Thursday, August 10, 2006

கலாச்சாரம்-1 வழியனுப்புதல்

- சந்திப்பு -

தமிழகத்தில் பல்வேறு ஜாதி, சமயத்தில் உள்ள மக்களிடத்தில் பல்வேறு கலாச்சாரங்கள் நிலவுகின்றன. குறிப்பாக கிராமப்புறங்கள் கலாச்சாரத்தை நீடிக்கச் செய்திடும் மையங்களாக திகழ்கிறது. தமிழக கிராமப்புறங்களில் பின்பற்றப்படும் கலாச்சாரங்களில் முற்போக்கானதும், பிற்போக்கானதும் கலந்து நிலவுகிறது. மொத்தத்தில் பல்வேறுபட்ட மக்களின் கலாச்சார உறவுகளையும், நிகழ்ச்சிகளையும் வாய்ப்பு கிடைக்கும் போது தொகுப்பது பயனுள்ளதாக இருக்கும். இது நாம் வாழும் சமூகத்தை புரிந்து கொள்வதற்கு உதவியாக இருப்பதோடு, இதில் முற்போக்கானதை மேலும் செழுமைப் படுத்திடவும், பிற்போக்கானதை அகற்றி, அந்த இடத்தில் புதிய கலாச்சார விதைகளை விதைத்திடவும் பயன்படும் என்ற அடிப்படையில் இதனை பதிவு செய்யலாம் என கருதியுள்ளேன். அதன் ஒரு பகுதியாக மாமல்லபுரத்திற்கு அருகில் உள்ள பெரிய நெம்மேலி என்ற கிராமத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் பின்பற்றும் கலாச்சாரத்தை இங்கே பதிவு செய்கிறேன்.

(வீட்டில் சுமங்கலிப் பெண் ஒருவர் இறந்து விட்டால், அவருக்கு செய்யப்படும் சடங்கு குறித்து இங்கே விவரிக்கப்படுகிறது. இது ஒரு வித்தியாசமான - வியப்பூட்டும் - சிலிக்க வைக்கும் அனுபவ நிகழ்வு என்றால் மிகையாகாது.)

வழக்கம் போல் இறந்தவர்கள் வீட்டில் 16வது நாள் ஈமகாரியங்கள் நிறைவேற்றப்படுகிறது. இந்த ஈம காரியங்களில் பங்காளிகளாக இருக்கும் ஆண்களுக்குத்தான் முக்கியத்துவம் தரப்படுகிறது. இறந்த சுமங்கலிப் பெண் வீட்டில் நடைபெறும் ஈமகாரியத்தின் ஒரு பகுதியாக, இறுதியில், அந்த வீட்டில் உள்ள ஐந்து உறவுக்கார பெண்களை அழைத்து, இரண்டு முறங்களில் ஒரு சுமங்கலிப் பெண் எதையெதையல்லாம் பயன்படுத்துவாரோ, அதையெல்லாம் வைக்கின்றனர். முதலில் இரண்டு முறங்களுக்கும் அந்த ஐந்து பெண்களால் மஞ்சள் பூசப்பட்டு, குங்குமம் வைக்கப்படுகிறது, பிறகு அதற்கு பூக்களும் சூடப்படுகிறது. இவ்வாறு அலங்கரிப்பட்ட அந்த முறங்களில் சுமங்கலிப் பெண் பயன்படுத்தும் புடவை, ஜாக்கெட், மஞ்சள், குங்குமம், பவுடர், வளையல், கண்ணாடி, மஞ்சளுடன் கூடிய தாலி கயிறு மற்றும் பணம் (ரூ. 100 முதல்...) போன்ற பொருட்கள் வைக்கப்படுகிறது.

இவ்வாறு தயார் செய்யப்பட்ட பொருட்களைக் கொண்ட முறத்தினை உறவுக்காரர் அல்லாத ஒரு சுமங்கலிப் பெண்ணிடம் கொடுக்கின்றனர். பொதுவாக இதுபோன்ற சடங்குகளில் அடித்தட்டு பெண்கள் கூட கலந்து கொள்ள அஞ்சுவார்கள் (அடித்தட்டு மக்கள் கூட கலந்து கொள்வதில்லை). எனவே, இந்த சடங்குகளில் பிராமண வகுப்பைச் சார்ந்த சுமங்கலி பெண்களைத்தான் பயன்படுத்துகிறார்கள். (இவர் அந்த சமூகத்தில் ஏழையாக இருப்பதால் - குறைந்தபட்சம் ரூ. 100 அல்லது 200 கிடைக்குமே என்பதற்காககத்தான் கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.)அதாவது, வெளியில் இருந்து அழைத்து வரப்படும் இந்த பெண்ணை இறந்து விட்ட சுமங்கலிப் பெண் போல் பாவிக்கிறார்கள். இறந்த பெண்ணின் பெயரை வைத்து இவரை அழைப்பார்கள். அப்போது இந்த சடங்கில் கலந்து கொள்ள வரும் பெண்ணுக்கு நூற்றுக்கணக்கான பெண்கள் - ஆண்கள் சுற்றி இருக்கையில் அவரை மையத்தில் உட்கார வைத்து, அவருக்கு மஞ்சள், குங்குமம், பூச்சூடி, கண்ணாடி வளையல்கள் அணிவிக்கப்படுகிறது. இந்த வளையல் அணியும் போது அதை மிக பக்குவமாக அணிகிறார்கள்; உடைந்துவிடக்கூடாதாம், பிறகு அவரிடம் தாலியை கொடுத்து கட்டிக் கொள்ளச் சொல்கிறார்கள். அவரது கழுத்தில் ஏற்கனவே அவரது கணவனால் கட்டப்பட்ட தாலியும் இருந்தது குறிப்பிடவேண்டிய அம்சம். (ஒரே நேரத்தில் இரு தாலிகள்) இந்த சடங்கு முடிந்ததும் அவரிடம் தயாராக வைக்கப்பட்டுள்ள இரண்டு முறத்தில் உள்ள பொருட்களை, முறத்தோடு சேர்த்து கொடுத்து வழியனுப்புகிறார்கள். இந்த பொருட்களை வாங்கிக் கொண்ட பெண் திரும்பிப் பார்க்காமல் செல்ல வேண்டும். அப்படிச் சென்றுக் கொண்டிருக்கும் அந்த பெண்ணை மீண்டும் இறந்தவர் பெயரைக் சொல்லி மூன்று முறை உரக்க அழைப்பார்கள். அவர் திரும்பிப் பார்க்காமல் செல்வார்.

குறிப்பு : இந்த சடங்கு உணர்த்துவது என்னவென்றால், இறந்த சுமங்கலிப் பெண்ணுக்கு அவர் வீட்டிலிருந்து எந்தவிதமான குறையும் வைக்காமல் நிரந்தரமாக வழியனுப்பி வைக்கப்படுகிறார். அவருக்கு செய்ய வேண்டிய அல்லது கொடுக்க வேண்டிய அனைத்தும் கொடுக்கப்பட்டு விட்டதாக இங்கே கருதப்படுகிறது. இவ்வாறு நிரந்தரமாக வழியனுப்பியதோடு, அவருக்கும் அந்த வீட்டுக்கும் உள்ள மொத்த உறவும் துண்டிக்கப்படுவதாக உணர்த்தப்படுகிறது.

இந்த சடங்கு நிகழ்த்தும் போது ஒரு உணர்ச்சி வயப்பட்ட நிலை நீடிக்கிறது. இதில் பங்கேற்கும் ஐந்து பெண்களின் மனநிலையில் பயத்துடன் கூடிய சிலிர்ப்புணர்வு தூண்டப்படுகிறது.அதேபோல் இதில் நூற்றுக்கணக்காணோருக்கு மத்தியில் இந்த கிராமத்தோடோ, அல்லது மக்களோடா பரிட்சயமில்லாத சுமங்கலி பெண் இறந்தவரைப் போல் பாவிப்பது ஒரு கொடுமையான - வர்ணிக்க முடியாத உணர்ச்சியை ஏற்படுத்துகிறது.

இந்த நேரத்தில் அந்த பெண்ணின் மனதில் ஏற்படும் உணர்ச்சியும், ஒருவேளை அந்த இளம் பெண்ணின் கணவர் அந்த நிகழ்ச்சியை பார்க்க நேர்ந்தால், அதன் மூலம் ஏற்படும் உணர்ச்சியையும் எப்படி விவரிப்பது - அதனால் ஏற்படும் மனோ ரீதியான விஷயங்கள் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது ஆராயப்பட வேண்டிய ஒன்று.

ஏறக்குறைய வெளியில் இருந்து வரும் அந்த சுமங்கலிப் பெண்ணை இறந்தவரின் ஆவியாகத்தான் ஒப்பிட்டுப் பார்க்கப்படுகிறது.

இப்படிப்பட்ட கொடுமையான ஒரு சடங்கில் கலந்து கொள்ளும் பெண் ஒரு பிராமண குடும்பத்தை சேர்ந்தவர் என்பது இங்கே அழுத்தமாக பதியப்பட வேண்டியுள்ளது. சமூகத்தில் நலிந்த நிலையில் உள்ள பிராமண பெண்களைத்தான் இத்தகைய நிகழ்ச்சியில் பயன்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. (இவர் ஒடுக்கும் வர்க்கத்தின் ஒடுக்கப்பட்ட பிரதிநிதியாக நிற்கிறார்.)

- சந்திப்பு -
Quelle - http://santhipu.blogspot.com/2006/08/1.html

No comments: