Friday, April 14, 2006

வெற்றிப் படியேறு வெட்டித் தடை வீழ்த்தி

சிந்தனைக் கட்டுரை
- பாவன்னா பானா -

பொருளாதார வளம் கண்ட நாடுகளில் தனிமனிதர்களும் நிறுவனங்களும் தத்தமது நாடுகளை அத்தகைய நிலைக்குக் கொண்டு வர வெவ்வேறு விதமான உற்பத்தி யுக்திகளைக் கையாண்டார்கள். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஒரு அணுகுமுறையைக் கையாள அவைகளுக்கு வெளியே ஆசியாவில் வேறொரு விதமான அணுகுமுறை கையாளப்பட்டது
குபேரர்களான யப்பானியர்களால். பொருளாக்கத்தில் செல்வச் செழிப்படைந்த இந்த இரு தரப்பினரதும் இலக்கு ஒத்ததாயினும் அதனை எட்டுவதில் அவர்களது சிந்தனைதான் வேறுவிதமாக இருந்தது.

அமெரிக்கா மற்றும் வளர்ச்சியடைந்த ஐரோப்பிய நாடுகள் எனில் குறிப்பிட்ட ஒரு பயிர் இவ்வளவு சாகுபடியாக வேண்டும் அல்லது குறிப்பிட்ட ஒரு தொழிற் சாலையில் இவ்வளவு பரும்படியாக வேண்டும் என அவர்கள் நிர்ணயம் செய்தால் அந்த இலக்கை அடைவதிலே கருத்தாயிருப்பர். எந்த விதத்திலும் அந்த நினைப்பை எட்டிட எதையும் செய்யத் தயாராக இருந்தனர். அவர்களது இலக்கு ஒரு ஏக்கர் நிலத்தில் இரண்டாயிரம் அப்பிள் பறிக்க வேண்டும் என்பதாயின் குறிப்பிட்ட அந்த ஒரு ஏக்கர் நிலம் செழிப்பானதோ இல்லையோ அதுபற்றி அவர்களுக்குக் கவலையில்லை. விளைவைப் பெருக்க செயற்கை முறையான தூண்டுதல்கள் மூலமாவது அதாவது அபரிமிதமான இரசாயன உரங்களைப் பயன்படுத்தியாவது ஏக்கருக்கு இரண்டாயிரம் அப்பிளை விளைவித்து விடுவர். அவர்களின் இந்த யுக்திக்கு பெறுபேற்று மைய அணுகுமுறை (Result oriented approach) என்பர்.

ஆனால் செல்வச் செழிப்பு மிக்க யப்பானியர்களோ அமெரிகர்கள் அல்லது ஐரொப்பியர்கள் போல் விளைவில் அதாவது முன்னர் குறிப்பிட்டது போல் ஒரு ஏக்கரில் இரண்டாயிரம் அப்பிள் பெற வெண்டும் என்பதில் குறியாக இருக்கமாட்டார்கள். பயிரிட எண்ணியதான அப்பிள் செடி என்ன மாதிரியான நிலத்தில் பயிரிட வேண்டும் எத்தனை நாளைக்கு ஒரு தடவை நீர் ஊற்ற வேண்டும் என்ற விதமாக தொகையில் குறியாயிராமல் செய்முறையில் கவனம் காட்டுவர். அதாவது எதிர் கால வாய்ப்பினை அறுவடை செய்திட. இது செயன்முறை மைய அணுகுமுறை (Process or Performance oriented approach) எனப்படுகிறது.

இதில் யப்பானியர் ஒரு ஏக்கரில் விளைவித்த அப்பிளின் எண்ணிக்கை அமெரிக்கரை விட சில வேளை குறைவாகக் கூட இருக்கலாம். ஆனால் யப்பானியர் விளைவித்த அப்பிளில்தான் சுவை இருந்தது. நுகர்வுப் பெறுமானம் இருந்தது. பொதுவாக இரு தரப்பினர் குறிக்கோளும் பலன் கருதியதே. அதாவது செல்வமீட்டுவதே. ஆனால் அமெரிக்கரோ இது விடயத்தில் அன்றன்றையதையே அதாவது அந்தப் பலன் இப்போதே கிடைத்தால் போதும் என்பதில் சிந்திக்க யப்பானியரோ நாளையதை எண்ணிப் பார்த்தார்கள். இதில் அவ்வேளையதில் கூடிய பலன் அவர்களுக்குக் கிடைக்கவில்லை என வைத்துக் கொள்ளலாம். ஆனால் பின்னால் கிடைக்க இருந்த வாய்ப்பு உடன் கிடைக்காத பலனை விட பன்மடங்கு கூடுதலாக அவர்களைப் போய்ச் சேர வழி சமைத்தது. இவ்விடத்து கீதையில் சொல்லப்படும் ஒரு வரி வடிவம் நினைவிற்கு வருகிறது. அதுதான் “கடமையைச் செய். பலனை எதிர் பாராதே” என்பது. இதன் கருத்து ஒன்றைச் செய்கையில் அப்போதைக்கு என்ன நடக்கும் என நிகழ் காலத்தைப் பார்க்காதே. எதிர்காலத்தில் கிடைக்க இருப்பதை மனதிற் கொண்டு செயற்படு. கீதையின் இந்த பொருளியல் அல்லது சந்தைப்படுத்தல் சிந்தனை (Economic or Marketing thinking) தெரிந்ததோ என்னவோ அதனை பொருளீட்டும் தமது முயற்சிகளில் பயன்படுத்தினார்கள் யப்பானியர்கள். இதனாலேயோ என்னவோ உலகப் படத்தில் யப்பான் என்ற ஒரு தேசம் இருக்குமோ என்று எண்ண முடியாத அளவிற்கு அமெரிக்கரால் குண்டு வீசித் துவம்சம் செய்யப்பட்ட அந்த நாடு இன்று ஒரு குபேர நாடாக வளர்ந்திருப்பதற்குக் காரணம் அந்த நாட்டவரது இவ்விதமான அணுகுமுறைத் தூர நோக்கும் மனோதிடமும்தான்.

யப்பானியர்களின் பொருளாதார வெற்றிக்கு முதுகெலும்பான இன்னொரு சிந்தனைதான் ஆக்கிய ஒரு பொருளை அல்லது ஒரு செயலை அதாகவே முன்னெடுக்காது அவ்வப்போது புதிது புதிதாக மாற்றங்களைச் செய்து சிறப்பாக்கம் செய்வது. இதனை பொருளியலில் வரும் உற்பத்திக் கொள்கை பொருட் சிறப்பாக்கம் (Product Specialization) என்கிறது. இதேவிதமாக சந்தைப்படுத்தலியலை (Marketing Science) ஐ எடுப்போமானால் அங்கும் Product Development பற்றிய பேச்சைக் காண்கிறோம். அதாவது TQM, Innovativeness, etc. இவைகள் எல்லாமே யப்பானியரின் கைசன் (Kaizen) என்ற கொள்கையில் அடங்கியவைதான். இக் கொள்கையின் தொனியாக இருப்பது "Continuous improvements of everything by every one.” அதாவது மென்மேலும் சிறப்பாக்கம் செய்வது. அதாவது ஒரு காரியத்தையோ ஆக்கும் எந்த ஒரு பொருளையோ எவ்வளவு சிறப்பாகச் செய்தாலும் அடுத்தடுத்தபோது அதையும் விடச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்பதுதான். இதற்கு நல்ல ஒரு சமகால உதாரணம்தான் அமெரிக்க யப்பான் நாடுகளின் கார்கள். இங்கு இரு நாட்டு கார்களின் சந்தை வாய்ப்பைப் பார்ப்போமானால் யப்பானிய கார்களுக்கு இருக்கும் மவுசு அல்லது மதிப்பு அமெரிக்கக் கார்களுக்கு இருக்காது. காரணம் அமெரிக்கரோ தமது கார்கள் உற்பத்தித் துறையில் புத்தாக்க உள்வாங்கலை விடுத்து அபரிமிதமாக உற்பத்தி செய்வதிலும் யப்பானியர்கள் அளவாக உற்பத்தி செய்வது ஆனால் மேலும் சிறப்பாகச் செய்வது என்பதிலும் காட்டும் இருவெறு அணுகுமுறைகள்தாம்.

யப்பானியர்களின் சாதனை அல்லது வாழ்வியல் சித்திகளுக்கு அவர்களது பிரத்தியேக ஆளுமைகளுக்கும் பங்குண்டு. அதாவது யப்பானியர்கள் வெறுமனே உடன் வெற்றி என்பதை ஒரு இலக்காகக் கொண்டு எதிலுமே களம் இறங்குவதில்லை. செய்யும் ஒவ்வொரு விடயத்தையும் வெற்றி கிடைக்க வேண்டும் என்று நாளையதையே நோக்கிறார்கள். அதாவது “வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்” என்ற சினிமா பாடல் வரி ஒன்றில் வருமாப்போல். இதனாலேயே நாம் நம்முள் இன்னொருவரைக் காணும்போது வணக்கம் சொல்லிக் கொள்வதுபோல் அவர்களோ தம்மவருள் “வாழ்க்கை எனும் நதிக்கு வெற்றி” என்பார்களாம். இதனாலே அவர்களுக்கு வாழ்க்கை என்பதே வெற்றியாக அமைந்து விடுகிறது.

வெற்றி என்பது பற்றிப் பேசும்போது இன்னொன்றையும் நாம் கவனத்திற் கொள்ள வேண்டும். தொழில் விடயமோ அல்லது வாழ்வியலோ ஒரு முரண்பாட்டு வேளையதில் சகிப்புத் தன்மை அவசியம். இன்றேல் அங்கு பயன்தரு விளைவு என்பது எட்டாததாகிவிடும். இதையே நாம் நிருவாகவியலில் “றுin” “றுin” அநவாழன எனப் பார்க்கிறோம். சண்டை போடும் இருவர் விடயத்தில் ஒருவர் வெற்றி பெற மற்றவர் தோல்வியடைவார். இங்கு இருவருமே வெற்றி பெற முடியுமா என நம்முள் கேள்வி எழலாம். இதற்கு பதில் முன்பு குறிப்பிட்ட அந்த நிருவாகவியல் அணுகுமுறையில் ஆம் என்பதுதான். உதாரணத்திற்கு கம்பனி ஒன்றின் இரு நிருவாகிகளிடையே ஒரு விடயத்தில் முடிவு ஒன்றை எட்டும் விடயத்தில் பிரச்சினை. இருவருமே தத்தமது கருத்துகளை முன்வைத்து அவைகளை ஆராயும்போது அவருடையதா என்னுடையதா சரி என முரண்டு பிடிக்காமல் முன்வைக்கப்பட்ட கருத்துகளின் தன்மையை மாத்திரம் கவனத்திற் கொண்டு சரியான முடிவை எட்டும்போது இருவருமே வெற்றியடைந்ததைப் போன்று கருதப்படுவர். வேலை தேடும்போது நம்மிடம் சகிப்புத் தன்மை விட்டுக் கொடுப்பு முரண்டு பிடியாமை போன்ற மனித வள முகாமைத்துவக் குணாதிசியங்களை தொழில் நிறுவனங்கள் வேண்டி நிற்பதும் பயன்தரு சுமூகமான அந்த ஒரு சூழ்நிலையை தக்க வைத்திடவே.

ஒருசிலர் அழுது புலம்புவதுண்டு. அதாவது முன்னேறப் பார்க்கிறேன். முடியவில்லை. முன்னேறத் துடிக்கிறேன். அதற்குப் பலர் தடையாக இருக்கிறார்கள். வசதி வாய்ப்புகள் இன்னும் கைகூடி வரவில்லை. என்பது போன்று. ஆனால் வெற்றியடைந்த பல தனிமனிதர்கள் ஏன் அணுவால் கதி கலங்கிய யப்பானியர்கள் விடயத்தில் நாம் கண்ட இன்னும் கண்டு கொண்டிருக்கிற சித்திகளும் சாதனைகளும் நமக்குக் காட்டுவது வெற்றிப் படி ஏற நினைத்தால் அது நிச்சயம் சாத்தியமாகும் என்பதே. தீப்பந்தம் ஒன்றை தலை கீழாக கவிழ்த்தாலும் அதிலிருந்து வரும் தீயின் ஜூவாலை மேல் நோக்கியே செல்லும். அதுபோலவேதான் நம்முள் இருக்கும் “வெற்றி இன்றில்லாவிடினும் நாளை அது கிடைக்கும்” என்ற வேகம் நிச்சயம் அதனை ஈட்டிட வழி நடத்தும் என முன்நகர்வோமாக. சித்தி பெற்ற மற்றையவர்களின் அணுகுமுறைகளை அல்லது அதற்காக பின்பற்றக் கூடியதான வழிமுறைகளைக் கவனத்திற்கெடுத்து.

- பாவன்னா பானா -
Quelle - சுயம்வரம் - தை-2006