-தி. தவபாலன்-
3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இரும்பு உருக்கு உலைகள் வன்னியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வன்னியில் கிளிநொச்சி மாவட்டம் அக்கராயன் குளத்தின் அலைகரைப்பகுதியில் இரும்பு உருக்கு உலைகள் 2002 ஆம் ஆண்டு தொல்லியல் தேடலாளர் ந. குணரட்ணத்தினால் கண்டு பிடிக்கப்பட்டது.
வட்டவடிவ இரும்பு உருக்கு உலையின் அடித்தளம் உலையின் ஊதுலையாக இருந்த மண் துருத்திகள், குவியல்களாக இரும்பு கசடுகள் என்பன இப்பகுதியில் கண்டு எடுக்கப்பட்டன. இந்த உருக்குலையின் கசடுகள் வேதியியல் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்ட போது அதில் 68.12 விழுக்காடு இரும்பு இருந்தது உறுதிசெய்யப்பட்டது. இதேபோன்ற இரும்பு உலை கசடுகள் முறிகண்டி- அக்கராயன் சாலையோரம், கோணாவிலில் அக்கராயன் கழிவாறின் கரையோரம், முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்தின் கோட்டைகட்டினகுளம் என்பவற்றிலும் கொக்காவிலிலும் காணப்படுகின்றன.
கொக்காவிலில் கண்டுபிடிக்கப்பட்ட இரும்பு உருக்குலைப் பகுதிகள் யு9 சாலை புனரமைப்புக்காக கிரவல் மண் அள்ளப்பட்ட வேளையில் அழிக்கப்பட்டுவிட்டன. ஏனைய உலைகள் அப்படியே உள்ளன. இரும்பு உருக்குலைப்பகுதிகள் காலக்கணிப்புக்கு உட்படுத்தப் பட்டுள்ளன. அதன் பெறுபேறு இந்த உலை கி.மு 1300 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை உறுதி செய்தது.
இலங்கைத்தீவில் ஸ்ரீலங்கா தொல்லியல் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வுகளின்படி மிகத்தொன்மையான இரும்பு உருக்குலை 2700 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இது அநுராதபுரத்தில் கண்டு பிடிக்கப்பட்டது. இந்த இரும்பு உருக்கு உலையே சிங்கள வலராறு கூறும் விஜயன் வருகை என்பதற்கு முன்பாகவே இலங்கைத்தீவில் மனிதர்கள் வாழ்ந்து வேளாண்மை, மந்தைமேய்ப்பு, இரும்புப்பயன்பாடு என்பவற்றை மேற்கொண்டிருந்தனர் என்ற அறிக்கையை ஸ்ரீலங்காவின் தொல்லியல் திணைக்கள முன்னாள் ஆணையாளர் S.U.தெரனியகலையினை வெளியிடச்செய்தது.
இதைவிட 3000 ஆண்டுகள்வரை தொன்மையான புத்தளம் பொம்பரிப்பு முதுமக்கள் தாளிகளில் எடுக்கப்பட்ட இரும்புப் பாகங்களும்இத்தீவில் இரும்புப் பயன்பாட்டை உறுதிசெய்தது. தமிழர் தாயகப்பகுதிகளில் பூநகரியில் மேலாய்வு மேற்கொள்ளப்பட்டு இரும்பு உருவாக்கங்கள் எடுக்கப் பட்ட போதிலும் அவை காலக்கணிப்பு மூலம் இதுவரை காலம் உறுதி செய்யப் படவில்லை.
ஆனால் அக்கராயனில் கண்டுபிடிக்கப்பட்ட இரும்பு உலை காபன்-14 கதிரியக்க காலக்கணிப்பு செய்யப்பட்டு அது கி.மு 1300 ஆண்டுகள் தொன்மையானது என அறிவியல் ரீதியாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
நவீன அறிவியல் உலகில் தொல்லியல் சான்றுகள் காலக்கணிப்பு மூலம் உறுதி செய்யப்படும்போதே அவை அங்கீகரிக்கப்படுகின்றன. ஒப்பீட்டு காலக்கணிப்பு முறைகள் தொல்லியல் என்ற அறிவியல் துறையில் ஏற்புடையதாக்கப்படுவதில்லை. அந்த ரீதியில் அக்கராயன் இரும்பு உலை அறிவியல் மூலம் காலக்கணிப்பு செய்யப்பட்டுள்ளது.
தமிழரின் பெருங்கற்காலம் எனப்படும் (கி.மு.0 முதல் 1000 வரையான) காலம் இரும்புக்காலம் எனவும் குறிப்பிடப் படுகின்றது. பெருங்கற்காலத்திலேயே தமிழர்கள் இரும்பினைப் பயன்படுத்தியதால் இது இரும்புக்காலம் எனவும் குறிப்பிடப்படுகின்றது. இத்தகைய இரும்பு உலைகள் தமிழர் தாயகத்தில் இருப்பதான விடயங்கள் ஆதாரபூர்வமாக இதற்குமுன்னர் வெளிவரவில்லை. ஆதாரபூர்வமாக காலக்கணிப்புடன் தமிழர் தயாகத்தில் இரும்பு உலைகள் பற்றிய விடயம் வெளியாவது இதுவே முதல் தடவையாகும்.
தமிழர் தாயகத்தில் இரும்புத்தாது திருக்கோணமலையின் சேருவலையில் உள்ளது. இந்த இரும்புத்தாதுதான் தமிழர்தாயக இரும்பு உலைகளில் பயன்படுத்தப்பட்டதாக கூறமுடியாது. ஏனெனில் சேருவிலை இரும்புத்தாது இன்னமும் பயன்படுத்தாத நிலையில்தான் இருக்கின்றது. இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து அது வந்திருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. தொழில் நுட்பங்கள் எல்லாமே ஒரே இடத்தில் தோன்றின என அடிப்படை வாதம் பேசினால் அதுவே உண்மை வரலாறின் தவறாகும். ஆக எமக்கு இரும்பு நுட்பம் வேறெங்கோ இருந்தே கிடைத்திருக்க வேண்டும். 16 ஆம் நூற்றாண்டில் வருகைபுரிந்த பிரிட்டிஸ் பயணியான “றொபேட் நொக்ஸ்” தான் இத்தீவில் பாரம்பரிய இரும்பு உருக்கு உலைகளை கண்டதாகவும் கூறி அதன் நுட்பத்தையும் வெளியிட்டிருக்கிறார்.
நவீனத்துவம் வரும்வரை இப்பாரம்பரிய உருக்குலைகள் இத்தீவில் பயன்படுத்தப் பட்டுள்ளன. இவற்றில் தமிழர் தயாகத்திலும் மூத்த இரும்பு உருக்குலைகள் உள்ளன. இதனை வன்னி இரும்பு உருக்குலைகள் எடுத்துக் கூறுகின்றன.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
நல்ல அருமையான பதிவு. தேவையான பதிவும் கூட. இக் கண்டுபிடிப்புக்கள் பற்றிய விபரங்களை ஆங்கிலத்திலும், மற்றைய மொழிகளிலும் மொழிபெயர்த்து பல நாட்டவரும் அறியும் வண்ணம் நாம் செய்ய வேண்டும்.
மிக்க நன்றி.
பணிவன்புடன்
வெற்றி
வெற்றி
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
யாராவது முன்வந்து அப்பணியைச் செய்வார்களோயனால் மிகவும் நல்லதே.
Post a Comment