Sunday, October 26, 2014

சாரதாம்பாள்: சரித்திரம் மறந்து விட்டதொரு நாழிகை

- நந்திவர்மன்

[பெப்ருவரி 2004, பதிவுகள் பதிப்பில் வெளியான அரசியற் கட்டுரை]

சாரதாம்பாள் சரவணபவானந்த குருக்கள் என்னும் மூன்று வயதுக் குழந்தையின் தாயொருத்தி ஸ்ரீலங்காக் கடற்படையினரால் பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கப்பட்டு படுகொலைசெய்யப் பட்ட சம்பவம் சாரதாம்பாள் ஒரு தமிழ்ப் பெண்மணி என்னும் காரணத்தினால் சரித்திரத்திலொரு புள்ளியாக மறக்கப்பட்டு விட்டது.

அண்மைய பத்திரிகைகளின் அறிக்கைகளின்படி ஸ்ரீலங்கா ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்காவின் பணிந்துரையின் பேரில் மேற்படி சம்பவத்தை விசாரணை செய்து வந்த மனித உரிமைகளிற்கான அமைப்பு போதிய சாட்சிகள் இல்லாத காரணத்தினால் இதற்கான கோப்பினை மூடிவிட முடிவு செய்துள்ளதாகத் தெரிய வருகின்றது. இது பற்றி விசாரித்து வந்த ஸ்ரீலங்காக் குற்றப் புலனாய்வுத்துறையினராலும் குற்றவாளிகளைக் கண்டு பிடிக்க முடியவில்லை. இவ்வளவிற்கும் சாரதாம்பாளின் சகோதரரான சந்திரசேகர ஐயர் ராஜசேகர சர்மாவின் சாட்சியத்தின்படி மேற்படி சம்பவம் நடைபெற்ற தினமன்று இரவு எட்டரை மணியளவில் பலவந்தமாக வீட்டினுள் புகுந்த கறுப்புடை அணிந்த படையினர் எனச்சந்தேகிக்கப் படும் சிலர் இவரைத் தாக்கிக் கண்களைக் கட்டி வீட்டின் பின்புறம் கொண்டு சென்றதாகவும், அவர்களில் இருவர் இவரது சகோதரியான இருபத்தொன்பது வயதான சாரதாம்பாளினை அருகிலுள்ள கைவிடப்பட்டநிலையிலிருந்த வீடொன்றிற்கு இழுத்துச் சென்றதாகவும் அறியக் கிடக்கின்றது. இவ்வாறு இழுத்துச் சென்றவர்கள் சிங்களம் கலந்த தமிழில் கதைத்ததாகவும் சந்திரசேகர ஐயர் ராஜசேகர சர்மா கூறுகின்றார். சாரதாம்பாளின் உடலைப் பரிசோதித்த கொழும்பு சட்ட வைத்தியர் சாரதாம்பாளின் உடலில் காணப்படும் காயங்கள் மற்றும் கீறல்கள் அனைத்தும் பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கப் பட்டுப் படுகொலை செய்யப் பட்ட பெண்ணொருத்தியின் உடலில் காணப்படும் காயங்கள், கீறல்கள் போன்றேயிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

சாரதாம்பாளின் உடல் மறு நாட் காலை, அவரது வீட்டிலிருந்து இருபது மீட்டர்கள் தொலைவிலிருந்த கண்ணகி அம்மன் ஆலயம் அருகில் காவோலைகளால் மூடப்பட்ட நிலையில் கண்டு பிடிக்கப் பட்டது. பத்தினித் தெய்வத்தின் ஆலயத்தின் அருகில் நடைபெற்ற மேற்படி சம்பவம் மனித நேயம் கொண்ட அனைவரையும் உலுக்கி விட்டது. சிலம்பிற்காக மதுரையை எரித்த கண்ணகி மட்டுமின்று இருந்திருந்தால் இதற்காக இலங்கையை எரித்திருப்பாளோ? மேற்படி சம்பவம் நடைபெற்ற டிசம்பர் 28,1999 அன்று புங்குடுதீவில் ஊரடங்குச்சட்டம் அமுலில் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அண்மையில் ஸ்ரீலங்காப் படையினரால் மன்னாரில் பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கப் பட்ட விஜயகலா நந்தகுமார், சிவமணி சின்னத்தம்பி வீரக்கோன் (மார்ச் 19,2001), கனடா வருவதற்காகக் காத்திருந்தபோது குழுவாகப் படையினரால் பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கப் பட்டுப் படுகொலை செய்யப் பட்ட கோண்டாவிலை சேர்ந்த இருபத்தி மூன்று வயதான ராஜனி வேலாயுதப் பிள்ளை (ஒக்டோபர் 3, 1996), கடத்தப் பட்டுப் புத்தூர் இராணுவ முகாமைச் சேர்ந்த படையினரால் குழுவாகப் பாலியல் வல்லுறவிற்குள்ளாக்க பட்ட அச்சுவேலி மகாவித்தியாலய ஐந்தாம் வகுப்பு மாணவியான தேனுகா செல்வராஜா (நவம்பர் 2,1996), அம்பாறைச் சென்ரல் முகாமைச் சேர்ந்த படையினரால் பாலுறுப்பில் கிரனேட் எறிந்து படுகொலை செய்யப் பட்ட நான்கு குழந்தைகளின் தாயான திருமதி முருகேசம்பிள்ளை கோணேஸ்வரி ( மே 17,1997), மட்டக்களப்பு தன்னமுனையில் நான்கு படையினரால் பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கப் பட்ட முப்பத்தியெட்டு வயது விதவைப் பெண்ணான வேலன் ராசம்மா மற்றும் அவரது சகோதரியான இருபத்தியெட்டு வயதான நல்லையா தர்சினி ( மார்ச் 17,1997), பாலியல் வல்லுறவிற்குள்ளாக்ப்பட்டுப் படுகொலை செய்யப் பட்ட பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி இவ்விதம் ஸ்ரீலங்காப் படையினரால் தமிழ்ப் பெண்கள் மேல் பிரயோகிக்கப் படும் பாலியல் ரீதியிலான வன்முறைகளும் படுகொலைகளும் தொடரத்தான் செய்கின்றன.

இதற்கு முடிவுதான் எப்போதோ?

ஆனால் அண்மைக் காலமாகத் தமிழகத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மீண்டும் அக்கறை ஏற்பட்டு வருவது குறிப்பிடத் தக்கது. கமலஹாசனின் 'தெனாலி'யில் கமல் இலங்கைத் தமிழராக இலங்கைத் தமிழில் பேசி நடித்திருக்கின்றார். இலங்கைத் தமிழ் புரியவில்லையே என்று கவலைப்ப்படும் தமிழக இலக்கிய வாதிகளே உஷார். மேற்படி தமிழ் தமிழக மக்களிற்கு நன்கு புரிந்திருக்கின்றது. அதன் விளைவாகத் தான் படம் வெள்ளி விழா கண்டும் ஓடிக் கொண்டிருக்கிறது. மேற்படி திரைப்படத்தில் கமலின் நிலமைக்கு அவரது தாயார் மீது படையினர் மேற்கொண்ட பாலியல் வல்லுறவே காரணமாக அமைந்திருக்கின்றது. அந்த வகையில் தெனாலிக்கு ஒரு முக்கியத்துவமுண்டு. அதன் வெள்ளிவிழாவில் கலந்து கொண்டு பேசிய தமிழக 'சுப்பர் ஸ்டார்' ரஜ்னிகாந்தும் 'எரியும் இலங்கை'யைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கின்றார். அண்மையில் மீண்டும் தமிழக முதல்வராகப் பதவியேற்ற செல்வி ஜெயலலிதாவும் இலங்கைப் படையினரால் அடிக்கடி தாக்கப் படும் , படுகொலை செய்யப் படும் தமிழக மீனவர்கள் காரணமாக மீண்டும் கச்சதீவினைப் பெறுவோமெனப் போர்க்குரல் ஒலித்திருக்கின்றார். ஆக மீண்டும் தமிழக அரசியலில் இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. பொதுவாகத் இன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா பெண்கள் விடயத்தில் தீவிர கவனம் காட்டுபவர் என்பது அனைவரும் அறிந்ததொன்று. இன்னுமொரு பெண்ணான ஸ்ரீலங்கா ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்காவின் அரச படையினரால் பாதிப்பிற்குள்ளாக்கப் படும் இலங்கைத் தமிழ்ப் பெண்களிற்காகவும் தமிழக முதல்வர் ஜெயலலிதா குரல் கொடுப்பாரென எதிர்பார்ப்போம்.

- நந்திவர்மன் 
- பெப்ருவரி 2004, பதிவுகள் -

No comments: