Sunday, August 03, 2008

நடிகர் திலகம் சிவாஜி கணேசன்

1.10.1928 ஆம் ஆண்டு பெற்றோர்கள் தந்தை சின்னையா மன்றாயருக்கும் அன்னை ராஜாமணி அம்மாளுக்கும் நான்காவது மகனாகப் பிறந்தவர் வி.சி. கணேசன் (எ) நடிகர் திலகம் டாக்டர் செவாலியே சிவாஜி கணேசன். இவர் பிறந்த சமயம் தந்தை சின்னையா மன்றாயர் பிரிட்டிஷாரை எதிர்த்து நடத்திய போராட்டத்தில் சிறை சென்றிருந்தார். அவர் சிறையிலிருந்து விடுதலையாகி வரும்பொழுது சிவாஜி அவாகள் நாலரை வயது சிறுவனாய் வளர்ந்திருந்தார்.

இவருக்கு ஏழு வயது நடக்கும்பொழுது தன் தந்தையுடன் கட்டபொம்மன் நாடகம் பாக்கச் சென்றார். நாடகம் நடத்துபவர்கள் வெள்ளைக்கார பட்டாளத்திற்கு ஆள் போதவில்லையென்று கணேசனை மேடையேற்றினர். அதுவே இவரின் முதல் நாடகம். ஆர்வமாய் நடித்தார். ஆனால் தந்தையாருக்கோ தான் எதிரியாக நினைக்கும் வெள்ளைக்காரர் படையில் மகன் நடித்து விட்டானே என்று கோபம். வீட்டிற்கு வந்ததும் என் எதிரியின் படையில் சேர்ந்து எப்படி கூத்தாடலாம் என்று அடித்தார். அன்றுதான் நாமும் ஏன் பெரிய நடிகனாக ஆகக் கூடாது என்ற வைராக்கியம் கணேசனின் மனதில் தோன்றியது. அந்த நேரத்தில் யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளையின் நாடகக் கம்பெனியான மதுரை ஸ்ரீபாலகான சபாவினர் திருச்சியில் முகாமிட்டிருக்க - தனது நடன, பாட்டு ஆர்வத்தை அவர்களிடம் வெளிப்படுத்தி தான் அனாதை என்று கூறி, அவர்களிடம் இரக்கத்தை ஏற்படுத்தி, நாடகக் கம்பெனியில் சேர்ந்தார்.
அங்கு காலை ஏழு மணிக்கு எழுப்பி விடுவார்கள். எழுந்தவுடன் குளித்து விட்டு சாமி கும்பிட வேண்டும். அதன்பிறகு முதலில் பாட்டு இரண்டாவது டான்ஸ். அடுத்தது அன்று நடக்க வேண்டிய நாடகத்திற்கு வேண்டிய உரையாடல்களுக்கு ஒத்திகை நடத்த வேண்டும். இந்த முறைப்படியான பயிற்சி இவரை பெண் வேஷம் போடுவதிலிருந்து ஆண் வேஷம் அணிந்து நடிக்கும் 'ராஜபார்ட் நடிகர்' என்ற அந்தஸ்திற்கு உயர்த்தியது.

இந்த காலகட்டத்தில் இவரின் மூத்த இரு அண்ணன்கள் அடுத்தடுத்து இறந்தனர்.இச செய்தி தெரிந்தும் வீட்டிற்கு செல்ல முடியாத சூழ்நிலையில் கணேசன் இருந்தார்.

வி.சி.கணேசன் அவர்களுடன் எம்.ஆர்.ராதா, டி.எஸ்.பாலையா, வி.கே.ராமசாமி, காகா ராதாகிருஷ்ணன் போன்ற எல்லா ரோல்களிலும் நன்றாக நடிக்கக் கூடிய நடிகர்கள் இருந்தனர்.
நாடகக் கம்பெனி பரமக் குடியில் முகாமிட்டிருந்தபொழுது கர்ம வீரர் காமராஜரைச் சந்திக்கும் வாய்ப்பு கணேசன் அவர்களுக்கு கிட்டியது.

இவரின் நாடகக் குழு குமாரபாளையம் என்ற ஊரில் முகாமிட்டிருந்த பொழுது, மறக்க முடியாத ஒரு சம்பவம் நடந்தது... கணேசன் உட்பட நாடகத்தில் நடிக்கும் பிள்ளைகளெல்லாம் - பவானி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென்று அந்த ஆற்றில் வெள்ளம் வர - தண்ணீரிலிருந்து வெளியே ஓடி வர முடியாமல் கணேசன் உட்பட அனைவரும் தவித்துப் போனார்கள் அந்த ஊர் பெரியவர்கள் ஆற்றில் குதித்து அனைவரையும் காப்பாற்றினார்கள்.

இவர்களின் நாடகக்குழு கோயமுத்தூரில் முகாமிட்டிருந்த பொழுது கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் படம் எடுப்பதற்காக அங்கு ஒரு ஸ்டூடியோவில் தங்கியிருந்தார். அவர் லோகிதாசன் வேஷத்திற்கு ஒரு நடிகரைத் தேட, நாடகக் குழுவினர் கணேசனையும் காகா ராதாகிருஷ்ணனையும் அவரிடம் கொண்டு சென்று காட்டினர் அவர் அந்த வேஷத்திற்கு பொருத்தமானவர் என்று காகா ராதா கிருஷ்ணனை தேர்வு செய்தார். வீட்டிற்கு தெரியாமல் ஓடி வந்து நடிப்பின் ஆசையால் நாடகக் கம்பெனியில் சேர்ந்து தொடர்ந்து நடித்து பாராட்டுக்களைப் பெற்ற கணேசனுக்கு வீட்டின் நினைவு அதிகமாக வரத் தொடங்கியது. அதனால் "தீபாவளிக்காவது என்னை ஊருக்கு அனுப்பி வையுங்கள்" என்று கணேசன் நாடகக் கம்பெனிகாரர்களிடம் தொந்தரவு செய்தார். அதனால் அவர்கள் கணேசனை தங்கவேலுடன் சேர்த்து ஊருக்கு அனுப்பினார்கள். இருவரும் திருச்சி வந்து சேர்ந்தார்கள். திருச்சியில் உள்ள வீட்டிற்கு வந்த கணேசன் முதலில் பாணத்தது அவரது தங்கை பத்மாவதியையும், தம்பி சண்முகத்தையும்... இரண்டு பேரும் பெரியவர்களாக வளர்ந்திருந்தார்கள். அந்த வருடம் அப்பா, அம்மா, அண்ணன் தங்கவேலு தம்பி சண்முகம் தங்கை பத்மாவதியுடன் சந்தோஷமாக தீபாவளியைக் கொண்டாடினார்.

பொன்னுசாமிப் பிள்ளை நாடகக் கம்பெனியிலிருந்து விலகி எம்.ஆர். ராதா 'சரசுவதி கான சபா' என்ற நாடகக் கம்பெனியை ஆரம்பிக்க - எம்.ஆர். ராதா அழைப்பின் பேரில் வி.சி. கணேசன் அந்த கம்பெனியில் சேர்ந்தார். கணேசனை சென்னைக்கு அழைத்து வந்த எம்.ஆர். ராதா அவரை சென்னையைச் சுற்றி பார்க்க வைத்தார்.

சரசுவதி கான சபாவினர் 'லட்சுமிகாந்தன்', 'விமலா'. 'விதவையின் கண்ணீர்' போன்ற புதிய நாடகங்களை நடத்தினார்கள். ஈரோட்டில் உள்ள தந்தை பெரியாரின் தியேட்டரில்தான் இந்த நாடகங்கள் நடந்தன. அப்பொழுதுதான் தந்தை பெரியாரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கணேசனுக்குக் கிடைத்தது.

காலையில் எழுந்ததும் குளித்து விட்டு பெரியாரின் வீட்டிற்கு சென்று விடுவார் கணேசன். அங்குதான் பேரறிஞர் அண்ணா, ஈ.வி.கே. சம்பத் போன்றவர்களை சந்திக்கும் வாய்ப்பும் அவர்களின் சினேகிதமும் பெரியாரின் மீது ஒரு ஈடுபாடும் கணேசனுக்கு ஏற்பட்டிருக்கிறது.
ஈரோட்டில் ஆரம்பத்தில் - வரவேற்பு பெற்ற எம்.ஆர். ராதா நாடகங்கள் பின்னர் வசூலில் குறைய ஆரம்பிக்க பார்ட்னாகளுக்குள் பிரச்னை ஏற்பட்டு நாடகம் நிறுத்தப்பட்டது. எம்.ஆர். ராதா மட்டும் கம்பெனியை விட்டு விலகி ஊருக்குச் சென்று விட்டார்.

நாடகம் தொடாந்து நடக்காததால் கணேசனுக்கும் அவருடன் தொடர்ந்து நடிக்கும் நாடக நடிகர்களுக்கும் சாப்பாட்டு பிரச்சனை ஏற்பட்டது. ஊரைச் சுற்றி உள்ள வயல்காட்டு தோட்டப் பகுதியில் விளைந்திருந்த சேனைக் கிழங்கை தோண்டி எடுத்து சாப்பிட்டு சமாளித்தவர்கள்- தாங்களே ஒரு நாடகம் நடத்தி அதில் மக்கள் கொடுத்த பணத்தை வைத்து திருச்சி போய் சேர்ந்தார்கள்.

அதன் பிறகு நாடகமே நடிக்காமல் வீட்டில் சும்மா இருந்த கணேசன் அவர்கள் திருச்சியில் 'ஸ்ரீரங்கம் டிரான்ஸ்போர்ட்' என்ற கம்பெனியில் ஏழு ரூபாய் சம்பளத்தில் மெக்கானிக்காக வேலையில் சேர்ந்தார்.அவர் தன் அம்மாவிடம் கொடுத்த அந்த சம்பள பணம் குடும்பத்திற்கு அன்று பேருதவியாய் இருந்தது.

கணேசன் நாடகத்தில் நடிக்கவில்லையே தவிர கவனம் அதிலேயே இருந்தது. நண்பன் ஒருவன் அழைக்க அம்மாவின் அனுமதியுடன் மீண்டும் சரஸ்வதி கான சபாவில் போய் சேர்ந்தார்.

சரஸ்வதி கான சபா நாடக வசூல் குறையத் தொடங்க என். எஸ். கிருஷ்ணன், டி.ஏ. மதுரம் ஆகியோர் முன் வந்து நாடகக் கம்பெனியை வாங்கி 'என்.எஸ்.கே. நாடகக் கம்பெனி' என்று பெயர் வைத்து 'ரத்னாவளி', 'மனோகரா' போன்ற நாடகங்களை நடத்தி வந்தனர். லட்சுமி காந்தன் கொலை வழக்கில் என்.எஸ்.கே சிறை செல்ல - அதன் பிறகு என்.எஸ்.கே. நாடகக் கம்பெனியை யார் நடத்துவது என்ற பிரச்னை எழுந்த போது கம்பெனியில் இருந்த எஸ்.வி. சகஸ்ரநாமம், கே.ஆர். ராமசாமி ஆகிய இரண்டு பெரிய நடிகாகளில் எஸ்.வி. சகஸ்ரநாமத்திடம் கம்பெனி பொறுப்பை டி.ஏ. மதுரம் ஒப்படைத்தார். இதனால் கே.ஆர். ராமசாமி ஒரு தனி நாடகக் கம்பெனி ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கணேசன் - மற்றும் உடன் நடிக்கும் அனைவரையும் அழைத்துக் கொண்டு காஞ்சிபுரம் சென்றார். அது திராவிடர் கழகம் மிக மும்முரமாக வளர்ச்சி அடைந்துக் கொண்டிருந்த காலம்.

1946 ஆம் ஆண்டு சென்னையில் ஏழாவது சுயமரியாதை மாநாடு நடந்தது... அதில் பேரறிஞர் அண்ணா எழுதிய "சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்" நாடகம் நடந்தது. அதில் அண்ணா காசுபட்டராகவும். கணேசன் சிவாஜியாகவும் இணைந்து நடித்தனர். அந்த நாடகத்தைப் பார்த்த ஈ.வெ.ரா. பெரியார் "இந்த நாடகத்தில் யாரோ ஒரு சின்னப்பையன் சிவாஜி வேஷத்தில் நடித்திருந்தானே அவன் யார்?" என்று கேட்டார். கணேசனை அவரெதிரில் கொண்டு வந்து நிறுத்தினார்கள்.

'நீதான் கணேசனா? இன்று முதல் நீ சிவாஜி' என்று ஈ.வெ.ரா பெரியார் பாராட்டி 'சிவாஜி' என்ற பட்டத்தை கணேசனுக்கு வழங்கினார். அன்று முதல் வெறும் கணேசன் 'சிவாஜி கணேசன்' ஆனார்.

courtesy: www.lakshmansruthi.com