Thursday, February 07, 2008

உளவியல் சார்ந்த பெண்ணின் விருப்பம்

- டாக்டர் என். ஷாலினி

தனக்கென்று ஒரு தோதான துணை அமையாவிட்டால் பெண்கள் எல்லாம் சட்டென ஆட்ட விதிகளை மாற்றி அடுத்து உபயோகிக்கும் யுத்தி நம்பர் டூ தான் ஜகோஸ்டாயிஸம்.எடிபெசுக்குத் தன் தாயை அடையாளம் தெரியவில்லை, ஓகே. ஆனால் ஜகோஸ்டா? அவளுக்குத் தன் மகனை அடையாளம் தெரியாதா? குறைந்த பட்சம் தன் மகன் வயதை ஒத்த ஒருவனோடு வாழ்வதாவது அவளுக்குத் தெரிந்திருக்குமே! இருந்தும் அவனைப் பயன்படுத்தித் தன் நாட்டைப் பாதுகாத்துத் தன் மரணுக்களையும் பரப்பிக் கொண்டாளே - அது தான் ஜகோஸ்டாயிஸம் என்பது!

மனிதப் பெண் தன் ஆண் துணையை இழக்க நேர்ந்தால் - அது வேலை, வியாதி, வேறொருத்தி, யமன் என்று எதற்காக வென்றாலும், அவள் அடுத்த கட்ட நடவடிக்கையாக இழந்த துணையின் இடத்தில் இன்னொரு இளைஞனை ஏற்றி விடுகிறாள்.
அந்த இளைஞன் அவள் எல்லாம் தெரிந்த விவரமான பெண்மணித்தனத்தைக் கண்டு மையல் கொண்ட ஒரு காதலனாக இருக்கலாம். அப்படியானல் இந்த உறவில் கலவியும் ஓங்கிவிடும்.

அவளுடைய கலவியில் ஞானமும் அதுவரை அவள் சேகரித்து வைத்திருந்த வளங்களும் அந்த இளைஞனை ஈர்க்கும். அவனுடைய புதிய மரபணுக்களும் அவனால் தனக்கும் தன் குழந்தைகளுக்கும் கிடைக்கும் பாதுகாப்பும் அவளை ஈர்க்கும். இப்படி நிகழ்வதுதான் ஜகோஸ்டாயிஸம் - முதல் வகை அல்லது அந்த இளைஞன் அவளுடைய சொந்த மகனாகவே இருக்கலாம். அப்படியானால் இந்த உறவில் கலவி நிகழாது.

மகன் வயதிற்கு மீறிய பெரிய மனிதத்தனத்தைச் சிறுவயதிலேயே பெற்றுப் பொறுப்பானவனாய் மாறுவான். அவன் அம்மாவிற்குப் பாதுகாப்பும் ஒரு ஒப்புக்குச்சப்பான கணவனின் கவனமும் கிடைக்கும். இதுதான் இரண்டாம் வகை ஜகோஸ்டாயிஸம்.
கவர்ச்சியும் துணிவுமுள்ள பெண்கள் முதல் வகை ஜகோஸ்டாயிஸத்தைக் கையாள்கிறார்ள். கவர்ச்சியும் துணிவும் குறைவான பெண்கள் இரண்டாம் வகை ஜகோஸ்டாயிஸத்தை கையாள்கிறார்கள்.ஆனால், இந்த இரண்டு வகை ஜகோஸ்டாயிஸத்திலுமே சில பாதக விளைவுகள் உண்டு. ஒன்று, இந்த மாற்று கணவன், முந்தைய கணவனைப் போலவே அவளை விட்டுவிட்டு வேறு திசை போய்விடும் அபாயம் இருந்தது. அதிலும் குறிப்பாக முதல் வகை ஜகோஸ்டாயிஸத்தில் இந்த ஆபத்து நிறையவே இருந்தது. புதுக் காதலன் பழகிய பால் புளித்தது என்று வேறு பால் பாண்டத்தைத் தேடிப் போய்விடக் கூடும் அல்லது அவளை ஏமாற்றி அவள் வளங்களை எல்லாம் உறிந்து கொண்டுவிடக் கூடும்.எந்தவித ரத்த பந்தமும் பிணைக்காத ஜகோஸ்டாயிஸம் முதல் வகையில் இப்படி நேரச் சாத்தியக் கூறுகள் அதிகமே.
அதனால் தான் பெண்கள் எல்லாம் இரண்டாம் வகை ஜகோஸ்டாயிஸத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இதில் தாய், மகன் என்கிற ரத்த பாசம் அவர்களைக் காலம் முழுவதும் கட்டிவைக்குமே! இந்த ரத்த பந்தம் கலவியல் பந்தத்தைவிட உறுதியானது என்பதால் மகன் தன் தாய்க்கு எப்போதுமே உண்மையாக இருக்க முயல்வான்.

ஆனால், இந்த உறவிலும் பாதக விளைவுகள் இல்லாமல் இல்லை.
தாய்ப்பாசமிக்க மகன் தனக்கென்று ஒரு துணை வந்தவுடன் மனைவி பக்கம் சாய்ந்துவிடும் சாத்தியம் உண்டே. இதனால் தாய் தன் ஆண்மையை இழக்கலாம். தனக்கென்று ஒரு தரமான துணை அமையாத தாய்மார்களின் மிகப் பெரிய பயமே இதுதான். இந்த மருமகள் என்கிற நேற்று வந்தவள் தனது அருமை மகனையும் அவனால் தனக்குக் கிடைக்கும் அனுகூலங்களையும் தன்னிடமிருந்து பிரித்துவிட்டால், பிறகு அந்த அம்மையாரின் கதி?இந்த வம்பே வேண்டாம் என்று தான் அநேக அம்மாக்கள் தங்கள் மகனைத் தன்னோடு இணைக்கும் தொப்பிள் கொடியை அறுத்திடாமல் அப்படியே தொடர்ந்திடச் செய்கிறார்கள். வளர்ந்த பிறகும் தன் மகனைக் குழந்தை மாதிரி பாவித்து, உணவு பரிமாறி, உடை பாரமரித்து, அவனைச் செல்லம் கொஞ்சுகிறார்கள். இப்படி எல்லாத்துக்கும் அம்மா தான் வேணும்! என்கிற சிறுபிள்ளைத்தனத்தை நீடித்துவைத்து, இன்றியமையாத முக்கிய நபர்களாய்த் தங்கள் அந்தஸத்தை உயர்த்திக் கொள்கிறார்கள்.இப்படி மகனைக் குழந்தை மாதிரி வைத்திருப்பது அவன் திருமணத்தைத் தள்ளிப்போடவும் சரியான சாக்காகிவிடுவதால் இந்தத் தாய்க்குலத்திற்குத் தன் தனயனோடு அதிக நேரமும் கிடைக்கிறது. அப்படியும் அந்த மகனுக்குத் திருமணம் என்று ஒன்று ஆகி, அவனுக்கே அவனுக்கு என்று ஒருத்தி வந்துவிட்டாலும், சில தாய்க்குலங்கள் இந்த மருமகளோடு தன் மகனை ஒட்டவிடுவதில்லை.

அந்தப் புதிய பெண்ணின் குணம், நடத்தை, ஆளுமை, திறமை, பூர்வீகம், நம்பகத்தன்மை என்று சகலத்தைப் பற்றியும் இடித்துப் பேசி அவநம்பிக்கையை எழுப்பிவிடுகிறார்கள். இப்படியாக அந்த மகனுக்குத் தன் மனைவியை நம்ப முடியாமல் போக என்ன இருந்தாலும் அம்மா மாதிரி வருமா? இவ யாரோ எவளோ! என்று தொடர்ந்து மகன் தாயின் துணையையே நாட, இப்படியே தன் இன்றியமையாத உயர் அந்தஸ்த்தைத் தக்கவைத்துக் கொள்கிறாள் தாய்.

தன் மரபணுக்களைப் பரப்பச் செய்வதிலேயே குறியாக இருக்கும் சமத்தான மகன் அவன் என்றால் உடனே என்றில்லாவிட்டாலும் படிப்படியாகவாவது தன் தாயின் யுத்தியை இனம் கண்டுகொள்வான். அப்புறம் என்ன, தாயுடன் கூட்டுச் சேர்ந்தால் மரபணுக்கள் பரவாதே. மனைவியுடன் சேர்ந்தால்தான் அவன் குலம் தழைக்கும். அதனால் இந்தச் சமர்த்துப் பையன் சட்டென மனைவியோடு இணைந்துவிடுவான்.

இதுவே மிதமிஞ்சிய தாய்ப்பாசத்தினால் குருடாகிப் போன மக்கு மகன் என்றால், தன் தாயின் யுத்தியை அவன் கவனிக்கவே மாட்டான். அதனால் அவனுக்கு மரபணுக்களைப் பரப்பும் வாய்ப்புக்கூடத் தவறிப் போகலாம். மரபணு ஆட்டத்தில் அவன் தோற்றுப் போவான். ஆனால், தன் மகனைத் தக்கவைத்துக் கொண்ட ஆட்டத்தில் அவன் தாயே ஜெயிப்பாள்!

இப்படி மகனைத் தன் கைப்பிடிக்குள் வைத்திருக்கும் இந்தத் தாயின் குணம் சில சமயத்தில் விகாரத் திருப்பங்களும் பெறுகின்றது. வரதட்சணைக் கொடுமை, குடும்ப வன்முறை, மாமியார் - மருமகள் தகராறுகள், மருமகள் தற்கொலை / கொலை என்பவை எல்லாம் ஜகோஸ்டாயிஸத்தின் விபரீதமான பரிமாணங்கள்.

இப்படிப்பட்ட மாமியார் கொடுமைகளுக்குப் பின்னால் இருக்கும் உட்காரணத்தைக் கவனமாய் ஆராய்ந்தால், ஒரே ஃபார்முலாதான் வெளிப்படும். மோசமான கணவன் - இன்செக்யூர் தாய் - மகனை மாற்றுக் கணவன் ஆக்குதல் - வெட்டுப்படாத தொப்பிள் கொடி- மருமகளை ஜென்ம விரோதியாய் நினைக்கும் மனப்பான்மை - மருமகள் மீதான குற்றங்கள்.

பொதுவாய் ஜகோஸ்டாயிஸம் ஒரு அர்த்தமுள்ள யுத்தி தான். ஆனால், இதை அப்பட்டமாய உபயோகித்தால் சமுதாயம் அதனைக் கண்டிக்கிறது. அதனால் லேசுபாசாய் இந்த யுத்தியைப் பயன்படுத்தும் பெண்கள் கண்டனத்திலிருந்து தப்பிவிடுகிறார்கள்.

மிகவும் வெளிப்படையாய் அல்லது மறைமுகமாக இந்த யுத்தியை உபயோகிக்கும் பெண்களைச் சமுதாயம் கேலவமாய்ப் பார்த்து, வன்மையாய்த் தண்டித்துவிடுகிறது. ஆனால், இந்த ஜகோஸ்டியிஸமெல்லாம் ஏதோ ஒரு எடிபெஸ் வந்து வாய்த்தால் தானே சாத்தியம்? எடிபெஸ் எவனும் அமையாத பெண்கள் என்ன செய்வார்கள்? அது பற்றி அடுத்த தோழியில்!

டாக்டர் என். ஷாலினி, 'மைண்ட்ஃபோக்கஸ்' என்ற உளநலவியல் மையத்தை நடத்திவருகிறார். psrfindia@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் டாக்டர் ஷாலினியைத் தொடர்புகொள்ளலாம்

quelle - thozhiyar

No comments: