Sunday, March 19, 2006

ஆகாய விமானமும்... தையல் எந்திரமும்...! - 1

கண்டுபிடித்தவர்களின் கதை _ உதயபிரபா _

நடுக்கடலில் காணாமல் போனவர்!

அந்த படகு பெல்ஜியத்திலிருந்து இங்கிலாந்து நோக்கிக் சென்று கொண்டிருந்தது. அதில் ஓர் உலகப் புகழ்பெற்ற மனிதர் இருந்தனாலோ, என்னவோ, அந்த பெரிய படகும் கர்வத்தோடே சென்றுகொண்டிருந்தது. அந்த மனிதர் ருடால்ஃப் டீசல். அவருடைய நண்பர்கள் சிலரும், வியாபார கூட்டாளிகள் சிலரும் அவருடன் பயணம் செய்துகொண்டிருந்தார்கள். இரவு பத்து மணி ஆகும் வரை அவர்களோடு சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார் டீசல். பிறகு 'நாளை காலையில் பார்ப்போம்!' என்று சொல்லிவிட்டு எழுந்துகொண்டார். அனைவரும் கைக்குலுக்கி விட்டு தங்கள் அறைகளுக்குச் சென்றார்கள்.

மறுநாள் காலையில் ருடால்ஃப் டீசலைக் காணவில்லை. அவர் கைகடிகாரம், சூட்கேஸ் ஆகியவை மட்டும் அறையில் இருந்தன. நடுக்கடலில் டீசல் காணாமல் போய்விட்டார்.

பிரான்சில் வசித்த ஜெர்மானிய பெற்றோருக்குப் பிறந்த ருடால்ஃப் டீசல் 12 வயதான போது குடும்பத்துடன் லண்டனுக்கு வந்துவிட்டார். அங்கே சில நாட்கள் இருந்த பிறகு பவேரியாவுக்கு குடும்பம் இடம் பெயர்ந்தது. அங்கே தான் பள்ளிப்படிப்பு.

1878_-ஆம் ஆண்டில் ஒரு நாள் நீராவி எஞ்சின் பற்றி அவரது ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். "எரிபொருள் எரிக்கப்படும் போது உருவாகும் வெப்பத்தில் ஆறிலிருந்து ஏழு சதவீதம் மட்டுமே ஆற்றலாக மாறுகிறது" என்று நீராவி எஞ்சின் பற்றி குறைப்பட்டுக் கொண்டார் அவர். அது மட்டுமல்லாமல் பிரான்ஸ் நாட்டு இயற்பியல் அறிஞர் கார்னாட் (நீணீக்ஷீஸீஷீt) என்பவர் சொன்ன எல்லா வெப்பமும் ஆற்றலாக மாறுதல் அடையும் என்ஜின் பற்றிய தியரியையும் விளக்கினார். கேட்டுக்கொண்டிருந்த ருடால்ஃப் தன் நோட்டின் ஒரு ஓரத்தில் "இந்த எஞ்சினை நான் கண்டு பிடிப்பேன்!" என்று எழுதி வைத்துக் கொண்டான்.

ஆனால் அதை உருவாக்க அவர் பதினைந்து ஆண்டுகள் போராட வேண்டிருந்தது. உண்மையில் விஷயம் மிகவும் ஸிம்பிளானது. எஞ்சினின் சிலிண்டரில் வெப்பநிலையை ஒரே சீராக வைத்தால் உருவாகும் வெப்பம் அனைத்தும் ஆற்றலாக மாறிவிடும். ஆனால் அதைச் செய்வது எப்படி?

"படிப்பை விட்டுவிட்டு பிழைப்புக்காக வேலைகள் செய்ய வந்துவிட்டேன். ஆனால் இந்த எஞ்சின் பற்றிய ஐடியா என்னைத் துரத்திக் கொண்டே இருந்தது" என்று நினைவு கூர்கிறார் டீசல்.

இதுபற்றி ஆராய்ச்சி செய்து மூளையை உடைத்து ஒரு சிறிய புத்தகத்தை வெளியிட்டார் டீசல். அதில் இந்த எஞ்சின் செய்வது பற்றிச் சொன்ன அவர்... அதற்கான காப்புரிமையை முதல் ஆளாக வாங்கிக் பத்திரப்படுத்திக் கொண்டார். அந்த அளவுக்கு புத்திசாலியாக இருந்தார் அவர். இந்த புத்தகம் வெளிவந்த உடனே எந்திரங்களின் உலகம் அவரை ஒரே நாளில் அறிந்துகொண்டது. பெரிய பெரிய கம்பெனிகள் இவரது ஐடியாவை பரிசோதிக்க முன்வந்தன. நான்கு ஆண்டுகள் உழைப்புக்குப் பிறகு முதல் டீசல் என்சின் உருவாகிவிட்டது.

எரிபொருள் எரிக்கப்படும் போது உருவாகும் எல்லா வெப்பத்தையும் ஆற்றலாக மாற்ற வேண்டும் என்ற கார்னாட்தியரியை டீசலால் முழுமையாக நடைமுறைப்படுத்த முடியவில்லை. ஆனால் அவர் உருவாக்கிய எஞ்சின் அப்போது உபயோகத்தில் இருந்த பெட்ரோல் எஞ்சின்களை விட, அதிகப்படியான ஆற்றலைக் கொண்டதாக இருந்தது.

இந்த எஞ்சினின் சிலிண்டரில் அடைபடும் காற்று, எரிபொருளாகப் பயன்படும் எண்ணெயை எரிக்கும் அளவுக்கு அழுத்தத்தின் மூலம் சூடாக்கப்படுகிறது. அதாவது... பிஸ்டன் காற்றை அழுத்துவதன் மூலம் அதன் வெப்பத்தை உயர்த்துகிறது. வெப்பம் உயர்ந்த பிறகு எண்ணெய் சிலிண்டருக்குள் வழிய விடப்படுகிறது. உடனே 'குப்'பென்று பற்றிக் கொண்டு வெடிக்கிறது பிஸ்டன் வேகமான இயக்கப்படுகிறது. இதுதான் டீசல் கண்டுபிடித்த எஞ்சினின் தத்துவம்.

-இதில் பெட்ரோலை விட அடர்த்தியான அவ்வளவாக சுத்தம் செய்யப்படாத எண்ணெய் பயன்படுத்தலாம் என்பது அட்வான்டேஜ். இந்த எண்ணெய் தான் இப்போது 'டீசல்' என்று அவர் பெயரிலேயே அழைக்கப்படுகிறது. இந்த எஞ்சினுக்கும் டீசல் எஞ்சின் என்றே பெயர் வந்து விட்டது.
இந்த எஞ்சினில் 35 சதவீத வெப்பம் ஆற்றலாக மாற்றப்பட்டது. பெட்ரோல் எஞ்சினில் இது 28 சதவீதம் மட்டுமே... நீராவி எஞ்சினிலோ வெறும் 12 சதவீதமாக இருந்தது. அப்புறமென்ன டீசலின் வெற்றிக்கு கேட்கவா வேண்டும்? இன்றைக்கும சாலைப் போக்குவரத்தில் டீசல் எஞ்சினை மிஞ்ச எதுவுமேயில்லை.

டீசலின் இந்த எஞ்சினை எந்திர உலகம் இருகைகளையும் அகல விரித்து வரவேற்றது. இருந்தாலும் அவருக்கு எதிரிகளும் இல்லாமல் இல்லை. ஹெர்பெர்ட் அக்ராய்ட்_ஸ்டுவர்ட் என்கிற ஆங்கிலேய கண்டுபிடிப்பாளர் டீசல் கண்டுபிடித்த இயந்திரம் போலவே ஒன்றை உருவாக்கியிருந்ததைச் சுட்டிக் காட்டி பிரச்சாரம் செய்தார்கள். ஆனால் டீசலின் பெயர்தான் நிலைத்தது. பெயர் சுருக்கமான வாயில் நுழைகிற மாதிரி இருந்ததாலோ என்னவோ..?

டீசலின் இந்த வெற்றி அவரை வாழ்வின் உச்சகட்ட அந்தஸ்துக்குக் கொண்டுபோனது. பல நாடுகளில் வசித்திருந்ததால் உருவான பரந்துபட்ட அனுபவ அறிவு, பல மொழிகள் பேசும் திறன் ஆகியவையும் அவருக்குக் கைகொடுத்தன. ம்யூனிச் நகரில் அவர் ஆரம்பித்த கம்பெனிக்கு உலகம் முழுவதும் பல கிளைகள். கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் உலகம் அவரை மிகப் பெரிய அறிவுஜீவியாகக் கொண்டாடியது. அந்த நிலையில் தான் அவர் 1913_ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திடீரென்று நடுக்கடலில் காணாமல் போனார்.

டீசல் காணாமல் போன மர்மம் பரபரப்பான செய்தியாக ஐரோப்பா முழுவதும் பேசப்பட்டது. படகிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கேள்விக்கு... இவ்வளவு புகழின் உச்சியில், எல்லாவற்றையும் பெற்று அனுபவித்துக் கொண்டிருக்கும் போது ஒருவர் தற்கொலை செய்து கொண்டிருப்பாரா என்றே பதில் வந்தது. அவரை யாரோ கொன்றிருக்கக் கூடும் என்று சந்தேகப்பட்டார்கள். அவர் படகிலிருந்து தவறி தண்ணீரில் விழுந்திருக்கலாம், அல்லது வேண்டுமென்றே தலைமறைவாகியிருக்கலாம் என்று பலப்பல யூகங்கள் ஆனாலும் மர்மம் சுத்தமாக விலகவில்லை.

அவர் காணாமல் போன நான்கு நாட்கள் கழித்து ம்யூனிச் நகரில் அவரைத் காணாத கவலையில் ஆழ்ந்திருந்த அவரது குடும்பத்தினருக்கு ஒரு தந்தி வந்தது. 'டீசல் லண்டனில் இருக்கிறார்' என்று அவர் கம்பெனி பெயரில் வந்தது அந்த தந்தி. அலறியடித்துக் கொண்டு லண்டன் முழுக்க சல்லடை போட்டுக் தேடினார்கள். ஆனால் அவர் கிடைக்கவில்லை. அத்துடன் யார் தந்தியை அனுப்பியது என்றும் தெரியவில்லை.

இரண்டொரு நாள் கழித்து ஹாலந்து நாட்டுக் கடற்கரையில் ஒரு சடலம் கரையதுங்கியது. அதைக் கண்ட மீனவர்கள் அச்சடலத்தின் சட்டைப்பாக்கெட்டுகளைத் துழாவி அதிலிருந்த பொருட்களை எடுத்துக் கொண்டு, சடலத்தை மீண்டும் கடலுக்குள்ளேயே போட்டுவிட்டார்கள். இந்த பொருட்கள் டீசலின் மகனுக்கு அனுப்பப்பட்டன. அவையெல்லாம் தன் தந்தையுடையவைதான் என்று அவர் உணர்ந்து கொண்டார். ஆனால் ஏன் தந்தை இப்படி இறந்தார் என்று அவருக்கும் புரியவில்லை. மற்றவர்களுக்கும் புரியவில்லை. அது புரிய மேலும் சில நாட்கள் ஆயின. டீசலின் வங்கி பேலன்ஸ் மற்றவர்கள் நினைத்திருந்த மாதிரியில்லை. அது அதலபாதளத்தில் இருந்தது. ஏகப்பட்ட கடன்கள்.. தவறான முதலீடுகள்.. கிட்டத்தட்ட கழுத்தை நெரித்து விழிபிதுங்கும் நிலையில் இருந்திருக்கிறார் டீசல்.

இது வெளியுலகுக்குத் தெரிந்து, அவமானம் ஏற்படுவதைத் தவிர்க்க விரும்பியதால்தான் ருடால்ஃப் டீசல் கடலில் குதித்து தற்கொலை செய்திருக்கிறார். அவர் செய்தது தற்கொலையைதான் என்பதற்கு அவரது பாக்கெட் டைரியில் அவர் காணாமல் போனதினமான செப்டம்பர் 29_ல் சின்னதாய் பென்சிலால் போடப்பட்டிருந்த பெருக்கல் குறிதான் ஆதாரம்!.

quelle-kumutham

No comments: