Tuesday, July 26, 2005

மறக்க முடியாத யூலைகள்

- வன்னியன் -

யூலை மாதம் ஈழத்தமிழரின் வரலாற்றில் ஆழமாகப் பதிந்துவிட்ட ஒன்று. பல வரலாற்றுத் துன்பங்களையும் பாரிய வெற்றிகளையும் பெற்றுக்கொண்டது இந்த மாதத்தில் தான்.

கறுப்பு யூலை” என்று இன்றுவரையும் அழைக்கப்படும் இம்மாதத்தின் 23 ஆம் நாள் தான் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பாரிய திருப்புமுனை ஏற்படுத்திய திருநெல்வேலித்தாக்குதல் நடத்தப்பட்டது. 1983 இல் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் 13 சிங்கள இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். அந்த நேரத்தில் அது பெரும் தொகையாகும். வெறும் கிளர்ச்சி என அறியப்பட்ட போராட்டம் அத்தாக்குதலுடன் தான் உலகத்தில் அறியப்பட்டது. அத்தாக்குதலில் பிரபாகரனும் நேரடியாகப் பங்குபற்றி அதில் 8 இராணுவத்தினரைச் சுட்டுக் கொன்றார். அத்தாக்குதலுக்குத் தலைமை தாங்கிய லெப்.செல்லக்கிளி அம்மான் அவ்விடத்திலேயே வீரமரணமடைந்தார்.

அதற்கு எட்டு நாட்களுக்கு முன்புதான் புலிகளின் முதலாவது தாக்குதல் தளபதி லெப். சீலனும் ஆனந்தும் தென்மராட்சியில் கொல்லப்படுகின்றனர். பிரபாகரனின் மிகுந்த நம்பிக்கைக்குப் பாத்திரமாயிருந்த அத்தளபதியின் இழப்பு மிகப்பெரியது. இந்திய இதழொன்றுக்குச் செவ்வியளித்த பிரபாகரன் "திருநெல்வேலித் தாக்குதல் சீலனின் இழப்புக்குப் பழிவாங்கலா?" என்ற கேள்விக்கு, அப்படியும் எடுத்துக்கொள்ளலாம் என்று பதலளித்திருந்தார். சீலன் பற்றி பிரபாகரன் சொன்னவை அவரது குரலிலேயே கேட்க இங்கே செல்லவும். சீலன் பற்றிய முந்தைய பதிவுக்கு இங்கே செல்லவும்.


அதே யூலை 24 இல் கொழும்பில் தமிழர் மீதான இன அழிப்பு (கலவரமன்று) சிங்களக் காடையர்களால் நடத்தப்பட்டது. ஏறத்தாள 3000 வரையான தமிழர்கள் கொல்லப்பட்டனர். ஏராளமான பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டார்கள். கோடிக்கணக்கான தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்பட்டன. இவையனைத்தையும் பார்த்துக்கொண்டு சிங்களக் காவற்படையும் இராணுவமும் வாளாவிருந்தன. கண்டனம் செய்த மற்ற நாடுகளுக்கு “எங்கள் வேலை எங்களுக்குத் தெரியும்” என்று அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனா பதிலளித்தார். மேலும் மிகப்பிரபல்யமான வாசகமான “போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம்” என்று அறைகூவல் விடுத்தார் ஜே.ஆர். ஆயிரக்கணக்கான தமிழர்கள் கப்பலேற்றி யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்பட்டனர். அவர்களின் சொத்துக்களனைத்தும் சூரையாடப்பட்டன. வெலிக்கடைச் சிறைப் படுகொலைகளும் நடந்து முடிந்தன. இதுபற்றிய மேலதிக தகவல்கள் இங்கே. ஏற்கனவே பல இனப்படுகொலைகள் சிங்களவர்களால் நடத்தப்பட்டாலும் அவையெல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல் அமைந்தது இந்த 83 யூலைப் படுகொலை. உலகநாடுகளினது கரிசனைப் பார்வை ஓரளவுக்குத் தமிழர்கள் மேல் திரும்பியது. தமிழகத் தமிழரின் பூரண ஆதரவும் அனுசரனையும் ஈழத்தவருக்குக் கிடைத்தது.

1987 யூலை ஐந்தாம் நாள், மிகமுக்கியமான நாள். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் புதிய வடிவமொன்று அறிமுகப்படுத்தப்பட்ட நாள். கரும்புலி என்ற வடிவம் தான் அது. முதல் கரும்புலியாக கப்டன் மில்லர் நெல்லியடியில் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தினான். இது பற்றிய பதிவு இங்கே.

1990 இன் யூலையில் கடலிலும் கரும்புலித்தாக்குதல் அறிமுகப் படுத்தப் பட்டது. முதல் கடற்கரும்புலித்தாக்குதல் பருத்தித்துறைக் கடலில் நின்ற கட்டளைக் கப்பலொன்றின் மீது நடத்தப்படுட்டது. இதில் மேஜர் வினோத், மேஜர் காந்தரூபன், கப்டன் கொலின்ஸ் ஆகியோர் வீரச்சாவடைந்தனர். இதில் மேஜர் காந்தரூபன் இறுதியாக பிரபாகரனிடம் தனது விருப்பமாக அனாதைக் குழந்தைகளுக்கான காப்பகம் ஒன்று அமைக்கச்சொல்லிக் கேட்டார். அது கைகூடியபோது அவரது பெயரே அதற்கு வைக்கப்பட்டு காந்தரூபன் அறிவுச்சோலை உருவாக்கப்பட்டது.

1991 யூலை தமிழர் படையின் மறக்க முடியாத மாதம். விடுதலைப்புலிகள் முதன் முதல் “ஆகாயக் கடல் வெளிச் சமர்” என்று பெயர்சூட்டி ஒரு மரபுவழிச்சமர் ஒன்றைத் தொடுத்தனர். ஆனையிறவுப் படைத்தளம் மீதான தாக்குதல் தான் அது. ஏறத்தாள ஒரு மாதமளவு நீண்ட இச்சண்டையில் 500 வரையான புலிகள் வீரச்சாவடைந்தனர். ஆனையிறவுப் படைத்தளத்தைக் காக்க கட்டைக்காடு - வெற்றிலைக் கேணியில் பெருமளவு இராணுவத்தினர் தரையிறக்கப்பட்டனர். அவர்களுடனும் சண்டை நடந்தது. புலிகளின் பல தளபதிகள் இத்தாக்குதலில் வீரச்சாவடைந்தனர். நூற்றுக்கணக்கில் போராளிகள் கொல்லப்பட்டது இதுவே முதல் தடவை. அத்தாக்குதலை ‘இலங்கையில் இரு மரபுவழி இராணுவங்கள் உள்ளன’ என பி.பி.சி. வர்ணித்தது. எந்தக் காப்புமற்ற அந்த நீண்ட வெட்டையில் மண் பரல் உருட்டியும் பனங்குற்றி உருட்டியும் மண்சாக்குகள் அடுக்கப்பட்ட டோசரில் சென்றும் சண்டையிட்ட போராளிகளின் அனுபவங்கள் மெய்சிலிப்பவை. அத்தாக்குதல் தோல்வியின் பாடங்கள் பின்னர் உதவின. இதே ஆனையிறவு, அந்த வெட்டையில் நேரடியான சண்டையின்றி 2000 ஆம் ஆண்டு வெற்றி கொள்ளப்பட்டது.

1995 யூலையில் வலிகாமத்தின் ஒரு பகுதியைக் கைப்பற்றும் நோக்கோடு எதிரி மேற்கொண்ட “முன்னேறிப் பாய்தல்” நடவடிக்கையை “புலிப்பாய்ச்சல்” என்ற பெயரிட்ட எதிர் நடவடிக்கை மூலம் புலிகள் முறியடித்தனர். அதில் ஒரு புக்காரா விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதுடன், எடித்தாரா கட்டளைக்கப்பலும் மூழ்கடிக்கப்பட்டது. இதே யூலை 9 ஆம் திகதி நவாலித் தேவாலயத்தில் தஞ்சமடைந்திருந்த பொதுமக்களை ஒரே தடவையில் குண்டுவீசிக் கொன்றது சிங்கள வான்படை. ஏறத்தாள 150 வரையான மக்கள் இதிற் கொல்லப்பட்டனர். இது பற்றிய பதிவு இங்கே.

1995 இன் யூலை இறுதிப்பகுதியில் மணலாற்றின் பாரிய 5 இராணுவ முகாம்கள் மீதான தாக்குதல் புலிகளால் நடத்தப்பட்டது. இது சிலரின் காட்டிக்கொடுப்பால் தோல்வியில் முடிந்தது. இருநூற்றுக்குமதிகமான புலிகள் வீரச்சாவடைந்தனர். லெப்.கேணல் கோமளா தலைமையிலான மகளிர் படையணியின் ஓர் அணி கடுமையான இழப்புக்களைச் சந்தித்தது.

1996 இதே யூலையில் தான் முல்லைத்தீவு இராணுவ முகாம் ஓயாத அலைகள் தாக்குதலின் மூலம் முற்றாகத் தாக்கியளிக்கப்பட்டு அந்நகரம் மீட்கப்பட்டது. இது சம்பந்தமான பதிவு இங்கே. அந்த விடுவிப்பின் மூலமே இன்றுவரையான போராட்ட வெற்றிகள் யாவும் தீர்மானிக்கப்பட்டன. யாழ்ப்பாணம் இழந்ததால் போராட்டம் இறந்துவிடவில்லையென்பதும், தமிழர் படைப்பலம் குன்றிப்போகவில்லையென்பதும் உலகுக்கும் சிங்களத்துக்கும் புரிய வைக்கப்பட்டது.

இத்தாக்குதலில் 1300 வரையான படையினர் கொல்லப்பட்டனர். பலர், திருநெல்வேலியில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டமை தான் “கறுப்பு யூலை” இனப்படுகொலைக்குக் காரணமெனச் சொல்வர். உண்மை அதுவன்று. அத்தாக்குதலை இப்படுகொலைக்கு ஒரு சாட்டாகச் சிங்களவர் எடுத்துக்கொண்டனர். மற்றும் படி ஏற்கெனவே யூலைப்படுகொலைக்கான ஆயத்தங்கள் இருந்தன.

அன்று 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டதை ஒரு பாரிய இனஅழிப்பைச் செய்யச் சாட்டாக எடுத்துக்கொண்ட சிங்களவர், 13 வருடங்களின்பின் அதைப்போல் நூறு மடங்கு இராணுவத்தினரைக் கொன்றபோது எதுவும் செய்ய முடியவில்லை.


இந்த யூலை வெற்றிகளுக்கு எல்லாம் சிகரம் வைத்த வெற்றி ஒன்று 2001 இல் வந்தது. 83 யூலை இனப்படு கொலையின் நினைவு நாளான 24 ஆம் திகதி, கட்டுநாயக்கா விமானப் படைத்தளம் தாக்கப்பட்டது. அங்கிருந்த யுத்த விமானங்கள் அழிக்கப்பட்டன அல்லது சேதமாக்கப்பட்டன. ஏறத்தாள யுத்தத் தேவைகளுக்காகப் பாவிக்கபட்ட 28 விமானங்கள் முற்றாக அழிக்கப்பட்டன அல்லது சேதமாக்கப்பட்டன. இவற்றை விட பயணிகள் விமானங்கள் மூன்று முற்றாக அழிக்கப்பட்டன. மேலும் மூன்று சேதமாக்கப்பட்டன. இந்த விமானங்கள் அனைத்தும் சிங்கள அரசுக்குச் சொந்தமானவை மட்டுமே. இத்தாக்குதலில் எந்தவொரு பயணிகூட காயப்படவில்லை.


உலகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இத்தாக்குதல் தான் சிங்கள அரசு ஓரளவாவது இறங்கிவரக் காரணமாய் அமைந்தது. இத்தாக்குதலின் விளைவால் ஏற்பட்ட பொருளாதாரச்சிக்கல் மிகப்பெரியது. இத்தாக்குதலின் பின் உடனடியாய் எந்தவொரு படை நடவடிக்கையையும் செய்ய முடியாத நிலைக்குச் சிங்களப் படை தள்ளப்பட்டது. அதன்பின் நடந்த தேர்தலில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் வந்தது. பின் இன்று வரையான ஒரு தளம்பல் நிலை இருந்துகொண்டிருக்கிறது.

ஈழப்போராட்ட வரலாற்றில் தனியே “கறுப்பு யூலை” யாக மட்டுமே அடையாளங்காணப்பட முடியாத மாதம் தான் இம்மாதம். பல முக்கிய வெற்றிகளையும் அதற்கூடாக விடிவு பற்றிய நம்பிக்கையையும் பிரகாசத்தையும் தந்த மாதம் இம்மாதம்.

nantri-Poorayam

Monday, July 11, 2005

பண்டிதர் வீ.பரந்தாமனின் நூல் வெளியீடு

பண்டிதர் பரந்தாமனின் தூய தமிழ் சொற்களடங்கிய நூல் வெளியீடு

பண்டிதர் வீ.பரந்தாமனின் வேர் - அடி வழித் தமிழ்ச் சொற்பிறப்பியற் சிற்றகர முதலி எனும் தூய தமிழ் சொற்களடங்கிய நூல் யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கரையரங்கில் சனிக்கிழமை 9 .7.2005 அன்று வெளியிட்டு வைக்கப்பட்டது.

யாழ். பல்கலைக்கழக தலைவர் கலாநிதி சி.சிவலிங்கராஜா தலைமையில் நடைபெற்ற இந்நூல் வெளியீட்டு விழாவில் பல்கலைக்கழக பேராசிரியர்கள், தமிழ்மொழி இலக்கிய ஆர்வலர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் என பெரும்பாலானோர் கலந்துகொண்டு ஆர்வமுடன் நூலினை பெற்றுக் கொண்டனர்.

ஆரம்ப நிகழ்வாக தமிழீழ தேசியக் கொடியினை பேராசிரியர் அ.சண்முகதாஸ் ஏற்றினார்.

நூல் வாழ்த்துரையை பொருளியல்துறைத் தலைவர் வித்தியானந்தன் வழங்கினார்.

நூல் வெளியீட்டுரையை விடுதலைப் புலிகளின் யாழ். மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.இளம்பரிதி ஆற்றினார்.

நூலின் முதல் பிரதியை இளம்பரிதி வெளியிட இளைப்பாறிய ஆசிரியை செல்வி. திலகவதி பெரியதம்பி ஏற்றுக் கொண்டார்.

நூல் வெளியீட்டைத் தொடர்ந்து நூலின் அறிமுக உரையை கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ் வழங்கினார்.

மதிப்பிட்டு உரையினை கோப்பாய் ஆசிரியர் கலாச்சாலை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி திருநாவுக்கரசு பேராசிரியர் சண்முகதாஸ் ஆகியோர் நிகழ்த்தினர்.

படங்கள்: யாழ். பாலன்

Friday, June 03, 2005

அளவைச் சுவடுகள்

- கழனி யூரன் -

இன்றைக்கு நமக்கு விஞ்ஞான பூர்வமான அளவுகள் கிடைத்துள்ளன. இந்த அளவுகள் கண்டுபிடிப்பதற்கு முன் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான அளவுகள் நடைமுறையில் இருந்தன. உதாரணமாக இன்றைய நமது நீட்டல் அளவு மீட்டர் என்பதாகும் பழந்தமிழகத்தில் தச்சுமுளம் எனற அளவு நடைமுறையில் இருந்தது. தச்சாசாரிகள் இந்த அளவையை அதிகமாகப் பயன்படுத்தியதால், தச்சுமுளம் என்று அந்த அளவுக்குப் பெயர் வந்தது.

‘இந்தத் தச்சு மளமும் கண்டுபிடிப்பதற்கு முன், பழந்தமிழர்கள் எந்த மாதிரியான அளவை வைத்திருந்தார்கள்...?’ என்று ஒரு பெரியவரிடம் கேட்டேன்.

அந்தப் பெரியவர் சொன்னார்; ‘‘அளக்க என்று அளவுகோல் தேடி, அந்தக் காலத்து மக்கள் எங்கும் போகவில்லை. அந்தக்காலத்தில் அளவு கோல்களை கையில் வைத்துக் கொண்டே அலைய முடியுமா என்ன? எனவே அவவனவன் உடம்பும், உடம்பின் உறுப்புகளுமே, அளவுகோல்களாகப் பயன்பட்டன’’ என்றார்.

‘‘அதெப்படி உடம்பை வைத்து அளக்க முடியும்?’’ என்று கேட்டேன்.

பெரியவர் சிரித்துக் கொண்டே, ‘தம்பி அந்தக் கிணற்றில் எவ்வளவு தண்ணீர்? இருக்கிறது என்று ஒருவர் கேட்டால், கிராமத்து மக்கள், அந்தக் கிணற்றில் கரண்டக்கால் அளவு தண்ணீர் கிடக்கு, அல்லது முட்டளவு தண்ணீர் கிடக்கு அல்லது இடுப்பளவு தண்ணீர் கிடக்கு அல்லது மார்பளவு தண்ணீர் கிடக்கு அல்லது கழுத்தளவு தண்ணீர் கிடக்கு அல்லது ஓராளம் உயரத்திற்குத் தண்ணீர் கிடக்கிறது அல்லது இரண்டாளம் உயரத்திற்குத் தண்ணீர் கிடக்கிறது என்று கூறிவார்கள்.. இப்படி கிணற்றில் கிடக்கிற தண்ணீரின் அளவை, நீர்நிலைகளில் கிடக்கிற தண்ணீரின் அளவைத் தன் உடம்பை வைத்தே அளந்தார்கள். பண்டை மக்கள். உயரத்தை அல்லது ஆழத்தை அளக்க, அளவுகோல் தேடி எங்கும் அலைய வில்லை. தன் உடம்பை வைத்தே, தனக்கான நீட்டல் அளவைக் கணித்துக் கொண்டான்.

நீட்டல் அளவை உடம்பில் அளந்தார்கள் என்பது சரி, உடல் உறுப்பால் அளந்தார்கள் என்று கூறினீர்களே.. அது எப்படி?’ என்று அந்தப் பெரியவரிடம் கேட்டேன்.

பெரியவர் சிரித்துக் கொண்டே ‘‘தம்பி....’’ என்று இழுத்தபடி மிக நுட்பமான நீட்டல் அளவை, அந்தக் காலத்து மக்கள் ஒரு ‘மயிர் கனம்’ என்று கூறுவார்கள். அதைவிட சற்று பெரிய அளவை ஒரு நூல்கனம் என்று சொல்வார்கள். கிராமத்தான் கட்டியிருந்த வேட்டியில் நூல் இருந்தது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நூலுக்கு அடுத்து ஒரு விரல் கடை என்று கூறுவார்கள். இந்த விரல் கடையிலும் சுண்டு விரல் தண்டிக்கு, பெருவிரல் தண்டிக்கு என்று இரண்டு விதமான அளவைச் சொல்வார்கள். ஒரு விரல் கடை, இரண்டு விரல்கடை, மூன்று விரல் கடை, பிறகு நான்கு விரல் கடை என்று நீட்டல் அளவைச் சொல்வார்கள். ஐந்துவிரல்கள் மனிதனுக்கு இருந்தாலும் ஐந்து விரல் கடைஅளவு என்று கூறுவதில்லை!

நான்கு விரல் கடைக்குப் பிறகு ஜாண்தான் பெரிய அளவு. ஒரு ஜாண் என்பது நான்கு விரல் கடையின் மூன்று பங்காகும். யார் கையாளாலும் இந்த அளவு அதாவது மூன்று, முறை வைக்கும் நான்கு விரல் கடை என்பது ஒரு ஜாண் என்ற அளவுக்குச் சரியாகத்தான் இருக்கும்.

ஜாணுக்கும் பிறகு முளம்தான் பெரிய அளவு. மூன்று ஜாண் சேர்ந்தால் ஒரு முளம். இரண்டு கைகளையும் நெட்டுக்கு நீட்டினால் ஒரு ‘கைப்பாகம்’ என்ற அளவாகும். மூன்று முளங்கள் சேர்ந்தால் ஒரு கைப்பாகம் ஆகும். இந்த நுட்பம் இயற்கையாகவே மனித உடலுக்கு வாய்த்துள்ளது. இதைக் கண்டறிந்து பழங்காலத்து மனிதர்கள் தன் அளவிற்குப் பயன்படுத்தி இருக்கிறார்கள். உடம்பில் உள்ள விரல்கள், கைகள் போன்றே காலாலும் பழங்காலத்தவர்கள் தங்கள் அளவுகளை, அளந்திருக்கிறார்கள்.

ஒரு ‘பாதம்’ இரு பாதம் என்று நீளங்களைத் தன் பாதம் கொண்டே அளந்துள்ளார்கள், பாதங்களுக்குப் பிறகு, ‘எட்டு’ என்று ஒரு அளவு உள்ளது. நிற்கிற நிலையில் வலதுகாலைத் திரையில் ஊன்றிக் கொண்டு இயல்பாக ஒரு எட்டு எடுத்து இடது காலை வைக்கும் தூரத்தைத் தான் ‘ஒரு எட்டு’’ என்ற அளவாகக் கூறுகின்றார்கள்.

இந்த எட்டையே முடிந்த வரை இரு காலையும் அகட்டி வைத்துக் கொண்டால் அதற்கு ‘ஒரு கவுடுதூக்கு’ என்று பெயர். மூன்று பாதம் ஒரு எட்டாகவும், மூன்று எட்டு ஒரு கவுடுதாக்காகவும் இருக்கும். இந்த அளவின் நுட்பத்தையும் உணர்ந்துதான் பழங்காலத்து மக்கள், காலின் மூலம், கால் பாதத்தின் மூலம் தங்கள் அளவுகளை அமைத்திருக்கிறார்கள்.

உடம்பையும் கையையும் சேர்த்து ‘‘ஒரு கை எடுப்பு உயரம்’’ என்றும் ஒரு அளவை சொல்கிறார்கள். பருமனைக் குறிக்கவும் அந்தக் காலத்தில் மனிதர்கள் தன் உடல் உறுப்புகளைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

மிக நுட்பமான பொருளைப் பற்றிப் பேசும்போது ‘‘கண்ணுக்குள்ள போட்டு எடுத்திரலாம்’’ என்று கண்ணை மையமாக வைத்துக் கூறினார்கள். அதைவிட சற்று பருமனான பொருளை ஒரு சிட்டிகை என்று கூறினார்கள். பெருவிரலும் ஆள்காட்டி விரலும் சேர்ந்து ஒட்டிப் பிடித்துக் கொண்டு எடுக்கும் ‘பொடி’ போன்றவைகளைச் சிட்டிகை என்று கூறினார்கள்.

உள்ளங்கையைக் குவித்து அதில் நெல்மணி போன்றவற்றை நிரப்பி, ஒரு கையளவு அல்லது ‘ஒரு சதங்கை’ என்றார்கள். இரண்டு கையையும் சேர்த்து நெல்மணிகளை அள்ளி ‘இருகை அளவு’ என்றார்கள். சோற்றை உள்ளங்கையில் வைத்து உருட்டி ஒரு ‘கவளம்’ என்றார்கள். ஒரு ‘வாய்ச் சோறு’ என்றும் ஒரு அளவைக் கூறினார்கள்.

இவைதவிர, சில பொருள்களின் அளவைப் பற்றிக் கூறும்போது, மணிக்கை தண்டி, கணுக்கால் தண்டி, தொடைத் தண்டி என்று பொருளின் பருமனுக்குத் தக்கபடி தன் உடல்உறுப்புகளைக் கொண்டு அளவுகளைக் குறித்தார்கள்.

மரத்தின் அளவுகளைக் கூறும்போது ஒரு ஆள் ஆப்புச் சேர்த்துக் கட்டும் அளவுக்கு, இரண்டு ஆள் ஆப்புச் சேர்த்துக் கட்டும் அளவுக்குப் பெரியது என்று கூறுகிறார்கள். இங்கும் கைகளே அளவு கோலாகப் பயன்படுகிறது, என்று அந்தப் பெரியவர் கூறினார்.

இப்படி ஆதிகாலத்தில் மனிதர்கள் தன் உடம்பையும், தன் உடம்பின் உறுப்புகளையும் மட்டுமே அளவுகோல்களாகக் கொண்டு தனக்குத் தேவையான அளவுகளை அளந்திருக்கிறார்கள் என்பதை எண்ணும்போது நமக்கு வியப்பு மேலிடுகிறது.

இவைதவிர, கற்பனை நயத்துடன் சில அளவுகளை உடல் உறுப்புகளை மையமாகக் கொண்டு கூறுகிறார்கள். உதாரணமாக ஒரு மெகா ‘அளவுக்கு வாய் ரொம்ப நீளம்’ என்று கூறினார். அவள் அதிகமாகப் பேசுபவள் என்று நாம் புரிந்துகொள்கிறோம். இங்கு ‘வாய்’ என்பது குறியீடாக நின்று பேச்சைக் குறிக்கிறது. அதேபோல், ஒருவன் அவனுக்கு ‘நாக்கு ரொம்ப நீளம்’ என்று கூறினால், ‘அவன் மிகவும் ருசியாகச் சாப்பிட ஆசைப்படுவான்’ என்று புரிந்து கொள்கிறோம். அந்தத் தொடரில் நாக்கு என்ற சொல் ருசியைக் குறித்து வந்தது. இப்படி மனிதனின் உடலும் உடல் உறுப்புகளும் பழங்காலத்தில் அளவுகோல்களாகவும் பயன்பட்டுள்ளன.

- கழனி யூரன் -
nantri - Kumutham-yarlmanam

Saturday, May 14, 2005

ஜெயசிக்குறு(வெற்றி நிட்சயம்) 8ம் ஆண்டு

- வன்னியன் -

வென்ற சமரின் எட்டாம் ஆண்டு நிறைவு.

இன்று மே 13. ஈழப்போராட்ட வரலாற்றில் எவருமே மறக்க முடியாத முக்கியமான நாள். ‘வெற்றி நிச்சயம்’ என்ற பொருள்தரும் ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை வன்னியை ஊடறுத்து யாழ்ப்பாணத்துக்குத் தரைவழிப்பாதையொன்றை அமைப்பதை நோக்காகக் கொண்டு நடத்தப்பட்டது. ஏறத்தாள இரண்டரை ஆண்டுகாலம் நடத்தப்பட்ட இந்த இராணுவ நடவடிக்கை தமிழர்கள் மேல் கட்டவிழ்த்துவிட்ட கொடுமைகள் கொஞ்சநஞ்சமல்ல. பொருளாதாரத்தடையும் மருந்துத்தடையும் ஒரு பக்கம், தொடர்ச்சியான இடப்பெயர்வுகள் மறுபக்கம், அடிக்கடி குண்டுவீச்சுக்களும் எறிகணை வீச்சுக்களும் இன்னொரு பக்கமென எமது மக்கள் பட்ட வேதனைகள் எழுத்தில் வடிக்க முடியாதவை. அவற்றுக்குள்ளும் நிமிர்ந்து நின்று அப்போரை வென்றார்கள். அந்த ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்ட நாள் தான் மே 13.

1997 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி, நாள் நேரம் பார்த்து புத்த பிக்குகளால் பிரித் ஓதி ‘கோலாகலமாக’த் தொடங்கி வைக்கப்பட்டது இந்நடிவடிக்கை. (the date was chosen as it was said to be auspicious, according to the Sinhala Buddhist calendar). தொடக்கத்தில் 20000 இராணுவத்தினருடனும் பெருமளவு டாங்கிகள், ஆட்லறிகளுடனும் தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்ட இடம் வவுனியா. போகவேண்டிய இலக்கு, கண்டி வீதியூடாக கிளிநொச்சி. ஏறக்குறைய 70 கிலோமீற்றர்களே இராணுவம் முன்னேற வேண்டிய தூரம். ஏற்கெனவே கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணப்பக்கம் அனைத்துப் பகுதிகளுமே இராணுவத்தின் வசம்தான். நடவடிக்கையிலீடுபடும் இராணுவத்தினரை எதிர்பார்த்து கிளிநொச்சியிலுள்ள இராணுவத்தினர் காத்திருந்தனர். இராணுவப் பேச்சாளரின் தகவலின்படி, இந்நடவடிக்கான காலம் ஆகக்குறைந்தது எவ்வளவு நாளாயுமிருக்கலாம், ஆகக்கூடியது 4 மாதங்களே. போர் நீண்டநாள் நீடிக்காது என்பதே பெரும்பாலான கணிப்பு. ஏனெனில் சற்று முன்தான் வவுனியா மன்னார் வீதியைப் பிடித்து இராணுவம் மேற்கொண்ட படைநடடிக்கை எந்த எதிர்ப்புமில்லாமல் வெற்றி பெற்றிருந்தது. புலிகள் பலமிழந்து விட்டார்கள் அல்லது இந்த நடவடிக்கையை எதிர்க்க பலம் போதாது என்று சிலர் கணித்தனர். அபபடிப் போரிட்டாலும் எத்தனை காலத்துக்குத்தான் போரிடுவர் என்ற கேள்வியும் எழுந்தது.ஆனால் புலிகளும் தம்மை நிறையவே தயார்ப் படுத்தியிருந்தனர். தென்தமிழீழத்தில் இருந்து ஆயிரம் போராளிகள் வரை வந்திருந்தனர். மேலும் பீரங்கியணிகள் உருவாகியிருந்தன. ‘விக்டர் கவச எதிர்ப்பு அணி’ என்ற சிறப்பு அணியும் உருவாக்கப் பட்டிருந்தது. இது இராணுவத்தினரின் அதியுச்ச நம்பிக்கையான டாங்கிகளை அழிக்கவென உருவாக்கப்பட்டது. இதைவிட கிளிநொச்சியைக் கைப்பற்ற இராணுவம் செய்த ‘சத்ஜெய’ இராணுவ நடவடிக்கையை எதிர்கொண்டதில், எப்படி ஒரு மரபுரீதியான வழிமறிப்புச் சமரைச் செய்வது என்று நிறைய அனுபவங்களைப் பெற்றிருந்தனர். அப்போது மட்டக்களப்பிலிருந்து போராளிகளைக் கூட்டி வந்திருந்த கருணாவை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு ஜெயசிக்குறு எதிர்ச்சமரைத் தொடங்கினர் புலிகள்.போர் தோடங்கிவிட்டது. அன்றே தாண்டிக்குளத்தைக் கைப்பற்றிவிட்டனர் படையினர். அதே நேரம் கண்டிவீதிக்குக் கிழக்காக உள்ள நெடுங்கேணியையும் கைப்பற்றினர். ஓமந்தையில் சண்டை நடந்தது. அதுவும் கனநாள் நீடிக்கவில்லை. அதையும் படையினர் கைப்பற்றி விட்டனர். நெடுங்கேணியிலிருந்து புளியங்குளத்துக்கு ஒரு வீதி வருகிறது. அந்த வழியாக நெடுங்கேணியிலிருந்தும் கண்டிவீதி வழியாக ஓமந்தையிலிருந்தும் புளியங்குளத்தை நோக்கிப் படைகள் நகர்ந்தன. புளியங்குளச் சந்தியை அண்மித்து இராணுவம் வழிமறிக்கப்பட்டுக் கடும் சண்டை மூண்டது. மூன்று மாதங்கள் தாண்டியும் புளியங்குளச் சந்தியை இராணுவத்தாற் கைப்பற்ற முடியவில்லை. 'புளியங்குள வெற்றியின் நூறாவது நாள் என்று கொண்டாட்டம் கூட தமிழர்தரப்பால் நடத்தப்பட்டது. புளியங்குளத்தில் எதிர்ப்புச் சமர் கேணல் தீபனின் கட்டளையின் கீழ் நடந்தது. பல தடவைகள் பல வழிகளில் முன்னேறியும் அனைத்தும் முறியடிக்கப்பட்டன. இச்சண்டைகளில் இராணுவத்தின் கவசப் படை பற்றிய கனவுகள் அடித்து நொருக்கப்பட்டன. நிறைய டாங்கிகள் அழிக்கப்பட்டன அல்லது சேதமாக்கப்பட்டன. புளியங்குளத்தைக் கைப்பற்ற முடியாத இராணுவம் சுற்றிவளைத்து காட்டுக்குள்ளால் நகர்ந்தது. இதனால் புளியங்குளத்தை விட்டு புலிகள் பின்வாங்கி கனகராயன் குளத்துக்கு வந்தனர்.கனகராயன் குளத்தைக் கைப்பற்ற இராணுவம் முன்னேறிய போதுதான் பெண்புலிகளின் பெயர் பெற்ற மன்னகுளச் சண்டை நடந்தது. அமெரிக்க ‘கிறீன் பரேட்’ கொமாண்டோக்களால் நேரடியாகப் பயிற்றுவிக்கப் பட்ட சிறிலங்கா இராணுவத்தின் சிறப்பு அணிதான் அந்தச் சண்டையிற் பங்கேற்றது. இந்தா கனகராயன்குளம் விழுந்தது என்று இறுமாப்போடு மகளிர் அணி நின்ற பக்கத்துக்குள்ளால் ஊடறுத்து நுளைந்த இராணுவம் மோசமாக அடிவாங்கித் திரும்பியது. அதில் உதவிகள் கிடைக்கும் வரை தனித்து நின்று சண்டை செய்த ‘நீலாம்பரி’ என்ற பெண்போராளி அனைவராலும் பாராட்டப்பட்டாள். நூற்றுக்குமதிகமான இராணுவ உடல்கள் கைப்பற்றப்பட்டன. இறந்தவர்கள் தொகை முன்னூறுக்கும் அதிகம்.

பின் இராணுவம் மாங்குளம்-ஒட்டுசுட்டான் வீதியிலுள்ள கரிப்பட்ட முறிப்பு எனும் இடத்தில் காட்டுக்குள்ளால் இரகசியமாக வந்து ஏறியது. கனகராயன் குளத்தில் நிலைகொண்டிருந்த புலிகள் அணிக்கு இது மிக ஆப்பத்தானது. எனவே மாங்குளம் சந்திக்கு அணிகள் பின்வாங்கிவிட்டன. மாங்குளத்தைத் தக்க வைக்க தொடர்ந்து சண்டைகள். அதே நேரம் ஒலுமடு கரிப்பட்ட முறிப்பு என்பவற்றிலிருந்து முன்னேறும் படைகளுடனும் தொடர்ச்சியாகச் சண்டைகள். மறிப்புச் சமர் செய்ய வேண்டிய முன்னணிக்களத்தின் நீளம் நன்றாக அதிகரித்திருந்தது.

சம காலத்திலேயே மன்னாரிலிருந்து பூநகரியூடாக பாதையொன்றைத் திறக்க இராணுவம் முயன்று ரணகோச 1,2,3,4 என்று தொடரிலக்கங்களில் நடவடிக்கை செய்தது. அதுவும் மூர்ககமாக முறியடிக்கப்பட்டது. வழிமறிப்புச்சமரின் முன்னணிக் காவலரன் தொடரின் நீளம் மிகவும் அதிகரித்திருந்தது. புலிகளின் ஆட்பலம் இச்சமர்களை எதிர்கொள்ளப் போதாது என்பதே அவர்களின் கணிப்பு. இதைவிட இவ்வளவுநாளும் பேசாமலேயிருந்த கிளிநொச்சி முனையையும் போர்க்களமாக்கியது இராணுவம். அங்கிருந்தும் மாங்குளம் நோக்கி நகர்வு முயற்சிகளைச் செய்தது. திருவையாறுவரை வந்து வன்னியை இரண்டு துண்டாக்கியது. இரணைமடுக்குளத்தின் அணைக்கட்டு மட்டுமே மக்களுக்கான ஒரேயொரு பாதையாக இருந்தது. இது பற்றி ஏற்கெனவே பதிந்தாகிவிட்டது.

இதற்கிடையில் மாங்குள இராணுவம் போய்ச்சேர வேண்டிய கிளிநொச்சியைக் கைப்பற்ற புலிகள் முயன்றனர். 1998 பெப்ரவரியில் நடந்த முயற்சி முழுவதும் கைகூடாத நிலையில் செப்ரம்பர் 98 இல் இது கைகூடியது. ‘ஓயாத அலைகள் 2’ நடவடிக்கையில் கிளிநொச்சி நகரம் முற்றுமுழுதாகப் புலிகள் வசம் வீழ்ந்ததுடன், ஆயிரத்துக்குமதிகமான படையினர் கொல்லப்பட்டனர். அதே நேரம் மாங்குளம் சந்தியை இராணுவம் கைப்பற்றிக் கொண்டது. பின் மிக நீண்டகாலம் நடத்தப்பட்டதாகப் ‘புகழ் பெற்ற’ அந்த ஜெயசிக்குறு நடவடிக்கை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.அதைத்தொடர்ந்து றிவிபல என்ற நடவடிக்கை மூலம் ஒட்டிசுட்டான் இராணுவத்தாற் கைப்பற்றப்பட்டது.

றிவிபல மூலமும் ஜெயசிக்குறு மூலமும் இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக முயன்று இராணுவத்தாற் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களனைத்தும் ஐந்து நாட்களில், ஆம் ஐந்தே நாட்களில் புலிகளால் போரிட்டு மீட்கப்பட்டன. அதைவிட ரணகோச 1,2,3,4 மூலம் கைப்பற்றப்பட்ட பகுதிகள் இரண்டு நாட்களில் அதே நடவடிக்கையில் மீட்கப்பட்டன. ஓயாத அலைகள் மூன்றின் பாய்ச்சல் உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது.

ஜெயசிக்குறு எதிர்ச்சமரின்போது அந்த நடவடிக்கை மீதான எதிர்ப்பு நடவடிக்கைகளைத் தவிர்த்து சில வலிந்த தாக்குதல்களையும் புலிகள் செய்திருந்தார்கள்.

முதலாவது தாண்டிக்குளம் படைத்தளம் மீதான தாக்குதல். (10.06.1997).
இதில் நூற்றுக்கணக்கான இராணுவம் பலி. புலிகளின் முதற் பெண் தரைக்கரும்புலி மேஜர் யாழினி வீரச்சாவு.

இரண்டாவது, பெரியமடுத் தளம் மீதான தாக்குதல்.
இதிலும் இராணுவத்துக்குப் பெரிய இழப்பு. இச்சண்டையின் தளபதி லெப்.கேணல் தனம் வீரச்சாவு.

மூன்றாவது, ஓமந்தைத் தளம் மீதான தாக்குதல். (01.08.1997). இதில் தான் புகழ் பெற்ற ஈழத்துப் பாடகன் மேஜர் சிட்டு வீரச்சாவு.

நான்காவது, கரப்புக்குத்தி, விஞ்ஞானகுளம் மீதான தாக்குதல். நூற்றுக்கணக்கான இராணுவம் பலி. ஏகப்பட்ட ஆயுததளபாடங்கள் அள்ளப்பட்டன. ‘ஜெயசிக்குறு நாயகன்’ எனப்படும் தென்தமிழீழத்தைச் சேர்ந்த லெப்.கேணல். சந்திரகாந்தன் வீரமரணம். ஜெயசிக்குறு பற்றிக் கதைக்கும் எவரும் சந்திரகாந்தனை விட்டுவிட்டு எதுவும் சொல்லமுடியாதபடி அவனது பணிகள் அந்த எதிர்ப்புச் சமரில் விரிந்து கிடக்கும்.


2002 இல் பன்னாட்டுப் பத்திரிகையாளர் சந்திப்பில் பிரபாகரனிடம் கேட்கப்பட்ட கேள்வியொன்று, “உங்கள் இராணுவ வெற்றிகளில் முதன்மையானது என நீங்கள் கருதுவது எதை?”
பெரும்பாலானோர் கருதியது ஆனையிறவு வெற்றியைத்தான்.
ஆனால் அவர் சொன்னது ஜெயசிக்குறு எதிர்ச்சமரைத்தான். அந்தளவுக்கு ஈழப்போராட்டத்தில் தவிர்க்க முடியாத பங்கை இச்சமர் பெற்றுக்கொண்டது.

இச்சமரில்தான் புலிகளின் பிரமாண்ட வளர்ச்சி தெரியும். சமர் தொடங்கும்போது எத்தனைநாள் தாக்குப்பிடிப்பார்கள் என்ற கேள்வியுடன் தான் தொடங்கியது. ஆனால் அச்சமர் முடிவதற்குள் அவர்கள் அடைந்த வளர்ச்சி பிரமிக்கத்தக்கது. பீரங்கிச்சூட்டு வலிமையை எதிரிகளே பாராட்டுமளவுக்கு வளர்த்தெடுத்தார்கள். எந்தச் சந்தர்ப்பத்திலும் தம்மால் ஒரு முறியடிப்புச் சமரைச் செய்ய இயலுமென நிரூபித்துக்கொண்டார்கள். வலிந்த சண்டைகளையும் இடையிடையே செய்து தமது போர்த்திறனை வளர்த்துக்கொண்டார்கள். அதன்பின்னான அவர்களது வெற்றியெல்லாம், குறிப்பாக காட்டுப்போர்முறையில் அவர்களடைந்த வெற்றியெல்லாம் ஜெயசிக்குறு தந்த பாடமே. ஓயாத அலைகள் மூன்றில் அந்த மின்னல்வேக அதிரடியில் நூற்றுக்கணக்கான சதுர கிலோமீற்றர்களை ஐந்தே நாளில் கைப்பற்றுவதற்கான பட்டறை இந்த ஜெயசிக்குறுச் சமர்தான். மேலும் ஆனையிறவு வெற்றியாகட்டும், இறுதி வழிமறிப்புச் சமரான தீச்சுவாலையாகட்டும் எல்லாம் ஜெயசிக்குறுவின் பாடங்கள்தாம்.

இக்காலகட்டத்தில் மக்கள் பட்ட கஸ்ரங்கள் சொல்லி மாளாது. ஒருமுறை இடம்பெயர்வது, பின் அந்த இடத்தை இராணுவம் நெருங்க மீண்டும் இடம்பெயர்வது. இப்படி இடப்பெயர்வே வாழ்க்கையாகிப்போனது. வெளியுலகத்துக்கு என்ன நடக்கிதென்றே தெரியாமல் இருட்டடிப்புச் செய்யப்பட்டது. இந்தியாவுக்குச் செல்லும் அகதிகள் நடுவழியில் படகு கவிழ்ந்து நூற்றுக்கணக்கில் மாண்ட சம்பவங்களும் இந்தக் காலப்பகுதியில்தான். அத்தனைக்குள்ளும் புலிகளுக்குத் தோள்கொடுத்து விடுதலைப்போரை வெல்ல துணைபோனவர்களும் இதே மக்கள்தான்.

இந்த வழிமறிப்புச் சமர்க்காலத்தில் ஒரே போராளி பலதடவைகள் காயப்பட்டிருப்பார். 3 முறை காயப்பட்டவர்களைப் பார்க்கலாம். அதாவது காயம் மாறி மீண்டும் களம் சென்று, பின் மீண்டும் விழுப்புண்ணடைந்து, குணமாகி, மீண்டும் களம் சென்று…. இப்படி. எல்லைக் காவலரணே வாழ்க்கையாக்கி வருடக்கணக்கில் நின்று சண்டை செய்து நிலம் காத்தார்கள் அப்புலிவீரர்கள். மழையிலும் சேறிலும் நின்று எல்லை காத்தனர் அவ்வீரர்கள்.

வீட்டிலிருந்து போராட்டத்துக்கென சென்று 3 மாதத்திலேயே வித்துடலாக வீடுவருவார்கள். இப்படியான சம்பவங்களும் நடந்தன. பாடகர் சாந்தனின் மகனொருவரும் (கானகன்) இவ்வாறுதான் போய் சில நாட்களிலேயே வீரச்சாவு. புலிகளிடத்தில் ஆட்பற்றாக்குறை இருந்தது.

ஜெயசிக்குறு சமரின்போது விசுவமடுப் பகுதியில் மாவீரர் துயிலுமில்லமொன்று அமைக்கப்பட்டது. வீரச்சாவடையும் தென்தமிழீழப் போராளிகளின் வித்துடல்கள் அங்கேதான் விதைக்கப்படும். இப்போது ஆயிரக்கணக்கில் அங்கே கல்லறைகள் இருக்கின்றன. 2002 இன் மாவீரர் நாளுக்கு தென்தமிழீழத்திலிருந்து முதன்முதல் தமது பிள்ளைகளின் கல்லறைகளைக்காண வந்திருந்த பெற்றோர்களைக் கண்டபோது நெஞ்சு கனத்தது.

ஜெயபாலனின் சொற்களில்,
"வன்னியில்
மயிர் பிடுங்க வந்தோரின்
தலை பிடுங்கி…."
வென்றவரின் கல்லறைகள் அவைகள்.

- வன்னியன் -
Quelle - http://pooraayam.blogspot.com/2005/05/blog-post_111598975121188173.html

Sunday, May 01, 2005

தொழிலாளர் தினம். (Labor Day )

ஆல்பர்ட்,
விஸ்கான்சின், அமெரிக்கா


உலகமெங்கும் "மே" மாதத்தில் தொழிலாளர் தினம் கொண்டாடும்போது ஏன் ? அமெரிக்காவில்... கனடாவில்... மட்டும் செப்டெம்பர் மாதத்தில்.... என்று பலர் புருவங்களை உயர்த்துகிறார்கள்?! அவர்களுக்காக இந்தக் கட்டுரை சமர்ப்பணம்.....!

இன்றைக்கு அரசாங்க அலுவலகமாகட்டும் அல்லது தனியார் தொழில் நிறுவனமாகட்டும் காலையில் 8 மணிக்கு அல்லது 9மணிக்கு வேலைக்குப் போனால் எட்டு மணி நேர வேலையை ( கொட்டாவி விடுறது... குட்டித்தூக்கம் போடுறது... சாப்பாடு.... டீக்கடையில் கொஞ்ச நேர அரட்டை... அலுவலக நேரத்தில் ம்ம்ம்... அப்பறம் நேத்து அந்தப்படத்துக்கு டிக்கெட் கெடச்சதா", " என்னாச்சு... வீரப்பனோட லேட்டஸ்ட் நியூஸ் ஏதும் உண்டா " என்ற அலசல் நேரம் உட்பட) ஹாயா முடிச்சுட்டு ஜோரா வீட்டுக்குத் திரும்பிடுறோம்.

மேனேஜரோ இல்ல மத்தவங்களோ மாலை 5 மணிக்கு அந்த? பைலை கொஞ்சம் பாத்துக் குடுக்க முடியுமா? என்று கேட்டால் இன்னைக்கு டயமாயிடுச்சு எல்லாம் நாளைக்குத்தான் என்று ஜம்பமாகச் சொல்லிவிட்டு கிளம்பிவிட முடிகிறது. மீறிக் கேட்டால் தகராறு... யூனியன், தொழிற்சங்கம் ஸ்டிரைக் என்ற மிரட்டல் எல்லாம் கூட வெளிப்படும். காரணம். இன்றைக்கு 8 மணி நேர வேலை என்பது உத்திரவாதப் படுத்தப்பட்ட ஒன்று.

நூறு... நூத்தம்பது வருஷத்துக்கு முன்பு என்றால் இப்படி எல்லாம் சொகுசாக வேலை பார்க்க முடியுமா? 16 மணி நேரம் 17 மணி நேரம் என்று உழைத்து ஒடாய்த் தேய்ந்த நம் முன்னோர்கள் புயலெனப் பொங்கி எழுந்து உழைப்பவர்களூக்கு உரிய உரிமை வேண்டும் என்று கண்ணீரும் செந்நீரும் சிந்தியதால் தான் இன்றைக்கு நாம் 8 மணி நேர வேலை என்ற சுகத்தை அனுபவிக்கிறோம். உரிய ஊதியம், சிறப்பு ஊதியம், சம்பளத்துடன் கூடிய விடுப்பு, பிரசவகாலச் சலுகைகள், இன்ன பிற சலுகைகள் என்று சுகம் காண்கிறோம்.

அன்று...1863களில்...

அமெரிக்காவில் நியூயார்க் நகர வீதிகளில் 11 வயதுச் சிறுவன் ஒருவன் கைகளில் நாளிதழ்களைச் சுமந்துகொண்டு விடிந்தும் விடியாத காலைப் பொழுதுகளில் வாய் வலிக்கக் கத்தி விற்பான். கடைசி நாளிதழ் விற்றானதும் தயாராகத் தோளில் தொங்கவிட்டிருக்கும் பையில் அவனது அடுத்த வேலை ஆரம்பமாகிவிடும்.

அவசரவசரமாக அலுவலகம் போவோரை, அய்யா ஒங்க ஷுவுக்கு கொஞ்சம் பாலீஷ் போட்டு விடுறேன், குடுக்குற காசைக் குடுங்கய்யா..." என்ற கெஞ்சலோடு, அவனுடைய ஷுபாலீஷ் வேலை நடக்கும். ஒருவாறு இந்த வேலையை எல்லாம் முடித்துக்கொண்டு வெவ்வேறு தெருவில் உள்ள நாலைந்து கடைகளுக்கு அடுத்தடுத்துச் சென்று பம்பரமாகக் கூட்டிப் பெருக்கி அங்குள்ள பொருட்கள் மேலுள்ள தூசி துடைத்து ஒழுங்காக அடுக்கி வைக்கவேண்டும்.

காலை நாலு மணிக்குத் துவங்கி பத்துமணிக்குள் இத்தனை வேலைகளையும் முடித்துவிட்டு அப்பாடா என்று அவனால் ஒரு நிம்மதிப் பெருமூச்சுகூட விடமுடியாது. ஒரு சில கடைகள், ஒரு சில அலுவலகங்கள் தருகிற கடிதங்களை எடுத்துக்கொண்டு அந்தந்த முகவரியைத் தேடிக்கண்டுபிடித்து அந்தத் தபால்களைப் பட்டுவாடா செய்யவேண்டும். இடைப்பட்ட நேரத்தில் ஒரு ரொட்டியை வாயில் போட்டு தண்ணீர் குடித்து காலைக்கும் மதியத்துக்குமான வயித்துப்பாட்டை சரி செய்துகொள்வான். இவ்வளவு பாடும் அவனுடைய அம்மா மற்றும் ஆறு சகோதர சகோதரிகளுக்காக கால்களில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு பறந்த அந்தச் ஐரிஷ் சிறுவனின் பெயர் பீட்டர் மெக் குரி ! ( Peter Mc Guire ) .

டிஸ்மிஸ்...

19ம் நூற்றாண்டுத் துவக்கத்தில் ஐரோப்பிய நாடுகளில் இருந்து புலம் பெயர்ந்து வந்தவர்கள் நியூயார்க் நகரில் காலூன்றத் துவங்கிய நேரம். அவர்கள் தங்கள் நாடுகளைவிட்டு வெளியேறி வேறு ஒரு சுவர்க்கபுரிக்குப் போகப்போகிறோம் என்ற கனவோடு இவர்கள் நியூயார்க் நகரில் கால் பதித்தபோது அவர்களின் கனவு நொறுங்கித்தான் போனது.

ஆறு குடும்பங்கள் ஒரு குடும்பம் மட்டுமே வசிக்கக்கூடிய ஒரு வீட்டில் நெருக்கியடித்து மூட்டை முடிச்சுகளாய் மாறியிருந்தனர். இரவு எப்போது ஒழியும் என்று காத்திருந்தது போல விடிந்தும் விடியாத... புலர்ந்தும் புலராத வெளையில் வீட்டைவிட்டு வெளியேறும் இவர்களின் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பீட்டரைப்போல வேலை தேடி தெருக்களில் வலம் வந்தனர்.

இவர்களுக்கு கிடைக்கும் வேலைகள் எளிய வேலைகள் அல்ல; வேலைத் தரம் மிக மோசமாக இருந்தது. புலம் பெயர்ந்துவந்த ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் 10 மணி நேரம், 12 மணி நேரம், 14 மணி நேரம் என்று வேலை பார்க்க கட்டாயப்படுத்தப்பட்டனர். இடைப்பட்ட நேரத்தில் சாப்பிட மிகக்குறைந்த நேரமே கொடுக்கப்பட்டது. வேலை செய்யக்கூடிய நிலையில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சரியான நேரத்துக்கு வேலைக்கு வராவிட்டால் "டிஸ்மிஸ்" தான். உடல்நிலை சரியில்லை என்றாலும் அவர்களுக்கு ?இரக்கம் காட்ட அங்கே யாரும் இல்லை. திண்ணை எப்போது காலியாகும் என்பது போல வேலை இல்லாமல் காத்திருக்கும் ஆயிரக்கணக்கானவர்கள் இவர்கள் இடத்தைக் கைப்பற்றக் காத்துக்கிடந்தார்கள்.

தொழிற்சங்கம்...

பீட்டருக்கு 17 வயாதானபோது ஒரு பியானோ கடையில் வேலைக்குச் சேர்ந்தான். இது அவன் பார்த்த மற்ற வேலைகளை விடப் பரவாயில்லாமலிருந்தது. இருந்தாலும் குறைந்த ஊதியத்தில் அதிக நேரம் வேலை பார்க்கவேண்டிய சூழ்நிலையே இருந்தது. இரவு நேரங்களில் பொருளாதாரம் மற்றும் சமூக சிந்தனை குறித்த வகுப்புகளுக்கும் கூட்டங்களுக்கும் சென்றான். இதில் அவனைக் கவர்ந்த விஷயம் தொழிலாளர்களின் வேலைத் தரம் பற்றியதாகும். நிச்சயமற்ற வேலைகளாலும், மிகக் குறைந்த சம்பளத்தாலும், நீண்ட நேரம் வேலை பார்ப்பதாலும் தொழிலாளர்கள் உற்சாகமிழந்து சலிப்புற்ற நிலையில் களைப்படந்து போய் இருந்ததை பீட்டர் உன்னிப்பாக கவனித்தான். இந்த நிலை மாற என்ன செய்வது என்று தொழிலாளர்கள் தங்களுக்குள் பேசிப்பேசி தீர்வு கிடைகாமல் உழல்வதையும் பீட்டர் கவனிக்கத் தவறவில்லை.

தொழிலாளர்களின் வாழ்வில் ஒரு வசந்தமாக அந்த வசந்தகாலம் மலரத் துவங்கிய 1872ல் பீட்டர் நியூயார்க் நகரின் மூலை முடுக்கிலிருந்த தொழிலாளரை எல்லாம் ஒன்று படுத்தி தொழிலாளர்களுக்காக ஒரு தொழிற் சங்கம் வேண்டும் என்று பேசிய அவன் சொற்பொழிவுகளுக்கு கூட்டம் சேர்ந்தது. ஏப்ரல் மாதத்தில் நியூயார்க் நகரம் கண்டிராத வகையில் பீட்டர் தலைமையில் ஒரு லட்சம் தொழிலாளர்கள் திரண்டனர். நீண்ட வேலை நேரத்தைக் குறைக்கவேண்டும் என்ற அவர்கள் பேரணிக் கோஷம் தொழிலதிபர்களுக்கு பேரிடியாக இருந்தது.

தொழிலாளர்களுக்கு ஒரு இயக்கம் தேவைதான் என்ற நிலையை இந்தப் பேரணி ஏற்படுத்தியது. எதிர்காலத்தில் தொழிலாளர்களின் உரிமைகளைப் பேணிக்காக்க ஆங்காங்கே தொழிற்சங்க அமைப்புகளையும் பேரமைப்பையும் தோற்றுவிக்கவேண்டிய அவசியம் பற்றி தொழிலாளர்கள் மத்தியில் பீட்டர் பேசிய பேச்சுகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. வேலையில்லாத் திண்டாட்டம் போக்கவும் அவர்களுக்கு நிவரணத் தொகை வழங்க வேண்டுமென்றும் அரசிடம் கோரிக்கைகளை பீட்டர் முன் வைத்தபோது அரசு அதை அலட்சியப்படுத்தியது. மாறாக " பொது மக்களின் அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்துகிற நபர் " என்ற முத்திரை குத்தப்பட்டார்.

பீட்டர் பார்த்த வேலையும் சில விஷமிகளால் பறிபோனது. தொழிலாளர்களை ஒன்று படுத்தி இயக்கம் உருவாக்குவதில் முன்னிலும் முனைப்போடு ஊர் ஊராக பயணம் செய்து தொழிலாளர்கள் மத்தியில் பேசி தொழிற்சங்கம் துவங்கக் கோரினார்.

1881ல் பீட்டர் மிசூரி மாநிலத்தில் (Missouri State ) உள்ள செயிண்ட் லூயிஸில் குடியேறினார். அங்குள்ள தச்சுத் தொழிலாளர்களை ஒன்று திரட்டி தொழிற்சங்கம் ஒன்றைத் துவக்கினார். தொடர்ந்து தேசிய அளவில் ஒரு மாநாட்டை சிகாகோ நகரில் கூட்டி தேசிய அளவிலான தச்சுத் தொழிலாளர் அமைப்பை உருவாக்கினார். இவ்வமைப்புக்கு பீட்டரையே பொதுச்செயலராகத் தேர்ந்தெடுத்தனர்.

எட்டு மணி நேர வேலை...

இந்த ஒற்றுமையான தேசிய அளவிலான தொழிலாளர் இயக்கத்தைக் கண்ட அமெரிக்க மாநிலங்களில் உள்ள பிற தொழிலாளர்களிடமும் ஒரு உற்சாகம் பிறந்தது. காட்டுதீ போல பரவிய இந்த உற்சாகம் ஆலைத் தொழிலாளர்கள், பிற தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களும் ஆங்காங்கே தொழிற்சங்கங்களை உருவாக்கி எல்லோரும் பீட்டரின் வழியில் 8 மணி நேர வேலை, வேலைப் பாதுகாப்பு போன்ற சலுகைகளைக் கோரி கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர்.

பீட்டர் மற்ற தொழிற்சங்கத்தினரோடு கூட்டுக் கூட்டங்கள் நடத்தி செப்டம்பர் மாதத்தின் முதல் திங்கட்கிழமையை தொழிலாளர்களுக்கான விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டுமென்று அரசை வற்புறுத்தும் வகையில் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவந்தார். இந்த நாள் அமெரிக்கச் சுதந்திர தின நாளுக்கும் நன்றி கூறும் நாளுக்கும் இடையில் அமையவேண்டுமென்றும் குரல் கொடுப்போம் என்றார் பீட்டர்.

1882ம் ஆண்டு செப்டெம்பர் 5ம் நாள் திடீரென்று நியூயார்க் நகரில் 20 ஆயிரம் பேர்கள் அடங்கிய தொழிலாளர் தின பேரணி ப்ராட்வேயில் துவங்கியது. அவர்கள் தாங்கி வந்த பதாகைகளில், "எட்டுமணி நேர வேலை! எட்டுமணி நேரம் ஓய்வு! எட்டுமணி நேரம் பொழுதுபோக்கு!" (" LABOR CREATS ALL WEALTH " என்றும் "EIGHT HOURS FOR WORK, EIGHT HOURS FOR REST, EIGHT HOURS FOR RECREATION !") என்ற வாசகங்கள் அமெரிக்கத் தொழிலாளர்களை வசீகரிக்கும் மந்திரச் சொல்லானது.

பேரணி முடிந்ததும் தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக விருந்துண்டு
மகிழ்ந்தனர். அன்றிரவு வானவேடிக்கைகள் நியூயார்க் நகரையே வெளிச்ச பூமியாக்கியது. இந்த வெளிச்சம் அமெரிக்கா முழுவதும் உள்ள தொழிலாளர்கள் மனதில் பிரகாசித்தது. அரசு அறிவிக்காவிட்டால் என்ன? நமக்கு நாமே விடுமுறை எடுத்துக்கொண்டு தொழிலாளர் தின பேரணி நடத்துவோம் என்று ஒவ்வொரு மாநிலத் தொழிலாளர்களும் அடுத்த ஆண்டிலிருந்து வேலைக்குச் செல்லாமல் தொழிலாளர் தினம் கொண்டாடினர்.

1894 ல்.....

அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் என்பார்களே அதுபோல அரசாங்கம் ஒருவழியாக அறிவித்தது. 1894ல் காங்கிரசு ஓட்டளிக்கவே அமெரிக்கக் கூட்டரசு செப்டெம்பர் மாத முதல் திங்கட்கிழமை நாளை அரசு விடுமுறை நாளாக அறிவித்தது.

இன்றைக்கு அமெரிக்கா, கனடா நாடுகளில் செப்டெம்பர் முதல் திங்கட்கிழமையை தொழிலாளர் தினமாகக் கொண்டாடுகின்றனர். பல மாநிலங்களில் தொழிலாளர் தினப் பேரணிகள் கலை நிகழ்ச்சிகள் நடை பெறுவதும் தொழிலாளர்கள் கூட்டமாக ஓரிடத்திற்கு பிக்னிக் போலச் சென்று உல்லாசமாகக் கழிப்பதும் வருடந்தோறும் நடந்தேறுகிற நிகழ்வாகிவிட்டது. அரசியல்வாதிகள் கூட தங்கள்? இயக்க நடவடிக்கை களை மூட்டை கட்டி வைத்துவிட்டு இந்த நாளில் பேரணி நடத்துவதும் வழக்கமாகிவிட்டது.

பொதுவாக அமெரிக்கர்கள் தொழிலாளர் தினத்தை கோடைகாலத்தின் கடைசி நீண்ட விடுமுறை நாளாகக்கருதி பீச்சுகளிலும் புகழ்பெற்ற ஓய்விடங்களிலும் குவிந்து உல்லாசத்தின் உச்சிகளுக்குச் சென்று மகிழ்ச்சிக் கடலில் நீந்துவது வழக்கம். ஒரு நாட்டின் பொருளாதாரம் கொழிக்க உழைப்பவர்கள் தொழிலாளர்கள்!

தொழிலாளர்கள் என்ற இயந்திரம் சீராக பழுதின்றிஈ?யங்கிட அவர்கள் உற்சாகம் பெற ஒரு நாள் விடுமுறை என்ற அங்கீகாரம் நாட்டுக்கு நாடு வேறுபட்டாலும் அதற்கு மூலகர்த்தாக்களாக செயல் பட்ட பீட்டர் போன்றவர்களை இந் நாளில் நினைவு கூர்வது நாம் அவர்களுக்குச் செய்யும் மரியாதை.... இல்லையா?

Quelle - e Sangamam

Sunday, April 24, 2005

தந்தை செல்வா

- தமிழ்வாணன் -

எதிர்வரும் 26 ம்திகதி(April 26) தந்தை செல்வா அவர்களின் 28 ஆவது ஆண்டு நினைவுதினம் தமிழீழ தாயக பிரதேசங்களில் எழுச்சியாக கொண்டாடப்படஇருக்கிறது.

இலங்கைத்தமிழர்களின் வாழ்வில் அனைவராலும் போற்றப்பட்ட தன்னலமற்ற அரசியல்வாதி என்ற பெருமை அவரையே சேரும். தந்தை செல்வா என எல்லோராலும் அழைக்கப்பட்ட சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் 1898 மார்ச் மாதம் 31 ஆம் திகதி மலேசிய மண்ணில் பிறந்தார். பின்னர் தமிழீழதாயகத்தில் தனது உயர்தரக்கல்வியை நிறைவு செய்து, அவரது 19 வது வயதில் விஞ்ஞான பட்டதாரி ஆனார்.

பின்னர் சட்டத்துறையில் இருந்த ஈடுபாடு காரணமாக சட்டத்துறை கற்று 1927 இல் சட்டத்தரணியானார். இவர் ஒரு கிறிஸ்தவனாக இருந்தபோதும் தனது திருமணத்தின்போது தமிழர்களின் கலாசார உடையான வேட்டி சால்வையே அணிந்திருந்தார். அடிப்படையிலே தமிழ்த்தேசிய உணர்வுமிக்கவராக இவரது செயற்பாடுகள் ஒவ்வொன்றும் அமைந்திருந்ததை அவரது வரலாறுகள் மூலம் அறிய முடிகிறது.

இவ்வாறு ஒருதடவை, வெஸ்லி கல்லூரியில் கல்வி கற்பிக்க செல்லும்போதும், இவர் வேட்டி சால்வை அணிந்து சென்றதால், அது தொடர்பாக கல்லூரி அதிபர் அதிருப்திப்பட்டபோது, தனது தொழிலையே இராஜினமா செய்தார்.

1949 டிசம்பர்மாதம் 18 ஆம் திகதி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரானார். காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றியீட்டிய அவர் பதவிகளுக்காக அரசியலில் காலம் கடத்த விரும்பியிருக்கவில்லை. 1956 ஆம் ஆண்டு சிறிலங்கா அரசால் சிங்கள மட்டும் சட்டம் கொண்டுவரப்பட் டது. இதன்காரணமாக, தமிழர்களாக இருந்தாலும் அலுவலக கடமை எவற்றையும் சிங்களத்தில் செய்யவேண்டிய நிர்ப்பந்தம் உருவானது. அதனை எதிர்த்து, காந்தி காட்டிய பாதையில், சத்தியாக்கிரக போராட்டம் காலிமுகத்திடலில் தந்தை செல்வாவின் தலைமைலையில் இடம்பெற்றது.

தொடர்ச்சியான அமைதியான இத்தகைய போராட்டங்களால் எஸ்டபிள்யூஆர்டி பண்டாராநாயக்கா - செல்வா ஒப்பந்தம் கைச்சாத்தானது. இதனை ஏற்றுக்கொள்ளாத சிங்களமக்களில் ஒரு பகுதியினர் ஜேஆர் ஜெயவர்த்தனா தலைமையில் ஊர்வலம் நடத்தினர். இதன் தொடர்ச்சியாக அவ் ஒப்பந்தமும் நடைமுறைப்படுத்தாமல் கிழித்தெறியப்பட்டது.

பின்னர் ஆட்சிக்கு வந்த டட்லிசேனநாயக்காவுடனும் டட்லிசேனநாயக்கா - செல்வா உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது. அவ் ஒப்பந்தமும் பின்னாளில் நிறைவேற்றப்படாமலே கிடப்பில் போடப்பட்டது.

தமிழீழ மக்களுக்கு சமஸ்டி அடிப்படையில் ஒரு தீர்வை பெற்றுக் கொள்ளவேண்டும் என்பதற்காக, இறுதிவரை உழைத்த அந்த பெரியவர் அமைதியான பேச்சுவார்த்தைகள் மூலம், அது நிறைவேறப் போவதில்லை என்பதை அப்போதே உணர்ந்திருந்தார்.

அவரது பின்னைய பாராளுமன்ற உரையின்போது "நாங்கள் அமைதியாக எங்களுடைய உரிமைகளை கேட்கும்போது அதனை ஏற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள். ஆனால் அடுத்த சந்ததியும் இவ்வாறு உங்களுடன் பேசிக் கொண்டிருக்க மாட்டாது என்பதையும் அவர்கள் அதற்குரிய முறையிலேயே உங்களை எதிர்கொள்வார்கள் என்பதையும் கூறிக்கொள்ளவிரும்புகிறேன்" என குறிப்பிட்டிருந்தார்.

Quelle - http://thamilsangamam.blogspot.com/2005/04/blog-post_22.html

Thursday, April 07, 2005

முல்லா நஸ்ருதீன் - நகைச்சுவை ஞானி

குறிப்பும் கதைகள் மொழி பெயர்ப்பும்: சங்கரராம சுப்ரமணியன்

இன்றும் உலகம் முழுக்க முல்லாவைப் பற்றிய நூற்றுக்கணக்கான கதைகள் படித்து ரசிக்கப்படுகின்றன. முல்லா நஸ்ருதீன் என்னும் நகைச்சுவை ஞானியை துருக்கியர்களும் கிரேக்கர்களும் ஹோஜா நஸ்ருதீன் என்றழைக்கின்றனர். கஸாக்கியர்களால் அவர் கோஜா நஸ்ரெதீன் என்றழைக்கப்படுகிறார். சிலர், முல்லா நஸ்ருதீன் ஒரு கற்பனை கதாபாத்திரம் எனவும் சொல்கின்றனர். முல்லா நஸ்ருதீன் 1208_ம் ஆண்டு துருக்கிய கிராமத்தில் பிறந்து 1284_ம் ஆண்டுவாக்கில் இறந்துபோனார் என்பது பொதுவான நம்பிக்கை. துருக்கியில் முல்லாவைப் புதைத்த நகரத்தில், ஜூலை 5 முதல் 10 வரை எழுத்தாளர்களும் கலைஞர்களும் தங்கள் படைப்புகளை நிகழ்த்தியும் திரையிட்டும் முல்லாவின் நினைவைக் கொண்டாடும் நிகழ்வு இன்றுவரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அஸர்பைஜானில் முல்லா நஸ்ருதீனின் குட்டிக் கதைகள் இப்போதும் அங்கு நடக்கும் விருந்துகளிலும் குடும்ப நிகழ்ச்சிகளிலும் இயற்கையாகவே பேச்சினூடாக இடம் பெறுகின்றன. சில முக்கியமான அனுபவங்கள் நிகழும்போது சரியான நேரத்தில் முல்லா கதைகளைப் பொருத்திப் பார்க்கும் பழக்கமும் அவர்களிடம் நிலவுகிறது.

முல்லாவின் கதைகள் எல்லாக் காலத்திற்குமானவை. மனிதனின் அடிப்படை இயல்புகளில் உருவாகும் முரண்கள், சமூக நீதியின்மை, வகுப்புப் பிரிவு, சுயநலம், கோழைத்தனம், சோம்பேறித்தனம், அறியாமை, குறுகிய புத்தி இவை எல்லாவற்றையும் முல்லாவின் கதைகள் பரிசீலனை செய்கின்றன. 13_ம் நூற்றாண்டின் பின்னணியில் தேநீரகங்களிலும் பொதுக்குளியலறைகளிலும் சந்தைகளிலும் இக்கதைகள் பொதுவாய் நிகழ்கின்றன. இக்கதைகளிலுள்ள மனித இயல்பைப் பற்றிய முல்லாவின் அவதானிப்புகள் தரிசனத் தன்மையுடையவை. நூற்றாண்டுகள் கழிந்தபின்னும் நம்மைப் பற்றி ஈர்க்கும் காந்தத் தன்மை கொண்டவையாக அவை இருக்கின்றன.

வாழ்க்கையின் எல்லா நிலைகளிலுமுள்ள மனிதர்களும் முல்லாவின் கதைகளில் இடம்பெறுகிறார்கள். யாசகர், மன்னர், அரசியல்வாதி, குமாஸ்தா, அறிஞர், வியாபாரி... முல்லாவின் மனைவியும் கழுதையும் அவருடைய நிரந்தரமான உதவியாளர்கள். முல்லா கதைகளில் முல்லா முட்டாள்போல் தோற்றமளித்தாலும் அவை தந்திரமாக மற்றவர்களின் முட்டாள்தனத்தை அவிழ்த்து விடுவதாகவே இருக்கின்றன. வாய்மொழியாக ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு பரப்பப்பட்ட முல்லாவின் கதைகள் கீழைத்தேய நாட்டுப்புறவியல் கதை மரபில் மிகப் புகழ்பெற்ற அங்கத நகைச்சுவைக் கதைகள். முல்லா நஸ்ருதீன் தன் சமாதியிலிருந்து கூட நகைச்சுவையை எழுப்புபவர்.

முல்லா தனது உயிலில் தன் சமாதி மீது பூட்டிய கதவு ஒன்றைத் தவிர வேறெதுவும் இடம்பெறக் கூடாதென்றும், பூட்டிய பின்பு சாவிகளை சமுத்திரத்தில் எறிந்து விட வேண்டுமென்றும் விருப்பப்பட்டார். ஏன் அவர் அப்படிச் சொன்னார்? இன்னமும் மக்கள் அவர் சமாதியைப் பார்க்கின்றனர். கதவைச் சுற்றிச் சுற்றி வருகின்றனர். அங்கே சுவர்கள் இல்லாமல் ஒரு கதவு மட்டும் பூட்டப்பட்டு நிற்கிறது. முல்லா நஸ்ருதீன் சமாதிக்குள், நிச்சயமாய் சிரித்துக் கொண்டுதான் இருக்க வேண்டும்.

இந்த பிரபஞ்சத்தில் ஒரு சிறிய காலகட்டத்திற்குள் வாழ்ந்து மடிந்து போகும் மனிதன், தன் வாழ்வை நகர்த்த எத்தனை எத்தனை அல்பமான காரியங்களில் ஈடுபடுகிறான் என்பதை தெரிவிப்பவை முல்லாவின் கதைகள். முல்லாவின் கதைகளில் முல்லாவும் எல்லா மனிதர்களைப் போல்தான் தன் கதைகளில் நகையாடப்படுகிறார். சில அபத்தத் தருணங்கள், முரண்களில் எளிய உண்மைகளை சத்தமின்றி சொல்லிப் போகிறது முல்லாவின் கதைகள்.

முல்லாவின் நவீன தொடர்ச்சியெனப் பார்த்தால் வைக்கம் முகம்மது பஷீரிடம் அந்த இயல்புகளைக் காணமுடியும். பஷீரின் கதை சொல்லி உடலும், எல்லா மனிதர்களின் அல்பத் தனங்களோடும், சிறிய எண்ணற்ற தந்திரங்கள், மனத்தடைகளில் திளைப்பவையே. ஆனால் கதைக்குப் பின்னால் உள்ள பஷீரின் கண்கள், உடல் ஏந்தியிருக்கும் களங்கம் எதையும் ஏற்காதவை. எக்காலத்திலும் நடந்து கொண்டிருக்கும் மனித நாடகத்தை ரசிப்பவை. அதன் மேல் ஒரு புன்னகையை பரவவிடுவதன் மூலம் உலகை எல்லா களங்கங்களோடும் ஏற்றுக்கொண்டு, ஆற்றுப்படுத்தும் வல்லமை கொண்டவை. பஷீரின் இப்புன்னகைதான் அவரின் விமர்சனமும். அவரது ‘பாத்துமாவின் ஆடு’ கதையில் கதை சொல்லி எல்லோரையும் ஏமாற்ற முயல்கிறார். ஏமாற்றப்படுகிறார். நடுவில் உலவும் ஆடு எல்லாவற்றையும் சமன் செய்யும் உயிரியாக வீடு முழுவதும் அலைந்து கொண்டிருக்கிறது. அது அபோதத்தில் பஷீரின் சில புத்தகங்களையும் தின்றுவிடுகிறது. பஷீரின் புன்னகை எல்லாவற்றின் மீதும் படர்ந்திருக்கிறது. உடலின் மரணத்திற்குப் பின்னும் இமை திறந்தால் உயிர்த்திருக்கும் விழிகள் போன்றது பஷீரின் அப்புன்னகை.

ஓஷோ, முல்லாவின் கதைகளில் சிறந்தவற்றைத் தொகுத்து ஒரு முன்னுரையும் எழுதியிருக்கிறார். அதில் சில கதைகளும் வண்ணமயமான சித்திரங்களும், ஓஷோவின் குறிப்பும் வெளியிடப்பட்டுள்ளன. ‘‘முல்லா நஸ்ருதீனின் மேல் எனக்கிருக்கும் விருப்பம், இந்த உலகின் யார் மீதும் இல்லை’’ என்கிறார் ஓஷோ. அவரது எல்லா பேச்சுகளிலும் முல்லா நஸ்ருதீன் இடம் பெறுகிறார். ஓஷோ முல்லாவைப் பற்றி பேசும்போது, ‘‘மதத்தையும், சிரிப்பையும் ஒருங்கிணைத்தவர் முல்லா நஸ்ருதீன். அதுவரை மதமும், நகைச்சுவையும் ஒன்றுக்கு எதிரான ஒன்றாகவே இருந்தன. அதன் பழைய பகைமை மறந்து மதத்தையும், நகைச்சுவையையும் சேர்த்து நண்பர்களாக்கிய சூஃபி முல்லா நஸ்ருதீன். மதமும் சிரிப்பும் சந்திக்கும் போது, தியானம் சிரிக்கும்போது, சிரிப்பு தியானமாகும் போது அற்புதங்களுக்கு மேலான அற்புதம் ஒன்று நிகழ்கிறது. இந்தியர்கள், கடவுள் மற்றும் பிற விஷயங்களில் மிகத்தீவிரமாக இருப்பவர்கள். அங்கு சிரிக்கும் கௌதம புத்தாவைப் பற்றி யோசிக்க இயலாது. சங்கராச்சாரியார் சிரிப்பதோ, மகாவீரர் சிரிப்பதோ அசாத்தியமான காரியம்’’ என்கிறார்.

கள்ளமற்ற சிரிப்பு என்பது வித்தியாசமானதொரு அனுபவம். அது களைப்பாற்றும் எந்திரவியல் மட்டும் அல்ல. அது ஒரு வாழ்க்கை முறை. இந்தியர்களின் நகைச்சுவை பற்றிப் பேசும் குஷ்வந்த் சிங், ‘‘இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் மற்றவர்களைப் பார்த்து நன்கு சிரிக்கத் தெரிந்தவர்கள். ஒரு சிலர் மட்டுமே தன்னையே பார்த்து சிரிக்கத் தெரிந்தவர்கள். இதனாலேயே இந்தியர்களிடமிருந்து மகத்தான நகைச்சுவையாளர்கள் யாரும் உருவாகவில்லை. உலகத்தின் மிகச் சிறந்த நகைச்சுவையாளர்கள் என்றால் யூதர்களைத் தான் சொல்வேன். ஹிட்லரும் நாஜிகளும் அவர்களை விஷவாயுக் கிடங்குகளில் அடைத்த கொடுமையான நிலைகளில்கூட ஹிட்லருக்கு எதிரான நகைச்சுவைக் கதைகளை உருவாக்க அவர்களால் முடிந்திருக்கிறது. தத்துவவியலாளர்களில் ஓஷோவுக்கு நல்ல நகைச்சுவைத்திறன் உண்டு. ஓஷோவுக்கு வசீகரமானவராக முல்லா நஸ்ருதீன் ஏன் இருக்கிறார் எனப் பலமுறை யோசித்துள்ளேன். முல்லா தன் கதைகளில் தன்னையே பகடிக்கு உட்படுத்திக்கொள்வதுதான், முல்லா கதைகளின் பிரத்யேக அழகு எனத் தோன்றுகிறது’’ என்கிறார்.

வாழ்க்கையைக் கவனித்துப் பார்த்தால், அது அவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டிய ஒன்றல்ல என்று நமக்குத் தெரியும். சிரிப்பதற்காகவே எஞ்சியிருப்பது. எதையும் வெற்றிகொள்ளவில்லையே என்ற கேள்வியை உங்களிடம் எழுப்பலாம். ஆனால், வெற்றி என்பதன் அர்த்தம் என்ன? ஒருவன் வெற்றி பெற்றவனாகி விட்டாலும் எதை அவன் அடைகிறான்? ஓஷோவின் கேள்வியிலும் புன்னகையே மிஞ்சி நிற்கிறது.

முல்லா கதைகள்

முல்லா ஒரு கழுதையை மிகச் செல்லமாக வளர்த்து வந்தார். அது ஒரு நாள் வெளியே மேயும் போது காணாமல் போய்விட்டது. கழுதை காணாமல் போன தகவலை பதறியடித்துக்கொண்டு முல்லாவிடம் சொல்லிய ஊர்க்காரர்களிடம் முல்லா, ‘‘அப்பாடா... ரொம்ப நல்லதாய்ப் போனது’’ என்றார். ‘‘உங்கள் கழுதை காணாமல் போய் விட்டதென்கிறோம்.. எப்படி அதை நல்லதென்கிறீர்கள்?’’ என்று கேட்டனர். முல்லா, ‘‘நான் அதன்மேல் சவாரி போயிருந்தால் நானும் அதனுடன் காணாமல் போயிருப்பேன்... நல்லவேளை’’ என்றாராம்.

ரு நாள் முல்லாவின் பக்கத்து வீட்டுக்காரர், முல்லாவை அழைத்து, ‘‘உங்கள் கழுதையை இரவல் தர முடியுமா?’’ என்று கேட்டார்.முல்லா, ‘‘முடியாததற்கு வருந்துகிறேன். ஏற்கெனவே கழுதையை வாடகைக்கு விட்டு விட்டேன்’’ என்றார்.முல்லா பக்கத்து வீட்டுக்காரரிடம் இதைச் சொல்லிக் கொண்டிருக்கும் போது முல்லாவின் பின் தொழுவத்திலிருந்து கழுதையின் கனைப்பு கேட்கத் தொடங்கியது. பக்கத்து வீட்டுக்காரர் முல்லாவிடம், ‘‘கழுதை அங்கிருந்து சத்தமிடுகிறதே முல்லா’’ என்றார். உடனே கோபத்துடன், ‘‘என் வார்த்தையை விட கழுதையின் வார்த்தைதான் உனக்கு முக்கியம்... உனக்கு வெட்கமாய் இல்லை’’ என்றார் முல்லா.

ரு ராஜா முல்லாவை தன் அரண்மனைக்கு ஒரு நாள் விருந்துண்ண அழைத்தார். அரசனின் சமையல்காரர் சமைத்த முட்டைக்கோஸ் கறி எல்லாவற்றையும் விட பிரத்யேக சிறப்புடன் சமைக்கப்பட்டிருந்தது. விருந்துக்குப் பிறகு ராஜா முல்லாவிடம் ‘‘முட்டைக்கோஸ் கறி எப்படி இருந்தது?’’ என்றார். முல்லா, ராஜாவிடம் ‘‘மிக ருசியாக இருந்தது’’ என்றார். ராஜா, ‘‘மறக்க இயலாத சுவையென்று நான் நினைத்தேன்’’ என்றார்.

முல்லா கூடுதலாகவே, ‘‘நீங்கள் சொல்வது சரிதான்... தின்னத் திகட்டாத ருசி’’ என்றார். ராஜா முல்லாவிடம், ‘‘ஆனால் நீங்கள் ருசியானது என்று மட்டுமே சொன்னீர்கள்? என்று குறிப்பிட்டுச் சொன்னார்.‘‘உண்மைதான். நான் ராஜாவுக்கு அடிமையே தவிர... முட்டைக்கோஸ§க்கு அடிமை இல்லை’’ என்று முல்லா பதிலளித்தார்.

முல்லாவின் தெருவில் குடியிருக்கும் ஒருவர் முல்லா வீட்டுக்கு வந்தார். ‘‘முல்லா, உங்கள் வீட்டுக் கொடியை எனக்கு இரவல் தரமுடியுமா?’’ என்று கேட்டார்.

முல்லா, ‘‘முடியாது’’ என்றார்.தெருக்காரர், ‘‘ஏன் முடியாதென்கிறீர்கள் முல்லா?’’ என்றார்.

முல்லா, ‘‘கொடியில் மாவு உலரப் போட்டிருக்கிறேன். தரமுடியாது’’ என்றார் முல்லா.

தெருக்காரர், ‘‘கொடியில் மாவை உலரப் போட முடியுமா?’’ என்றார்.

முல்லா, ‘‘இரவல் தருவதை விட அதுவொன்றும் சிரமமான காரியம் இல்லை’’ என்றார்.

முல்லாவின் ஊரில் ஒரு புதிய கட்டடம் கட்டப்பட்டது. அடித்தளத்திற்காகத் தோண்டும்போதும், கட்டுமான வேலையிலும் மண்ணும் கல்லும் பெரிய குப்பையாக தெருவில் குவிந்துவிட்டது. அந்தக் குப்பை ஊரிலுள்ள எல்லாரையும் தொந்தரவு செய்தது. ஒரு நாள் முல்லா அந்தத் தெருவுக்குள் கடப்பாறையுடன் வந்து ஒரு குழி வெட்டத் தொடங்கினார்.

‘‘முல்லா..! ஏன் திடீரென்று இங்கே வந்து குழிவெட்டிக் கொண்டிருக்கிறீர்கள்?’’ என்றார் பாதசாரி ஒருவர்.

‘‘மலைபோல் குவிந்திருக்கும் கட்டடக் கழிவை நான் தோண்டும் குழியில் போட்டு மூடிவிடுகிறதுதான் என் திட்டம்’’ என்றார் முல்லா.

பாதசாரி முல்லாவிடம், ‘‘அப்படியென்றால், இக்குழியை வெட்டும்போது வெளியே குவியும் மண்ணை என்ன செய்யப்போகிறீர்கள் முல்லா?’’ என்றார்.

முல்லா கோபப்பட்டு, ‘‘எல்லாவற்றுக்கும் நானே பொறுப்பாக முடியுமா?’’ என்றார்

Tuesday, February 22, 2005

றம்புட்டான்றம்புட்டான் rambutan இதன் தாவரயியல் பெயர் Nephelium lappaceum. இது Lycheeக்கு நெருங்கிய சகோதரன் என்று சொல்லலாம். பார்ப்பதற்கு வேடிக்கையான தோற்றம் கொண்ட தலையலங்காரம் போல காணப்படும் இதன் பூர்விகம் மலேசியா ஆகும். சுவையில் இதற்கும் Lycheeக்கும் கொஞ்சம் ஒற்றுமை இருந்தாலும் இதுஅதிகளவு சுவையானது
Nantri - Yarl.com & vasisutha

அன்னையர் தினம்

ஆல்பர்ட் ஃபெர்ணாண்டோ,
விஸ்கான்சின்,
அமெரிக்கா.


தாயிற்சிறந்த கோவிலுமில்லை....." என்ற வைரவரிகள் தமிழ் கூறும் நல்லுலகில் பவனி வரும் இரத்தினச் சுருக்கமான வார்த்தை. ஒரு சகோதரியாக, தாயாக, தாரமாக, தோழியாக இல்லத்தில் உள்ளோரைப் பக்குவப்படுத்தும் பாட்டியாக, அனுபவங்களின் அரவணைப்பில் வழி நடத்திச்செல்லும் ஆசானாக. .இப்படிப் பெண் தன் வாழ்நாளில் எத்தனையோ பாத்திரங்களில் வலம் வந்தாலும் அன்னை என்கிற பாத்திரம்தான் மிக உன்னதமான இடத்தை வகிக்கிறது; இப்படிப்பட்ட அன்னையைக் கெளரவிக்கும் வகையில் தற்போது உலகெங்கும் "அன்னையர் தினம் " அகிலமெங்கும் கொண்டாடக் காரணமாக இருந்தவர் பற்றி நாம் சற்றுத் தெரிந்து கொள்வோமா?

எந்தச் செய்திக்கும் ஒரு மூலம் இருக்குமில்லையா? அந்த வகையில் அன்னையர் தினம் முகிழ்க்கக் காரணகர்த்தாவாக இருந்தவரை அறிவது சற்றுப் பொருத்தமாக இருக்கும் இல்லையா?

16ம் நூற்றாண்டில் கிரீஸ் நாட்டில்தான் "MOTHERING SUNDAY" என்ற நாள் முதன்முதலாக அனுசரிக்கப்பட்டிருக்கிறது. ஈஸ்ட்டர் வரும் மாதத்தின் நான்காம் ஞாயிற்றுக்கிழமை இயேசுவின் தாயை நினைவு கூரும் வகையில் இந்த நாள் கொண்டாடப்பட்டு வந்துள்ளது. ஆனால் அமெரிக்காவில் முகிழ்த்த அன்னையர் தினம்தான் இன்றைக்கு உலகெங்கும் கொண்டாடக் காரணமாக அமைந்தது எனலாம்.

"அனா ஜார்விஸ்" என்ற பெண் சமூக சேவகி அமெரிக்காவின் மேற்கு வர்ஜினியா மாநிலத்தில் கிரா?ப்டன் (GRAFTON) என்ற கிராமத்தில் வாழ்ந்தவர். அன்று யுத்த களத்தில் அமெரிக்க வீரர்கள் பலியாயினர். அவர்களின் குடும்பங்களும் சிதைந்து சீரழிந்து நாலாபக்கமும் சிதறிப்போயினர். பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரவும் அவர்களின் நல்வாழ்க்கைக்கும் சமாதானத்திற்கும் அயராது பாடுபட்டவர்தான் "அனா ஜார்விஸ்". அவரின் பார்வையற்ற மகளுடன் தன் இறுதி மூச்சுவரை சமூக சேவகியாகவே வாழ்ந்து 1904ல் மறைந்தார். மகள் ஜார்விஸ் முதன்முதலாக தனது அன்னையின் நினைவாக உள்ளூரில் உள்ள மெத்தடிஸ்ட் சர்ச்சில் 1907ம் ஆண்டு மே மாதம் 10ம் தேதி சிறப்பு வழிபாடு ஒன்றை நடத்தினார்.

1913ம் ஆண்டு தன் பணி நிமித்தம் மகள் ஜார்விஸ் பென்சில்வேனியா மாநிலத்தில் பிலடெல்பியாவில் குடியேறினார். தாயார் விட்டுச்சென்ற சமூக சேவையை மகள் ஜார்விஸ் தன் தனிப்பெரும் கடமையாகக் கருதித் தொடர்ந்தார். கஷ்ட்டப்படுகிற, வாழ்க்கையில் இன்னலும், சோதனைகளும் ஒருசேரத் தாக்கி மனம் வெந்து நொந்து சமூகத்தில் ஓரங்கட்டப் பட்டவர்களுக்கான அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டார். தன் தாயாரின் நினைவாகவும், தத்தம் வீடுகளில் அவரவர் அன்னையர்களும் கெளரவிக்கப் பட வேண்டும். எல்லோர் இல்லங்களிலும் அன்றையதினம் மக்ழிச்சி ததும்ப வேண்டும் என்று எண்ணினார். தம் எண்ணத்தை பென்சில்வேனியா மாநில அரசுக்குத் தெரிவித்தார். அரசும் அவர் கருத்தை ஏற்று 1913ம் ஆண்டு முதல் அன்னையர் தினம் என அங்கீகரித்து அறிவித்தது.

ஆனால், ஜார்விஸ் திருப்தி அடையவில்லை. ஆயிரக்கணக்கில் அரசியல்வாதிகளுக்கும், தன்னார்வ அமைப்புகளுக்கும், வர்த்தக அமைப்புகளுக்கும் கடிதங்கள் எழுதி அமெரிக்கா முழுவதும் "அன்னையர் தினம்" கொண்டாடவும் அந்நாளை அரசின் விடுமுறை நாளாகவும் அங்கீகரித்து அறிவிக்க வேண்டுமென அமெரிக்க அதிபருக்கு வேண்டுகோள் விடுத்தார்.

1914ம் ஆண்டு அமெரிக்க அதிபர் வுட்ரோ வில்சன் வருடம்தோறும் மேமாதம் இரண்டாம் ஞாயிறை அதிகாரப்பூர்வமாக அன்னையர் தினமாகவும், அன்று விடுமுறை தினமாகவும் இருக்கும் அறிவிப்பை வெளியிட்டார். இதனையே கனடா அரசாங்கமும் ஏற்று அங்கீகரித்து அறிவித்தது. அதுமட்டுமல்ல ஆப்கானிஸ்தானத்திலிருந்து கோஸ்டாரிகா வரை 46 நாடுகள் இதே நாளில் "அன்னையர் தினம்" என அறிவித்து நடைமுறைப்படுத்தியது. ஜார்விஸ் அளவற்ற மகிழ்ச்சியடைந்தாலும் முழுமனநிறைவடையவில்லை. உலகமெங்கும் அன்னையர் தினம் கொண்டாடப்பட வேண்டும் என்ற எண்ணத்திற்கு அடுத்த வித்தினை இட்டார்.

எதையும் வியாபாரமாக்கி பணம் பண்ணும் அமைப்பு "அன்னையர் தினம்" அன்று அன்னையின் படம் ஒன்றைப் பொறித்து கொடியன்றை விற்று காசு. ...ஸாரி...டாலர்கள் பார்த்தது. வெகுண்டெழுந்தார் ஜார்விஸ்! 1923ம் ஆண்டு இத்தகைய கொடி விற்பனையை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தார். என்னுடைய நோக்கம் அன்னையர் தினம் "செண்டிமெண்ட்" நாளாக இருக்க வேண்டுமேயல்லாமல் டாலர் தேற்றுகிற நாளாக இருக்கக்கூடாது. இத்தகைய வசூலுக்குத் தடைவித்திக்க வேண்டும் என்று வாதாடி வென்றார்.

உலகம் முழுக்க "அன்னையர் தினம்" அனுசரிக்கப்படவேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் அன்னையைப் போற்றுகிற, வாழ்த்துகிற, மகிழ்விக்கின்ற நாளாக அன்றைய தினம் மலர்ந்து மணம் பரப்ப வேண்டும் என்பதுதான் என் ஆசை என்று தனது 84வது வயதில் தனியார் மருத்துவமனையில் இறப்பதற்கு முன் தன்னைச் சந்தித்த நிருபர்களிடம் வெளிப்படுத்தினார். அவருடைய ஆசை இன்று அனேகமாக பூர்த்தியாகிவிட்டது என்றே சொல்லலாம்.

"அன்னையர் தினம்" மூலம் தெரியாவிட்டாலும், இன்று அகிலம் அன்னையர் தினத்தை அவரவர் இஷ்ட்டத்துக்கு கொண்டாடி மகிழ்கின்ற நாளாகத் திகழ்கிறது. சிங்கப்பூரில் சீனிவாசப் பெருமாள் கோவிலில் மகாலட்சுமிக்கு விசேச வழிபாடு செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுவது இந்த தினத்தில் இன்றும் நடைபெறுவதைக் காணலாம். தீபாவளி, பொங்கல், கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள் போல அன்னையர் தினத்தை வாழ்த்து அட்டைகள், பரிசுப் பொருட்கள் என்று கொண்டாடத் தலைப்பட்டுவிட்டனர்.

கணினியில் தேடுபொறியில் ஆங்கிலத்தில் Mothers day என்று தேடினால் 14,37,306 வலைப்பக்கங்கள் பலவிதமான வியாபார நுணுக்கங்களோடு மிளிர்வதைக் காணலாம்; அன்னையரை வாழ்த்த பூங்கொத்து அனுப்ப! வாழ்த்து அட்டைகள்! அன்னையை அலங்கரிக்க எங்கள் வைர வைடூரிய நகைகளை வாங்கிட! கைக்கெடிகாரம், ஒப்பனைபொருட்கள் பெட்டி... உங்கள் அன்னையை மகிழ்விக்க எங்கள் பரிசுக் கூடைகளை இன்றே வாங்கி அனுப்புங்கள் என்று விதவிதமாக வலையக அங்காடிகள் வகைவகையாய் கண்களைப் பறிக்கும் வண்ணம் கடைவிரித்துள்ளனர்! அன்னையின் உருவப் படத்தைப் போட்டு வணிகம் செய்தவர்களுக்கெதிராக வழக்குத் தொடுத்து வெற்றிகண்ட ஜார்விஸ் அவர்களையும் இந்த நேரத்தில் எண்ணிப்பார்க்கிறோம்.

நாமும் "மூலம்" அறிந்து கொண்டோம். வாயார மனமார வாழ்த்திப் போற்றுவோம் நம் "அன்னையை"

Thursday, February 10, 2005

Lycheeஇதற்கு தமிழ் பெயர் என்னவென்று தெரியவில்லை. இதன் தாவரயியல் பெயர் Litchi chinensis ஆகும். Sapindaceae குடும்பத்தை சார்ந்த இதன் பூர்விகம் சீனா ஆகும். இப்பழத்தில் 24 வகையான இனங்கள் உண்டு.


இப்பழம் அதிகம் விளையும் காலம் மே மாத நடுப்பகுதியில்
இருந்து யூன் நடுப்பகுதி வரையாகும். தெற்கு புளோரிடாவில் இது அதிகளவில் விளைகிறது.

nantri - Vasisutha & yarl.com

பலாப்பழம்தமிழில் பலாப்பழம்.. ஆங்கிலத்தில் Jakfruit என
அழைக்கப்படும் இப்பழத்தின் தாவரயியல் பெயர்
Artocarpus heterophyllus இது Moraceae குடும்பத்தை
சார்ந்த இனம். ஓங்கி உயர்ந்து பரவி வளரும் மரம்..இதனை காயாக இருக்கும் போதும் சமையலுக்காக பயன்படுத்துவர்.
விதைகளும் உணவுப்பொருளாக பயன் படுத்தப்படுகிறது.

nantri - Vasisutha & yarl.com