Saturday, April 01, 2006

இலக்கியக்காரனின் இறுதி வார்த்தை

-அ.முத்துலிங்கம்.

சரித்திரம் என்றால் தேதிகள் என்று என் சிறுவயது ஆசிரியர் என்னை நினைக்க வைத்தார். அலெக்சாந்தரில் இருந்து ஆதித்தசோழன் வரைக்கும் தேதிகளை நான் மனனம் செய்யவேண்டும். ஒரு பாடத்தை எவ்வளவுக்கு வெறுக்கமுடியுமோ அவ்வளவுக்கு சரித்திரப் பாடத்தை வெறுத்தேன்.

வரலாறுதான் மனிதர்களின் கதை என்பதையும், மனிதர்களின் கதைதான் இலக்கியம் என்பதையும் அந்த ஆசிரியர் எனக்கு சொல்லித்தர மறந்து விட்டார். மார்க்கோபோலோவை நான் வெறுத்ததற்கும் அதுதான் காரணம். அவனுடைய தேதிகள் எல்லாம் மாறிப்போனது. பரீட்சையில் ஒருமுறைகூட அவன் எனக்குக் கைகொடுக்கவில்லை. அவனுக்கும் நான் கைகொடுக்கவில்லை.

மார்க்கோபோலோவுடைய பயணக்கதை மிகவும் சுவாரஸ்யமானது. அச்சு இயந்திரம் கண்டுபிடிப்பதற்கு இன்னும் நூற்றைம்பது வருடங்கள் இருந்த அந்தக் காலத்தில், அவன் கதை உலகமெல்லாம் பரவியது. கையினால் எழுதிய பல பிரதிகள் உலவின. அவை பிரெஞ்சில் எழுதப்பட்டு பின்னர் லத்தீன், இத்தாலியன், ஆங்கிலம் போன்ற பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதையைச் சொல்லின. புனைவுக் கட்டுரை என்ற இலக்கிய ரகத்தைக் கண்டு பிடித்தது,
‘In Cold Blood’ நாவலை எழுதிய ட்ரூமன் கபோரே என்று சொல்வார்கள். ஆனால், அந்த இலக்கிய ரகத்தை முதலில் கண்டுபிடித்தது மார்க்கோபோலோதான். எழுநூறு வருடங்களுக்கு முன்னர் வெளியான அவனுடைய பயணக் கட்டுரையில் புனைவு கலந்திருக்கும்; என்ன கொஞ்சம் அதிகமாகவே கலந்திருந்தது. ஒரு பயணக்காரனாக இருந்ததிலும் பார்க்க, மேலான இலக்கியக்காரனாகவே அவன் இருந்தான். உலகம் முழுவதும் அவனுடைய நூல்களைப் போட்டி போட்டுக்கொண்டு படித்தது. அதுதான் பதிமூன்றாம் நூற்றாண்டில் அதிகம் விற்பனையான புத்தகம். இந்த மேலான இலக்கியக்காரன் இறக்கும்போது சொன்ன வாசகம் இன்றுவரை எல்லோரையும் போட்டுக் குழப்பிக்கொண்டே இருக்கிறது.

###

பெரும் இலக்கியக்காரர்கள் பலர் மரணத்தின் வாயிலில் குழம்பிப்போய் இருக்கிறார்கள். ஜேம்ஸ் ஜோய்ஸ் இறக்கும் முன்னர், ‘‘நான் எழுதியது ஒருவருக்குமே புரியவில்லையா?’’ என்று ஆற்றாது புலம்பினார். பிரிட்டிஷ் பெண் எழுத்தாளர் வர்ஜீனியா வூல்ஃப், தன் சட்டைப் பைகளில் கற்களை நிறைத்துக்கொண்டு, தண்ணீருக்குள் இறங்கி தற்கொலை செய்துகொண்டார். இறப்பதற்கு முன்னர் அவர் இப்படி எழுதிவைத்தார்: 'என்னுடைய மூளை குழம்பிப்போய் இருப்பது எனக்கு நிச்சயமாகத் தெரிகிறது. அந்த நரகத்தை இன்னொருமுறை என்னால் அனுபவிக்க முடியாது. இம்முறை மீட்சியில்லை. எனக்கு சத்தங்கள் கேட்கத் தொடங்கிவிட்டன.'

வேறு சில எழுத்தாளர்கள், மரணத்திற்கு முன்னர் குழப்பமடைவதற்குப் பதிலாக வெளிச்சத்தைக் கண்டிருக்கிறார்கள். ஓஹென்றி, ‘‘விளக்கை ஏற்றுங்கள். இருட்டிலே வீட்டுக்குப்போக எனக்குப் பிரியமில்லை’’ என்றார். விக்டர் ஹ்யூகோ, ‘‘எனக்கு கறுப்பு வெளிச்சம் தெரிகிறது’’ என்றார். தாகூர், ‘‘மரணம் என்றால் வெளிச்சத்தை மறைப்பது அல்ல; விளக்கை அணைப்பது. ஏனென்றால், வைகறை வாசலில் வந்துவிட்டது’’ என்றார்.

மரணம் நெருங்கிய போதும் நகைச்சுவையை விடாத மனிதர் மார்க் ட்வெய்ன்தான். அவர் இறக்கும் சமயம் பிரபலம் பெற்றுவிட்டார். அமெரிக்காவின் நிருபர்களுக்கு இடையில் போட்டி, யார் முதலில் அவருடைய மரணச் செய்தியை வெளியிடுவது என்று. ஒரு பத்திரிகை அவர் இறக்கும் முன்னரே அவர் இறந்துவிட்டார் என்ற செய்தியை அறிவித்தது. இதை அறிந்ததும் மார்க் ட்வெய்ன் ஓர் அறிக்கை விட்டார்: 'நான் இறந்துபோன செய்தி மிகைப்படுத்தப்பட்டிருக்கிறது.'

மரணத்தின் வாயிலில் இலக்கியக்காரர்களாக மாறியவர்களும் உண்டு. சேர் ஃபிரான்சிஸ் பேக்கன் என்பவர், பதினாறாம் நூற்றாண்டில் முதலாம் ஜேம்ஸ் மன்னரிடம் விஞ்ஞானியாக, தத்துவவாதியாக, சட்ட நிபுணராக உயர்ந்த பதவிகள் வகித்தவர். ஒரு நாள் லஞ்சம் வாங்கும்போது பிடிபட்டு, லண்டன் டவரில் அடைக்கப்பட்டார். அப்பொழுது தன்மீது கருணை காட்டும்படி மாட்சிமை பொருந்திய மன்னருக்கு, ஃபிரான்சிஸ் பேக்கன் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதினார். டவரில் அடைக்கப்பட்டவர்களுக்கு வழக்கமான தண்டனை சிரச்சேதம்தான். சிரச்சேதம் செய்யப்பட்டால், அவருடைய தலையை வயிற்றின்மேல் வைத்து வெளியே அனுப்புவார்கள். சிலரை மன்னர் மன்னிப்பதும் உண்டு. இன்னும் சிலர் வாழ்நாள் முழுவதும் சிறையில் கிடந்து வாடவேண்டியதுதான். பேக்கன் விசயத்தில், அவர் கடைசி நிமிடத்தில் மன்னிக்கப்பட்டு, கழுத்தின்மேல் தலை நிற்க வெளியே வந்தார். அரச பதவிகள் எல்லாம் துறந்து, ஐந்து வருடங்கள் சாதாரண வாழ்க்கை வாழ்ந்து, இறந்துபோனார். இந்தக் காலத்தில் அவர் அழியாத தத்துவங்களைப் படைத்தார். இவர் புகழ்பெற்ற இலக்கியவாதியும்கூட. ஷேக்ஸ்பியருடைய நாடகங்களை இவர்தான் எழுதினார் என்று சொல்பவர்கள் இன்றும் இருக்கிறார்கள்.

டோஸ்டோவ்ஸ்கி உலகத்தின் தலைசிறந்த படைப்பாளியாக மதிக்கப்படும் ரஷ்ய எழுத்தாளர். அவர் இளைஞராக இருந்த சமயம் பிரெஞ்சு எழுத்தாளர்களை விரும்பிப் படிப்பார். அவருக்கு இருபத்தெட்டு வயதாகும்போது, அவரும் இன்னும் சில நண்பர்களும் கைது செய்யப்பட்டார்கள். ராசத்துரோகக் குற்றம் சாட்டி அவர்களுக்கு மரண தண்டனை விதித்தார்கள். அவருடைய மரணத்துக்கு ஒரு நிமிடம் முன்பு தண்டனையை மாற்றினார்கள். அந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டு தன் சகோதரருக்கு டோஸ்டோவ்ஸ்கி கடிதம் எழுதினார். 'தண்டனையை நிறைவேற்றுவதற்காக எங்களை செமினோவ் மைதானத்துக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கே எங்களுக்கு வழங்கப் போகும் தண்டனை வாசித்துக் காட்டப்பட்டது. சிலுவையை முத்தமிடச் சொன்னார்கள். வாள்களை உருவி எங்கள் தலைகளுக்கு மேல் முறித்துப்போட்டார்கள். கொல்லுவதற்கு வசதியாக மூன்றுபேரைச் சேர்த்து ஒரு தூணில் கட்டினார்கள். நான் ஆறாவது ஆள். மூன்று மூன்று பேராக அழைத்தார்கள். இரண்டாவது குழுவில் நான் இருந்தேன். இறப்பதற்கு சரியாக ஒரு நிமிடம் இருந்தது. நான் உன்னை நினைத்தேன். சகோதரனே, கடைசி நிமிடத்தில் உன்னை மாத்திரமே நினைத்தேன். என் பக்கத்தில் நின்ற இரண்டு நண்பர்களிடமும் இறுதியாகத் தழுவி விடைபெற்றுக்கொண்டேன். அப்பொழுது ஊதுகுழல் ஒலித்தது. மாட்சிமை பொருந்திய மன்னர் எங்கள் மரண தண்டனையைக் குறைத்து நாலு வருடக் கடும்தண்டனையாக மாற்றியதை எங்களுக்குச் சொன்னார்கள்.' அன்று டோஸ்டோவ்ஸ்கி மரணத்தில் இருந்து கடைசி நிமிடத்தில் தப்பியிருக்காவிட்டால், அவருடைய படைப்புகளை எல்லாம் இழந்திருப்போம். ‘குற்றமும் தண்டனையும்,’ ‘கரமசோவ் சகோதரர்கள்,’ ‘முட்டாள்’ போன்ற நாவல்கள் எங்களுக்குக் கிடைக்காமலே போயிருக்கும்.

வாழ்நாள் முழுக்க இலக்கியத்துக்காகவே வாழ்ந்து, மரணம் வந்தபோது, இலக்கியத்தைத் துறந்தவர்களும் உண்டு. ஒக்டேவியஸ் சீசர் காலத்தில் வாழ்ந்த பெரிய கவி வேர்ஜில். இவரும் ஒக்டேவியசும் இளவயதில் ஒன்றாகப் படித்தவர்கள்; நண்பர்கள். ஒக்டேவியஸ் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, வேர்ஜில், லத்தீன் மொழியில் ஒரு பெரிய காவியம் படைத்தார். அதற்கு ‘ஏனிட்’ என்று பெயர். திரோஜன் ஒருவன் இத்தாலிக்குப் பயணம் செய்து, ரோம் நகரை வெல்வதைச் சொல்லும் கதை. பதினொரு வருடங்கள் தொடர்ந்து எழுதியவர், அதை முறைப்படி வெளியிடும் முன்னர் இறந்துபோனார். மரணத்துக்கு முன் தன் நண்பர்களிடம், தான் எழுதிய காவியத்தை அழித்துவிடச் சொல்கிறார். அவருக்கு காவியத்தில் போதிய திருப்தி இல்லை. ஆனால், நண்பர்கள் சிறுதிருத்தங்கள் செய்து காவியத்தை வெளியிடுகிறார்கள். இன்றுவரை லத்தீனில் இது புகழ்பெற்ற காவியமாக விளங்கி வருகிறது. மரணம் சமீபித்தபோது, அவர் விட்ட வேண்டுகோளை நண்பர்கள் நிராகரித்ததால் மானுட சமுதாயத்துக்குப் பெரும் காவியம் ஒன்று கிடைத்தது.

###

உலகத்தின் முதல் ‘best seller’ நூலை எழுதியவன் மார்க்கோபோலோ. அவனுக்கு ஆறு வயது நடந்து கொண்டிருந்தபோது, அவனுடைய தகப்பனும் சகோதரனும் ஒரு நீண்ட பயணத்தைத் தொடங்கினார்கள். அவர்கள் வெனிஸ் தேசத்து வர்த்தகர்கள். அந்தக் காலத்தில், நினைத்துக்கூட பார்க்க முடியாத தூரத்திலிருந்த சீனாவுக்குப் புறப்பட்டார்கள். பயணத்தை முடித்து, அவர்கள் மீண்டும் வெனிசுக்குத் திரும்பி வந்து சேர்ந்தபோது, மார்க்கோவுக்கு வயது பதினைந்து. ஒன்பது வருடங்கள் அவர்கள் பயணம் செய்திருக்கிறார்கள். இந்த இடைப்பட்ட காலத்தில் மார்கோவைப் பெற்ற தாயாரும் இறந்துபோகிறாள்.

இரண்டு வருடம் கழித்து, மறுபடியும் பயணம் புறப்பட்டபோது, பதினேழு வயதான மார்க்கோவும் சேர்ந்துகொள்கிறான். அவன் இளம் வாலிபனாய் இருந்தபோதிலும், பொறுப்புடனும் கருத்துடனும் தன்னைச் சுற்றி தினமும் மாறும் உலகை அவதானித்தபடி பயணம் செய்கிறான். முதல் உலகப் பயணி மார்க்கோபோலோ அல்ல. அவனுக்கு முன்பும் பலர் பயணம் செய்திருக்கிறார்கள் ஆனால் மார்க்கோபோலோவை இன்றும் நினைவில் வைத்திருப்பதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அதில் முக்கியமானது. அவன் தனது பயணத்தை இலக்கியமாக்கியது.

நாலு வருடங்கள் பயணம் செய்து சீனாவின் பெய்ஜிங் நகரை அடைகிறார்கள். அங்கே, மங்கோலிய சக்கரவர்த்தி குப்ளாய்கான் அரசு செலுத்துகிறார். பதினேழு வருடங்கள், பல அலுவல்களில், அரசனுக்கு ஆலோசனையாளராக மார்க்கோ பணிபுரிகிறான். 'பிரமாண்டமான பளிங்கு மாளிகை, அவற்றில் தங்கமுலாம் பூசிய அறைகள், கண்ணைப் பறிக்கும் வர்ணங்களில் தீட்டப்பட்ட மனித உருவங்களும் மிருகங்களும் உங்கள் மூச்சை நிறுத்தி, பரவசத்தையும் அதே சமயத்தில் வியப்பையும் தரும்.' இப்படி வர்ணிக்கிறான் மார்க்கோபோலோ. அங்கு நடக்கும் விருந்துகளும் அவனுக்கு ஆச்சரியத்தை விளைவிக்கின்றன. ஆறாயிரம் விருந்தினர்கள் ஒரே சமயத்தில் உணவருந்தும் மண்டபம். பத்தாயிரம் வல்லூறு வேட்டைக்காரர்கள், இருபதாயிரம் நாய்க் காவலர்கள் அரச ஊழியத்தில் இருக்கிறார்கள். இவனுடைய வர்ணனையில் மயங்கிய ஆங்கிலக் கவி சாமுவெல் டெய்லர் கோலரிட்ச், பின்னாளில் குப்பளாய்கான் பற்றி கவிதை புனைவார்.

மார்க்கோவின் வர்ணனைகள் நேரில் நின்று பார்ப்பதுபோன்ற உணர்வைக் கொடுக்கும். அற்பமான சம்பவம்கூட அவன் எழுத்தில் இலக்கியமாக மாறிவிடும். கொடிய பாலைவனத்தைக் கடப்பதைப் பற்றி அவன் இப்படி எழுதுகிறான் : 'சில நேரங்களில் பயணிகள் பாலைவனத்தைக் கடக்கும்போது, கொள்ளைக்காரர்கள் அவர்களை நோக்கி வரும் சத்தம் கேட்டு, எதிர்த்திசையில் சிதறி ஓடி வழி தவறுவதுண்டு. பகல் நேரத்தில்கூட அமானுட ஓசைகளும் போர் ஒலிகளும் மேளச் சத்தங்களும் கிளம்பி பயணிகளைக் கிலி பிடிக்கவைக்கும். இந்தக் காரணங்களுக்காக பயணிகள் ஒருவருக்கொருவர் நெருக்கமாகவே பயணிப்பர். இரவு தூங்கும் முன்னர், அடுத்த நாள் காலை பயணப்படவேண்டிய திசையை நோக்கி, திசைகாட்டியை நட்டு வைப்பர். மிருகங்களின் கழுத்துகளில் மணிகளை, கட்டிவைக்கவும் தவறமாட்டார்கள். இந்த முறையில் வழி தவறாமலும் மிருகங்கள் தொலையாமலும் பாதுகாத்துக் கொள்வார்கள்.'

தாய் நாட்டுக்கு மார்க்கோபோலோ திரும்பியதற்கு முக்கிய காரணம் குப்ளாய்கான் முதுமையடைந்துவிட்டதுதான். எந்த நேரமும் அவர் இறக்கலாம். அவர் இறக்கும்முன்னர், தான் ஈட்டிய திரவியம் முழுவதையும் தன் பிறந்த நாட்டுக்கு எடுத்துச் செல்லத் தீர்மானித்தான் மார்க்கோபோலோ. திரோஜன் போரை முடித்துவிட்டு ஒடிசியஸ் பத்து வருடங்கள் அலைந்ததுபோல, மார்கோவும் பத்து வருடங்கள் பயணம் செய்தான். அவன் திரும்பவும் வெனிசுக்கு வந்து சேர்ந்தபோது, அவனுக்கு வயது நாற்பத்தியிரண்டு. ஆனால், அவனால் அரும்பாடுபட்டு சேர்த்த செல்வத்துடன் நிம்மதியாக வாழ முடியவில்லை. வெனிசுக்கும் ஜெனோவாவுக்கும் இடையில் போர் மூண்டது. போரிலே மார்க்கோபோலோவைக் கைதுசெய்து சிறையில் அடைத்தார்கள். சிறையிலே கைதிகளுக்கு மார்க்கோபோலோ, தன் இருபத்தைந்து வருடப் பயணக் கதைகளை வெறும் ஞாபகத்தில் இருந்து சொல்ல, அவனுடன் இருந்த சக கைதி ஒருத்தன், எழுத்தாளன், பெயர் ரஸ்டிசெல்லோ, அதை பிரெஞ்சு மொழியில் எழுதினான்.

ஹெரோடோரஸ் போல, மார்க்கோ வரலாறு படைப்பதற்காகப் புறப்பட்டவன் அல்ல. வழி நெடுக குறிப்புகளும் எழுதி வைக்கவில்லை. சிறையில் நேரத்தைப் போக்குவதற்காக தன் அனுபவங்களை எழுதினான். பதினேழு வயதிற்குள் பல இலக்கியங்களை ஆழமாகக் கற்றிருந்தபடியால் அவன் எழுதியதில் கலைநேர்த்தி இருந்தது. அமோகமான ஞாபகசக்தியும் நுண்ணிய அவதானிப்புமே அவனை இலக்கியக்காரனாக மாற்றியது.

மேற்கு கிழக்காகப் பல பயணங்கள் மேற்கொள்ளப் பட்டிருந்தாலும், வடக்கு தெற்காகப் பிரயாணம் செய்த முதல் பயணி மார்க்கோதான். சீனாவில் தான் கண்ட புதுமைகள் அனைத்தையும் மார்க்கோ வர்ணித்தபோது, அந்தக் காலத்து சரித்திர ஆசிரியர்கள் அதைப் புளுகு மூட்டை என்று தள்ளி வைத்துவிட்டார்கள். ஆனால், அவன் எழுதிய விபரங்கள் பின் வந்த வரலாற்றுக்காரர்களுக்கு உதவியாக அமைந்தன. இன்றும் சிலர் இவன் எழுதிவைத்ததை நிராகரிக்கிறார்கள். ‘மார்க்கோ, அரைவாசி சரித்திரக்காரன், அரைவாசி கற்பனைக்காரன்’ என்று குற்றம் சாட்டுகிறார்கள். ஓர் இடத்தில் மார்க்கோ எழுதுகிறான்: 'ஒரு ராட்சதப் பறவை, யானையைத் தன் கால்களில் இடுக்கிக்கொண்டு பறக்கும். நல்ல உயரத்துக்கு எழும்பியதும் தொப்பென்று யானையைக் கீழே போட்டு, அதன் எலும்புகளை உடைக்கும். அதன் பிறகு இறைச்சியைக் கொத்தி சாப்பிடும்.' இப்படி புளுகுகளைச் சேர்த்ததால் எது உண்மை, எது பொய் என்று தெரியாமல் குழப்பம் ஏற்பட்டது. இன்னும் சில வரலாற்று ஆசிரியர்கள், ‘இவன் சீனாவுக்குப் போனதே கிடையாது; தன் பயணங்களில் கேள்விப்பட்டதையும் கற்பனையையும் கலந்து கதை விட்டிருக்கிறான்’ என்று கூறுகிறார்கள். அதற்குக் காரணம் இருக்கிறது. சீனாவின் புகழ் பெற்ற தேநீரைப் பற்றியோ, அவர்கள் குச்சிகளினால் சாப்பிடுவது பற்றியோ ஒரு வார்த்தை அவன் எழுதவில்லை; நீண்ட நெடுஞ்சுவரைப் பற்றி சொல்லவில்லை; சீனப் பெண்கள் கால்களை துணியினால் சுற்றி இறுக்கக்கட்டி சிறுக்க வைப்பது பற்றியும் அவன் கூறவில்லை.

உண்மைச் சரித்திரத்தை எழுதுபவர்கள், அதில் சிறு பொய் சேர்த்தாலும் உண்மையின் மதிப்பு போய்விடுகிறது. மார்க்கோபோலோ, அருமையான பயணச் சித்திரங்களை இலக்கியமாக்கியபோது, அவற்றின் சுவையை மேலும் அதிகமாக்க சிறிது புனைவைக் கலந்திருக்கிறான். அவன் பெரும் பொய்யனோ அல்லது சரித்திரக்காரனோ தெரியாது. ஆனால், அவன் பெரும் பயணி. அதனிலும் சிறந்த இலக்கியக்காரன்.

அவன் இறக்கும்போது அவனுக்கு வயது எழுபது. அந்தக் கடைசி நிமிடங்களிலும் அவன் இலக்கியக்காரனாகவே வாழ்ந்தான். ‘'நான் பார்த்ததில் பாதியைத்தான் கூறினேன்; மீதியைச் சொல்லவே இல்லை’' என்று மர்மமாகச் சொல்லிவிட்டு இறந்து போனான். அவன் சொல்லாமல் விட்ட பாதி, சரித்திர மூட்டைகளா, புளுகு மூட்டைகளா?

அவனுக்கு மட்டுமே தெரியும்.

quelle - kumutham theeranathi march2006

No comments: