Sunday, March 19, 2006

ஆகாய விமானமும்... தையல் எந்திரமும்...! - 3

கண்டுபிடித்தவர்களின் கதை
_ உதயபிரபா _

ரப்பர் மனிதன்!

'ரப்பர்' என்கிற பொருள் இல்லாமல் இன்றைக்கு உலகில் எதுவும் இயங்காது. அந்த அளவுக்கு ரப்பரின் பயன்பாடு இருக்கிறது. வாகனங்களின் பிரேக்குகள், டயர்கள், முக்கிய இயந்திர பாகங்கள் என்று ரப்பரின் பயன்பாடு ஏராளம். ஆனால் ஆரம்பத்தில் ரப்பர் மரத்திலிருந்து வடியும் பிசினாகத்தான் இருந்தது. கொஞ்சம் வெப்பம் அதிகரித்தால் அதனால் செய்யப்படும் பொருட்கள் உருகி ஓடிவிடும். அதனால் இதை யாரும் பயன்படுத்த முடியவில்லை. அப்போது தான் சார்லஸ் குட்இயர் என்பவர் இதைப் பார்த்தார். வெப்பத்தைத் தாங்குமளவுக்கு ரப்பரை உருவாக்க எண்ணினார். தன் வாழ்நாள் முழுவதையுமே அதற்காகக் கொடுத்தார். ஆனால் அமெரிக்காவே அவரை எள்ளி நகையாடியது. 'பைத்தியக்காரன்' என்று ஏசியது. அவர் கடன்களுக்காக அவரை சுமார் பத்துமுறைக்கும் மேல் சிறைக்கம்பிகளின் பின்னே தள்ளியது. ரப்பரை வெப்பத்தைத் தாங்குமளவுக்கு உறுதியான பொருளாக ஆக்கலாம் என்று கண்டுபிடித்த பிறகும் குட்இயர் வறுமையில் தான் வாடினார். அவர் இறக்கும் போது அவர் இரண்டு லட்சம் அமெரிக்க டாலர்கள் கடன் வைத்துவிட்டுத்தான் இறந்து போனார். இந்த மனிதருக்கு நேர்ந்த கொடுமை எந்த கண்டுபிடிப்பாளனுக்கும் நேரக்கூடாது!

பிறவி விஞ்ஞானி!

சார்லஸ் குட்இயரின் அப்பா அமாஸ் குட்இயரும் ஒரு கண்டுபிடிப்பாளர்தான். அமெரிக்காவில் கனெக்டிகெட்டில் வசித்துவந்த அவர் அன்றாட வாழ்வில் புழங்கும் பொருட்கள் அனைத்தையுமே ஏதோ ஒரு வழியில் மேலும் பயனுள்ளதாக ஆக்க முயன்றார். பிரிட்டிஷ் படைகளுடன் அமெரிக்க படைகள் மோதியபோது, அந்த ராணுவத்தினர் அணிந்திருந்த சீருடையின் பட்டன்கள் அமாஸ் கண்டுபிடித்தவை.
அவரது மகனான சார்லஸீக்கு ஆரம்பத்தில் இதில் நாட்டமில்லை. அப்பாவின் கண்டுபிடிப்புகளை விற்பதுதான் அவரது வேலை. அதையும் வேண்டாவெறுப்பாக செய்தார். அவருக்கு அரசியலிலும், ஆன்மீகத்திலும் ஆர்வம் இருந்தது. ஆனாலும் அமாஸ் தன் மகன் சார்லஸை அதற்கெல்லாம் அனுமதிக்கவில்லை. தன்னுடைய சிறிய ஆய்வகத்தில் வேலை செய்யும்படி பார்த்துக்கொண்டார்.

ஒருகட்டத்தில் குட்இயர்கள் இருவரும் ஒரு ஹார்டுவேர் கடையை ஆரம்பித்தார்கள். அந்த காலத்தில் ஹார்டுவேர் கடைகள் என்று தனியாக எதுவும் கிடையாது. அதுமாதிரி பொருட்களை விற்பவர்கள், அவற்றை முதுகில் சுமந்து சென்று வீடு, வீடாக அலைந்து விற்பார்கள். அதிலிருந்து வித்தியாசமாக இவர்கள் ஆரம்பித்த கடை நன்றாக 'பிக்_அப்' ஆனது. ஆனால் சார்லஸீக்கு பணத்தில் அவ்வளவாக கவனமில்லை. கேட்டபவர்களுக்கெல்லாம் கடனுக்கு பொருட்களை வாரிவழங்கினார். ஒருகட்டத்தில் அந்த பொருட்களுக்குப் பணத்தை வசூலிக்க முடியவில்லை. சார்லஸின் தாராளமனம் கடனாளிகளை வற்புறுத்தி வசூலிக்க இடம் கொடுக்கவில்லை. சுருக்கமாகச் சொன்னால் அவர் ஓர் ஏமாளி!
இதனால் கடையினால் ஏற்பட்ட நஷ்டம் பெரிய கடனாக உருவெடுத்தது. இந்த கடனுக்கு தானே பொறுப்பு என்று முன்வந்த சார்லஸீக்கு தண்டனை காத்திருந்தது. அந்த காலத்தில் கடனைத் திருப்பிக் கட்டவில்லையென்றால் சிறையில் போட்டுவிடுவார்கள். முப்பது வயதில் ஐந்து குழந்தைகளுக்குத் தகப்பனாயிருந்த சார்லஸ் எல்லோரையும் விட்டுவிட்டு முதல் முறையாக 1830_ல் சிறைக்குப் போனார்.

வெளியே வந்த பிறகு பிற நகரங்களில் தொழில் தொடங்கி மேலும் கடனாளி ஆனார். இப்படி அடுத்தடுத்த நான்கு வருடங்களில் ஆறுமுறை ஜெயிலுக்குப் போய் திரும்பினார் அவர். வாழ்க்கையில் முன்னேற தொழில் செய்வது தனக்கு வெற்றிதராது என்று அவருக்குத் தெரிந்தது. ஏதாவது செய்தால்தான் குடும்பத்தினருக்கு சோறு போட முடியும். எதையாவது கண்டுபிடித்து அதை விற்றால் காசு கிடைக்கும். எதைக் கண்டுபிடிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தார்.

முதன் முதலில் ரப்பரைப் பார்க்கிறார்!

1834_ல் ஒரு நாள். பாஸ்டன் நகரில் தெருவில் நடந்து போய்க்கொண்டிருந்த போது ஒரு கடையில் ரப்பரால் ஆன, காற்றடைத்தால் தண்ணீரில் மிதக்கும் ஆடைகளைப் பார்த்தார். உடனே விறுவிறுவென்று கடைக்குள் போய் விசாரித்தார். 'ரப்பர்' என்ற பொருளோடு அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது அப்படித்தான். அந்த ரப்பர் ஆடைகளை இன்னும் கொஞ்சம் பயனுள்ளதாக ஆக்கும் ஐடியா அவருக்கு வர, அதைச் சொல்லி, அந்த கடையின் உரிமையாளரை 'இம்ப்ரெஸ்' செய்த அவர் 'மேலும் ஐடியாக்களுடன் சில நாட்கள் கழித்து வருகிறேன்' என்று சொல்லிவிட்டுத் திரும்பினார். அந்த சில நாட்களில் நிலைமையே மாறிவிட்டது.


அமெரிக்காவை கண்டு பிடித்த கொலம்பஸ் குழுவினர் ரப்பர் பந்துகளை வைத்து அங்குள்ள பழங்குடியினர் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தார்கள். ஆனால் அதை அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. 'கேட்சௌக்' என்று அழைக்கப்பட்ட அந்தப் பொருள் அதன் பின்னர் சில காலம் கழித்து ஐரோப்பியர்களைக் கவர்ந்தது. அதை வைத்து பேப்பரில் பென்சிலால் எழுதப்பட்டவற்றை அழிக்கலாம் என்று கண்டுபிடித்து அதற்கு 'அழிப்பான்' என்று பொருள் வரும் 'ரப்பர்' என்ற பெயரை ஜோசப் ப்ரிஸ்ட்லி என்ற விஞ்ஞானி வைத்தார்.

பின்னர் இதை வைத்து 'வாட்டர் ஃப்ருப்' துணிகளைத் தயாரித்தார்கள். இதைத் தொடர்ந்து தான் அமெரிக்காவிலும் இதுபோன்ற ரப்பர் துணிகள் தயாரிக்கப்பட்டன. அவை மார்க்கெட்டுக்கு வந்தவுடன் அவை குட்இயர் கண்ணில்பட்டன.

ஓ.கே.... குட்இயர் தன் ஐடியாக்களை உருவாக்கிய அந்த சில நாட்களில் அமெரிக்காவின் கோடைக்காலம் வந்தது. வெப்பம் அதிகரித்து, வெப்ப அலை வீசியது. இதை ரப்பர் துணிகளால் தாங்க முடியாமல் அவை உருகிவிட்டன. கோடவுன்களில் அவை உருகிஓட, இந்த துணிகளை வாங்கிப் போனவர்களோ திருப்பிக் கொண்டுவந்து கடையில் கொடுத்துவிட்டார்கள். ரப்பர் தொழில் ஆரம்பத்திலேயே 'படுத்து'க் கொண்டுவிட்டது!

ரப்பரை பல வழிகளில் பயன்படுத்த முடியும். ஆனால் அது வெப்பத்தை தாங்காது. அதிகப்படியான குளிரில் பாளம்பாளமாக உடைந்துபோகும் என்ற பிராக்டிகல் உண்மை குட்இயருக்குப் புரிந்தது. ஆனால், இந்த ரப்பரை வெப்பத்தைத் தாங்கும் அளவுக்கு உறுதியுள்ளதாக ஆக்கலாம் என்று புதிய ஐடியா அவருக்குப் பளிச்சிட்டது! அந்த ஐடியா அவரை கிட்டத்தட்ட பைத்தியக் காரன் ஆக்கிவிட்டது. படாதபாடு படுத்தியது!

இந்த ஐடியாவோடு வீடு திரும்பிய அவரை எதிர்பார்த்து ஒரு கடனாளி காத்திருந்தான்! அவரைப் பிடித்து ஜெயிலில் அடைத்துவிட்டான்!

சிறைச்சாலையே ஆய்வுக் கூடம்!

இம்முறை சிறைக்குப் போன குட்இயர் கொஞ்சம் வருத்தப்படவில்லை. சிறைச்சாலையில் தனக்குகிடைத்த நேரத்தை முறையாக செலவிட்டு தன் ரப்பர் ஆராய்ச்சியைத் தொடரவே விரும்பினார். ஜெயிலரிடம் தன் அறையையே சிறிய ஆய்வகமாக மாற்றிக் கொள்ள அனுமதி கேட்டார். அதிசயமாக ஜெயிலரும் அதை அனுமதிக்க, தன்னைப் பார்க்க வரும் மனைவியிடம், அவரால் முடிந்த அளவுக்கு ரப்பரும், வேதிப்பொருட்களும் கொண்டுவரும்படி கேட்டு, இரவு பகலாக தன் அறையிலே ஆராய்ச்சியைத் தொடர்ந்துவிட்டார். அந்த ஆராய்ச்சியில் ஒரு விஷயத்தைக் கண்டுபிடித்தார். மெக்னீஸியத்தைக் கலந்தால் ரப்பரின் ஒட்டும்தன்மை குறைந்துவிடுகிறது என்பது தான் அது.

சிறையிலிருந்து வெளியே வந்ததும், இதை வைத்து நிறைய பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்தார். ஓரளவுக்கு விற்பனை ஆகி, குடும்பம் மூன்று வேளை வயிறார சாப்பிட்டது. குட்இயர் தன் கண்டுபிடிப்புக்கான சில மெடல்களையும் வாங்கினார். இருந்தாலும் அவர் கண்டுபிடிக்க நினைத்த 'ரப்பர் ரகசியம்' அவரிடம் மாட்டவே இல்லை. அது எதிர்பார்க்காத ஒரு விதத்தில் கிடைத்தது. அது எப்படி என்பதை அடுத்த வாரம் பார்க்கலாம்!

quelle - kumutham-march2006

2 comments: