சரஸ்வதி இதழிலிருந்து...
- கா. மாணிக்க வாசகர் -
[தமிழ்த் தட்டச்சுத்துறைக்கு அன்று ஈழத்தமிழரொருவரான ஆர்.முத்தையா ஆற்றிய பங்களிப்பினை சரஸ்வதியில் வெளிவந்த இக்கட்டுரை புலப்படுத்தும். இக்கட்டுரையினை எமக்கு அனுப்பி வைத்த இலண்டனில் வசிக்கும் விசாகப்பெருமாள் வசந்தன் அவர்களுக்கு எம் நன்றி. -ஆசிரியர்]
ஆங்கிலேயர் அரசியல் நிர்வாகத்தில் சிறந்து விளங்குவதற்கும் ஆங்கில மொழிகளும் உலக மொழியானதற்கும் ஆங்கிலத் தட்டச்சு (டைப்ரைட்டர்) ஒரு முக்கியமான காரணம். 1875-ம் ஆண்டில் "ரெம’ங்டன்" தட்டச்சு விற்பனைக்கு வந்தபொழுது வர்த்தக ஸ்தாபனங்களே பெரும்பாலும் அவைகளை வாங்கி உபயோகித்தன. பின்பு அரசினரும் பிற ஸ்தாபனத்தாரும் தனி மனிதர்களும் தட்டச்சை விரும்பி வாங்கினார்கள். ஆங்கிலத்தில் இருபத்தாறு எழுத்துக்களே இருக்கின்றன. தமிழில் உயிர் எழுத்துக்கள் 12, மெய் எழுத்துக்கள் 18, உயிர்மெய் எழுத்துக்கள் 216, ஆய்த எழுத்து 1 ஆக மொத்தம் 247 எழுத்துக்கள் இருக்கின்றன. இவை தவிர எண்களும் குறியீடுகளும் வடமொழி மூலம் வந்த சில முக்கியமான எழுத்துக்களும் இருக்கின்றன. ஆகவே ஆங்கிலத்தைவிட ஏறக்குறைய பத்து மடங்கு அதிகமான எழுத்துக்களை உடைய தமிழ் மொழியை ஒரு இயந்திரத்தில் அமைப்பது சுலபமான விஷயம் அல்ல. ஆங்கில மோகம் வானளாவின்ற அந்த நாளில் இதைச் செய்ய நினைத்தவர் சிலர் இருந்தாலும் செய்து முடிக்கும் உடையோர் இல்லை.
பெரு எண்ணிக்கையில் செய்விக்க பண முதலீடு செய்யும் துணிவு வேண்டுமே, பண முதலீடு செய்தாலும் விற்பனை ஆகுமா? இந்தப் பிரச்னைகளை எல்லாம் கருத்தில் கொள்ளாது துணிச்சலுடன் செயலில்
இறங்கினார் ஒரு தமிழர்.
ஈழ நாட்டில் வாழும் தமிழர்களின் தலைநகராக விளங்கும் யாழ்ப்பாணம் அப்போது சிறந்த அறிஞர்களையும் ஆராய்ச்சியாளர்களையும் உலகுக்கு அளித்துக் கொண்டே இருக்கிறது. இந்தத் திருநாட்டின் ஒப்பற்ற ஒருவர்தான் தமிழ் தட்டச்சின் தந்தையான ஆர் முத்தையா அவர்கள்.
முத்தையா யாழ்ப்பாணத்திலுள்ள சுண்டிற்குளியில் 24-2-1886-ல் பிறந்தார். இவருடைய தந்தையாரான ராமலிங்கம் பண்பாடு மிக்கவர், கல்வியாளர், பக்திமான். இவர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின் சீடர்களில் ஒருவராக இருந்தார். ராமலிங்கம் அவர்களுக்கு ஐந்து ஆண்களும் நான்கு பெண்களும் பிறந்தார்கள். இறுதி ஆண் பிள்ளைதான் முத்தையா. இவர் ஏழு வயதாக இருக்கும் பொழுது, இவருடைய தந்தையார் இறந்து விட்டார். பின்பு தாயின் பராமரப்பிலேயே வளர்ந்து கலாசாலையில் பயின்று வந்தார். சில வருஷங்களில் தாயும் நோய் வாய்ப்பட்டு இறந்தாள். இவர் 1907-இல் மலாயா நாட்டுக்குப் புறப்பட்டார்.
சிங்கப்பூரை அடைந்ததும் தொடர்ந்து போர்னியாவுக்குப் போக எண்ணிய பொழுது, டானியல் போதகர் என்பவர், தாம் அங்கேயே இவருக்கு வேலை வாங்கித் தருவதாகச் சொல்ல அப்படியே இவரை ரெயில்வே இலாகாவில் வேலைக்கு அமர்த்தினார். சில நாட்களில் அந்த வேலையை விட்டு ஐல்ஸ்பெரி அண்ட கார்லாண்ட என்ற பிரபலமான வர்த்தக ஸ்தாபனத்தில் வேலையேற்றார். இரண்டாண்டுகளுக்குப் பின், அதன் பிரதம குமாஸ்தாவாக உயர்ந்து, 1930ஆம் ஆண்டு வரையில் பணி புரிந்தார். இந்தக் காலத்தில் இவர் உயர்தரக் கணக்குப் பதிவு, பொருளாதாரம், அச்சடித்தல், சுருக்கெழுத்து ஆகியவைகளைக் கற்றார். 1913-இல் நடைபெற்ற ஸ்லோன் டுப்ளோயன் சுருக்கெழுத்துப் போட்டியில் சர்வதேச வெள்ளிப் பதக்கம் இவருக்குக் கிட்டியது. அதோடு ஆங்கில இலக்கியம், தமிழ் இலக்கியம், கைத்தொழில் நூல்கள், சமய நூல்கள் ஆகியவற்றையும் கற்றார். இவ்வளவு திறமை வாய்ந்தவராய் இருந்தும் அரசாங்க உத்தியோகத்தை இவர் நாடியதே இல்லை. சுயமுயற்சியில் அதிக நம்பிக்கை உடையவர், அஞ்சா நெஞ்சம் படைத்தவர். தமக்குச் சரியென்று பட்டதைத் துணிவுடன் இவர் எடுத்துச் சொல்வார்.
இவர் கடமையாற்றிய ஸ்தாபனத்தில் இருந்த ஒழுங்கும் நிர்வாகத் திறமையும் இவரைக் கவர்ந்தன. அவர்களைப் போல் தமிழனும் ஏன் இருக்க முடியாது என்று சிந்தித்தார். தமிழில் ஒரு தட்டச்சு இல்லாக் குறையையும் உணர்ந்தார். ஆகவே, அன்று தொடங்கி இந்த முயற்சியில் ஈடுபட்டார். தனிமையாக ஓர் அறையில் 247 எழுத்தின் வடிவங்களை ஒரு புறமும் தட்டச்சின் 46 விசைகளை மறு பக்கமும் வைத்து எழுத்துக்களை எப்படி விசைகளில் அமைப்பது என்று சிந்தித்தார். கிடைத்த நேரங்களை யெல்லாம் இந்த ஆராய்ச்சிக்கே செலவிட்டார். தம் தமிழ் நண்ர்பர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களுடைய அபிப்ராயங்களையும் சேகரித்தார். எவ்வளவு முயற்சி செய்தும் எழுத்துக்களை 72-க்கு மேல் குறைக்க முடியவில்லை. அதுவரையில் கிடைத்த வெற்றியைக் கொண்டு தட்டச்சை நிறைவேற்றும் பணியை மேற் கொண்டார்.
முத்தையா அவர்கள் தாம் கண்டு பிடித்த தட்டச்சை "ஸ்டாண்டர்ட்" பெரிய தட்டச்சு என்று குறிப்பிட்டார். அது சிறப்பான பல அம்சங்களை உடையது. தமிழில் 247 எழுத்துக்கள் இருப்பதால் அவை எல்லாவற்றையும் நான்கு வரிசைகளில் உள்ள 46 விசைகளில் அசைக்க முடியாது. எனவே, பல எழுத்துக்களுக்குப் பொதுவான உள்ள சில குறியீடுகளைத் தனித் தனி விசைகளில் அமைத்து அவைகளைத் தேவையான எழுத்துக்களுடன் சேர்த்து அச்சடிக்கக் கூடிய விசைப்பலகையை அமைக்க வேண்டும். அப்படியானால், இரண்டு விசைகளை அழுத்திய பின்பே அச்சை நகரச் செய்ய வேண்டும். பல பரீட்சைகள் செய்து கடைசியாக நகரா விசையைக் கண்டு பிடித்தார். அதாவது "ந“ என்ற எழுத்திலுள்ள விசிறியை அடிக்கும் பொழுது அச்சு நகராது. எஞ்சி யுள்ள "ந"வை அடித்த பின் தான் அச்சு நகரும். மெய்யெழுத்துக்களும் இப்படியே அச்சாகின்றன. இவர் உண்டாக்கிய நகரா விசையையே இன்றும் தட்டச்சு உற்பத்தியாளர்கள் உபயோகிக்கிறார்கள்.
ஆங்கிலத் தட்டச்சைப் போலல்லாது தமிழ்த் தட்டச்சுக்களின் விசைப்பலகை அமைப்பு வேறு விதமாக இருக்கிறது. ஒரு யந்திரத்தில் பழகியவர் அதே முறையில் வேறொரு யந்திரத்தில் அச்சடிக்க முடியாது. ஆகவே, இதை ஒருமைப்படுத்த எண்ணிய சென்னை அரசினர் 1955-ஆம் ஆண்டில் ஒரு குழுவை நிறுவினார்கள். அதன் சிபார்சுப்படியும் பிறருடைய ஆலோசனையின் பேரிலும் இப்பொழுது விசைப் பலகையமைப்பில் ஒருமைப்பாடு ஏற்பட்டிருக்கிறது. ஆயினும், முத்தையா அவர்களின் கண்டு பிடிப்பிலிருந்து அதிக மாற்றம் புதிய முறையில் இல்லை. புதிய அமைப்பில் இல்லாத சில சிறப்பான அம்சங்களும் இவருடைய தட்டச்சில் உண்டு. இவை புதிய அமைப்பில் சேரவில்லை. இப்பொழுது க’, த’ ஆகிய எழுத்துக்களின் விசிறிகள் அந்த எழுத்துக்களின் மேற்கோட்டின் நுனியில் இருக்கின்றன. இது தமிழ் எழுத்தைப் பிழையாக்குவதாகும். முத்தையா அவர்களின் விசைப்பலகை அமைப்பில் க’, த’ போன்ற எழுத்துக்களுக்கு ஒரு விசிறியும், ண’, ன’ போன்ற
எழுத்துக்களுக்கு வேறு ஒரு விசிறியும் அமைத்திருப்பது குறிப்பிடத் தக்க சிறப்பாகும்.
இப்பொழுதிருக்கும் சில தட்டச்சுகள் இரண்டு கை விரல்களுக்கும் சமமாக வேலை கொடுக்கவில்லை. இந்தக் குறையைத் தம் தட்டச்சில் இவர் நீக்கியிருக்கிறார். தமிழெழுத்துக்களில் ய, ள, க, ப, ர, ம, ட, ந, ச, வ, ல, ன, டி ஆகிய எழுத்துக்கள் அடிக்கடி உபயோகமாகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டார்கள். ஆகவே, அரசினருடைய விசைப்பலகையில் கீழ் திட்டத்தில் இவை அமைந்திருக்கின்றன. முத்தையா அவர்களின் விசைப்பலகை அமைப்பும் இதையொட்டியே இருக்கிறதென்றால் இவர் எவ்வளவு ஆராய்ச்சியின் பின் இதை உருவாக்கியிருக்க வேண்டுமென்று நாம் ஊகிக்கலாம்.
முதலாவது உலக யுத்தம் முடிந்த பின்பு, தாம் கண்டு பிடித்த விசைப் பலகையை ஜெர்மனியிலுள்ள சைடல் அன்ட் நளமான் என்ற வியாபர ஸ்தாபனத்திடம் இவர் ஒப்புவித்து அச்சுக்களை உருவாக்கினார். பெரும் எண்ணிக்கையில் அதை இறக்குமதி செய்து விற்றும் வந்தார். இதோடு இவருடைய முயற்சி முற்றுப் பெறவில்லை. தாம் அமைத்த விசைப் பலகையில் சில குறைகள் இருக்கக் கண்டார். அவைகளை நீக்க’, "பிஜோ", "ஐடியல்" ஆகிய "போர்ட்டபிள்" தட்டச்சுக்களை உருவாக்கினார். இவைகளைப் பின்பற்றியே "ஆர் ஸ’", "எரிகோ", "யுரேனியா", "ஹால்டா" போன்ற தட்டச்சுகள் வெளியாயின.
முத்தையா அவர்கள் சிறந்த சமூக சேவையாளராகவும் விளங்கினார். காலஞ் சென்ற தெய்வசிகாம ஆசாரியருடன் சேர்ந்து குடிசைக் கைத்தொழிலின் அபிவிருத்திக்கு அரும்பாடு பட்டார். இலங்கையில் நடைபெற்ற வகுப்புக் கலவரங்களைப் பற்றி ஆங்கிலத்தில் நூல் ஒன்று எழுதி அதை அச்சேற்றுவதற்கு முன்பே காலமாகி விட்டார்.
நன்றி: சரஸ்வதி இதழ், 1959
அனுப்பி உதவியவர்: விசாகப்பெருமாள் வசந்தன்
vvishvan@yahoo.co.uk
Quelle-Pathivukal
Subscribe to:
Post Comments (Atom)
15 comments:
சந்திரவதனா!
படிக்கச் சந்தோசமாக இருந்தது. தேடித் தந்ததற்கு நன்றி!
யோகன் பாரிஸ்
நன்றி யோகன்.
எனக்கும் வாசித்த போது மிகவும் சந்தோசமாக இருந்தது.
சந்திரவதனா,
இக்கட்டுரையை இங்கே கொத்தமைக்கு உங்களுக்கு நன்றி.!!
இந்தப் பதிவிற்கு நன்றி
//உயிர்மெய் எழுத்துக்கள் 216//
thattachchu pizai. 246 allavaa!
மிகவும் அருமையான பதிவு அக்கா.
//அப்படியானால், இரண்டு விசைகளை அழுத்திய பின்பே அச்சை நகரச் செய்ய வேண்டும். பல பரீட்சைகள் செய்து கடைசியாக நகரா விசையைக் கண்டு பிடித்தார்//
இந்த வரிகளை படித்தபோது புல்லரித்தது.
தமிழை கணிப்பொறியில் பயன்படுத்த செய்யப்பட்ட முயற்சிகள் கோர்வையாக ஞாபகத்துக்கு வருகின்றன.
முத்தையாவையும் தமிழ் தட்டச்சுப்பொறி பற்றிய தகவல்களையும் அறிமுகப்படுத்தியமைக்கு மிகவும் நன்றி
இந்த கட்டுரையை பயன்படுத்தி முத்தையா பற்றி விக்கிபீடியாவில் கட்டுரை ஒன்றினை உருவாக்கியுள்ளேன். கட்டுரையை வளர்த்தெடுக்க அனைவரையும் வரவேற்கிறேன்
கட்டுரைக்கான தொடுப்பு
Anonymous said...
>>//உயிர்மெய் எழுத்துக்கள் 216//
thattachchu pizai. 246 allavaa!>>
தவறேதுமில்லையே?
216 தான்.
மிக்க நன்றி சந்திரவதனா அக்கா இப்படி பல தகவல்கள் அறிய ஆவல். தொடர்ந்து தாருங்கள். நன்றி நன்றி நன்றி
ஆர். முத்தையா பற்றிய இந்தப் பதிவுக்கு நன்றி. விக்கிப்பீடியாவில் இந்தப் பதிவைத் தழுவி மயூரன் பதிந்துள்ளார். பாருங்கள். (நீங்களே மேலதிக தகவலைச் சேர்க்கலாம்).
////உயிர்மெய் எழுத்துக்கள் 216//
thattachchu pizai. 246 allavaa!//
'அ' என்னும் உயிரும் 'க்' என்னும் மெய்யும் சேர்வதால் 'க' என்னும் உயிர்மெய் பிறக்கின்றது. இவ்வாறு பன்னிரண்டு உயிர் எழுத்துக்களும் பதினெட்டு மெய் எழுத்துக்களுடன் சேர்வதால் (18 X 12) 216 உயிர் மெய் எழுத்துக்கள் பிறக்கின்றன என்று விக்கிபீடியா கட்டுரை தெரிவிக்கிறது.
ஒரு அத்திவாரத்தை அறியத் தந்மைக்காக உங்களுக்கும் இக்கடுரையை உங்குளுக்குச் சேர்ப்பித்த நண்பருக்கும், ஏலவே பதிவு செய்த சரஸ்வதி இதழுக்கும் கூட நன்றிகள்.
சிவபாலன், நாசமறுப்பான், Anonymous -1, Anonymous -2, மயூரன், தர்சன், கானக்ஸ், மலைநாடான்
உங்கள் அனைவரது கருத்துக்களுக்கும் நன்றி. இதை முதல் முதலாக வாசிக்கக் கிடைத்த போது
உங்களைப் போலவே நானும் மிக மகிழ்ந்தேன்.
கூடவே உடனேயே மயூரன் அதை விக்கிபீடியாவில் இணைத்து அதிக திருப்தியைத் தருகிறது. நன்றி மயூரன்
கனாக்ஸ் அக்கறையுடன் சுட்டியையும் தந்ததற்கு நன்றி.
படிப்பதற்கும் சிந்திப்பதற்கும் மிக அருமை
சந்திரவதனா அவர்களுக்கு, பதிவுகள் இணைய இதழில் பிரசுரிக்கப்பட்ட திரு.ஆர்.முத்தையா அவர்கள் பற்றிய கட்டுரையினை மீள்பிரசுரம் செய்து மேலும் பலர் அறிய வாய்ப்பளித்தமைக்கு நன்றி. இக்கட்டுரையினையும், புகைப்படத்தினையும் எமக்கு அனுப்பி வைத்தவர் வசந்தன் விசாகப்பெருமாள். அவருடன் தொடர்புகொள்வதன் மூலம் நீங்கள் மேலும் பல தகவல்களைப் பெறக்கூடியதாகவிருக்கும். இக்கட்டுரையினை விக்கிபீடியாவில் மயூரன் பிரசுரித்ததற்கும் நன்றி.
கிரிதரன்
வரவுக்கும் பதிவுக்கும் நன்றி
Post a Comment