Friday, February 15, 2008

காலம் காலமாக ஓவியத்தில் பெண்கள்

ஓவியமோ வேறு எந்தக் கலைவடிவமோ அது சார்ந்த சமூகத்தின் மனப்பாங்கை பிரதிபலிப்பதாக அமைபவை. கவிதை, நாடகம், ஓவியம், சிற்பம் எனப் புராதன வரலாற்றைக் கூறிநிற்கும் கலை வடிவங்கள் அனைத்திலுமே அக்காலகட்டத்தின் சமூக வாழ்வைத் சித்திரிக்கக்கூடியதாக இருக்கின்றதெனினும் இவை ஆண்களால் ஆக்கப்பட்ட, நிலைநிறுத்தப்பட்ட சமூகக் கட்டுமானங்களை ஆண்களே வெளிப்படுத்தியவையாகவே உள்ளன. வாய்மொழியூடாகவும் கைப்பணிப் பொருட்களூடாகவும் தனித்தனியாகவும் வெளிப்படுத்தப்பட்ட பெண்களது குரல்கள் நிலைத்து நிற்கக் கூடிய பொருட்களில் ஆக்கப்படாததாலும் கைப்பணிப் பொருட்களில் பதியப்படாததாலும் ஆணாதிக்க அரசுகளின் பிரதான கலை வெளிப்பாட்டு செயற்பாடுகளில் இணைக்கப்படாமலும் விடப்பட...

அவை இன்று வரலாற்றுக் காலத்திற்குரியனவாக கண்டெடுக்கப்பட்டுள்ளன. எனினும் கால ஓட்டத்தில் இயற்கையாலோ மனிதராலோ அழிக்கப்படாது இன்றும் எஞ்சியிருக்கும் பண்டைய வரலாற்றைக் கூறிநிற்கும் ஓவிய சிற்பங்களுக்கு இடையே ஒவ்வொரு காலகட்டத்திலும் பெண் எவ்வாறு நோக்கப்பட்டாள் என்று பார்ப்போமானால் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் தொடக்கம் முதல் நாகரிகங்கள் உருவான காலம் வரையான மனிதகுல வரலாற்றின் சான்றுகளாகப் பெறப்பட்ட குகை ஓவியங்களிலும் சிற்பங்களிலும் வளத்திற்குரிய சந்ததிப் பெருக்கத்திற்குரிய குறியீடாகவே பெண் சித்திரிக்கப்படுகிறாள்.

எகிப்திய ஓவியங்களைப் பார்த்தால் அவையனைத்தும் அரசனது வாழ்வுக்கும் மறுவாழ்வுக்கும் உதவுவனவாகவும் அவனது புகழ் பாடுவனவாகவும் அமைகின்றன. இதுபோன்ற மெசப்பத்தோமிய சீன நாகரீகங்களாயினும் பின்னர் ஐரோப்பிய நாகரீகத்தின் முன்னோடிகளாகக் கூறப்படும் கிரேக்க ரோமானியக் கலைகளாயினும் அரசனதும் நாயகர்களதும் வாழ்வையும் போரையும் வீரத்தையும் சித்திரிக்கின்றனவேயன்றி தமது ஆளுமையால் வரலாற்றில் தடம் பதித்த பெண்கள், அரசிகள் பற்றிய ஓவியங்களையோ சிற்பங்களையோ கொண்டிருப்பதென்பது அரிதாகவே உள்ளன.சிந்துவெளி நாகரிகத்துக்குரிய மரபிலும் கலைவடிவங்கள் அரசர்களால் செய்விக்கப்பட்டவையே. ஆண் தெய்வங்களதும் புராண நாயகர்களதும் அரசர்களதும் கதையாக இவை அமைய இவர்களின் நாயகிகளாகவும் அலங்காரப் பொருட்களாகவும் பெண்கள் சித்தரிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவின் சக்தி வழிபாடு போன்ற வடிவங்கள் தவிர்ந்த ஏனைய பெண் வடிவங்கள் தெய்வங்களாகவோ தேவதைகளாகவோ சித்திரிக்கப்படினும் அவற்றினூடே அக்காலத்து வாழ்க்கை முறை, ஆடை அணிகலன்கள் கட்டடங்கள் போன்றவற்றையும் அறியக்கூடியதாக இருக்கிறது. இவற்றிலும் பெண்கள் அழகுப் பொருட்களாக, அலங்காரப் பிரியைகளாக, தாய்மாராக, ஆணிற்கும், சமூகக் கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டவர்களாகவே சித்திரிக்கப்பட்டுள்ளனர்.

அஜந்தா சிகிரியா ஓவியங்களில் தாயாகவும் அரசர்களின் நாயகிகளாகவும் சித்தரிக்கப்படும் பெண் ஐரோப்பிய மத்தியகால கிறிஸ்தவ ஓவியங்களில் கன்னி மேரியாக கிறிஸ்துவின் தாயாக சித்திரிக்கப்படுகிறாள். . இவ்வாறாக ஒரு காட்சியினுள் பெண் இடம்பெறுவதைத் தவிர வேறுவிதமாகவும் அவள் சித்திரிக்கப்பட்டுள்ளாள். உலகின் எந்தப் பகுதியாயினும் வரலாற்றின் எக்காலப் பகுதியாயினும் பெண்ணை செடி, கொடி, மலர், விலங்கு, பறவை என்பவற்றுடன் ஒன்றாக அலங்காரக் கூறாகப் பாவிக்கும் வளக்கமும் இருந்து வருகிறது.பெண்ணை அலங்காரப் பொருட்களுள் ஒன்றாகப் பார்க்கும் இந்த ஆண் பார்வையின் அடுத்த கட்டமாகவே ஐரோப்பாவின் மறுமலர்ச்சிக் காலத்திற்குரிய பெண் பிரதிமை ஓவியங்களை, பெண்களை சித்திரிக்கும் முறை என்பவற்றைக் கருதலாம். அவர்கள் தமது விருப்பத்திற்குரிய காட்சிகளையும் புராண இதிகாச நாயக நாயகிகளாகவும் தம்மையும் தம் துணைவியரையும் வரைவித்ததுடன் பிரதிமைகளையும் ஆக்குவிக்கின்றனர். மறுமலர்ச்சிக் காலத்தின் பின் ஐரோப்பிய ஓவிய மரபு பல மாற்றங்களைப் பெற்றது. பல பாணிகளாக உருவெடுத்தது.

ஓவியத்தினுள்ளான வர்ணங்கள், உருவங்கள், பரிமாணங்கள் கருப்பொருள் சார்ந்த எல்லாக் கட்டுக்களையும் அறுத்துக் கொண்டு நவீனத்துவம் உருவாகிறது.ஓவியம் என்பது உணர்வுகளின் வெளிப்பாடாக அமைவது. உணர்வுகளின் நேரடிக் காட்சிப்படுத்தல்களாகவோ அல்லது வேறுவடிவங்களிலோ கலைஞன் தாம் நினைப்பதை, கற்பனை செய்வதை வெளிப்படுத்துவது இதற்குத் தடையாக இருந்தவையான ஒவ்வொரு ஓவிய மரபு சார் தடைகளையும் நவீன ஓவியம் உடைக்கிறது.நேரடித் சித்திரிப்பாக இல்லாது பாரம்பரியமாக கைப்பணிப் பொருட்களின் பாய்கள் துணிகளோடு பின்னப்பட்ட பெண்ணின் உணர்வுகள் வீட்டின் சுவரிலும் தரையிலும் மட்பாண்டங்களிலும் தீட்டப்பட்ட கோலங்கள் கலை வரலாற்றில் பெண்களால் இயற்றப்பட்டவை என்று பதியப்படாது விடப்படினும் பாரம்பரியமான அந்தக் கலை உணர்வும் திறனும் நவீன ஓவியத்தோடு பெண்களுக்கு பொது ஓவிய உலகிற்கு கிடைத்த வெற்றியுமாக இன்று தம்மை, தமது உணர்வுகளை தமது உலகு பற்றிய பார்வையை வெளிப்படுத்தும் பல பெண் ஓவியர்கள் உலகெங்கும் உருவாகியுள்ளனர். கலை ஒரு தொடர்பு ஊடகம் என்ற வகையில் பெண்ணின் ஆளுமை, பெண் சிந்தனை, பெண்ணின் கற்பனை என்பன இந்த ஓவியர்களோடு பொது மேடைக்கு வருவதன் மூலம் ஓவியம் என்ற ஊடகத்தில் காலம்காலமாக பெண் பற்றி உருவாக்கப்பட்டிருந்த படிமங்கள் உடைக்கப்படுகின்றன. அத்துடன் வரலாற்றை எழுதியவர்களால் விடப்பட்ட பெண்களது கலை வரலாற்றை மீள எழுதும் பணிகளும் உலகின் பல இடங்களிலும் தொடங்கி விட்டன. நாமும் எமது பிரதேசம் சார்ந்த இதேவகையான சிந்தனையை முன்வைப்பது அவசியமாகின்றது.

Quelle - வீரகேசரி