வடமராட்சியின் இசை, நாடக கூத்து பற்றிய சில சுருக்கக் குறிப்புகள்
-தாவீது கிறிஸ்ரோ-
`ஈச்சம் பத்தையுக்கை கூத்துப்பாத்த மாதிரி' என ஒரு பழமொழி யாழ்ப்பாணத்தில் வழங்கி வருகிறது. குறிப்பாக, யாழ்நகரைச் சுற்றியுள்ள, நகர்ப்புறங்களைத் தவிர்த்து, கிராமப்புறங்களில் இக் கூற்று பெரும்பாலும் பாவிக்கப்படுவதுண்டு. கூத்துகள் எனப்படுபவை வடமோடி, தென்மோடி, மன்னார்பாங்கு, காத்தான் கூத்து என பல்வகைத்தனவாக இருந்தாலும் குறிப்பாக, நகர்ப்புறம் சார்ந்தே தென்மோடி, வடமோடி கூத்துகள் அண்ணாவிமார்களால் அரங்கேற்றப்பட்டன. பூந்தான் யோசப் முதல் அண்ணாவி டானியல்வரை குருநகர், பாஷையூர், நாவாந்துறைவரை ஏராளம் அண்ணாவிமார்கள் பல்வேறு கூத்துகளை பழக்கி மேடையேற்றி உள்ளனர். கத்தோலிக்க கூத்துகளில் செபஸ்தியார், ஞானசௌந்தரி, அனற்ரோலி சரிதம் என்பன முக்கியமானவை. அரிச்சந்திரா, நல்லதங்காள், பூதத்தம்பி, கண்டி அரசன் என்பன பிறிதொரு வகைக்குள் அடங்கும். கத்தோலிக்க அண்ணாவிமார்களே இத்தகைய பிறமதக் கூத்துகளைப் பழக்கியுள்ளமை ஒரு முக்கிய செய்தியாகும்.
யாழ்ப்பாணத்தின் வடமராட்சி, தென்மராட்சிப் பகுதிகளில் வடமோடி, தென்மோடிக் கூத்துகளை விட காத்தான் கூத்துகளே அடிக்கடி நிகழ்த்தப்பட்டு வந்துள்ளன. அதிலும் விசேடமாக, வடமராட்சிப் பகுதியில் காத்தான் கூத்து பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் பல அண்ணாவிமார்களால் பல்வேறு இடங்களில் பழக்கப்பட்டு, நிகழ்த்தப்பட்டு வந்திருக்கின்றன.
வடமராட்சியில் நெல்லண்டைப் பத்திரகாளி அம்மன் கோவில் ஒரு விதத்தில் பிரசித்தமானது. `இத்திமரத்தாள்' என அழைக்கப்படும் இந்த அம்மனுக்கு நேர்த்தி வைக்கும் பக்தர்கள் கூத்து அல்லது இசை,நாடகம் ஒன்றை மேடையிடுவதாகவே நேர்த்தி வைப்பார்கள். கூத்து அல்லது இசை நாடகம் மேடையேற்றப்படும் தினத்தில் சம்பந்தப்பட்டவர்களது பிரசன்னமில்லாமலே அவை மேடையேறும். நெல்லண்டையில் பங்குனி,சித்திரை, வைகாசி மாதங்களில் பல நாட்கள் கூத்துகளும் நாடகங்களும் தொடர்ச்சியாக நடைபெறும். சிவாலிங்கத்தின் சீன்,ஜெயா லைற்று மிசின் என்பன நெல்லண்டையில் நிரந்தரமாக இம் மாதங்களில் தங்கி விடுவதும் உண்டு.
வடமராட்சிக்கு இன்னொருவிதத்தில் பெருமைப்படக்கூடிய விதத்தில் கிருஷ்ணாழ்வாரின் பங்களிப்பு முக்கியமானது.இசை நாடகத்துறையில் இவரது பங்களிப்பு பற்றி பலர் விதந்து பாராட்டியுள்ளனர். காங்கேசன்துறையைச் சேர்ந்த வி.வி.வைரமுத்துவின் புகுந்த ஊர் வடமராட்சியைச் சேர்ந்த அல்வாய் என்றமையால் வடமராட்சியில் வைரமுத்துவின் நாடகங்கள் நிறைய மேடையேற்றப்பட்டது மட்டுமல்ல, அவரது நாடகங்களில் வடமராட்சியைச் சேர்ந்த நற்குணம், பபூன் செல்லையா, சின்னத்துரை போன்றவர்கள் முக்கிய பாத்திரங்களில் நடித்தமையும் ஒரு சிறப்பான நிலையாகும்.
வைரமுத்துவின் நாடகங்கள் மேடையேறுகின்ற காலங்களில் வி.என். செல்வராசா சகோதரர்களின் இசை நாடகங்களும் மேடையேற்றப்பட்டாலும் வைரமுத்துவின் `மயான காண்டம்' நாடகம் மட்டும் பெரும் வரவேற்பைப் பெற்றமை பற்றி நாம் சிந்திக்க வேண்டும். அரிச்சந்திரன் என்றால் வைரமுத்து - சத்தியகீர்த்தியென்றால் நற்குணம் - காலகண்டஐயரென்றால் சின்னத்துரை என ஒரு அடையாளம் நடிகர்கள் மேல் ரசிகர்களால் சுமத்தப்பட்டது. இதேபோல், சந்திரமதி - இரத்தினம், எமன் - மார்க்கண்டு (சத்தியவான் சாவித்திரி) என அடையாளங்கள் அக்கால நடிகர்களுக்கு சூட்டப்பட்டிருந்தன.
வடமராட்சியில் காத்தான் கூத்து உழைப்பாளர்களினால் மட்டும் மேடையிடப்பட்டமையை அவதானிக்க வேண்டியுள்ளது. மாதனையைச் சேர்ந்த கம்மாளரும், கற்கோவளம் பொலிகண்டியைச் சேர்ந்த மீனவரும் வடமராட்சி சீவல் தொழிலாளர்களும் காத்தான் கூத்துகளை தொடர்ச்சியாக ஆடி வந்துள்ளனர். காத்தான் கூத்தில் பல பின் நவீனத்துவ கூறுகளை நாம் அவதானிக்க முடியும். மரபு வழியாக கட்டமைத்து வைத்திருக்கும் சிவன், பார்வதி, விஷ்ணுவை நையாண்டல் செய்யும் பல பாடல்கள் காத்தான் கூத்தில் அமைந்துள்ளன. தொட்டியத்து சின்னான், டாப்பர் மாமா போன்ற பாத்திரங்கள் வாயிலாக இவை அம்பலப்படுத்தப்படுகின்றன. பாடல்கள் இடையிட்ட வசனங்கள் கூட பேச்சு வழக்கில் அமைந்துள்ளமையை அவதானிக்க முடியும்.
ஸ்ரீவள்ளி - நல்லதங்காள், பூதத்தம்பி, சாரங்கதாரா என பல இசை நாடகங்கள் அக் காலத்தில் மேடையேறின. பூதத்தம்பி, கருங்குயில் குன்றத்துக் கொலையென்றும், காத்தவராயன் ஆரியமாலா என்றும் மேடையேற்றப்பட்டன. அதேபோல், அரிச்சந்திரா, மயானத்தில் மன்னன் என்றும் மேடையேற்றப்பட்டது. விடியவிடிய சம்பூர்ண அரிச்சந்திரா என்றும் சுருக்கமாக மயான காண்டம் என்றும் மேடையேற்றப்பட்டன.
மேடையில் ஒரே நாடகத்தில் பல நாடகங்களின் காட்சிகளை இணைத்து அளிக்கை செய்யப்பட்டதும் உண்டு. வடமராட்சியில் அண்ணாச்சாமி வாத்தியாரின் நாடகங்கள் பிரசித்தி பெற்றிருந்தன. அண்ணாச்சாமியிடம் ஓவியத்திறமையும் இருந்தமையால் அவரது சீன்களும் அவரது நாடகங்களும் பயன்பட்டன. மின்சாரம், ஒலிபெருக்கி இல்லாமல் பெற்றோல் மாக்ஸ் வெளிச்சத்தில் இந் நாடகங்கள் கிராமப்புறங்களில் மேடையேற்றப்பட்டன. தங்களுக்குத் தாங்களே ஒப்பனை செய்வதிலும் இந் நடிகர்கள் திறமை பெற்றிருந்தனர்.
ஸ்ரீவள்ளி நாடகம் ஒன்றில் பார்வையாளர்கள் மத்தியில் இருந்த கைக்குழந்தை ஒன்றைப் பெற்று மேடையில் வள்ளியாக நடிகர்கள் பாவனை செய்தார்கள். அந்த ஆண் குழந்தை வயது வந்து பெரியவனாக மாறிய பின்னும் வள்ளியென அழைக்கப்படும் விபரீதமும் வடமராட்சியில் நிகழ்ந்துள்ளது.
ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த நடிகர்களை பாராட்டுவதற்காக அவர்கள் பாத்திரமாக ஒப்பனை செய்து மேடையில் தோன்றியவுடன் மாலை அணிவித்து பொன் முடிச்சுக் கொடுக்கும் `அகோனா' எனும் கௌரவ நிகழ்ச்சிகள் அக் காலத்தில் அடிக்கடி மேடைகளில் நிகழ்ந்துள்ளன. இன்று கூத்துகளோ, நாடகங்களோ மேடையேற்றப்படாமையால் இப்படியான நிகழ்வுகளும் அருகிப் போய் விட்டன.
1960 களில் `புழுதிக் கூத்து' எனும் ஒருவகைக் கூத்து வடமராட்சியில் நிகழ்த்தப்பட்டமை பற்றி வயதானவர்கள் சிலர் மூலம் அறியக் கிடைத்தது. 60 களின் ஆரம்பத்தில் `மாயக்கை' எனும் கிராமத்தில் இவ் வகையான `குசலவன்' எனும் கூத்தைப் பார்க்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. நிலத்தில் நான்கு கம்புகள் கட்டி ஒரு வெள்ளை வேட்டியின் மறைப்பில் அண்ணாவியாரோடும் மத்தளக்காரரோடும் நாடக பாத்திரங்கள் தோன்றி பாடி ஆடும் ஒருவகை கூத்தாக அது விளங்கியது. இதற்கு `புழுதிக்கூத்து' எனும் பெயர் பொருத்தமானது தான். ஆயினும் இதன் உண்மைப் பெயரென்ன? என்பதை நாடக விற்பன்னர்கள் தான் விளக்கமாக எழுத வேண்டும். பாத்திரங்களின் உடைகள், ஆட்ட முறைகள் எல்லாமே ஒரு வித்தியாசமான முறையில் இருந்தமையையும் கரப்பு கட்டிய உடைகளுடன் அவர்கள் தோன்றியமையும் இங்கு விசேடமாகக் குறிப்பிட வேண்டும்.
வடமராட்சியின் கத்தோலிக்கக் கிராமங்களில் கோவில் திருநாள் இறுதி நாட்களில் கத்தோலிக்கக் கூத்துகள் மேடையேற்றப்படுவது வழமை. சக்கோட்டை புனித சவேரியார் ஆலயம் - தும்பளை லூர்து அன்னை தேவாலயம் போன்றவற்றில் செபஸ்தியார், பூதத்தம்பி போன்ற கூத்துகள் ஆடப்பட்டன. இக்கூத்துகள் ஆடப்பட்டவை என்பதை விட பாடப்பட்டன என்பதுவே பொருத்தமாகும். மன்னார்பாங்கில் அமைந்ததாகக் கூறப்படும் இக்கூத்துகளில் பக்கப் பாட்டுக் காரர்களின் குரலே ஓங்கி ஒலிப்பதும் `பசாம்' எனப்படும் யேசுவின் பாடுகளை வாசிக்கும் இராகத்தில் கூடுதலாக இக்கூத்துப் பாடல்கள் பாடப்படுவதும் ஒரு வித்தியாசமான விடயம். காத்தான் கூத்துகளில் வரும் சிந்துநடையை ஒத்தாக இம்மன்னார்ப்பாங்குக் கூத்துப் பாத்திரங்கள் மேடையில் நடந்தும் பாடியும் நடிப்பது முக்கியமானதாகும். ஆயினும், இவ்வகை நாடகங்களின் அளிக்கைககள் மிகக் குறைவு. காத்தான் கூத்தின் ஆதிக்கமே வடமராட்சியில் மிகக் கோலோச்சியமையை நாம் அவதானிக்க வேண்டும். 1967 ஆம் ஆண்டு மாவிட்டபுரம் ஆலயப்பிரவேச காலத்தில் உருவாகிய அம்பலத்தாடிகளின் `கந்தன் கருணை' ,காத்தான் கூத்துப் பாணியில் அமைந்தமை ஒன்றும் தற்செயலான விடயமல்ல. வடமராட்சி மக்களுக்கு மிகவும் வாலாயமான ஒரு பாணியை அம்பலத்தாடிகள் தேர்ந்தமையும் அண்ணாவியார் கணபதிப்பிள்ளையின் ஆளுமையும் இதற்கொரு காரணம். மக்கள் இலக்கியம், மக்களுக்கான இலக்கியம் பற்றிப் பேசும் அல்லது எழுதும் படைப்பாளிகள் மக்களின் மொழியை மக்களுக்குப் புரியும் விதத்தில் கொடுப்பதன் மூலம் அவர்களை ஈர்க்க முடியும் என்பதற்கு கந்தன் கருணை ஒரு முக்கிய உதாரணம். கந்தன் கருணை வடமராட்சியில் மட்டுமல்ல, திருகோணமலை, கொழும்பு மற்றும் வடபுலத்தின் பல பகுதிகளிலும் மேடையேற்றப்பட்டு வரவேற்கப்பட்டமையும் ஈண்டு குறிப்பிடல் வேணடும். பின்னர் கந்தன் கருணை தாசிசீயஸ், சுந்தரலிங்கம் போன்றவர்களால் வேறொரு விதத்தில் மேடையேற்றப்பட்ட போதும் அம்பலத்தாடிகளின் கந்தன் கருணை பெற்ற வரவேற்பையும் பலனையும் பெற முடியவில்லை.
ஒரு விதத்தில் நாடக - கூத்து ரசிகன் என்ற வகையில் சில தகவல்களை இக்கட்டுரையில் நான் கோடிட்டுக் காட்டியுள்ளேன். வடமராட்சியின் கலைப் பாரம்பரியம் பற்றி ஆராயும் ஆராய்ச்சி மாணவர்கள், நாடக வித்தகர்கள், நாடகமும் அரங்கியலும் கற்றவர்கள் இவை பற்றி விரிவாக ஆராய வேண்டும், எழுத வேண்டும் என்பதுவே எனது விருப்பம். எழுதுங்கள் எமது கலைப் பாரம்பரியத்தை இதன் மூலமாக நாமறிவதனூடாக உலகமும் அறியவரட்டும்.
Quelle: ஞாயிறு தினக்குரல் Sunday, September 10, 2006
Sunday, September 17, 2006
Subscribe to:
Posts (Atom)