பசாரி (Basari), பேனுக் (Baynuk), நூன் (Noon), பலோர் (Palor) ஆகிய இனக்குழுக்களும் உள்ளன. செனகல் மக்கள் தொகையில் பெரும்பான்மையினரான (36%) ஓலோஃப் இனக் குழுவிலும் இன்னும் டெக்ரூர் மற்றும் மண்டே குடும்பங்களைச் சேர்ந்த இனக் குழுக்களிலும் தெளிவான சாதிப் படிநிலை உள்ளது. கீர் (Geer - ஆளுவோர்/சுதந்திர மனிதர்கள்), ஜாம் (Jaam- அடிமைகள் மற்றும் அவர்களின் வழிவந்தோர்), நீநோ (Neeno - சாதி மக்கள்) என மூன்றாகப் பிரித்துள்ளனர். ஓலோஃப் இனக் குழுவில் சாதி அடுக்கில் மேல் உள்ள கீர்கள் (மண்டே இனக் குழுவில் இவர்கள் ஹோரோ (Horo) எனப்படுகின்றனர்) நிலவுடைமையாளர்களாகவும் மேன்மக்களாகவும் கருதப்படுகின்றனர். இவர்களுக்கு அடுத்தபடியாக உள்ள நீநோக்களுள் முதலில் கைவினைஞர்களான டெக் (Tegg - கருமார்) ஊடெ (Uude- தோல் பதனிடுவோர்), தச்சர்களான சீனே (Seene), நெசவாளர்களான ராப் (Rabb) என்ற படிநிலையும், இரண்டாவதாக கிவெல் (Gewel) (கிரியாட்ஸ்) எனப்படும் பாணர்களும் இவர்களுக்குக் கீழே மூன்றாவதாக நூலே (Noole) எனப்படும் வேலைக்காரர்களும் கோமாளிகளும் உள்ளனர். இவர்களுக்கு அடுத்த நிலையில் ஜாம் எனப்படும் அடிமைகள் உள்ளனர். இந்த அடிமைகள் உழுகுடிகளாகவும் பயன்படுத்தப்படுகின்றனர். சில நேரங்களில் மேன்மக்களான கீர் பிரிவில் உள்ள விவசாயிகளின் பொருளாதார நிலை, தாழ்ந்த சாதிகளாகக் கருதப்படும் நீநோக்களையும் கிரியாட்டுகளையும் (Griots) விடக் கீழ்நிலையில் இருந்தாலும் சமூக ரீதியில் அவர்கள் மரியாதைக்குரியவர்களாகவே உள்ளனர். செனகல் நாட்டின் மக்கள் தொகையிலேயே 9% உள்ள ஜோலா மற்றும் பசாரி போன்ற பாலியோ செனிகேம்பியன் இனக் குழுக்களில் சாதி முறை இல்லை என்பதும் இந்த இனக் குழுக்கள் மிகப் பழமையானவை என்பதும் குறிப்பிடத்தக்கவை.

கிரியாட் எனப்படும் பாணர்கள் அவ்வப்போது தீண்டத்தகாதோராக, ஊருக்கு வெளியே வசிக்க நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். இவர்கள் கிராமத்திற்குள் வசிப்பது கிராமத்திற்கு அழிவைக் கொண்டுவரும் எனக் கருதப்படுகிறது. இவர்களுக்கு இடுகாடுகளும் மறுக்கப்படுகின்றன. நிலவுடைமையாளர்களான கீர்களின் நம்பிக்கைப்படி புனிதமான இந்தப் புவி தீட்டுக்குரிய இவர்களைத் தாங்காது என்பதே இதற்குக் காரணமாகும். இதனால் இவர்கள் பிணத்தை மரத் தண்டின் (Trunk Baobab Tree) நடுவில் உள்ள காலியான இடத்தில் வைத்து மூடிப் புதைக்கின்றனர். இப்பாணர்கள் பரம்பரையாக மேல் தட்டில் உள்ள கீர்களைப் புகழ்ந்து பாடல்கள் பாடி வந்துள்ளனர். மேலும் கீர் சமூகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துடனும் இணைந்தாற்போலவே ஒரு கிரியாட் குடும்பம் உள்ளது. இந்த கிரியாட்டுகள் மத்தியிலும் மேல்தட்டு கிரியாட்டுகள் என்றும் அடிமை கிரியாட்டுகள் என்றும் பிரிவினைகள் கூறப்படுகின்றன. இதில் ஆளுவோர் சார்ந்த கிரியாட்டுகள் மேல்தட்டினராகவும் மற்றவர்கள் அடிமைகள் என்றும் சில நேரங்களில் குறிப்பிடப்படுகின்றனர்.

பொதுவாக இச்சாதிப் பிரிவுகள் அனைத்திலும் அகமண முறை நடப்பில் உள்ளது. கீர்கள் தங்களுக்குள்ளேயும் நீநோக்களில் உள்ள டெக், ஊடே, சீன், ராப் ஆகியோர் தத்தம் பிரிவுக்குள்ளேயும் கிரியாட்டுகள் கிரியாட்டுகளுக்குள்ளேயும் அடிமைகள் தமக்குள்ளேயுமே மணவுறவைக் கொண்டுள்ளனர். தார்மீக ரீதியில் சாதியை எதிர்ப்பவர்களும்கூடத் தங்கள் குடும்பங்களுக்குச் சிக்கல் ஏற்படும் என்பதால் பிற சாதியிலிருந்து மணந்துகொள்ளத் தயங்குகின்றனர். மேலும் பெயர்களின் பின்னொட்டைக் கொண்டே அவர்களின் சாதியை நாம் கண்டுபிடித்துவிடக்கூடிய நிலைமையும் உள்ளது. உதாரணமாக ம்பே (Mbaye), ம்பௌப் (Mboup), செக் (Seck), தியாம் (Thiam), நியாங் (Niang), ங்கோம் (Ngom), சாம் (Sam) போன்ற ஓலோஃப் சமூக கிரியாட்டுகளின் பின்னொட்டுப் பெயர்கள் அல்லது குலப் பெயர்கள். மண்டிங்கா கிரியாட்டுகளிடம் உள்ள இத்தகைய பெயர்கள் டையாபாட்டே (Diabate), கோன்டே (Konte), கௌயாட்டே (Kouyate), கொனாட்டே (Konate), சோசி (Soce) மற்றும் பிற.

எத்தியோப்பியா

எத்தியோப்பியாவின் தென்மேற்குப் பகுதியில் கேமோ (Gamo) இனக் குழுவுக்குள் சாதி அமைப்பு உள்ளது. இது குறித்து அமெரிக்காவின் தெற்கு ஃப்ளோரிடா பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் ஜான் ஆர்த்தர் மற்றும் காத்ரின் ஜே. வீட்மேன் ஆகியோரும் ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தின் மேத்யூ கர்ட்டிஸும் இணைந்து மானுடவியல் அகழ்வாய்வு மேற்கொண்டுள்ளனர். இந்தச் சமூகத்தில் காணப்படும் பிரிவினைகளையும் அவற்றின் எச்சங்களாக உள்ள பொருள்களையும் அடையாளங்காண அவர்கள் முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர். விவசாய சமூகத்தினரான கேமோ மக்களின் சாதிகள் குறித்து இவர்கள் கூறுவதாவது:

ஆப்பிரிக்க மற்றும் தெற்காசியச் சாதியமைப்பின் பல தன்மைகளுடனும் கேமோ சாதி முறை ஒத்திருப்பதாக நாங்கள் நம்புகிறோம். முதலாவதாக, கேமோ சமூக அமைப்பு முறை, சமூகத்தின் வெவ்வேறு அடுக்குகளைப் பாரம்பரியத் தொழில்களுடன் இணைத்துள்ள இறுக்கமான சமூகக் கட்டமைப்பு. கேமோ அமைப்பு முறை மூன்று சாதிக் குழுக்களைக்கொண்டது.

1. குடிமக்கள் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் பாரம்பரியமான தலைவர்கள், விவசாயிகள் மற்றும் நெசவாளர்கள், 2. குயவர்களை உள்ளடக்கிய குடிமக்கள் அல்லாதோர், 3. தோல் தொழிலாளர்கள், கருமார் மற்றும் கல் இயந்திரம் செய்வோரை (கல்தச்சர்) உள்ளடக்கிய குடிமக்கள் அல்லாதோர். இரண்டாவதாகக் குறிப்பிட்ட சாதியில் உறுப்பினராவது பிறப்பால் நிர்ணயிக்கப்படுகிறது. மூன்றாவதாக, ஒவ்வொரு சாதிக் குழுவும் அகமண முறையைக் கொண்ட குழுவாகவும் உள்ளது. நான்காவது, கைவினைஞர்கள் கேமோ சமூகத்தின் முழு உறுப்பினர்கள் தாங்கள் மட்டுமே அறிந்த ஆர்கோ (ணீக்ஷீரீஷீt) அல்லது ஒரு சடங்கு மொழியை வைத்துள்ளனர். இறுதியாகக் கைவினைஞர்கள் விவசாயிகளுடன் உறவு வைத்துக்கொள்வதைத் தூய்மையின்மை, தீட்டு என்ற கருத்தாக்கங்களின் மூலம் தடுத்துக் கைவினைஞர்களைத் தாழ்த்திவைப்பதை கேமோக்கள் வலுப்படுத்துகின்றனர். விவசாயிகளோ கைவினைஞர்களோ பண்பாட்டுத் தடை எதையேனும் மீறுவாராயின் அவர்கள் முன்னோர்களை நொந்துபோகச் செய்து நிலம் மற்றும் மக்களின் உற்பத்திப் பெருக்கத்தைத் தடுத்துவிடுவர் என்பது கேமோக்களின் நம்பிக்கை.

விவசாயிகளையும் கைவினைஞர்களையும் தனித் தனிச் சாதிக் குழுக்களாகச் சமூகப் பொருளாதார ரீதியில் பிரிப்பது அவர்களின் குடியிருப்புகள், இடுகாடுகள் மற்றும் அவர்கள் தங்களுக்குரியதாக வைத்திருக்கிற பொருள் சார்ந்த பண்பாட்டிலும் தெளிவாகத் தெரிகிறது.

எத்தியோப்பிய மக்களை இனக் குழு ரீதியாக வகைப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல என்கின்றனர் அறிஞர்கள். அதாவது இந்தியாவைப் போல் பல்வேறு இனக் குழுக்கள் பல விதங்களிலும் கலந்துள்ளன. கேமோ இனக் குழுவுக்குள் இருப்பதைப் போலவே ஓமோடிக் (Omotic) மொழிக் குடும்பத்திற்குரிய மக்களின் டாவ்ரோ (Davro) ஆட்சிப் பகுதியில் காணப்படும் சாதி முறை பற்றிச் சுருக்கமாகக் காண்போம். டாவ்ரோவின் முந்தைய அரசாட்சியில் சமூக அடையாளங்கள் ஒவ்வொன்றும் ஏதேனும் ஒரு தொழில் சார்ந்ததாக இருந்தன. இப்போது அவையே பொருளாதாரம், திருமணம், சடங்குகள், இருப்பிடம் போன்ற பல்வேறு துறைகளிலும் அன்றாட வாழ்க்கையில் பரஸ்பர வினையாற்றுதலுக்கான அடிப்படைக் கொள்கைகளாக அச்சமூகத்தில் இருந்துவருகின்றன. மேலிருந்து கீழாக வரிசைப்படுத்தப்பட்டுள்ள இந்தச் சமூக அடையாளங்கள் வருமாறு: 1. மல்லா (Malla) எனப்படும் குடிமக்கள், விவசாயிகள் மற்றும் ஆட்சியாளர்கள், 2. இரும்புக் கருவிகள் தயாரிக்கும் வோகாட்சே (Wogatche) மக்கள், 3. டெகெல்லே (Degelle) எனப்படும் தோல் பதனிடுவோர், 4. கிடாமனா (Gitamana) எனப்படும் இரும்பு உருக்குபவர்கள், 5. மன்ஜா (Manja) எனப்படும் கரி தயாரிப்போர், காட்டுக் குடிகள் மற்றும் வேட்டையாடுவோர். இதில் குறிப்பிடத்தக்க அம்சம், இரும்பு உருக்குவோர் தங்கள் வேலையைத் தொடங்கும் முன்பு தாங்களே உரிய சடங்குகளைச் செய்துகொள்கின்றனர். மேலும் ஓமோடிக் மொழி பேசும் சமூகங்கள் பொதுவான ஒரு சடங்கு மொழியைக் கொண்டிருப்பதாக அறிஞர்கள் கூறுகின்றனர்.

இவையன்றி எத்தியோப்பியா முழுவதும் 60-70 சாதிக் குழுக்கள் பரவியுள்ளன. சமூகத்தின் பிற பிரிவினரிடமிருந்து தீட்டு, தூய்மையின்மை என்ற காரணங்களால் இவர்கள் பிரிக்கப்பட்டுள்ளபோதிலும் இவர்களில் ஒரு பிரிவினர்தான் சமூகத்தின் மற்ற பிரிவினருக்குச் சடங்குகளைச் செய்துவைக்கும் பூசாரிகளாக உள்ளனர்.

நைஜீரியா

நைஜீரியாவில் ஓசு சாதி முறை நடப்பில் உள்ளது. இந்த மக்கள் இக்போ (Igbo) நிலங்களில் இருக்கின்றனர். இக்போ மொழி பேசுகின்ற சமூகத்தினர் புவிக் கடவுள், சிலைக் கடவுளர்கள் மற்றும் மூத்தோர் ஆவிகளிலும் ஒரு படைப்புக் கடவுளரையும் சுக்வு (Chukwu), ஓபஸி (Obasi), சி (Chi) அல்லது சினெகெ (Chineke) என்ற உயர்ந்த கடவுள்களிலும் நம்பிக்கை கொண்டுள்ளனர். இக்போ மக்களின் முன்னோர்கள் முறைமை, நேர்மை மற்றும் கடும் உழைப்புக் கொண்டவர்கள் என்ற சமூக விழுமியங்களைக் கொண்டிருந்தனர். இக்போக்கள் தவிர இபிபோக்கள் (Ibibo), யோருபாக்கள் (Yoruba) மற்றும் இதர நைஜீரியக் குழுக்களிடத்திலும் ஓசு எனும் தீண்டாமைச் சாதி முறை நிலவுகிறது. பிற நாடுகளிலிருந்து மாறுபட்ட வகையில் ஓசுக்கள் கடவுளர்களுக்கு உரியோராகக் கூறப்படுகின்றனர். இன்னும் மிகச் சிறிய எண்ணிக்கையில் உள்ள சில தாழ்ந்த சாதிகளைக் கடவுளுக்கான பலியாடுகள் என்று சொல்கின்ற மரபு இன்றுவரை நிலவிவருகிறது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம், ஓசுக்களும் அவர்களை ஓடுக்குவோரும் ஒரே இனக் குழுவினர் என்பதுதான். ஓசுக்களுடன் மற்றவர்கள் உடனமர்ந்து உண்பதும் மண உறவும் கடுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளன. அத்துடன் ஓசுக்களைத் தொடுபவர்களும் ஓசுக்களாகிவிடுவர். ஓசுக்கள் தம்மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை மீறும்போதெல்லாம் அவர்கள்மீது கடும் வன்முறை பிரயோகிக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் முன்னோர்கள் விட்டுச் சென்ற கோயில்களுடன் பிணைக்கப்பட்டுள்ளனர். இக்கோயில்கள் சிலவற்றில் உள்ள கடவுளர்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்களாக இருப்பதால் பூசைகளையும் சிக்கல் நிறைந்த சடங்குகளையும் தொடர்ந்து செய்தாக வேண்டும் என்று நம்பப்படுகிறது. இந்தக் கோயில்களை அப்புறப்படுத்துவது வீட்டில் உள்ள அனைவரின் இறப்புக்கும் காரணமாகிவிடும் என்று அஞ்சப்படுகிறது. அல்லது சிலை வழிபாட்டில் உள்ளவர்களின் தாக்குதலுக்கு ஆளாக வேண்டியிருக்கும் என்னும் அச்சமும் உள்ளது.

இவர்களில் ஒரு சிறு பிரிவினர் தாய்க் கடவுளாக மலைப் பாம்பை வணங்குகின்றனர். மலைப் பாம்புகளை நிலத்தின் பாதுகாவலர்கள் என்று கூறுகின்ற மரபும் உள்ளது. இந்த ஓசுக்கள் வெவ்வேறு பகுதிகளில் ஒரூ (ளிக்ஷீu), அடு-எபோ (கிபீu-மீதீஷீ), ஒருமா (ளிக்ஷீuனீணீ), உமே (ஹினீமீ), ஓஹு (ளிலீu), ஓமோனி (ளினீஷீஸீவீ) என வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றனர். மாந்தர (விணீஸீபீணீக்ஷீணீ) என்ற பகுதியில் மட்டும் கருமார்களும் குயவர்களும்கூட ஓசுக்களாகக் கருதப்படுகின்றனர். இந்த ஓசுக்கள் கடவுளுக்குச் சொந்தமானவர்கள் என்ற நம்பிக்கையால் தொடக்கத்தில் மதிப்புடனும் மாண்புடனும் கருதப்பட்டதற்கு ஆதாரங்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்; பின்னாளில் சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாகிவிட்டனர் என்கின்றனர். ஓசு சாதி முறை இக்போக்களின் மரபான மதங்களின் செயல்முறையிலிருந்து தோன்றியதாக அறிஞர்கள் கருதுகின்றனர்.

தென் மேற்கு நைஜீரியாவில் ஓஷோக்போ (Oshogbo), ஓக்போமோஷோ (Ogbomosho) என்ற இரு குழுவினர் ஒருவரையொருவர் பாரபட்சத்துடன் நடத்துகின்றனர். இருப்பினும் அவர்கள் ஒரே புவியியல் நிலப்பரப்பைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் ஓடுடுவா (Oduduwa) என்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாவர்.

சோமாலியா

சோமாலியச் சமூகத்தைக் குலக் குழுக்களின் கூட்டமைப்பு எனச் சொல்லுமளவுக்கு அங்கு குலங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்தக் குலங்கள் குடும்பங்களாகவும் துணைக் குடும்பங்களாகவும் பிரிந்துள்ளன. இந்தக் குலக் குடும்பங்கள் வரையறுக்கப்பட்ட அரசியல், பொருளாதார அல்லது சமூகச் செயல்பாடுகளைக் கொண்டிருக்கவில்லை. இங்கே இருக்கின்ற தாழ்ந்த சாதிகள், சாப் (Sab) எனப்படுகின்றன. மொத்த மக்கள் தொகையில் இவர்களின் விழுக்காடு ஒரு சதவீதம் மட்டுமே. இவர்களுக்கு நிலப்பரப்பு அல்லது மரபு வரிசை அல்லது இன அடிப்படைகள் இல்லை. இவர்கள் ஆட்சி அதிகாரத்திலுள்ள சோமாலி இனக் குழுக்களின் அடிமைகள் போலிருக்கின்றனர். இவர்கள் மிட்கன், டுமல், யிபிர் என்ற பெயர்களிலும் கபோயே (Gaboye), மிட்கன், ரஹன்வெய்ன் (Rahanwein), லெ கிட்டான் (Les Gitanes) என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகின்றனர். இவர்களில் டுமல் என்போர் கருமார்களாகவும் யிபிர், மிட்கன் ஆகியோர் முறையே வேட்டையாடுதலிலும் தோல் தொழிலிலும் உள்ளனர்.

ருவாண்டா

மூன்றாம் வகையான இச்சமூகம் ருவாண்டா, புருண்டி, காங்கோ, உகாண்டா ஆகிய நாடுகளில் உள்ளது. ஒட்டுமொத்தச் சமூகமும் மூன்று பிரிவுகளாகப் பிரிந்துள்ளது. இதில் அடித்தட்டில் உள்ள ட்வா பிரிவினர் மட்டுமே கிட்டத்தட்ட தீண்டத்தகாதோரின் நிலைக்கு ஒப்பான நிலையில் உள்ளனர். இவர்களின் தொழில்களாக வேட்டை, உணவு சேகரிப்பு, பானை வனைதல், கோமாளித் தொழில் ஆகியவற்றைக் கூறலாம். இச்சமூகத்தில் முதல் நிலையில் டுட்ஸிகள் ஆளுவோராகவும் மக்கள் தொகையில் 90 விழுக்காடு உள்ள ஹுடுக்கள் பண்ணையாட்களாகவும் இருந்தனர். இந்த மூவருக்கும் இடையிலான சாதிப் பிரிவினை இறுக்கமாகக் கடைப்பிடிக்கப்பட்டது. ஒருவருக்கொருவர் மணவுறவு இல்லை. இங்கு இருந்த அனைத்து இனப் பிரிவினர்களும் பழமொழிகள், பாடல்கள் மற்றும் மந்திரங்களை அதிகமும் கொண்டிருந்தனர். டுட்ஸிகளின் காவியப் பாடல்கள் புகழ்பெற்றவை. அவை டுட்ஸிகளின் அரச வம்சத் தொடர்ச்சியைக் கூறுவதாக உள்ளன. இவற்றில் வழி வழியாக வந்த மரபுக் கதைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உகாண்டா

19ஆம் நூற்றாண்டில் உகாண்டாவின் அங்கோல் அரசாட்சிப் பகுதியில் இருந்த சாதிகள் இனக் குழுச் சாதி முறைக்குச் சிறந்த உதாரணம். ஹமிடிக் (Hamitic) இனக் குழுவினைச் சேர்ந்த பஹிமாக்கள் (Bahima) ஆயர்களாகவும் போர்க் குடிகளாகவும் இருந்தனர். இவர்களுடன் பெய்ரு (Bairu) என்ற மற்றோர் இனக் குழுவினரும் ஒரு சாதியாக வாழ்ந்தனர். தோட்டப் பயிர்செய்துவந்த இவர்கள் தங்களின் அறுவடை மொத்தத்தையும் பஹிமாக்களிடம் கொடுத்துவிட்டு அவர்கள் மறுபங்கீடு செய்வதைத்தான் பெற்றுக்கொள்ளவேண்டும். பஹிமாக்களுக்கும் பெய்ருக்களுக்கும் மண உறவு இல்லை. ஆனால் பஹிமா தலைவர்கள் பெய்ரு பெண்களைக் காமக் கிழத்திகளாக வைத்துக்கொள்வர். இவ்வாறு கலப்பில் பிறந்தவர்கள் அபாம்பரி (Abambari) எனப்பட்டதுடன் இவர்கள் பெய்ருக்களுக்கு இணையாகவே கருதப்பட்டனர். மேலும் இச்சமூகத்தின் விரிவாக்கத்தில் அண்மையில் வசித்துவந்த அபத்தோரோ (Abatoro) என்ற இனக் குழுவையும் சேர்த்துக்கொண்டனர். ஆனால் அவர்களுடன் பஹிமாக்கள் மட்டுமே மணவுறவு கொண்டனரேயன்றி பெய்ருக்கள் மணவுறவு கொள்ள அனுமதிக்கப்படவில்லை. இவர்கள் அனைவருக்கும் கீழே அபக்குகள் (Abahku) என்ற அடிமைகள் இருந்தனர்.

உகாண்டாவில் பாண்ட்டு (Bantu) மொழி பேசுவோர் விவசாயிகளாக இருந்து குலக் குழுத் தலைமை கொண்ட நிர்வாகத்தை உருவாக்கினர். இன்னொரு புறத்தில் நிலோடிக் (Nilotic) மொழி பேசிய மேச்சல் கூட்டத்தினர் இந்தப் பண்பாட்டு மொழி பேசுவோரின் பாதுகாவலர்களாயிருந்து கொஞ்சம் கொஞ்சமாகத் தங்கள் தலைமையில் ச்வெஸி (Chwezi) என்ற ஆட்சியாளர்ளை நிறுவினர். உகாண்டாவில் உருவான இந்த மூன்றாம் வகை அரசுதான் புகாண்டா என்பது. இதன் அரசர்கள் கபகா (Kabaka) எனப்பட்டனர். இந்த அரசர்கள் தாய்வழிக் குலங்களுடன் அடையாளப்படுத்தப்பட்டனர். அனைத்துக் குலங்களுமே அரசனுக்கு மனைவிகளை வழங்கின. கொம்போலா (Gombola) எனப்படும் அரசத் தீ, கபாகாக்களின் அரண்மனை வாயிலில் எப்போதும் எரிந்துகொண்டிருக்கிறது. அரசன் இறக்கும்போது மட்டுமே இது அணைக்கப்படும்.

தொழில் சாதிப் படிநிலைகள் - சமூகப் பாரபட்சங்கள்

ஆப்பிரிக்காவில் உள்ள சாதியமைப்பின் மூன்று வகைகளுக்கும் உதாரணங்களாக வகைக்கு இரு நாடுகளைப் பார்த்தோம். இது மட்டுமின்றி பர்க்கினா ஃபாஸோ, மாலி, நைஜர் ஆகிய நாடுகளில் ட்வாரெக் (Twareg) மேச்சல் சமூகத்தில் மூன்றாவது பிரிவாக பெல்லா (Bella) என்ற அடிமைச் சாதியையும் கென்யாவில் வாட்டா (Watta) என்ற சாதியையும் மருஷியானாவில் ஹராடின் (Haratin) என்ற சாதியையும் இன்னும் பல சாதிகளையும் காண்கிறோம். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்களில் உள்ள மக்கள் பிரிவினர் மட்டுமே சாதி மக்கள் எனப்படுகின்றனர். ஒவ்வொரு தொழிலிலும் உள்ளவர்கள் ஒரு சாதியினராக அடையாளப்படுத்தப்படுகின்றனர். இது கார்ல் மார்க்ஸ் குறிப்பிட்டுள்ள எகிப்து உதாரணத்துடன் பொருந்துவதாக உள்ளது. இந்த சாதிக் குழுக்கள் அடிப்படையில் தொழில் சாதிகள். இவர்களது தொழில்கள்: கருமார், குயவர், நெசவு, தோல் பதனிடுதல், மருத்துவம், பாணர்கள், கோமாளித் தொழில், வெட்டியான் தொழில், காயடித்தல், வேட்டை, உணவு சேகரிப்பு போன்றவை.

எத்தியோப்பியாவில் ஓசாகா டென்ச்சா (Osaka Dencha) என்ற இடத்தில் இரும்பு உருக்குவோர் குறித்து ஆய்வு செய்த குன்னார் ஹாலண்ட் (Gunnar Haaland) மற்றும் சிலர், சாதிக் குழுக்களிடம் உள்ள படிநிலையை அவர்கள் வசிக்கின்ற பகுதிகளே வெளிப்படுத்துகின்றன என்கின்றனர். உதாரணமாக, மன எனப்படும் குயவர்கள் வசிக்கும் பகுதி பள்ளத்திலும் சாதிப் படிநிலையில் மேலே இருப்பவர்கள் வசிப்பது மேட்டுப்பாங்கான பகுதியிலும் உள்ளது. மேலும் சந்தை போன்ற இடத்திலும்கூட அவர்கள் கடை வைக்கின்ற இடத்தில் அல்லது கடையில் வந்து அமருபவர்களில், சாதிப் படிநிலையில் மேலே இருப்பவர்கள் உயரமான இருக்கைகளிலும் கீழே இருப்பவர்கள் தாழ்ந்த இருக்கைகளிலும் அமர்கின்றனர். அவர்கள் போகிற வழியில் சந்தித்துப் பேசிக்கொண்டாலும் படிநிலையில் மேல் இருக்கின்ற சாதியைச் சேர்ந்தவர்கள் உயரத்தில் நின்றுகொண்டுதான் தாழ்ந்த சாதியினரிடம் பேசுகின்றனர் என்கின்றார்கள்.

இத்தகைய தொழில் சாதிகள் உள்ளாகின்ற ஒடுக்கு முறைகள் மற்றும் பாரபட்சங்கள் குறித்து அலெக்ஸாண்டர் ஸ்டீவன்ஸ் இவ்வாறு கூறுகிறார்: "ஒரு சாதி உறுப்பினராக இருப்பதன் விளைவுகளில் பாரபட்சத்தின் அளவிலும் தன்மையிலும் பெரும் வேறுபாடுகள் உள்ளன. குறிப்பான விஷயங்கள் பலவும் புவியியல் மற்றும் பண்பாட்டுச் சூழல் சார்ந்துள்ளன. பாரபட்சத்தின் வடிவங்கள், சமூக விலக்கு, உள்ளுக்குள்ளேயே பிரித்துவைப்பது, சமூகப் பண்பாட்டு நிகழ்வுகளில் பங்கேற்கத் தடை, குடியிருப்புகளைத் தனியே பிரித்து வைத்தல், இடுகாடுகளைப் பிரித்துவைத்தல், இடுகாடுகளுக்கு இடம் தர மறுப்பது, ஆயுதங்கள் வைத்துக்கொள்ளத் தடை, அரசியல் அமைப்புகளில் அங்கம் வகிக்கத் தடை அல்லது கீழ்நிலைப் பொறுப்புகள் மட்டும் தருவது, தீண்டாமைக்கு உள்ளாக்கப்படுவது, நீதி வழங்குதல் சார்ந்த (நீதிபதியாக அல்லது சாட்சியாக) பொறுப்புகளை மறுப்பது, கல்வி மறுப்பு அல்லது கல்வி நிலையங்களுக்குள் பிரித்துவைத்தல் என்பன."

தீட்டும் அதன் காரணங்களும்

இவ்வாறு பாரபட்சமாக நடத்துவதற்குத் தீட்டு மற்றும் தூய்மையின்மை என்ற கருத்துகளும் உடல் சார்ந்த துர்நாற்றம் மற்றும் உணவுப் பழக்கம் போன்றவையும் கூறப்படுவதுடன் சாதி மக்களின் தோற்றம் தொடர்பான விந்தையான கதைகளும் வழங்கப்படுகின்றன. அதாவது விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் பிறந்தவர்களே சாதி மக்கள் எனப்படுகிறது.

ஆப்பிரிக்கச் சமூகங்கள் அனைத்திலும் இரும்பு உருக்குவோரை இழிவாகக் கருதுகின்றனர். இது தொடர்பாக வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு கதைகள் வழங்கப்பட்டுவருகின்றன. உதாரணமாக, பர்க்கினா ஃபாஸோவில் கூறப்படும் கதை. தொடக்கத்தில் கருமார்களும் நினோனோன்செஸ் (Ninononses) என்ற ஆட்சியாளர்களும் நட்பாக இருந்தனர். இவர்களில் ஓர் ஆட்சியாளர் ஒரு கருமாரின் மனைவியின் மீது காதல் கொண்டுவிடக் கருமார் அந்த அரசனைத் தாக்கினார். நினோனோங்கா (Ninononga) எனப்படும் கருமார் தான் காய்த்துக்கொண்டிருந்த உலோக வளையத்தை அந்த ஆட்சியாளரின் கழுத்தில் மாட்டிவிட்டார். அப்போதிலிருந்து கருமார்கள் கீழோராகிவிட்டனர் என்கிறது அக்கதை. கதையின் மூலங்கள் கால ஓட்டத்தில் மறைந்துவிட்டாலும் கருமார்கள் இன்று தனிக் குடியிருப்புகளில் வசிக்கும் நிலை நீடிக்கிறது. சமூகத்தில் உள்ள மற்ற அனைவரும் அவர்களை வெறுப்புடன் பார்க்கின்றனர். இது ஒரு பக்கம் எனில் இச்சாதியினர் தங்களின் முன்னோரான பமாங்கோ (Bamango) என்போர் தொப்பூழ்க் கொடி அறுப்பதற்கான கத்தியையும் மரத்தைத் துண்டாக்கக் கோடரியையும் குழி தோண்டுவதற்கான கருவிகளையும் தயாரித்ததற்காகப் பெருமைப்படுகின்றனர். பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்வின் அனைத்து நிகழ்வுகளுக்கும் ஆதாரமாகத் தாங்கள் இருப்பதாகக் கூறிக்கொள்கின்றனர்.

இது இப்படியிருக்க, உணவுப் பழக்கம் சார்ந்தும் தீட்டு எனக் கருதும் போக்கும் உள்ளது. இதற்கு உதாரணமாக, எத்தியோப்பியாவில் சாரா (Sara) மொழி பேசுகின்ற மக்களிடம் உள்ள சாதி அமைப்பில் கடைநிலையில் வைக்கப்பட்டுள்ள மன எனப்படும் குயவர்கள் குறித்து அவர்களுக்கு அடுத்த மேல்நிலையில் உள்ள இரும்பு உருக்குபவர் ஒருவர் கூறியது: "மனாக்கள் இறந்த விலங்குகளின் புலாலைப் புசிக்கின்றனர். இது மட்டுமின்றிச் சடங்கு வகையிலும் அவர்கள் தூய்மையின்றி உள்ளனர். ஒரு சந்தர்ப்பத்தில் இரும்பு உருக்கிக் காட்டுவதற்காக நாங்கள் ஒரு நகரத்திற்கு அழைக்கப்பட்டிருந்தோம். அங்குச் சென்று அனைத்தையும் நாங்கள் சிறப்பாக முடித்துவிட்டுத் திரும்பி வரும்போது எங்களுடன் வந்த மன சாதியைச் சேர்ந்தவர்கள் வழியில் இறந்த விலங்கு ஒன்றின் உடலைக் கண்டு அதன் புலாலையும் சாப்பிட்டனர். இதன் பின்னர் அந்த மக்கள்மீது கிராமத்தில் படிந்திருந்த கறை மேலும் வலுப்பட்டது." இத்தகைய அதீதக் காரணங்கள் கூறப்படும்போதிலும் சமூகத்திற்கு இன்றியமையாததாக இருந்த தொழில் பிரிவினர் வீழ்ச்சி அடைந்த பின்னரே இவ்வாறான தீட்டு சார்ந்த காரணங்கள் கற்பிக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் நாம் கருதலாம்.

தோல் தொழிலில் உள்ளவர்களின் வீழ்ச்சி குறித்த ஒரு உதாரணத்தை இந்தியாவில் நாம் காணலாம். வேத காலத்தில் யாகக் கருமங்கள் செய்யும்போது கொல்லப்பட்ட விலங்குகளின் தோல்களைத் தனியே உரித்தெடுத்துப் பதப்படுத்திப் பாதுகாப்பது சர்மகார எனப்பட்ட செம்மார்களின் கடமையாகும். ஆடைகள், கவசம், கேடயம், இருக்கைகள் மற்றும் பிற தயாரிக்க விலங்குத் தோல்கள் பயன்பட்டன. மேலும், முதல் மூன்று வர்ணத்தார் தாம் அணிந்த பூணூலில் கிருஷ்ணா சினம் எனப்படும் கருத்த மான் தோலைச் சேர்த்துக் கட்டுவர். இவ்வாறு வாழ்க்கையிலும் சடங்குகளிலும் தோல் முக்கியப் பொருளாக இருந்ததால் அதைப் பராமரித்தவர்களின் நிலையும் உயர்ந்ததாகவே இருந்தது. பின்னர் யாக மரபுகள் வீழ்ச்சி அடைந்து, அரசு அதிகார அமைப்புகள் சிக்கலானவையாக மாறியதன் விளைவாகச் சர்மகாரர்கள் எனும் தோல் தொழிலாளர்களின் நிலை வீழ்ச்சியடைந்தது. கம்மாளர்கள் போன்ற கைவினைஞர் களின் நிலையையும் நாம் இதனுடன் ஒப்பிடலாம். ஆப்பிரிக்கச் சமூகத்திலும் இப்படியான பல மாறுதல்கள் நிகழ்ந்திருக்க வேண்டும் என நாம் யூகிக்கலாம்.

தீ - புவி - புனிதம் - தீட்டு

எத்தியோப்பிய இனங்கள் அனைத்திலும் கைவினைஞர்களை - குறிப்பாக, புவியின் மீது தீயை நேரடியாகப் பயன்படுத்திச் செய்யப்படுகின்ற இரும்பு உருக்குதல், மட்பாண்டம் வனைந்து சூளையிடுதல் ஆகியவற்றைச் செய்வோரை - கீழானவர்களாகப் பார்க்கின்றனர். ஆப்பிரிக்கப் பகுதிகள் அனைத்திலும் கருமார் தொழில் செய்வோர் அழுக்கானோராயும் தூய்மையற்றோராயும் கருதப்படுகின்றனர். இதற்கு மத ரீதியான காரணங்கள் கூறப்பட்டாலும் அரசியல் காரணங்களே முதன்மை யானவையாக இருந்திருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.

மனிதச் சமூகத்தில் மதங்களின் பங்கு மிகவும் தொன்மையானது. பரிணாம வளர்ச்சியில் மனிதனுக்கு முந்தைய ஹோமோஹேபிலிஸ் (Hamohaebilis) கட்டத்தி லேயே மதச் சடங்குகள் இருந்ததைத் தொல்லியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். தொடக்கக் கட்ட சமூகத்திலேயே தீ, வழிபாட்டுக்குரியதாகக் கருதப்பட்டு வந்துள்ளது. நெருப்பு குறித்த மாறுபட்ட இரு மரபுகள் உண்டு. முதலாவது, தீ புனிதமானது, எனவே அதில் வேறெதையும் போடுவது அதன் தூய்மையைக் கெடுப்பது என்னும் மரபு. இரண்டாவதிலும் தீ புனிதமானதாகக் கருதப்பட்டாலும் அதில் புகுந்து வருவது அழுக்குகளையும் பாவங்களையும் போக்கிவிடும் என்கிற நம்பிக்கை சார்ந்த மரபு. நெருப்பின் புனிதம் தொடர்பான ஒரு சான்றாக உகாண்டா நாட்டில் வழக்கத்தில் இருந்த ஒரு முறையைக் குறிப்பிடலாம். தலைநகரில் உள்ள அரசனது அரண்மனை வாயிலில் கொம்போலோ எனப்படும் அரச நெருப்பு எப்போதும் எரிந்துகொண் டிருக்கும். கபகா எனப்பட்ட அரசன் இறக்கும்போது மட்டுமே அது அணைக்கப்படும். புதிய கபகா தேர்ந் தெடுக்கப்பட்டதும் மீண்டும் தீ மூட்டப்படும். நெருப்பைப் புனிதமாகக் கருதுகின்ற மரபு, அடிப்படையில் உலோக நாகரிக மக்களின் மரபாகும். பண்டைய மேற்காசிய மரபுகள் இதற்குச் சான்றாக உள்ளன.

ஆனால் இம்மரபிற்கு மாறாக, உலோக நாகரிகம் வளர்ச்சியடைந்துவிட்ட பின்னரும் விவசாயக் குடிகள் நிலத்தையே புனிதமாகக் கருதுகின்றனர். அதன் உற்பத்தித் தன்மையைக் குலைக்கின்ற எந்தச் செயலையும் இழிவாகப் பார்க்கின்றனர். உலோக நாகரிகம் தோன்றிய பின்னர் இவ்விவசாயக் குடிகள், பொதுவாக அடிமைகளாகவே அல்லது கீழ்ச் சாதியினராகவே கருதப்பட்டனர். இதற்கு இந்திய (தமிழ்ச்) சமூகத்தில் ஒரு உதாரணத்தைக் காட்டலாம். உலோக நாகரிகப் போர்க் குடிகளான வேந்தர்களின் ஆட்சிக் காலத்தில் உழவுத் தொழிலில் இருந்துவந்த வேளாளர்கள் கீழோராகக் கருதப்பட்டதைத் தொல்காப்பியம் காட்டுகிறது. ஆனால் உழுகுடிகளான இம்மக்கள் தங்களை பூமி புத்திரர்கள் என்று கூறிக் கொண்டதுடன் புவியைப் புனிதமாகவும் கருதினர்.

ஆப்பிரிக்க நாடுகளில் இத்தகைய விவசாயக் குடிகளே தற்போது ஆட்சியதிகாரத்தில் உள்ளனர். அவர்களிடம் புவியின் உற்பத்தித் தன்மையே அடிப்படை அக்கறையாக உள்ளது. ஆப்பிரிக்க ஓமோடிக் சமூகங்களில் அவர்களின் புராணங்களிலும் சடங்குகளிலும் இவ்விஷயம் குறியீட்டு வடிவில் அழுத்தமாகக் கூறப்பட்டுள்ளது. எத்தியோப்பியாவில் ஓமோடிக் பகுதியைச் சேர்ந்த கஃபா (Kafa) என்ற அரசாட்சிப் பகுதியில் வழங்கப்படும் புராணக் கதை இப்படி அமைந்திருக்கிறது: தொடக்கத்தில் புவி கருவுற்றிருந்து பல இனக் குழுக்களையும் தோற்றுவித்தது. அவ்வாறு தோற்றுவிக்கையிலேயே தயாரான தொழிற்தேர்ச்சியுடன் தோற்றுவித் தது. முதலில் கையில் ஒரு வலையுடன் மஞ்சோக்கள் (Manjo) எனப்படும் கால்நடை வளர்ப்போர் கையில் பால் குவளையுடன் தோன்றினர். இவர்களிலிருந்தே அரசர்களும் வந்தனர். இறுதியாக மாட்டோ (Matto) எனப்படும் பூசாரிகள் டையோ (Dio) மரத்தின் அடியில் தோன்றினர். கையில் ஒரு முரசுடன் பிறந்த இவர்கள் யேரி (Yeri) கடவுளுக்கு ஒரு கன்றைப் பலிகொடுத்தனர் என்கிறது அக்கதை. புவியிலிருந்தே அனைத்தும் தோன் றியதாக இக்கதை குறிப்பிடுகிறது. புவி, மனிதர்களைத் தோற்றுவித்ததாக நம்புவது பெண்கள் தனிநபர்களைத் தோற்றுவிப்பதற்கு இணையாகக் கருதப்படுகிறது.

எத்தியோப்பியாவின் டாவ்ரோ பகுதியில் நிலத்திற்குப் பலிகொடுப்பது உரிமை சார்ந்த விஷயமாகப் பார்க்கப்படுகிறது. இதற்கான பழங்கதைகளில் அனைத்தின் தோற்றத்துடனும் புவி தொடர்புபடுத்தப்படுகிறது. முன்னோர்கள் அனைவரும் புவியின் ஓட்டையிலிருந்து தோன்றியதாக நம்பப்படுகிறது. இத்தொடர்பை அவர்களின் புனிதப்படுத்தும் சடங்குகளும் காட்டுகின்றன. உதாரணமாக, உயர் சாதியைச் சேர்ந்த ஒருவர் தாழ்ந்த சாதிப் பெண்ணுடன் உறவு கொண்டுவிட்டால் அவரைப் புனிதப்படுத்துவதற்காகப் புவியில் குழாய் போன்ற பாதை ஏற்படுத்தப்பட்டு அதில் நுழைந்து தவழ்ந்து அவர் வெளியே வரவேண்டும். அவ்வாறு நுழைந்து வருமுன்பாக ஒரு கோழி அல்லது சேவலைப் பலி கொடுத்து அதன் ரத்தத்தை அந்தக் குழாயின் வாயிலில் தெளிக்கின்றனர். இதன் மூலம் மீண்டும் அந்த மனிதன் புதிதாகத் தோன்றியவனாகிறான். இப்படி அனைத்தையும் தோற்றுவித்ததாகக் கருதப்படும் புவியின் மீது உலோக நாகரிக மக்கள் உலோகங்களை உருவாக்குவதற்காகவும் குயவர்கள், பானைகள் வனைந்து அவற்றைச் சுடுவதற்காகவும் நேரடியாகத் தீயை வைத்துப் பயன்படுத்துகின்றனர். இதனால் அந்த இடத்தின் உற்பத்தித் திறன் குலைந்துவிடுகிறது. எனவே புவியைப் புனிதமாகக் கருதும் விவசாயக் குடிகளான ஆட்சியாளர்கள், கருமாரும் குயவரும் அந்த இடங்களைத் தீட்டுப்படுத்திவிட்டதாகக் கருதுகின்றனர். செனகல் நாட்டில் தீண்டத்தகாதோராகக் கருதப்படும் கிரியாட்டுகளின் பிணங்களைப் புதைக்க இடுகாடுகள் மறுக்கப்படுகின்றன. தீட்டுக்குரிய அவர்களின் பிணங்கள் நிலத்தில் புதைக்கப்பட்டால் புவி தாங்காது; அழிவுகள் ஏற்படும் என்று நிலவுடைமையாளர்கள் கூறுகின்றனர். இதனால் கிரியாட்டுகள் தங்களின் பிணங்களை மரத் தண்டின் நடுவில் வைத்துப் புதைக்கும் பழக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தொழில் சாதிகளும் ரகசியச் சமூகமும்

எத்தியோப்பியாவிலிருந்து செனகல் வரை சமூக ஒழுங்கமைப்புக்கான ஒரு கட்டமைப்பு என்பதாகச் சாதியைக் கருதுகின்றனர். குறிப்பிட்ட தொழில் அல்லது பணியில் தேர்ச்சி இருக்கிற இடங்களிலெல்லாம் அந்தக் கலையின் ரகசிய அறிவுகள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு குழுவின் மூலம் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு மாற்றித் தரப்பட்டுள்ளது. இந்த ரகசியங்கள் காப்பாற்றத் தகுதி படைத்தவர்களிடமே மாற்றித் தரப்பட்டுள்ளன என்கிறார் டிடியான் காஸ்ஸே என்ற பத்திரிகையாளர். இவர்களை ரகசியச் சமூகம் என்று சொல்கின்ற வழக்கம் உள்ளது. இத்தகைய ரகசியச் சமூகங்கள் 150க்கும் மேல் மேற்கு ஆப்பிரிக்காவில் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவர்கள் ஈடுபட்ட தொழில்களின் தொழில்நுட்பம் சார்ந்த முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. இதை விளக்குகின்ற வகையில் ருஷ்ய அறிஞர் செர்ஜி டோ கரேவ் இவ்வாறு கூறுகிறார்:

ஆப்பிரிக்காவில் கருமார்களின் நிலை மத ரீதியில் பூசாரிகளுக்கும் மந்திரவாதிகளுக்கும் இணையாக சிறப்பானதாகப் பார்க்கப்படுகிறது. ஆப்பிரிக்க மக்கள் நெடுங்காலமாக இரும்பைப் பிரித்து எடுத்துவருகின்றனர். ஆப்பிரிக்காவில் உள்ள பல வகை மக்களில் கருமார் தொழிலில் உள்ளவர்கள் தங்களின் தொழில்நுட்பங்களைப் பரம்பரை பரம்பரையாகத் தம் குடும்பத்திற்கே மாற்றித் தருகின்ற வழக்கத்தை விதியாகக் கடைப்பிடிக்கின்றனர். கருமார்களின் அறிவையும் தொழில் நுட்பத்தையும் எல்லோரும் அறிய முடியாததாகையால் இனக் குழுவில் உள்ள மற்றவர்களின் மத்தியில் அவர்கள் குறித்த ஒரு புதிரான பார்வை உள்ளது. ஒருபுறத்தில் அவர்களைத் தூய்மையற்றவர்களாக, இழிந்தவர்களாகக் கருதுகின்றபோதிலும் அவர்களிடம் மாந்திரிக சக்தி இருப்பதாக அச்சமும் கொள்கின்றனர். கருமார்களும்கூடத் தாங்கள் அசாதாரணமானவர்கள் என்கிற கருத்தை வளர்க்கின்றனர். ஒரு கருமார் தனது கருவிகளை, குறிப்பாகச் சுத்தியலை, தனது எதிரிகளுக்கு நோய் ஏற்படுத்துவதற்காக அனுப்ப முடியும். வேறெந்த வகையான மந்திர, தந்திரச் செயல்களைவிட இதைக் கண்டு மக்கள் அஞ்சுகின்றனர்.

இந்த இடத்தில் மேற்காசிய வரலாற்றிலிருந்து ஒரு விஷயத்தைக் குறிப்பிடுவது அவசியமாகிறது. இரும்பு உலோகத்தைக் கண்டுபிடித்த ஹிட்டைட் மக்கள் அத்தொழில்நுட்பத்தை 400 ஆண்டுகளுக்கும் மேலாக ரகசியமாக வைத்திருந்ததாக வரலாற்றறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். இவ்வாறு தங்கள் ரகசியத்தைக் காத்துக்கொள்ளும் பொருட்டுத் தம்மீது ஒரு அச்சமூட்டுகிற தோற்றத்தை அவர்கள் ஏற்படுத்திக்கொண்டிருப்பதற்கான வாய்ப்புகள் இருந்ததாகத் தோன்றுகிறது. இரும்பு உருக்கும் தொழில்நுட்பம் மேற்காசியாவிலிருந்தே ஆப்பிரிக்காவுக்குப் பரவியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

உலோக நாகரிக சமூகங்களின் வீழ்ச்சியும் விவசாயக் குடிகளின் எழுச்சியும்

எத்தியோப்பியா போன்ற ஆப்பிரிக்க நாடுகளுக்குச் செம்பு மற்றும் இரும்பு உலோகப் பண்பாடுகள் மேற்காசியாவிலிருந்தே சென்றுள்ளன. ஆயர் குடியிலிருந்தே அரசர்கள் வந்ததாக எத்தியோப்பியாவில் கூறப்படுகின்ற கதை, முதன்முதலில் செம்பு உலோக நாகரிகத்தை உலகம் முழுவதும் கொண்டுசென்றதாகக் கருதப்படும் கண்ணனின் யது குலத்தைக் குறிப்பிடுவதாகக் கருதலாம். உகாண்டாவில் ஹமிடிக் இனக் குழுவைச் சேர்ந்த ஆட்சியாளர்கள் ஆயர்களாகவும் போர்க் குடிகளாகவும் உள்ளனர். இதுவும்கூட யது குலத்தைக் குறிப்பதாக நாம் கருத இடமளிக்கிறது. மேற்காசியச் சமூக உருவாக்கத்தில் ஹமிடிக் இனக் குழுவினர் முக்கியப் பங்காற்றியுள்ளனர். செனகல் நாட்டில் இந்தியாவில் வழங்கப்படுவதைப் போலவே கண்ணன்-கம்சன் கதை சிற்சில மாற்றங்களுடன் வழங்கப்படுவதும் கருத்தில்கொள்ளத்தக்கது. பொதுவாகப் போர்க் குடிகள் தங்கள் ஆட்சியதிகாரத்தை நிறுவுவதற்கும் மனித வாழ்க்கையை எளிதாக்குவதற்கும் உலோகப் பயன்பாடு உதவுகிறது. இத்தகைய உலோகத்தைத் தயாரிப்பவர் ஆப்பிரிக்கச் சமூகங்களில் கீழோராகக் கருதப்படுவது முரணான ஒன்று. ஆனால் இம்முரண்பாட்டின் தர்க்கத்தைப் புரிந்துகொள்ள நமக்குச் சில குறிப்புகளும் கிடைக்கின்றன.

சாதிகளின் தோற்றம் குறித்து சூடானின் மேற்குப் பகுதியில் ஆய்வு செய்த யோரோ டையாவோ (Yoro Diao) நூலே (கோமாளிகள்) சாதி பற்றி ஆய்வு செய்தபோது, எகிப்திலிருந்து ஜா-ஓகோ (Jaa-ogo) வந்தபோது அவர்கள் தோன்றியிருக்கலாம் என்ற கருத்தை முன்வைத்தார். ஜா-ஓகோக்கள் இரும்புத் தொழில்நுட்பத்தில் கைதேர்ந்தவர்கள் என்பது ஆய்வாளர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்ட கருத்து. அவர்களின் தலைவனான கௌம்பா வாலிக்கு (Coumba Wally) இரும்பை உருக்கி விற்கின்ற தனிச் சிறப்புரிமை இருந்ததாகக் கூறுகிறார் கேப்டன் ஸ்டெஃப் (Captain Steff). செய்க் மௌசா கமாராவின்படி (Cheik Mousa Camara), ஜா-ஓகோக்கள் வெறும் இரும்பு உருக்கி விற்பனை செய்வது மட்டுமின்றி ஃபவுட்டா (Fouta) பகுதியை ஆட்சி செய்தும் இருந்துள்ளனர். அப்படியானால் அவர்களின் வீழ்ச்சிக்குக் காரணம் என்ன என்று கேள்வி எழுப்பும் ஆய்வாளர்கள், போரில் அவர்கள் வீழ்ச்சி அடைந்திருக்க வேண்டும் என்பதையே காரணமாகக் கூறுகின்றனர். "சோசோவின் கருமார் வம்சத்தைச் சேர்ந்த கடைசி அரசனான சுமாங்குரு காண்டேவை கானாவின் சோனின்க்ஸ் இனக் குழுவைச் சேர்ந்த சவுன்ஜாத கைத, கிரினா போரில் (1220-1235) தோற்கடித்தார். சுமாங்குருவின் இந்தத் தோல்விக்குப் பின்னரே ஆப்பிரிக்க நாடுகள் அனைத்திற்கும் கருமார்கள் பரவியிருக்க வேண்டும்" என்கிறார் அப்தௌல்யே பைத்லி (Abdoulyae Baithly).

செனகல் நாட்டில், "வரலாறு முழுவதிலும் கைவினைஞர்களும் நிலவுடைமையாளர்களும் அரசதிகாரத்திற்காகச் சண்டையிட்டுவந்துள்ளனர். 16ஆம் நூற்றாண்டிலிருந்துதான் நிலவுடைமையாளர்களும் வணிகர்களும் அதிகரித்துவந்த வெளிநாட்டு வர்த்தகத்தின் நிமித்தம் கைவினைஞர்கள்மீது ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர். அதற்கும் முன்பாகக் கருமார்களும் இதரக் கைவினைஞர்களும் பல சமயங்களில் ஆட்சி அதிகாரத்தில் இருந்துள்ளனர்" எனக் குறிப்பிடுகின்றனர். சஞ்சதா (Sanjata) புராணமும் இவ்விஷயத்திற்கு வலு சேர்க்கிறது. அதன்படி மாலி நாட்டுச் சக்ரவர்த்தி சஞ்சதாவின் குழந்தைப் பருவ நண்பர். ஃப்ரான் கமாரா (Fran Kamara) கருமார் வம்ச இளவரசராக இருந்துள்ளார்.

சாதி மக்களிடம் உள்ள மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், சாதிக் குழுவைச் சேர்ந்த ஒரு ஆண், அடிமைகள் மத்தியிலிருந்து ஒரு வைப்பாட்டியை வைத்திருந்தான் எனில் அவளது மகன் தன் தந்தையின் வாரிசுரிமையையே கோருகிறான். மேலும் சாதிப் பின்னணி கொண்ட குடும்பத்தில் சிறை பிடித்து வைக்கப்பட்டவர்களின் வாரிசுகள் தங்கள் எஜமானனின் குடும்பத்துடன் சேர்ந்துவிடுகின்றனர். இது உயர்குடிக் குடும்பங்களுக்கும் அவர்களின் அடிமைகளுக்கும் இடையில் இருந்த பழக்கத்தை ஒட்டியதாகும். கருமார்களிடத்தில் இவ்வாறேதான் நிகழ்ந்துவந்தது. மேலும் சாதி மக்களை ஒருபோதும் அடிமை நிலைக்குத் தள்ளிவிட முடியாது என்பது நமக்குத் தெரிந்ததுதான் என்கிறார் ஆப்பிரிக்கச் சாதிகள் குறித்து விரிவாக ஆய்வு செய்த தல் தமாரி. இவையனைத்தும் ஒரு கட்டத்தில் இரும்புத் தொழிலில் இருந்துவந்த சாதி மக்கள் மேல்நிலையில் இருந்ததையே காட்டுவதாக உள்ளன.

மண்டே மொழிகள் பேசுவோர் ஆப்பிரிக்கா, ஆசியா மைனர் மற்றும் தொலைக் கிழக்கு நாடுகளை அடிமைப்படுத்தியதாக டாக்டர் க்ளைட் வின்டர்ஸ் (Dr. Clyde Winters) கூறுகிறார். இவ்வாறாக ஆப்பிரிக்கச் சமூகத்தில் ஒரு கட்டத்தில் உலோக நாகரிக மக்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்துள்ளமை தெரியவருகிறது. இத்தகைய உலோக நாகரிக மக்களை வீழ்த்தி, புவியைப் புனிதமாகக் கருதுகிற விவசாயக் குடிகள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்ததும் உலோக நாகரிக மக்கள் கீழ்மைப்படுத்தப்பட்டிருக்கக்கூடும். மேலும் ஆட்சி அதிகாரத்தில் உள்ள இதே விவசாயக் குடிகளிடம் அடிமை நிலையில் உழு குடிகளாக உள்ள மக்கள், உலோக ஆயுதத் தயாரிப்பாளரான கருமார்களிடம் உறவு வைத்துக்கொள்வதைத் தடுக்கப் பல தடைகள் விதிக்கப்பட்டிருந்ததை எத்தியோப்பிய கேமோ சமூகத்தை விவரிக்கையில் குறிப்பிட்டுள்ளோம். இந்தத் தடையின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்கின்ற வகையில் தமிழக வரலாற்றில் நடைபெற்ற ஒரு விஷயத்தை நாம் ஒப்பிட்டுக் காணலாம்.

சங்க காலத்தில் இரும்பு நாகரிகப் போர்க் குடிகளான மூவேந்தர்கள் ஆட்சி செய்துவந்த நிலையில் அவர்களை வீழ்த்தி விவசாயக் குடிகளான களப்பிரர் ஆட்சி அதிகாரத்துக்கு வந்துள்ளனர். ஆயுதங்கள் வைத்துக்கொள்ளும் உரிமை மறுக்கப்பட்டிருந்த விவசாயக் குடிகள் ஆட்சிக்கு வர உலோக ஆயுதங்கள் தயாரிக்கின்ற கம்மாளர்களின் உதவி இன்றியமையாதது எனலாம். களப்பிரரின் ஆட்சிக்குப் பின்னர் மீண்டும் எழுச்சி பெற்ற பாண்டிய மன்னன் கம்மாளர்களைக் கொன்றதாக ஒரு கதை வழங்கப்படுகிறது. இதன் பின்னணியாக வேறொரு கதை கூறப்படுகின்றபோதிலும் அதற்கு இப்படியான ஒரு விளக்கமும் இருக்கலாம். அதாவது விவசாயக் குடிகளான களப்பிரர்கள் ஆட்சிக்கு வருவதற்கு உதவியாக, அவர்களுக்கு ஆயுதம் தயாரித்துத் தந்த கம்மாளர்களைப் பழி தீர்க்கின்ற விதத்தில் களப்பிரரை வீழ்த்தி மீண்டும் ஆட்சிக்கு வந்த பாண்டிய மன்னன் கொற்கையில் நூற்றுக்கணக்கான கம்மாளர்களைக் கொன்றிருக்கலாம். எனவே உலோக ஆயுதம் தயாரிப்பவர்களும் உழுகுடிகளும் ஒன்று சேராமல் பிரித்துவைப்பது ஆட்சியாளர்களின் பாதுகாப்புக்கு உகந்ததாகும். அதனால் அத்தகைய தடை விதிக்கப்பட்டிருக்கலாம்.

சாதியும் கற்பு நெறியும்

'ஜாதி' என்கிற சம்ஸ்கிருதச் சொல் பிறப்பு சார்ந்தது என்பதை நாம் அறிவோம். ஜனனம், ஜனித்தல் போன்ற பிறப்பு சார்ந்த சொற்களின் அடியாகவே ஜாதி என்கிற சொல் வழக்கில் வந்திருக்க வேண்டும். நடைமுறையிலும் சாதி பிறப்போடு பிணைக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம். ஜாதியைக் குறிப்பிடப் போர்ச்சுகீசியச் சொல்லான நீணீstணீ என்பதிலிருந்தே நீணீstமீ என்ற ஆங்கிலச் சொல் வந்துள்ளது. காஸ்ட் என்ற சொல்லும் கற்பைக் குறிக்கின்ற நீலீணீstமீ என்ற ஆங்கிலச் சொல்லும் ஒரே வேர்ச் சொல்லிலிருந்தே கிளைத்திருக்க வேண்டும். இவ்வாறாகப் பிறப்புத் தூய்மையைக் குறிப்பிடுவதாக, கற்பு நெறியுடன் தொடர்புடையதாகச் சாதி இருக்கிறது. உலகில் முதன்முதலில் உலோக நாகரிக மக்களிடையே கற்பொழுக்கம் தோன்றியிருக்கிறது என்பதை நாம் மேற்காசிய வரலாற்றிலிருந்து அறிகிறோம். இந்தியாவைப் போலன்றி ஆப்பிரிக்காவில் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்களில் உள்ள மக்களை மட்டுமே சாதி மக்கள் என்று குறிப்பிடுகின்ற மரபு உள்ளது. உலோகம் சார்ந்த தொழில்நுட்ப ரகசியங்களைத் தங்களுக்குள்ளேயே வைத்துக்கொள்ளும் பொருட்டு அவர்கள் குறிப்பிட்ட குடும்பங்களுக்குள்ளேயே மணவுறவு கொண்டு தங்களின் வாரிசுகளுக்குத் தொழில்நுட்ப ரகசியங்களை மாற்றிக் கொடுத்திருக்கின்றனர் என்பதை ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள ரகசியச் சமூகங்கள் நமக்குக் காட்டுகின்றன. இவ்வாறு தொழில் ரகசியங்களைக் காப்பதன் பொருட்டு அவர்கள் கற்பு நெறியுடன் ஒழுகியிருந்திருக்க வேண்டுவது அவசியம். சாதியின் ஒரு முக்கிய அம்சமான அகமண முறைக்கான கூறு இதில் இருப்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

உலோகத்தை மண்ணிலிருந்து பிரித்தெடுத்து உருக்கி ஆயுதங்களாகத் தயாரிப்போர் சமூகத்தில் கம்மாளர்கள் எனப்படுகின்றனர். கம்மாளர்களின் கற்பு நெறியைச் சுட்டுகின்ற பழங்கதைகள் தமிழ்ச் சமூக வழக்காற்றில் நிலவிவருகின்றன. கி.பி. 1247ஆம் ஆண்டைச் சேர்ந்த ஆலங்குடிக் கல்வெட்டு, விஸ்வகர்மாக்கள் எனப்படும் கம்மாளர்களின் மெய்க்கீர்த்தியில், "காட்டாவூர் அம்மையாலே கனகமழை பொழிவித்தோர்" என்று குறிப்பிடுகிறது. மூவேந்தர்களின் வரலாற்றுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நிகழ்த்துகலையான வலங்கை மாலை வில்லுப் பாட்டு, கம்மாளர்களின் கற்பு நெறியைப் போற்றிச் சொல்கிறது. சோழ அரசாட்சிக் காலத்தில் ஒரு சமயம் கடும் வறட்சியும் பஞ்சமும் ஏற்பட்டபோது, நாட்டில் கற்புடைய பெண்டிர் இன்மையே மழை இன்மைக்குக் காரணம் என்று சொல்லப்பட்டது. காட்டாவூர் தச்சன் மனைவி மட்டுமே கற்புள்ளவள் என்று சான்றோர்கள் கூற, அரசன் அனுப்பிய தூதுவர்கள் அவளைத் தேடிச் சென்று அழைத்தார்கள். துலாவில் தண்ணீர் இறைத்துக்கொண்டிருந்த தச்சன் மனைவி அதை அப்படியே விட்டுவிட்டு வர, அவளது கற்பினால் தண்ணீர்த் துலா பாதியிலேயே நின்றதாக அக்கதை வழங்கப்படுகிறது.

உலோக நாகரிகப் போர்க் குடி அரசர்களுக்கும் தலைமக்களுக்கும் உரியதாகக் கற்பு நெறி கூறப்பட்டாலும் இக்கதையில் கம்மாளப் பெண்ணையே கற்புடையவளாகக் குறித்திருப்பது கவனத்திற்குரியது. மேலும், சோழ அரசர்களின் குலகுருக்கள் தாங்களே எனவும் உண்மையான பார்ப்பனர்கள் தாங்களே எனவும் கம்மாளர்கள் கோருவதும் முக்கியத்துவமுடையது. அரசர்கள்கூடத் தங்கள் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் பொருட்டு, அரசியல் நெருக்கடிகள் காரணமாக மற்ற குடிகளுடன் உறவுகள் ஏற்படுத்திக்கொள்வதும் தவிர்க்க முடியாதது. கம்மாளர்களுக்கோ அவ்வாறான நெருக்கடிகள் இல்லை. அதனால் அவர்கள் கற்பு நெறியைக் கடைப்பிடிப்பதும் வாய்ப்பானதுதான்.

ஆப்பிரிக்க நாடுகளுக்கும் இந்தியாவுக்குமான தொடர்புகள்

கற்பு நெறியைப் போற்றுகிற சமூகம் பொதுவாகத் தந்தைவழிச் சமூகமாகவே இருக்கும். உலோக நாகரிகத்தைத் தோற்றுவித்த கருப்பின மக்கள் ஆண் ஆதிக்கச் சமூகத்தினர் என்பதை உலோகங்கள் கண்டுபிடிக்கப்பட்ட களமான மேற்காசியாவின் வரலாறு நமக்குக் காட்டுகிறது. ஆப்பிரிக்காவில் உள்ள உலோக நாகரிக மக்கள் தாழ்ந்த சாதியினராகக் கருதப்படுகின்றபோதிலும் அவர்கள் தந்தைவழிச் சமூகத்தினராக உள்ளனர். ஆனால் அங்கு உள்ள விவசாயக் குடிகள் ஆட்சியாளர்களாக உள்ளபோதிலும் தாய்வழி (மருமக்கள் வழி) சமூகத்தவராவர். இந்தியாவிலும்கூட உலோக நாகரிக மக்கள் தந்தைவழிச் சமூகத்தினராகவும் விவசாயக் குடிகளான வேளாளர்கள் தாய்வழிச் சமூகத்தினராகவும் (மருமக்கள் வழியில்) உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

###

மேலே கூறப்பட்டுள்ள தகவல்களிலிருந்து இந்தியச் சாதி முறைக்கும் ஆப்பிரிக்கச் சாதி முறைக்கும் உள்ள ஒற்றுமைகளை நாம் அறியலாம். இந்த இரு சாதி முறைகளும் வெவ்வேறு சூழல்களில் தற்போக்கில் தோன்றியவை என நாம் கருதிவிட முடியாது. இவற்றுக்கிடையில் காணப்படும் ஒற்றுமைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஆப்பிரிக்க இனக் குழுக்களின் மொழிகளுக்கும் திராவிட மொழிகளுக்கும் இடையில் உள்ள ஒற்றுமைகளை ஆராய்ந்த பிரெஞ்சு மொழியியலாளர் எல். ஹோம்பர்கர், ஆப்பிரிக்க மொழிகளிலும் திராவிட மொழிகளிலும் ஐந்து உயிர் எழுத்துகளை உச்சரிக்கையில் உதடுகள் இணைவதாகவும் ஐந்தை உச்சரிக்கையில் உதடுகள் பிரிவதாகவும், எழுத்துகள் குறில், நெடில் என இரண்டாகப் பிரிக்கப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டுகிறார். மண்டே இனக் குழுக்களின் மொழிகளுக்கும் திராவிட மொழிகளுக்கும் மேலும் நெருக்கமான தொடர்புள்ளதென்றும் இவ்விரு மக்களும் அருகருகே வாழ்ந்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். திராவிட மற்றும் மண்டே மொழிகள் மரபியல் ரீதியில் தொடர்புடையன என்பதுடன் இம்மொழிகளைப் பேசுவோர் இணைந்து ஆப்பிரிக்கா, ஆசியா மைனர் மற்றும் தொலைக் கிழக்கு நாடுகளை அடிமைப்படுத்தினர் என்கிறார் வின்டர்ஸ். கம்மாளர்கள், செனகல் நாட்டில் கம்மார என்று குறிப்பிடப்படுவதைப் போலவே திராவிட மொழிகளில் ஒன்றான தெலுங்கிலும் கம்மாரா என்றே அழைக்கப்படுகின்றனர். தமிழகத்தில் உள்ள பழங்குடிகளில் தச்சு வேலையில் ஈடுபடுகின்ற கம்மாரா என்ற ஒரு பிரிவினர் நீலகிரி மாவட்ட, கர்நாடக எல்லைப் பகுதியில் வசித்துவருகின்றனர். தென்னிந்திய மக்களுக்கும் ஆப்பிரிக்க மக்களுக்கும் இடையில் மொழியியல் ஒற்றுமை மட்டுமின்றி மானுடவியல் ஒற்றுமையும் இருப்பதை ஜெர்மானிய மானுடவியல் அறிஞர்கள் பௌமன் (Hermann Baumann) மற்றும் வெஸ்டர்மன் (Diedrich Westermann) நிறுவியுள்ளனர். தமிழகத்தில் மலைக் கடவுளாக வணங்கப்படும் முருகக் கடவுள், 25க்கும் மேற்பட்ட கிழக்கு ஆப்பிரிக்க இனக் குழுக்களில் 'முருகு' என்ற பெயரில் மலைக் கடவுகளாக வணங்கப்படுகிறார். இவையன்றி, ஆப்பிரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தொடர்புகளைக் காட்டுவதாகக் கண்ணனின் யது குலம் தொடர்பான தொல்பொருள்கள் இந்தியாவிலும் ஆப்பிரிக்காவிலும் கிடைத்துள்ளன. இவற்றிலிருந்து செம்பு மற்றும் இரும்பு உலோக நாகரிகத்தைக் கண்டுபிடித்து அதைப் பல பகுதிகளுக்கும் கொண்டுசென்ற கருப்பின மக்களின் பரவுதலுடனேயே சாதி முறையும் பரவியிருக்க வேண்டும் என்று கூற வாய்ப்பிருக்கிறது. இவர்கள் மேற்காசியாவிலிருந்து இந்தியாவிற்குள் பெருவாரியாகவும் ஆப்பிரிக்காவிற்குள் ஒப்பீட்டளவில் குறைந்த எண்ணிக்கையிலுமே குடிபெயர்ந்துள்ளனர். இந்தியாவில் சாதி முறைக்குக் காரணமாகச் சொல்லப்படும் மனுவைத் திராவிட அரசன் என்கிறது விஷ்ணு புராணம். கண்ணன், ராமன் போன்ற இந்துக் கடவுளர்கள் கரிய நிறத்தவர் என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன. தென்னிந்தியர்களுக்கும் எத்தியோப்பியர்களுக்கும் இடையில் காணப்பட்ட ஒற்றுமைகளை வரலாற்றின் தந்தை என்றழைக்கப்படும் ஹிரோடட்டஸ் (Herodotus), டியோடரஸ் சிகுலஸ் (Diodorus Siculus), ஸ்ட்ரோபோ (Strabo) ஆகியோர் பண்டைக் காலத்திலேயே குறித்துள்ளனர்.

இந்தியாவில் கருதப்படுவதைப் போல சாதி முறையை ஆரியர்கள் தோற்றுவித்திருந்தால், அவர்கள் சற்றும் பரவியிராத, வேதங்களோ வர்ணப் பிரிவுகளைக் குறிப்பிடும் புருஷ ஸூக்தமோ இல்லாத ஆப்பிரிக்காவில் இதே போன்ற சாதி முறை இருப்பது ஏன் என்பது விளக்கப்பட வேண்டிய ஒரு விஷயமாகும்.

வர்ணத்திலிருந்துதான் சாதி தோன்றியதெனில் 'வர்ணம்' இல்லாத ஆப்பிரிக்க நாட்டில் சாதி முறை வந்தது எப்படி? சாதிக்கும் இந்து மதத்துக்குமான உறவு என்ன? சாதி முறையை உருவாக்கியதில் பார்ப்பனர்களின் பங்கு என்ன என்பன போன்ற பல்வேறு வினாக்களுக்குப் புதிய விடைகளைத் தேடுவதற்கான சுட்டுக் குறிப்புகளைத் தருவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். ஆப்பிரிக்கச் சமூகத்தில் நிலவுகின்ற சாதி முறை குறித்த விரிவான ஆய்வு, இந்தியச் சமூகத்தில் புதிராகவே இன்றுவரை இருந்துவருகின்ற சாதிகளின் தோற்றம் மற்றும் அதன் தன்மை குறித்த பல ஆய்வுகளை மறுத்துப் புதிய ஓர் ஆய்வுக்கும் புதிய முடிவுகளுக்கும் இட்டுச் செல்லும் என நாம் நம்பலாம்.

உதவிய நூல்களும் குறிப்புகளும்

1. K. Marx, Das Capital, Vol. 1, Progress Publishers, Moscow

2. History of Religion, Sergey Tokaraev, Progress Publishers, Moscow 1989

3. Belief in the Past: The Proceedings of the Manchester Conference on Archaeology and Religion, edited by Timothy Insoll, Chapter 8, Smelting Iron: Caste and its Symbolism in South-western Ethiopia by Gunnar Haaland et al, 2002, BAR International series ISBN 1841715751

4. Cultural Unity of the Dravidian and African Peoples by Clyde A. Winters:
http:/www.geocities.com/tokyo/7051/dra2.htm

5. The Dravidian and Sudano-Sahelian Civilisations by Cheikh Tidiane N Diave: http://arutkrual.tripod.com/tolcampus/draw-african2.html

6. Dravidians And africans-5, The Languages of Africans and Dravidians, A bird’s eye view by S.R. Santharam:
http://arutkural.tripod.com/tolcampus/draw-afr-top.htm

7. The ‘Caste System’ in Nigeria, Democratisation and Culture: Socio-political and civil rights implications, by Victor E. Dike: http://www.afbis.com/analysis/caste.htm

8. Our Ancestors and the Oracle they left behind, by Bons O. Nwabueze: http://www.africaneconomicanalysis.org/articles/gen/culturalhtm.html

9. The Osu Caste system in Igboland - Discrimination based on descent, by Victor E. Dike: http://uk.geocities.com/internationaldalitsolidarity/cerd/dikeosu2002.html

10. Tied to the job: Caste remains a curse in many African countries, by Tidiane Kasse. New Internationalist, July 2005

11. Discrimination based on descent in Africa: Summary, paper by Alexander Stevens, IDSN Co-ordinator, July 2002.

12. An Ethnoarchaeological Study of the Gamo Caste System in South-western Ethiopia by Jhon W. Arthur and Kathryn J. Weedman et al: http://www.stpt.usf.edu/arthurj/ArchaeologicalResearchSouthwestern Ethiopia.htm

13. CountryData.com/frds/cs/Uganda
14. Ethiopian society, etc.: http://countrystudies.us/ethiopia/
16. Writings of Herodotus, Diodorus Siculus & Strabo
17. Democracy, Human Rights and Castes in Senegal, by Penda Mbow: http://www.idsn.org/senegalcaste.rtf

18. வலங்கை மாலையும் சான்றோர் சமூக செப்பேடுகளும், எஸ். இராமச்சந்திரன், எம்.ஏ., IITS சென்னை.

19. பண்பாட்டு மானுடவியல், பகதவச்சல பாரதி, புதுவை மொழியியல் ஆய்வு நிறுவனம் (PIL), புதுவை.

20. செனகல் மற்றும் ஆப்பிரிக்கா குறித்த க.ப. அறவாணனின் நூல்கள்.

ப்ரவாஹன். வயது 39. இயற்பெயர் சௌமிய நாராயணன். அரசியல் மற்றும் சமூகத் துறைகளில் ஆழமான ஈடுபாடுகொண்டவர். "சாதிய ஒடுக்குமுறை ஒழிந்தால்தான் இந்தியாவில் முழுமையான மாற்றம் சாத்தியமாகும்" என்று அழுத்தமாக நம்பும் இவர் ஒத்த கருத்துள்ள சில நண்பர்களுடன் இணைந்து சாதிகளின் தோற்றம், வளர்ச்சி ஆகியவை குறித்த ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறார். 1999இல் திருச்சூரில் நடைபெற்ற கல்வெட்டியல் ஆய்வாளர் சங்க மாநாட்டில் 'பறையர் வரலாறு' என்னும் ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்துள்ளார்.
அரசியலிலும் தீவிர ஈடுபாடுகொண்டவர். முதலில் சி.பி.ஐ. எம்.எல். இயக்கத்தில் இணைந்து செயலாற்றியிருக்கிறார். தலித் மக்களின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட இவர் பிறகு புதிய தமிழகம் கட்சியில் சேர்ந்து மாநில அளவில் பொறுப்பு வகித்துச் செயல்பட்டிருக்கிறார்.

காஞ்சி சங்கராச்சாரியாரைக் கைது செய்ய வேண்டும் என்பதற்கான போராட்டத்திலும் இவர் ஈடுபட்டிருந்தார். தற்போது இந்திய மக்கள் முன்னணி என்ற கட்சியின் அகில இந்தியப் பொறுப்பாளராக இருந்துவருகிறார்.

மின்னஞ்சல்: pravaahan@yahoo.co.in

Thursday, August 10, 2006

கலாச்சாரம்-1 வழியனுப்புதல்

- சந்திப்பு -

தமிழகத்தில் பல்வேறு ஜாதி, சமயத்தில் உள்ள மக்களிடத்தில் பல்வேறு கலாச்சாரங்கள் நிலவுகின்றன. குறிப்பாக கிராமப்புறங்கள் கலாச்சாரத்தை நீடிக்கச் செய்திடும் மையங்களாக திகழ்கிறது. தமிழக கிராமப்புறங்களில் பின்பற்றப்படும் கலாச்சாரங்களில் முற்போக்கானதும், பிற்போக்கானதும் கலந்து நிலவுகிறது. மொத்தத்தில் பல்வேறுபட்ட மக்களின் கலாச்சார உறவுகளையும், நிகழ்ச்சிகளையும் வாய்ப்பு கிடைக்கும் போது தொகுப்பது பயனுள்ளதாக இருக்கும். இது நாம் வாழும் சமூகத்தை புரிந்து கொள்வதற்கு உதவியாக இருப்பதோடு, இதில் முற்போக்கானதை மேலும் செழுமைப் படுத்திடவும், பிற்போக்கானதை அகற்றி, அந்த இடத்தில் புதிய கலாச்சார விதைகளை விதைத்திடவும் பயன்படும் என்ற அடிப்படையில் இதனை பதிவு செய்யலாம் என கருதியுள்ளேன். அதன் ஒரு பகுதியாக மாமல்லபுரத்திற்கு அருகில் உள்ள பெரிய நெம்மேலி என்ற கிராமத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் பின்பற்றும் கலாச்சாரத்தை இங்கே பதிவு செய்கிறேன்.

(வீட்டில் சுமங்கலிப் பெண் ஒருவர் இறந்து விட்டால், அவருக்கு செய்யப்படும் சடங்கு குறித்து இங்கே விவரிக்கப்படுகிறது. இது ஒரு வித்தியாசமான - வியப்பூட்டும் - சிலிக்க வைக்கும் அனுபவ நிகழ்வு என்றால் மிகையாகாது.)

வழக்கம் போல் இறந்தவர்கள் வீட்டில் 16வது நாள் ஈமகாரியங்கள் நிறைவேற்றப்படுகிறது. இந்த ஈம காரியங்களில் பங்காளிகளாக இருக்கும் ஆண்களுக்குத்தான் முக்கியத்துவம் தரப்படுகிறது. இறந்த சுமங்கலிப் பெண் வீட்டில் நடைபெறும் ஈமகாரியத்தின் ஒரு பகுதியாக, இறுதியில், அந்த வீட்டில் உள்ள ஐந்து உறவுக்கார பெண்களை அழைத்து, இரண்டு முறங்களில் ஒரு சுமங்கலிப் பெண் எதையெதையல்லாம் பயன்படுத்துவாரோ, அதையெல்லாம் வைக்கின்றனர். முதலில் இரண்டு முறங்களுக்கும் அந்த ஐந்து பெண்களால் மஞ்சள் பூசப்பட்டு, குங்குமம் வைக்கப்படுகிறது, பிறகு அதற்கு பூக்களும் சூடப்படுகிறது. இவ்வாறு அலங்கரிப்பட்ட அந்த முறங்களில் சுமங்கலிப் பெண் பயன்படுத்தும் புடவை, ஜாக்கெட், மஞ்சள், குங்குமம், பவுடர், வளையல், கண்ணாடி, மஞ்சளுடன் கூடிய தாலி கயிறு மற்றும் பணம் (ரூ. 100 முதல்...) போன்ற பொருட்கள் வைக்கப்படுகிறது.

இவ்வாறு தயார் செய்யப்பட்ட பொருட்களைக் கொண்ட முறத்தினை உறவுக்காரர் அல்லாத ஒரு சுமங்கலிப் பெண்ணிடம் கொடுக்கின்றனர். பொதுவாக இதுபோன்ற சடங்குகளில் அடித்தட்டு பெண்கள் கூட கலந்து கொள்ள அஞ்சுவார்கள் (அடித்தட்டு மக்கள் கூட கலந்து கொள்வதில்லை). எனவே, இந்த சடங்குகளில் பிராமண வகுப்பைச் சார்ந்த சுமங்கலி பெண்களைத்தான் பயன்படுத்துகிறார்கள். (இவர் அந்த சமூகத்தில் ஏழையாக இருப்பதால் - குறைந்தபட்சம் ரூ. 100 அல்லது 200 கிடைக்குமே என்பதற்காககத்தான் கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.)அதாவது, வெளியில் இருந்து அழைத்து வரப்படும் இந்த பெண்ணை இறந்து விட்ட சுமங்கலிப் பெண் போல் பாவிக்கிறார்கள். இறந்த பெண்ணின் பெயரை வைத்து இவரை அழைப்பார்கள். அப்போது இந்த சடங்கில் கலந்து கொள்ள வரும் பெண்ணுக்கு நூற்றுக்கணக்கான பெண்கள் - ஆண்கள் சுற்றி இருக்கையில் அவரை மையத்தில் உட்கார வைத்து, அவருக்கு மஞ்சள், குங்குமம், பூச்சூடி, கண்ணாடி வளையல்கள் அணிவிக்கப்படுகிறது. இந்த வளையல் அணியும் போது அதை மிக பக்குவமாக அணிகிறார்கள்; உடைந்துவிடக்கூடாதாம், பிறகு அவரிடம் தாலியை கொடுத்து கட்டிக் கொள்ளச் சொல்கிறார்கள். அவரது கழுத்தில் ஏற்கனவே அவரது கணவனால் கட்டப்பட்ட தாலியும் இருந்தது குறிப்பிடவேண்டிய அம்சம். (ஒரே நேரத்தில் இரு தாலிகள்) இந்த சடங்கு முடிந்ததும் அவரிடம் தயாராக வைக்கப்பட்டுள்ள இரண்டு முறத்தில் உள்ள பொருட்களை, முறத்தோடு சேர்த்து கொடுத்து வழியனுப்புகிறார்கள். இந்த பொருட்களை வாங்கிக் கொண்ட பெண் திரும்பிப் பார்க்காமல் செல்ல வேண்டும். அப்படிச் சென்றுக் கொண்டிருக்கும் அந்த பெண்ணை மீண்டும் இறந்தவர் பெயரைக் சொல்லி மூன்று முறை உரக்க அழைப்பார்கள். அவர் திரும்பிப் பார்க்காமல் செல்வார்.

குறிப்பு : இந்த சடங்கு உணர்த்துவது என்னவென்றால், இறந்த சுமங்கலிப் பெண்ணுக்கு அவர் வீட்டிலிருந்து எந்தவிதமான குறையும் வைக்காமல் நிரந்தரமாக வழியனுப்பி வைக்கப்படுகிறார். அவருக்கு செய்ய வேண்டிய அல்லது கொடுக்க வேண்டிய அனைத்தும் கொடுக்கப்பட்டு விட்டதாக இங்கே கருதப்படுகிறது. இவ்வாறு நிரந்தரமாக வழியனுப்பியதோடு, அவருக்கும் அந்த வீட்டுக்கும் உள்ள மொத்த உறவும் துண்டிக்கப்படுவதாக உணர்த்தப்படுகிறது.

இந்த சடங்கு நிகழ்த்தும் போது ஒரு உணர்ச்சி வயப்பட்ட நிலை நீடிக்கிறது. இதில் பங்கேற்கும் ஐந்து பெண்களின் மனநிலையில் பயத்துடன் கூடிய சிலிர்ப்புணர்வு தூண்டப்படுகிறது.அதேபோல் இதில் நூற்றுக்கணக்காணோருக்கு மத்தியில் இந்த கிராமத்தோடோ, அல்லது மக்களோடா பரிட்சயமில்லாத சுமங்கலி பெண் இறந்தவரைப் போல் பாவிப்பது ஒரு கொடுமையான - வர்ணிக்க முடியாத உணர்ச்சியை ஏற்படுத்துகிறது.

இந்த நேரத்தில் அந்த பெண்ணின் மனதில் ஏற்படும் உணர்ச்சியும், ஒருவேளை அந்த இளம் பெண்ணின் கணவர் அந்த நிகழ்ச்சியை பார்க்க நேர்ந்தால், அதன் மூலம் ஏற்படும் உணர்ச்சியையும் எப்படி விவரிப்பது - அதனால் ஏற்படும் மனோ ரீதியான விஷயங்கள் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது ஆராயப்பட வேண்டிய ஒன்று.

ஏறக்குறைய வெளியில் இருந்து வரும் அந்த சுமங்கலிப் பெண்ணை இறந்தவரின் ஆவியாகத்தான் ஒப்பிட்டுப் பார்க்கப்படுகிறது.

இப்படிப்பட்ட கொடுமையான ஒரு சடங்கில் கலந்து கொள்ளும் பெண் ஒரு பிராமண குடும்பத்தை சேர்ந்தவர் என்பது இங்கே அழுத்தமாக பதியப்பட வேண்டியுள்ளது. சமூகத்தில் நலிந்த நிலையில் உள்ள பிராமண பெண்களைத்தான் இத்தகைய நிகழ்ச்சியில் பயன்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. (இவர் ஒடுக்கும் வர்க்கத்தின் ஒடுக்கப்பட்ட பிரதிநிதியாக நிற்கிறார்.)

- சந்திப்பு -
Quelle - http://santhipu.blogspot.com/2006/08/1.html

Sunday, July 23, 2006

கறுப்பு ஜுலை 83 - சோழியன்

ஈழத் தமிழினம் டீ.எஸ். சேனநாயக்கா போன்ற சிங்களப் பேரினவாதத் தலைவர்களால் காலத்துக்குக் காலம் பொருளாதார ரீதியாகவும், நில உரிமை ரீதியாகவும், மொழி ரீதியாகவும் நயவஞ்சகமாகவும் நேரடியாகவும் நசுக்கப் பட்டுக் கொண்டிருந்தாலும், அவற்றுக்கு எதிராக அவ்வப்போது சில அரசியல் தலைவர்களது குரல் ஒலிப்பதும், சில அற்பசொற்ப சலுகைகளுக்காக அடங்கிப் போவதும் நாம் கண்ட, காண்கிற அனுபவங்களானாலும், தமிழினத்தை தன்னிலை பற்றிச் சிந்தித்து, தனக்கென ஒரு நாடு தேவை என்ற தீர்வைக் கொடுத்தது என்னவோ, சிறீமாவோ பண்டாரநாயக்கா அம்மையாரது ஆட்சிக் காலத்தில் அமுல்படுத்தப்பட்ட 'தரப்படுத்தல்" என்ற தமிழ் மாணவரது கல்வியை நசுக்கும் செயல்தான் என்பதை எவராலுமே மறுக்கமுடியாது.

தரப்படுத்தல் சிவகுமாரன் போன்ற மாணவர்களை அகிம்சை வழியிலிருந்து விலகி ஆயுதங்கள் பக்கமாகச் சிந்திக்கத் தூண்டியது. அரச பயங்கரவாதச் சுரண்டல்களுக்குப் பரிகாரம் ஆயுதப் போராட்டமே என்ற எண்ணம் பல இளைஞருள்ளும் எழுந்தது. ஆனால் துணிவாக முன்வந்தவர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையினரே. அதுவும் அவர்களால் வெளிப்படையாக தம்மை இனங்காட்ட முடியவில்லை. ஏனெனில் அந்த இளைஞர்களின் செய்கைகளை அங்கீகரிக்கும் மனப்பக்குவம் பெரும்பான்மையான தமிழ் மக்களுக்கு இருக்கவில்லை.

இந்த நிலையில்தான் ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பத்து மூன்றாம் ஆண்டு இருபத்திமூன்றாம் திகதி திருநெல்வேலி மண் ஈழத் தமிழினத்தின் போராட்டத்தைப்பற்றிச் சிந்திக்காத மனப்பான்மைக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது.திருநெல்வேலியில் பதின்மூன்று சிங்கள இராணுவத்தினர் அழிக்கப்பட்ட செய்தி கேட்ட தூங்கிக் கிடந்த ஈழத் தமிழினம் சோம்பல் முறித்துக்கொண்டது. அரச படை இயந்திரங்களை எதிர்த்துப் போரிட முடியுமா என்ற கேள்வியே ஈழத் தமிழினத்தால், குறிப்பாக தமிழின அரசியல் மேடைப்பேச்சுத் தலைவர்களால் நினைத்துப்பாராததொன்றாக இருந்தவேளையில், திருநெல்வேலித் தாக்குதல் ஒரு விடிவெள்ளியாகியது.

ஈழத்தமிழனின் கல்வியில் திணிக்கப்பட்ட தரப்படுத்தலானது இளைஞர்களை ஆயுதங்கள் பக்கமாகச் சிந்திக்கத் தூண்டியதென்றால், திருநெல்வேலி தாக்குதலும் அதைத் தொடர்ந்து எழுந்த அரச பயங்கரவாத ஆதரவுடன் இடம்பெற்ற இனக்கலவரமும் போராட்ட அமைப்புகளின் தீடீர் வளர்ச்சிக்கு அல்லது திடீர் வீக்கத்துக்கு வழிவகுத்தது.
ஆயித்துத் தொளாயிரத்து எண்பத்து மூன்றாம் ஆண்டு யூலைக் கலவரமானது பெரும்பாலான ஈழத் தமிழர்களுக்கு ஒவ்வொருவிதமான அனுபவத்தைக் கொடுத்திருக்கும். அந்தவகையில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை இங்கே இரைமீட்க விரும்புகிறேன்.
அப்போது நான் கொழும்பில் தெமட்டகொட என்ற இடத்தில் ஒரு சிங்கள வீட்டு அறையொன்றில் வாடகைக்கு குடியிருந்தேன். மருதானையில் அமைந்துள்ள 'தில்லீஸ் குறூப்" என்ற நிறுவனத்தின் கணக்குப் பகுதியில் கடமையாற்றிக்கொண்டிருந்தேன்.

'தில்லீஸ் குறூப்"பின் கீழே பல வியாபார ஸ்தாபனங்கள் இயங்கின. அவற்றில் ஒன்று கல்கிசை என்னும் இடத்தில் கடற்கரையை அண்மித்திருந்த 'தில்லீஸ் பீச் ஹோட்டல்" என்ற வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் தங்கும் நட்சத்திர ஹோட்டலாகும். அன்று 1983 யூலை 23ம் திகதி என்று நினைக்கிறேன். அதாவது இனக்கலவரத்துக்கு முதல்நாள். சில கணக்குச் சம்பந்தமான அலுவல்களுக்காக அங்கே சென்றுவிட்டு வீடு திரும்ப இரவு எட்டு மணியாகிவிட்டது. கல்கிசையில் இருந்து தெமட்டகொட வரவேண்டுமானால் 154 இலக்க வஸ் எடுக்கவேண்டும். அந்த வஸ் பொரளை என்ற இடத்தினூடாக தெமட்டகொடவுக்கு செல்லும். வஸ் பொரளையை அண்மித்தபோது அதன் வேகம் குறைந்தது. அது பொரளையில் கனத்தை மயானம் அமைந்துள்ள பகுதி. அங்கே பெருந்திரளான மக்களும் பொலீசாரும் திரண்டிருந்தார்கள். வாகனங்கள் அதற்கப்பால் செல்ல இயலாதவாறு ஒரே சன நெரிசல். திருநெல்வேலியில் பலியான இராணுவச் சடலங்கள் கனத்தை மயானத்தில் அடக்கம் செய்யப்பட இருந்ததால்தான் அந்தச் சனத்திரள் என்பதை மறுநாள்தான் என்னால் அறியமுடிந்தது. பஸ் வண்டி வேறொரு பாதை வழியாக தெமட்டகொடவை அடைய, வீடு செல்லக்கூடியதாக இருந்தது.

மறுநாள் காலை ஏழு மணியிருக்கும். வீட்டு உரிமையாளர் அவசரமாக அறைக்கதவைத் தட்டும் சத்தம்கேட்டு எழுந்தேன். அந்த சிங்களவர் தலையில் கையை வைத்தவாறு, 'தெமட்டகொட சந்தியிலுள்ள தமிழ்க் கடைகள் யாவும் அடித்து நொறுக்கப்படுகிறதென்றும், பெரிய பிரச்சினை ஒன்று கொழும்பில் ஆரம்பமாகிவிட்டது" என்றும் கூறி, என்னை வெளியே போகாமல் பாதுகாப்பாக இருக்குமாறு சொல்லிவிட்டு சென்றார்.
ஒரு மணித்தியாலம் கழிந்திருக்கும். வெளியே சென்ற வீட்டு உரிமையாளர் வியர்த்து விறுவிறுக்க வந்தார்.
'தமிழர்களை வைத்திருக்கிற சிங்களவர்களுடைய வீடுகளையும் எரிக்கிறார்களாம். அதனால் நீ இங்கிருப்பது எங்களுக்கு பயமாக இருக்கிறது" என்றார்.
மாதக் கடைசி. கையில் பணமில்லை.

வேலைத்தலத்தில் பணம் கேட்டுப் பார்க்கலாம் என்ற எண்ணத்தில் மருதானையை நோக்கி விரைந்தேன். அனேகமாக வேலைக்கு ஒரு குறுக்குப் பாதை வழியாக நடந்துதான் போவேன். அந்தப் பாதையில் சென்றுகொண்டிருந்தபோது, வேகமாக வந்த ஓட்டோ ஒன்று விக்கித்து நின்றது.
அதிலிருந்து வியர்த்து விறுவிறுத்தவாறு இரண்டு சிங்களவர்கள் இறங்கி என்னை கூப்பிட்டு, தங்களுடன் சேர்ந்து அந்த 'ஓட்டோ"வை தள்ளிவிடுமாறு கூறினார்கள். கைகளில் கத்தி பொல்லுகளுடன் விழிகள் சிவப்பைக் கக்க, விகாரமான முகங்களுடன் நின்றிருந்தவர்களுக்கு நான் தமிழன் என்று அடையாளம் தெரியவில்லை. தெரிந்திருந்தால் அந்த நேரம் என்னிலையை நினைத்துப் பார்க்கவே முடியாதிருந்தது.

மனதில் பயம் தோன்றினாலும், அந்தச் சூழ்நிலையில் அவர்களுக்கு என்னை இனங்காட்டக் கூடாதென்ற நிலமையில் அவர்களுடன் ஒருவனாக அந்த 'ஓட்டோ"வைத் தள்ள ஆரம்பித்தேன்.
அந்த 'ஓட்டோ"வினுள் இரண்டு மூன்று பெரிய 'சூட்கேஸ்கள் அரைகுறையாக திறந்தநிலையில் உடுபுடவைகளும் நகைகளுமாக வெளியே தெரிந்தன. அந்த 'சூட்கேஸின்" வெளிப்பகுதி எங்கும் ஈரம் காயாத இரத்தக்கறைகள் வியாபித்திருந்து, எங்கோ ஒரு வீட்டில் தமிழுயிர்கள் அந்த இரு காடையரினால் கொடூர அவலத்துக்குள்ளாகி, தமது சொத்துக்களையும் பறிகொடுத்ததை எடுத்தியம்பின. சிலசமயம் அந்த உயிர்களும் பறிபோயிருக்கலாம்.
எனினும் என்ன பயன்?
எனது உயிர்ப் பாதுகாப்புக்காக அந்த 'ஓட்டோ" தொடர்ந்து முன்னே செல்ல, கைகொடுத்துவிட்டு, கையாலாகாத்தனத்துடன் எனது வேலைத்தலத்தை நோக்கி விரையலானேன்.
அது திறக்கப்படவில்லை.
மீண்டும் வீட்டை அடைந்தேன். எனது நிலையைப் புரிந்துகொண்ட அந்த வீட்டு உரிமையாளர், கைச்செலவுக்கு சிறிதளவு பணத்தை கேட்காமலேயே தந்தார்.
எங்கே போவது? எவரிடம் உதவி கேட்பது?
யோசித்து முடிவெடுக்க முடியவில்லை.
வீதியால் செல்லும் வஸ் வண்டிகளிலிருந்து 'ஜயவேவா, ஜயவேவா" என்ற பலநு}று குரலொலிகள் எழுந்து சூழ்நிலையின் பயங்கரத்தை உணர்த்திக்கொண்டிருந்தன.
வேலைக்கென வந்து மக்கள் வீதியெங்கும் கும்பல் கும்பலாக தமிழனின் அவலத்தை வேடிக்கை பார்த்தவாறு மெல்லமெல்ல நகர்ந்துகொண்டிருந்தார்கள்.
அப்போது ஒரேயொரு வழிதான் தென்பட்டது.
கல்கிசையில் அமைந்திருந்த 'தில்லீஸ் பீச் ஹோட்ட"லுக்குச் செல்வது என்பதுதான். அது வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளுக்கான 'ஹோட்டல்" என்பதால், அதுவே பாதுகாப்பான இடம் என்று முடிவெடுத்தேன்.
தெமட்டகொடவிலிருந்து கல்கிசைக்குச் செல்லவேண்டும்.
பொரளையூடாகவும் போகலாம். மருதானை ஊடாகவும் செல்லலாம். கலவரம் ஆரம்பமான இடம் பொரளை என்பதால், மருதானை ஊடாகச் செல்ல ஆரம்பித்தேன். நடந்து செல்வதே பாதுகாப்பானதாகத் தோன்றியது.
மருதானை, நகரமண்டபம் எல்லாவற்றையும் கடந்து கொள்ளுப்பிட்டியை அடைந்தபோது, சில நு}று மீற்றர் முன்னால் காடையர் கூட்டமொன்று பல தமிழர் வர்த்தக ஸ்தாபனங்களைக் கொள்ளையிட்டு, அவற்றை எரித்தவாறு சென்றுகொண்டிருந்தது.
அவர்களின் பின்னால் 'ஜயவேவா" என்ற கோசங்களுடன் ஒரு கூட்டம். அவர்களில் பெரும்பாலானவர்கள் வேலைக்கு வந்து, அலுவலகங்கள் திறக்காததால் திரும்பிச் செல்பவர்கள். தமிழரின்மீது நடாத்தப்படும் அராஜகங்களைப் பார்த்து வேதனைப்படும் சிங்கள மக்களும் அந்தக் கூட்டத்தில் இல்லாமலில்லை.
இராணுவத்தினர் 'ட்ரக்"குகளில் பெற்றோலைக் கொண்டுவந்து அந்தக் காடையர்களுக்கு விநியோகிப்பதையும், 'ஜயவேவா" என்று கத்தி உற்சாகமூட்டுவதையும் காணக்கூடியதாக இருந்தது.
பல சரக்குக் கடைகளைச் சூறையாடி அதிலிருந்த இனிப்பு, குமிழ்முனைப் பேனா போன்றவைகளை அந்தக் காடையர்கள் சனங்களை நோக்கி வீசுவதையும் அவற்றை அந்தச் சனங்கள் முண்டியடித்தவாறு பொறுக்கி எடுத்து ஆனந்தம் அடைவதையும் பார்த்தவாறு மெல்லமெல்ல அவர்களோடு ஒருவனாக நகர்ந்துகொண்டிருந்தேன்.
பம்பலப்பிட்டி என்ற பகுதியை அண்மித்தபோது காடையாரின் தொகையும், தாக்குதல்களும் மிகவும் அதிகரித்துவிட்டது. சுற்றிநிற்கும் கூட்டத்திலே எவராவது தமிழர்கள் உள்ளார்களா என நோட்டமிட ஆரம்பித்துவிட்டார்கள். சுற்றிநிற்கும் மக்களின் ஆதரவும், இராணுவத்தினரின் பெற்றோல் விநியோக உதவியும் காடையரின் உற்சாகத்தைக் கூட்ட, அவர்களின் வெறியாட்டம் உச்சகட்டத்தை அடைந்துகொண்டிருந்தது.
பம்பலப்பிட்டி சரஸ்வதி லொட்ஜ் என்ற தோசைக்குப் பெயர்பெற்ற அந்தச் சைவக் கடையின் பலகைக் கதவுகளை நொறுக்கித் திறந்து, உள்ளேயிருந்து வேட்டியணிந்த ஒரு பெரியவரை வெளியே இழுத்து வந்து ஏதோ செய்யுமாறு கட்டளையிட்டார்கள். பாவம் அந்தப் பெரியவர் அணிந்திருந்த வேட்டியைக் கழற்றி தலையில் தலைப்பாகையாகக் கட்டிக்கொண்டு, தேகம் நடுங்க அந்தக் காலி வீதியில் மண்டியிட்டு இருகரம் கூப்பி அந்தக் காடையர்களைக் கும்பிடலானார். அருகில் உடைந்து சிதறியிருந்த அந்தக் கடைக் கதவுப் பலகையொன்றால் அவரின் முகத்தில் ஓங்கி அறைந்தான் அந்தக் காடையர்களில் ஒருவன். இரத்தம் குபீரெனப் பாய்ந்தது.
கண் முன்னால் ஒரு கொலையொன்று நிகழப்போகிறதோ என்ற பீதியுடன் உடல் உறைய நின்றிருந்தேன்.
அப்போது சில சிங்களப் பெண்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கூட்டத்திலிருந்து பாய்ந்து வந்து அந்த முதியவருக்கும் காடையருக்கும் இடையே ஒரு பாதுகாப்புக் கவசமாக நின்றுகொண்டு, அந்தக் காடையரைப் பார்த்து ஏசிக் கத்தினார்கள்.
அங்கே அந்தத் தமிழ் முதியவரது உயிர் பிழைத்துக் கொண்டது.
அந்தச் சிங்களப் பெண்களின் தாய்மை உள்ளத்துக்கு மனதாரத் தலை வணங்கியவாறு, மேலும் அந்த வழியால் தொடர்ந்து செல்வது புத்திசாலித்தனமல்ல என்ற முடிவுடன் கடற்கரைவழியாகக் கல்கிசையை அடையலாம் என்ற முடிவில், கடற்கரையில் அமைந்துள்ள தண்டவாளத்தின் வழியாக கல்கிசையை நோக்கி நடக்கலானேன்.
வெள்ளவத்தையில் காலிவீதியிலிருந்து கடற்கரை நோக்கி குறுக்காக அமைந்த வீதியெங்கும் ஒரே புகைமயமாகவும், மக்களின் அபயக் குரல்களாகவும் அந்த கடல் காற்றிலே கலந்துகொண்டிருந்தது.
நான் ராஜசிங்க வீதியை அண்மித்தபோது பின்னால் ஏதோ சலசலப்புக் கேட்டு திரும்பிப் பார்த்தேன்.
சில காடையர்களும், ஒரு புத்த பிக்குவும் கையில் கத்தி பொல்லுகளுடன் வந்துகொண்டிருந்தார்கள்.
ஆபத்து பின்னால் நெருங்குவதை உணர முடிந்தது.
ஓடினால் 'தமிழன்" என்று இனங்கண்டு துரத்திப் பிடித்துவிடுவார்கள்.
நடையின் வேகத்தை அதிகரித்தேன்.
எனினும் கல்கிசைக்கு இன்னும் து}ரமிருந்தது. அப்போது வெள்ளவத்தையில் போய்க்கொண்டிருந்தேன். கல்கிசையை அடைய தெகிவளை என்னும் இடத்தையும் தாண்டியாகவேண்டும்.
கல்கிசையை சென்றடைவேன் என்ற நம்பிக்கை பின்னால் வந்தவர்களின் தொடர்தலால் மெல்லமெல்ல அகன்று கொண்டிருந்தது.
வீதி எங்கும் சிங்களப் பேரினவாதிகளின் ஆதரவுடன் அரங்கேறிக்கொண்டிருந்த ஈழத்தழிழர்மீதான அட்டூழியங்களையும், அடாவடித்தனங்களையும் நேரடியாகவே பார்த்தவாறு வந்ததால், அந்த புத்த பிக்குவுடன் பின்தொடரும் காடையர்களால் எனக்கு என்ன நேருமோ என்ற எண்ணம் என் பதட்டத்தை அதிகரித்துக் கொண்டிருந்தது.
அப்போது இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தை அண்மித்துக் கொண்டிருந்தேன். அதனுள் பல தமிழர்கள் அடைக்கலமாகியிருப்பது மண்டபக் கண்ணாடிச் சுவர்களினுாடே தெரிந்தது.
அப்போது யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் பிரயாணசேவையை நடாத்திக் கொண்டிருந்த பிள்ளையார் ஸ்ரோர்ஸ் சொகுசு வஸ் ஒன்று அரைகுறையாக எரிந்து புகைய, மண்டப முன் கண்ணாடிகள் நொறுங்கிப் போயிருந்தன.
அவசர அவசரமாக உள்ளே நுழைந்துவிட்டேன். அந்தக் காடையர்களும் உள்ளே நுழைந்தார்கள். அவர்களைக் கண்டு மண்டபத்தினுள்ளே இருந்த பெண்களும் குழந்தைகளும் கூச்சலிட ஆரம்பித்தார்கள். அப்போது அந்த மிஷன் சுவாமிகள் காவியுடையுடன் முகத்தில் அமைதி தவழ, அபயக் குரலெடுத்து அலறும் அந்த அப்பாவி தமிழர்களை விலத்தியவாறு, புத்த பிக்குவின் முன்னால் வந்து நின்றுகொண்டார்.
என்னை அழித்துவிட்டு, அப்பால் சென்று உங்களின் வெறியைத் தீர்த்துக் கொள்ளுங்கள் என்னும் போக்கில் ஒரு காவியுடை தரித்த துறவி.
தமிழர்களை அழித்தே தீருவேன் என்னும் நோக்கில் இனவெறி கண்களில் தெறிக்கக் காடையருடன் இன்னொரு காவியுடை தரித்த புத்த துறவி.
இரண்டு வேறுபட்ட குணாம்சம் பொருந்திய துறவிகள் நேரடியாகச் சந்தித்தார்கள்.
அந்த புத்த துறவிக்கு அங்கே குற்றத்தை உணரும் மனப்பக்குவம் ஏற்பட்டதோ, என்னவோ, அவர் காடையர்களை அழைத்துக்கொண்டு திரும்பிச் சென்றுவிட்டார்.
சிறிது நேரத்தில் அங்கு கூடியிருந்த தமிழ் மக்கள் யாபேருக்கும் சுடச்சுடத் தேனீர் பரிமாறப்பட்டது.
பாலைவனத்தில் ஒரு துளி நீர் கிடைத்ததுபோன்ற உணர்வெழுந்தது.
சுற்றிலும் ஒரே புகைமயமாக இருந்தது. பல தமிழர்களின் உடமைகள் சூறையாடப்பட்டும் எரியூட்டப்பட்டும் மக்கள் அநாதரவாக இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். நேரம் செல்லச்செல்ல கூட்டம் அதிகரித்துக்கொண்டிருந்தது.
குழந்தைகள் பசியால் கதற ஆரம்பித்துவிட்டார்கள். எல்லோரையுமே பசி வாட்டி வதைத்தது.
இனிமேல் என்ன நடக்கப் போகிறது, என்ன செய்யப் போகிறேன் என்பதைக் குறித்து என்னால் சிந்திக்க முடியாமல் இருந்தது.
இரவு எட்டு மணியிருக்கும்.
முன்னே பொலீஸ் ஜீப் வண்டி வர, பின்னால் பலநோக்குக் கூட்டுறவுச் சங்க லொறிகள் மூன்று வந்தன.அவற்றில் ஏற்றப்பட்டோம். அவை பம்பலப்பிட்டி இந்துக் கல்லுாரியைச் சென்றடைந்தன.

லொறிகளிலிருந்து பரபரப்பாக இறங்கிய அனேகர் முண்டியடித்தக்கொண்டு உள்ளே ஓடினார்கள். ஏதாவது உணவு வழங்குகிறார்களோ என்று நோட்டமிட்டேன். அப்படியெல்லாம் எதுவுமில்லை. ஒவ்வொரு வகுப்பறைகளாகத் தமக்கு இடம் ஒதுக்குவதில் ஈடுபட்டிருந்தார்கள்.
உடமைகளையும் கட்டிக்காத்த செல்வங்களையும் இழந்து அகதிகளாக அவலங்களுடன் எதிர்காலமே சூனியமாகிவிட்ட நிலையில், ஒரு வகுப்பறையின் வெறும்தரையில் கையோடு எடுத்துவந்த சில சில்லறைப் பொருட்களை வைத்து இடம் பிடிப்பதில் போட்டிபோட்டுக் கொண்டிருந்தார்கள்.இந்தப் போட்டியானது அப்போதிருந்து அகதி முகாமான பம்பலப்பிட்டி இந்துக் கல்லு}ரியில், ஒவ்வொரு சிறுசிறு விசயங்களுக்குமாய் சங்கிலிக் கோவையாய் பின்னிப்பிணைந்து வளர்ந்துகொண்டே சென்றது.
உறங்குவதில் இடம்தேடப் போட்டி. உணவு பெறுவதில் போட்டி. மலசல கூடம் செல்வதில் போட்டி. முகம் கழுவத் தண்ணீர் பிடிப்பதில் போட்டி. யாழ்ப்பாணம் செல்ல கப்பலுக்குப் பதிவு செய்வதில் போட்டி.
இத்தனைக்கும் மேலாக இலங்கைத் தமிழன், இந்தியத் தமிழன் என்று போட்டி. இத்தனை போட்டிகளும்அதனால் நிமிடத்துக்கு நிமிடம் உருவாகும் புதுப்புதுப் பிரச்சினைகளுமாக அகதிமுகாம் வாழ்வு வித்தியாசமான, அதேநேரத்தில் தமிழினம் எப்போது ஒற்றுமைப்படும் என்ற ஏக்கத்தையும் தந்ததென்றால் மிகையாகாது.
அழிவுகளும் அவலங்களும் ஈழத் தமிழினத்தின் சுயநல, சுகபோக தேடலை ஒருபுறமாகத் தள்ளி, விட்டுக்கொடுப்புக்களோடுகூடிய ஒற்றுமை உணர்வை வளர்த்தெடுக்குமா என்ற வினாவுக்கு ஒரு சாதகமான பதில் வெகுதொலைவிலேயே காத்திருப்பதான உணர்வு ஏற்பட்டது.ஒரு சம்பவம்...
ஒரு யாழ்ப்பாணக் குடும்பம். பல வருடங்களாக கொழும்பு வாழ்க்கை என்பதை அவர்களது செயற்பாடுகள் எடுத்தியம்பின. அவர்களுடன் ஒரு வீட்டுப் பணிப்பெண். அப்போது அங்கே எல்லோரும் அகதித் தமிழர்கள் என்றாலும், அவர்களைப் பொறுத்தளவில் அந்த இளம்பெண் பணிப் பெண்ணாகவே நடாத்தப்பட்டாள்.

பெரியதொரு கம்பளத்தை விரித்து அதிலே உட்கார்ந்திருந்தார்கள். அந்தப் பெண் அவர்களுக்காக வரிசைகளில் நின்று தண்ணீர் என்றும் உணவென்றும், அவர்களின் உடுபிடவைகளைத் தோய்ப்பதென்றும் உழைத்துக் கொண்டிருந்தாள். இத்தனைக்கும் அவள் உணவருந்தினாளா, உறங்கினாளா என்பதைப்பற்றி அவர்களுக்கு அக்கறையில்லை. அவள் என்னதான் பணிவிடை செய்தாலும், அவள்மீது வசைபாடுவதிலேயே கவனமாக இருந்தார்கள்.
அவளுக்கு அந்த முகாம் வதைமுகாமானது. அதிலிருந்து விடுபட அவளுக்கு தெரிந்த வழி அவளது வாழ்க்கையையே மாற்றியது. ஆம். அவள் அந்த முகாமில் ஒரு இளைஞனை திருமணம் செய்தாள். அந்தத் திருமணம் அங்கு கடமையிலிருந்த பொலிசாரின் முன்னிலையில் நிகழ்ந்தது.
அந்த யாழ்ப்பாணக் குடும்பத்தின் அதிகாரத்துக்கு அவள் தனது திருமணத்தின் மூலம் கடிவாளமிட்டாள் என்பதுதான் யதார்த்தம்.

இந்த ஆடிக்கலவரத்தை கறுப்பு யூலை என்கிறார்களே. இந்தக் கறுப்பு
யூலையானது சிங்களப் பேரினவாதத்தால் தமிழினத்தின்மீது வாரியிறைக்கப்பட்ட கறுப்பா? அல்லது தமிழர் மனங்களில் ஆழப் புதைந்திருக்கும் கறுப்பை அகற்ற வந்த யூலையா?
யாழ்ப்பாணத்துக்கு சரக்குக் கப்பலில் செல்லவென கொழும்புத் துறைமுகத்தில் நானும் சில நண்பர்களும் நின்றிருந்தோம்.
பசித்தது.

துறைமுகத்தில் சாப்பாட்டுப் 'பார்சல்"களை சிலர் மலிவு விலையில் விற்பதுண்டு. அங்கு கடமையிலிருந்த இரு சிங்கள இளைஞர்களிடம் விசாரித்தோம்.
அவர்கள் உடனே விரைந்து சென்று சில சாப்பாட்டு பார்சல்களை எடுத்துவந்து தந்தார்கள்.
பணத்தைக் கொடுத்தபோது வாங்க மறுத்தார்கள்.
'இது நாங்கள் சாப்பிட வைத்திருந்தவை. இந்தக் கலவரத்துக்காக நாங்கள் கவலைப்படுகிறோம். இங்கு எல்லா மக்களும் சமமாக வாழவேண்டும் என விரும்புகிறோம். நீங்கள் மீண்டும் கொழும்புக்கு வரவேண்டும். அதுதான் எங்களுடைய விருப்பம்."
அவர்கள் கூறிக்கொண்டே போனார்கள்.
நாங்கள் அவர்களிடம் விடைபெற்று கப்பலில் ஏறினோம்.
கப்பல் காங்கேசன்துறையை நோக்கி நகர ஆரம்பித்தது.

யாழ்.கொம் இணைத்தளத்தில் யூலை 7, 2003 ஆம் ஆண்டு சோழியன் என்ற பாதிக்கப்பட்ட அன்பரால் வழங்கப்பட்ட அனுபவப்பகிர்வு இது.

Friday, July 21, 2006

தமிழ் தட்டச்சின் தந்தை ஆர் முத்தையா!

சரஸ்வதி இதழிலிருந்து...
- கா. மாணிக்க வாசகர் -

[தமிழ்த் தட்டச்சுத்துறைக்கு அன்று ஈழத்தமிழரொருவரான ஆர்.முத்தையா ஆற்றிய பங்களிப்பினை சரஸ்வதியில் வெளிவந்த இக்கட்டுரை புலப்படுத்தும். இக்கட்டுரையினை எமக்கு அனுப்பி வைத்த இலண்டனில் வசிக்கும் விசாகப்பெருமாள் வசந்தன் அவர்களுக்கு எம் நன்றி. -ஆசிரியர்]

ஆங்கிலேயர் அரசியல் நிர்வாகத்தில் சிறந்து விளங்குவதற்கும் ஆங்கில மொழிகளும் உலக மொழியானதற்கும் ஆங்கிலத் தட்டச்சு (டைப்ரைட்டர்) ஒரு முக்கியமான காரணம். 1875-ம் ஆண்டில் "ரெம’ங்டன்" தட்டச்சு விற்பனைக்கு வந்தபொழுது வர்த்தக ஸ்தாபனங்களே பெரும்பாலும் அவைகளை வாங்கி உபயோகித்தன. பின்பு அரசினரும் பிற ஸ்தாபனத்தாரும் தனி மனிதர்களும் தட்டச்சை விரும்பி வாங்கினார்கள். ஆங்கிலத்தில் இருபத்தாறு எழுத்துக்களே இருக்கின்றன. தமிழில் உயிர் எழுத்துக்கள் 12, மெய் எழுத்துக்கள் 18, உயிர்மெய் எழுத்துக்கள் 216, ஆய்த எழுத்து 1 ஆக மொத்தம் 247 எழுத்துக்கள் இருக்கின்றன. இவை தவிர எண்களும் குறியீடுகளும் வடமொழி மூலம் வந்த சில முக்கியமான எழுத்துக்களும் இருக்கின்றன. ஆகவே ஆங்கிலத்தைவிட ஏறக்குறைய பத்து மடங்கு அதிகமான எழுத்துக்களை உடைய தமிழ் மொழியை ஒரு இயந்திரத்தில் அமைப்பது சுலபமான விஷயம் அல்ல. ஆங்கில மோகம் வானளாவின்ற அந்த நாளில் இதைச் செய்ய நினைத்தவர் சிலர் இருந்தாலும் செய்து முடிக்கும் உடையோர் இல்லை.

பெரு எண்ணிக்கையில் செய்விக்க பண முதலீடு செய்யும் துணிவு வேண்டுமே, பண முதலீடு செய்தாலும் விற்பனை ஆகுமா? இந்தப் பிரச்னைகளை எல்லாம் கருத்தில் கொள்ளாது துணிச்சலுடன் செயலில்
இறங்கினார் ஒரு தமிழர்.

ஈழ நாட்டில் வாழும் தமிழர்களின் தலைநகராக விளங்கும் யாழ்ப்பாணம் அப்போது சிறந்த அறிஞர்களையும் ஆராய்ச்சியாளர்களையும் உலகுக்கு அளித்துக் கொண்டே இருக்கிறது. இந்தத் திருநாட்டின் ஒப்பற்ற ஒருவர்தான் தமிழ் தட்டச்சின் தந்தையான ஆர் முத்தையா அவர்கள்.

முத்தையா யாழ்ப்பாணத்திலுள்ள சுண்டிற்குளியில் 24-2-1886-ல் பிறந்தார். இவருடைய தந்தையாரான ராமலிங்கம் பண்பாடு மிக்கவர், கல்வியாளர், பக்திமான். இவர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின் சீடர்களில் ஒருவராக இருந்தார். ராமலிங்கம் அவர்களுக்கு ஐந்து ஆண்களும் நான்கு பெண்களும் பிறந்தார்கள். இறுதி ஆண் பிள்ளைதான் முத்தையா. இவர் ஏழு வயதாக இருக்கும் பொழுது, இவருடைய தந்தையார் இறந்து விட்டார். பின்பு தாயின் பராமரப்பிலேயே வளர்ந்து கலாசாலையில் பயின்று வந்தார். சில வருஷங்களில் தாயும் நோய் வாய்ப்பட்டு இறந்தாள். இவர் 1907-இல் மலாயா நாட்டுக்குப் புறப்பட்டார்.

சிங்கப்பூரை அடைந்ததும் தொடர்ந்து போர்னியாவுக்குப் போக எண்ணிய பொழுது, டானியல் போதகர் என்பவர், தாம் அங்கேயே இவருக்கு வேலை வாங்கித் தருவதாகச் சொல்ல அப்படியே இவரை ரெயில்வே இலாகாவில் வேலைக்கு அமர்த்தினார். சில நாட்களில் அந்த வேலையை விட்டு ஐல்ஸ்பெரி அண்ட கார்லாண்ட என்ற பிரபலமான வர்த்தக ஸ்தாபனத்தில் வேலையேற்றார். இரண்டாண்டுகளுக்குப் பின், அதன் பிரதம குமாஸ்தாவாக உயர்ந்து, 1930ஆம் ஆண்டு வரையில் பணி புரிந்தார். இந்தக் காலத்தில் இவர் உயர்தரக் கணக்குப் பதிவு, பொருளாதாரம், அச்சடித்தல், சுருக்கெழுத்து ஆகியவைகளைக் கற்றார். 1913-இல் நடைபெற்ற ஸ்லோன் டுப்ளோயன் சுருக்கெழுத்துப் போட்டியில் சர்வதேச வெள்ளிப் பதக்கம் இவருக்குக் கிட்டியது. அதோடு ஆங்கில இலக்கியம், தமிழ் இலக்கியம், கைத்தொழில் நூல்கள், சமய நூல்கள் ஆகியவற்றையும் கற்றார். இவ்வளவு திறமை வாய்ந்தவராய் இருந்தும் அரசாங்க உத்தியோகத்தை இவர் நாடியதே இல்லை. சுயமுயற்சியில் அதிக நம்பிக்கை உடையவர், அஞ்சா நெஞ்சம் படைத்தவர். தமக்குச் சரியென்று பட்டதைத் துணிவுடன் இவர் எடுத்துச் சொல்வார்.

இவர் கடமையாற்றிய ஸ்தாபனத்தில் இருந்த ஒழுங்கும் நிர்வாகத் திறமையும் இவரைக் கவர்ந்தன. அவர்களைப் போல் தமிழனும் ஏன் இருக்க முடியாது என்று சிந்தித்தார். தமிழில் ஒரு தட்டச்சு இல்லாக் குறையையும் உணர்ந்தார். ஆகவே, அன்று தொடங்கி இந்த முயற்சியில் ஈடுபட்டார். தனிமையாக ஓர் அறையில் 247 எழுத்தின் வடிவங்களை ஒரு புறமும் தட்டச்சின் 46 விசைகளை மறு பக்கமும் வைத்து எழுத்துக்களை எப்படி விசைகளில் அமைப்பது என்று சிந்தித்தார். கிடைத்த நேரங்களை யெல்லாம் இந்த ஆராய்ச்சிக்கே செலவிட்டார். தம் தமிழ் நண்ர்பர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களுடைய அபிப்ராயங்களையும் சேகரித்தார். எவ்வளவு முயற்சி செய்தும் எழுத்துக்களை 72-க்கு மேல் குறைக்க முடியவில்லை. அதுவரையில் கிடைத்த வெற்றியைக் கொண்டு தட்டச்சை நிறைவேற்றும் பணியை மேற் கொண்டார்.

முத்தையா அவர்கள் தாம் கண்டு பிடித்த தட்டச்சை "ஸ்டாண்டர்ட்" பெரிய தட்டச்சு என்று குறிப்பிட்டார். அது சிறப்பான பல அம்சங்களை உடையது. தமிழில் 247 எழுத்துக்கள் இருப்பதால் அவை எல்லாவற்றையும் நான்கு வரிசைகளில் உள்ள 46 விசைகளில் அசைக்க முடியாது. எனவே, பல எழுத்துக்களுக்குப் பொதுவான உள்ள சில குறியீடுகளைத் தனித் தனி விசைகளில் அமைத்து அவைகளைத் தேவையான எழுத்துக்களுடன் சேர்த்து அச்சடிக்கக் கூடிய விசைப்பலகையை அமைக்க வேண்டும். அப்படியானால், இரண்டு விசைகளை அழுத்திய பின்பே அச்சை நகரச் செய்ய வேண்டும். பல பரீட்சைகள் செய்து கடைசியாக நகரா விசையைக் கண்டு பிடித்தார். அதாவது "ந“ என்ற எழுத்திலுள்ள விசிறியை அடிக்கும் பொழுது அச்சு நகராது. எஞ்சி யுள்ள "ந"வை அடித்த பின் தான் அச்சு நகரும். மெய்யெழுத்துக்களும் இப்படியே அச்சாகின்றன. இவர் உண்டாக்கிய நகரா விசையையே இன்றும் தட்டச்சு உற்பத்தியாளர்கள் உபயோகிக்கிறார்கள்.

ஆங்கிலத் தட்டச்சைப் போலல்லாது தமிழ்த் தட்டச்சுக்களின் விசைப்பலகை அமைப்பு வேறு விதமாக இருக்கிறது. ஒரு யந்திரத்தில் பழகியவர் அதே முறையில் வேறொரு யந்திரத்தில் அச்சடிக்க முடியாது. ஆகவே, இதை ஒருமைப்படுத்த எண்ணிய சென்னை அரசினர் 1955-ஆம் ஆண்டில் ஒரு குழுவை நிறுவினார்கள். அதன் சிபார்சுப்படியும் பிறருடைய ஆலோசனையின் பேரிலும் இப்பொழுது விசைப் பலகையமைப்பில் ஒருமைப்பாடு ஏற்பட்டிருக்கிறது. ஆயினும், முத்தையா அவர்களின் கண்டு பிடிப்பிலிருந்து அதிக மாற்றம் புதிய முறையில் இல்லை. புதிய அமைப்பில் இல்லாத சில சிறப்பான அம்சங்களும் இவருடைய தட்டச்சில் உண்டு. இவை புதிய அமைப்பில் சேரவில்லை. இப்பொழுது க’, த’ ஆகிய எழுத்துக்களின் விசிறிகள் அந்த எழுத்துக்களின் மேற்கோட்டின் நுனியில் இருக்கின்றன. இது தமிழ் எழுத்தைப் பிழையாக்குவதாகும். முத்தையா அவர்களின் விசைப்பலகை அமைப்பில் க’, த’ போன்ற எழுத்துக்களுக்கு ஒரு விசிறியும், ண’, ன’ போன்ற
எழுத்துக்களுக்கு வேறு ஒரு விசிறியும் அமைத்திருப்பது குறிப்பிடத் தக்க சிறப்பாகும்.

இப்பொழுதிருக்கும் சில தட்டச்சுகள் இரண்டு கை விரல்களுக்கும் சமமாக வேலை கொடுக்கவில்லை. இந்தக் குறையைத் தம் தட்டச்சில் இவர் நீக்கியிருக்கிறார். தமிழெழுத்துக்களில் ய, ள, க, ப, ர, ம, ட, ந, ச, வ, ல, ன, டி ஆகிய எழுத்துக்கள் அடிக்கடி உபயோகமாகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டார்கள். ஆகவே, அரசினருடைய விசைப்பலகையில் கீழ் திட்டத்தில் இவை அமைந்திருக்கின்றன. முத்தையா அவர்களின் விசைப்பலகை அமைப்பும் இதையொட்டியே இருக்கிறதென்றால் இவர் எவ்வளவு ஆராய்ச்சியின் பின் இதை உருவாக்கியிருக்க வேண்டுமென்று நாம் ஊகிக்கலாம்.

முதலாவது உலக யுத்தம் முடிந்த பின்பு, தாம் கண்டு பிடித்த விசைப் பலகையை ஜெர்மனியிலுள்ள சைடல் அன்ட் நளமான் என்ற வியாபர ஸ்தாபனத்திடம் இவர் ஒப்புவித்து அச்சுக்களை உருவாக்கினார். பெரும் எண்ணிக்கையில் அதை இறக்குமதி செய்து விற்றும் வந்தார். இதோடு இவருடைய முயற்சி முற்றுப் பெறவில்லை. தாம் அமைத்த விசைப் பலகையில் சில குறைகள் இருக்கக் கண்டார். அவைகளை நீக்க’, "பிஜோ", "ஐடியல்" ஆகிய "போர்ட்டபிள்" தட்டச்சுக்களை உருவாக்கினார். இவைகளைப் பின்பற்றியே "ஆர் ஸ’", "எரிகோ", "யுரேனியா", "ஹால்டா" போன்ற தட்டச்சுகள் வெளியாயின.

முத்தையா அவர்கள் சிறந்த சமூக சேவையாளராகவும் விளங்கினார். காலஞ் சென்ற தெய்வசிகாம ஆசாரியருடன் சேர்ந்து குடிசைக் கைத்தொழிலின் அபிவிருத்திக்கு அரும்பாடு பட்டார். இலங்கையில் நடைபெற்ற வகுப்புக் கலவரங்களைப் பற்றி ஆங்கிலத்தில் நூல் ஒன்று எழுதி அதை அச்சேற்றுவதற்கு முன்பே காலமாகி விட்டார்.

நன்றி: சரஸ்வதி இதழ், 1959

அனுப்பி உதவியவர்: விசாகப்பெருமாள் வசந்தன்
vvishvan@yahoo.co.uk

Quelle-Pathivukal

Monday, July 03, 2006

வன்னியில் புரதான கால இரும்பு உலைகள்

-தி. தவபாலன்-

3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இரும்பு உருக்கு உலைகள் வன்னியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வன்னியில் கிளிநொச்சி மாவட்டம் அக்கராயன் குளத்தின் அலைகரைப்பகுதியில் இரும்பு உருக்கு உலைகள் 2002 ஆம் ஆண்டு தொல்லியல் தேடலாளர் ந. குணரட்ணத்தினால் கண்டு பிடிக்கப்பட்டது.

வட்டவடிவ இரும்பு உருக்கு உலையின் அடித்தளம் உலையின் ஊதுலையாக இருந்த மண் துருத்திகள், குவியல்களாக இரும்பு கசடுகள் என்பன இப்பகுதியில் கண்டு எடுக்கப்பட்டன. இந்த உருக்குலையின் கசடுகள் வேதியியல் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்ட போது அதில் 68.12 விழுக்காடு இரும்பு இருந்தது உறுதிசெய்யப்பட்டது. இதேபோன்ற இரும்பு உலை கசடுகள் முறிகண்டி- அக்கராயன் சாலையோரம், கோணாவிலில் அக்கராயன் கழிவாறின் கரையோரம், முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்தின் கோட்டைகட்டினகுளம் என்பவற்றிலும் கொக்காவிலிலும் காணப்படுகின்றன.

கொக்காவிலில் கண்டுபிடிக்கப்பட்ட இரும்பு உருக்குலைப் பகுதிகள் யு9 சாலை புனரமைப்புக்காக கிரவல் மண் அள்ளப்பட்ட வேளையில் அழிக்கப்பட்டுவிட்டன. ஏனைய உலைகள் அப்படியே உள்ளன. இரும்பு உருக்குலைப்பகுதிகள் காலக்கணிப்புக்கு உட்படுத்தப் பட்டுள்ளன. அதன் பெறுபேறு இந்த உலை கி.மு 1300 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை உறுதி செய்தது.

இலங்கைத்தீவில் ஸ்ரீலங்கா தொல்லியல் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வுகளின்படி மிகத்தொன்மையான இரும்பு உருக்குலை 2700 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இது அநுராதபுரத்தில் கண்டு பிடிக்கப்பட்டது. இந்த இரும்பு உருக்கு உலையே சிங்கள வலராறு கூறும் விஜயன் வருகை என்பதற்கு முன்பாகவே இலங்கைத்தீவில் மனிதர்கள் வாழ்ந்து வேளாண்மை, மந்தைமேய்ப்பு, இரும்புப்பயன்பாடு என்பவற்றை மேற்கொண்டிருந்தனர் என்ற அறிக்கையை ஸ்ரீலங்காவின் தொல்லியல் திணைக்கள முன்னாள் ஆணையாளர் S.U.தெரனியகலையினை வெளியிடச்செய்தது.



இதைவிட 3000 ஆண்டுகள்வரை தொன்மையான புத்தளம் பொம்பரிப்பு முதுமக்கள் தாளிகளில் எடுக்கப்பட்ட இரும்புப் பாகங்களும்இத்தீவில் இரும்புப் பயன்பாட்டை உறுதிசெய்தது. தமிழர் தாயகப்பகுதிகளில் பூநகரியில் மேலாய்வு மேற்கொள்ளப்பட்டு இரும்பு உருவாக்கங்கள் எடுக்கப் பட்ட போதிலும் அவை காலக்கணிப்பு மூலம் இதுவரை காலம் உறுதி செய்யப் படவில்லை.



ஆனால் அக்கராயனில் கண்டுபிடிக்கப்பட்ட இரும்பு உலை காபன்-14 கதிரியக்க காலக்கணிப்பு செய்யப்பட்டு அது கி.மு 1300 ஆண்டுகள் தொன்மையானது என அறிவியல் ரீதியாக உறுதி செய்யப்பட்டுள்ளது.



நவீன அறிவியல் உலகில் தொல்லியல் சான்றுகள் காலக்கணிப்பு மூலம் உறுதி செய்யப்படும்போதே அவை அங்கீகரிக்கப்படுகின்றன. ஒப்பீட்டு காலக்கணிப்பு முறைகள் தொல்லியல் என்ற அறிவியல் துறையில் ஏற்புடையதாக்கப்படுவதில்லை. அந்த ரீதியில் அக்கராயன் இரும்பு உலை அறிவியல் மூலம் காலக்கணிப்பு செய்யப்பட்டுள்ளது.

தமிழரின் பெருங்கற்காலம் எனப்படும் (கி.மு.0 முதல் 1000 வரையான) காலம் இரும்புக்காலம் எனவும் குறிப்பிடப் படுகின்றது. பெருங்கற்காலத்திலேயே தமிழர்கள் இரும்பினைப் பயன்படுத்தியதால் இது இரும்புக்காலம் எனவும் குறிப்பிடப்படுகின்றது. இத்தகைய இரும்பு உலைகள் தமிழர் தாயகத்தில் இருப்பதான விடயங்கள் ஆதாரபூர்வமாக இதற்குமுன்னர் வெளிவரவில்லை. ஆதாரபூர்வமாக காலக்கணிப்புடன் தமிழர் தயாகத்தில் இரும்பு உலைகள் பற்றிய விடயம் வெளியாவது இதுவே முதல் தடவையாகும்.

தமிழர் தாயகத்தில் இரும்புத்தாது திருக்கோணமலையின் சேருவலையில் உள்ளது. இந்த இரும்புத்தாதுதான் தமிழர்தாயக இரும்பு உலைகளில் பயன்படுத்தப்பட்டதாக கூறமுடியாது. ஏனெனில் சேருவிலை இரும்புத்தாது இன்னமும் பயன்படுத்தாத நிலையில்தான் இருக்கின்றது. இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து அது வந்திருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. தொழில் நுட்பங்கள் எல்லாமே ஒரே இடத்தில் தோன்றின என அடிப்படை வாதம் பேசினால் அதுவே உண்மை வரலாறின் தவறாகும். ஆக எமக்கு இரும்பு நுட்பம் வேறெங்கோ இருந்தே கிடைத்திருக்க வேண்டும். 16 ஆம் நூற்றாண்டில் வருகைபுரிந்த பிரிட்டிஸ் பயணியான “றொபேட் நொக்ஸ்” தான் இத்தீவில் பாரம்பரிய இரும்பு உருக்கு உலைகளை கண்டதாகவும் கூறி அதன் நுட்பத்தையும் வெளியிட்டிருக்கிறார்.

நவீனத்துவம் வரும்வரை இப்பாரம்பரிய உருக்குலைகள் இத்தீவில் பயன்படுத்தப் பட்டுள்ளன. இவற்றில் தமிழர் தயாகத்திலும் மூத்த இரும்பு உருக்குலைகள் உள்ளன. இதனை வன்னி இரும்பு உருக்குலைகள் எடுத்துக் கூறுகின்றன.

Monday, April 24, 2006

மக்களின் இலக்கியக்காரன் - கவிஞர் நாவண்ணன்

- வன்னியன் -

ஈழத்தின் மூத்த கவிஞர் நாவண்ணன் மரணமடைந்தார். கவிஞர் நாவண்ணன் என்ற பெயர் பெரும்பாலானோருக்குத் தெரியாமலிருக்கும். ஈழத்தைச் சார்ந்தவர்கள்கூட அனைவரும் அறிந்திருப்பரென்று நான் நினைக்கவில்லை. அவர் மறைவையொட்டி வந்த செய்தியொன்றைக் கீழே தந்து மேலும் தொடர்கிறேன். - வன்னியன் -

போராட்டத்தின் பதிவுகளைத் தனது எழுத்து, பேச்சு, ஒவியம், சிற்பம் போன்றவற்றால் வெளிப்படுத்தியவர் கவிஞர் நாவண்ணன்.
தமிழன் சிந்திய இரத்தம்,
கரும்புலி காவியம்,
இனிமைத் தமிழ் எமது,
ஈரமுது

உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கினார். அரங்காற்றுகையிலும் தனக்கென தனியிடத்தைப் பிடித்து கொண்டவர். நாவண்ணனால் தயாரிக்கப்பட்ட "வலியும் பழியும்" என்ற நாடகம் முக்கியமானதாக கருதப்படுகின்றது. புலிகளின் குரலில் தயாரித்த கரும்புலிகள் காவியத்தை நூலாக வெளியிட்ட அதே வேளை பல்வேறு நூல்களையும் வெளியிட்டார். அதே போல் ஓவியம், சிற்பம் ஆகியவற்றை வெளிப்படுத்திய அவர் இறுதிக்காலத்தில் ஒளிக்கலையிலும் செலவிட்டார். தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களால் இரண்டு தடவைகள் தங்கப்பதக்கம் வழங்கி மதிப்பளிக்கப்பட்டார். 1998 ஆம் ஆண்டு புலிகளின் குரலில் சிறப்பாகச் செயற்பட்டமைக்காகவும், அதன் பின்னர் கரும்புலி காவியம் நூல் உருவாக்கம், கலை இலக்கியம் போன்ற செயற்பாடுகளுக்காக இரண்டாவது தடவையும் கெளரவிக்கப்பட்டார்.

செய்தி: புலிகளின் குரல்

லெப்.மாலதியின் உருவச்சிலை வடிவமைப்புக்காக தளபதி கேணல் ஜெயம் அவரிகளிடம் பரிசு வாங்கும் கலைஞர் நாவண்ணன்.

கவிஞர் நாவண்ணனின் இலக்கியப்பணி நீண்டது. உண்மையில் அவரைக் கவிஞர் என்றுமட்டும் சொல்வதிலும்பார்க்க, பல்துறைக் கலைஞரென்றே சொல்லவேண்டும். அவ்வளவுக்கு பலதுறைகளில் ஈடுபாட்டுடன் உழைத்த மனிதர். 1985 ஆம் ஆண்டு சிங்கள அரசபடையாற் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட வங்காலைக் குருவானவர் அருட்திரு மேரிபஸ்ரியன் அடிகளார் பற்றிய நூலான "தீபங்கள் எரிகின்றன" என்ற நூலின் மூலம்தான் எனக்கு நாவண்ணன் அறிமுகமானார்.
பின் "புலிகளின் குரல்" வானொலியிற் பணியாற்றிய காலத்தில் மிக வீச்சுடன் செயலாற்றினார். மிக அருமையான தாயகப்பாடல்களை எழுதியுள்ளார்.

"தமிழன் சிந்திய இரத்தம்" என்ற தொடர் ஈழத்தவர்களின் அவலங்களை ஆவணப்படுத்திய முக்கிய நிகழ்ச்சி. இதுவரை ஆவணப்படுத்தப்பட்டவற்றில் முக்கியமானது இத்தொகுப்புத்தானென்பேன். தனியே ஓர் இனப்படுகொலையையோ அல்லது ஒட்டுமொத்தமானவற்றையோ திரட்டிப் புள்ளிவிரவரங்களோடு தொகுப்பட்டவற்றைத்தாண்டி, தனிமனிதர்களின் அவலங்களை அவர்களின் குரலிலேயே ஆவணப்படுத்தியதும், போர் உக்கிரமடைந்தபின்னும் தனிமனிதர்கள் மேல் நடத்தப்பட்ட கொடுமைகளின் சாட்சியத்தைப் பேணியதும் இந்நிகழ்ச்சியின் முக்கிய அம்சம்.

"மட்டக்களப்பில் குடும்பத்தோடு சேர்த்து வீடு கொழுத்தப்பட்டபோது சிறுவயதில் தப்பிய ஒருவன், தன் குடும்பம் முழுவதுமே அதில் கொல்லப்பட்டதாக நினைத்திருந்தவன், மணலாற்றுச்சண்டையில் தன் சகோதரியைப் போராளியாகவே சந்தித்த சம்பவங்கள் (இதன்மூலம் தமிழ்ச்சினிமாவின் சில சம்பவங்கள் சாத்தியமுள்ளவையென்று நம்பத்தலைப்பட்டவன் நான்) உட்பட ஏராளமானவற்றை ஆவணப்படுத்தியவர் நாவண்ணன். உண்மையில் கிழக்கு மக்களின் அவலங்களும் போராட்டப் பங்களிப்பும் வடக்கோடு ஒரேதளத்தில் வைத்துப் பார்க்க முடியாதென்ற தெளிவை எனக்குமட்டுமன்றி நிறையப் பேருக்குத் தந்தது அந்நிகழ்ச்சி. எல்லைப்புறத் தமிழர்கள்மேல் நடத்தப்பட்ட வன்முறைகளும் இடங்களைப் பறிகொடுத்து அவர்கள் வெளியேறியதும் பலர் வெளியேறாமலே வீம்பாக இருந்து மாண்டதும் உட்பட எல்லைப்புறத் தமிழர்களின் சிலபாடுகளையாவது வெளிக்கொணர்ந்த தொகுப்பு அது.

ஏற்கனவே 'தமிழன் சிந்திய இரத்தம்' என்ற பெயரில் கவிஞர் நாவண்ணன் புத்தகமொன்று வெளியிட்டிருந்தார். அதில் ஆயுதப்போராட்டம் வீரியமடைய முந்திய காலப்படுகொலைகளை ஆவணப்படுத்தியிருந்தார். பின் அதே பெயரில் ஒலிவடிவில் அவர் தொகுத்த தொகுப்புத்தான் புலிகளின் குரல் வானொலி நிகழ்ச்சி. இதுவரை அது புத்தகமாக வரவில்லையென்று நினைக்கிறேன். விரைவில் வரவேண்டும். அனாலும் பாதிக்கப்பட்டவர்களின் நேரடிக்குரற் சாடசியங்களடங்கிய ஒலிப்பேழையும் வெளியிடப்பட வேண்டுமென்று விரும்புகிறேன்.

அதைவிட 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற மடுத்தேவாலயப் படுகொலை பற்றியும் அவரொரு சிறந்த தொகுப்பைச் செய்திருந்தார். கையெழுத்துப்பிரதியாக இரண்டொரு பக்கங்கள் வாசித்தேன். அது இன்றுவரை வெளிவரவில்லை. வெளிவராததற்கு இருக்கும் காரணம் நியாயமானது, என்றாலும் ஒருநாள் வெளியிடப்படுவதற்காகவேனும் அவர் தொகுத்துவைத்த அப்புத்தகத்துக்காக அவருக்கு நன்றி.

கரும்புலி காவியம் என்ற பெரும்பணியைச் செய்ய முடிவெடுத்தபின் அதற்கான தரவுகளுக்காக வன்னியின் மூலைமுடுக்கெங்கும் புழுதி குடித்து அலைந்த கவிஞரின் பாடுகளை நன்கு அறிவேன். இவையெல்லாமே காசு கிடைக்காத தொழில்கள். அவரது அலைச்சலுக்கோ அந்தக் காவியத்துக்கோ ஊதியமேதுமில்லை. வரலாற்றை ஆவணப்படுத்தும் திருப்தியைத் தவிர வேறொன்றுமில்லை.

நாவண்ணனின் பாடல்கள் எனக்கு மிகப்பிடித்தமானவை. வவுனிக்குளத் தேவாலயப் படுகொலையை நினைந்து உடனடியாகவே அவர் இயற்றி, திருமலைச் சந்திரன் பாடிய பாடலைக் கேட்டு உருகாதவர் யாருமிருக்க முடியுமா?

"கன்னங்கள் தாங்கிய காலங்கள் போதும். -எம்
சன்னங்கள் வென்றிட உம்தயை தாரும்."
(அதைத் தேடிப்பார்த்தேன். வலையிலும் இல்லை. என்னிடமிருக்கும் தொகுப்பிலுமில்லை.)

கவிஞர் நாவண்ணனின் "அக்கினிக் கரங்கள்" என்ற நூல் 01.03.2006 அன்று கிளிநொச்சியில் வெளியிடப்பட்டது. இதுதான் அவரின் கடைசி நூலென்று நினைக்கிறேன்.

சூசைநாயகம் என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர் நாவண்ணனுக்கு ஆறு பிள்ளைகள். ஐந்துபேர் பெண்கள். அவரின் ஒரேமகன் சூசைநாயகம் கிங்சிலி உதயன் (2ஆம் லெப்.கவியழகன்) களத்திலே வீரச்சாவடைந்துவிட்டார்.
*******************


"ஊர் கொடுத்தார் புலவருக்கு
உவந்தளித்தார் மிடி தீர
தேர் கொடுத்தார், திருக் கொடுத்தார்,
தெரு வெல்லாம் பவனி வர;
கார் நிறத்துக் கரி கொடுத்தார்;
காற்று விசைப் பரி கொடுத்தார்"
என்று வியந்து தொடங்குகிறது அவரது "கரும்புலி காவியம்".

"காவியமாய் புதுப் புறம்பாடி" எம்
காலத்து வரலாற்றை நான் பொறிக்க வேண்டும்
சீவியத்தை மண் மீட்கத் தந்து - சென்ற
செங்களத்து மறவருக்குச் சமர்ப்பிக்க வேண்டும்"

என்ற அவரது கனவு முழுதாக நிறைவேறாமலேயே சென்றுவிட்டார்.


கவிஞர் நாவண்ணன் அவர்களின் கவிதையொன்று.
(நன்றி நூலகம்)

இவனா என் பிள்ளை!

அம்புலியைக் காட்டி ஆவென்ன வைத்து
"அச்சாப் பிள்ளை "யென "ஆய்தந்த பிள்ளை"
கம்பால் அடித்து கண்டித்து பின்னர்
கண்­ர் துடைத்து அணைத்திட்ட பிள்ளை;
"வம்புக்குப் போகாதே வலுச்சண்டை செய்யாதே
வாய்காட்டாதே" யென்று வளர்த்திட்ட பிள்ளை;
பெம்பகைவர் படைஅழிக்கும் வீரனாம் எனக்கேட்டு
வியக்கின்றேன் இன்று, இவனா என் பிள்ளை!

இருட்டுக்கு அஞ்சியவன் இரவானால் தனியாக
இருப்பதற்கு துணைகேட்ட பயங்கொள்ளிப் பிள்ளை
விரட்டிக் கலைத்தாலும் விட்டகலாம் தாய்சேலை
வீம்போடு அவளோடு அலைகின்ற பிள்ளை;
பரட்டைத் தலைவான் படிப்புக்கு ஒளித்திடுவான்
பசியின்றி விளையாடித் திரிகின்ற பிள்ளை;
முரட்டுத் துவக்கோடு 'சென்றி'யிலே நின்று
முழிக்கின்றான் இன்று இவனா என்பிள்ளை!

விதம்விதமாய் சமைத்து விருப்பு சுவையறிந்து
வேலைக்குக் கொடுத்தாலும் " இது என்ன
இதம்இல்லை வேண்டாம் எனக்கு" என்றுகூறி
எடுத்தெறிந் தெழுகின்ற என்பிள்ளை.
பதம்பாகம் இல்லாது பசிக்கே உணவென்று
படையலாய் அவித்த எதையேனும்
நிதம் உண்கின்றானாம் நிம்மதியாம் அவனுக்கு
நினைக்கின்றேன் இன்று, இவனா என்பிள்ளை!

நாய் குரைக்க ஓடிவந்து நடுங்கிப் பதறியவன்
நாலுபேர் முன்நிற்க துணிவில்லாக் கோழை
தாய்க்கும் எனக்கும் நடுவினிலே துயிலுவதே
தனக்குச் சுகம் என்று எண்ணியவன் இரவில்
பாய் நனைப்பான், எழப்பயந்து படுப்பான் எழுப்பாது;
பட்டாசு வெடிக்கே பலகாதம் ஓடுபவன்
தாய்நாடு காக்கும் தானையிலே முன்னணியில்
திகழ்கின்றான் இன்று இவனா என்பிள்ளை?

இப்படியாய் மற்றவர்கள் இகழ்ந்துரைக்கும் குணங்களுடன்
இளப்பமாய் வாழ்ந்திட்ட என்னுடைய பிள்ளை
தப்படிகள் இல்லாது தக்கபடிதான் வளர்த்த
தத்துவத்தை வியக்கின்றேன் இவனா என்பிள்ளை!
எப்படித்தான் இவனுக்குள் இதுவெல்லாம் தோன்றியதோ?
இவர்சார்ந்த இடமே காரணமாம் என்றார்;
அப்படியாய் புதுமாற்றம் அடைந்த அவனுக்கு
அப்பன் நானன்றோ? அவனே என்பிள்ளை!


Quelle - வன்னியன் பூராயம்